முதற்பதிப்பு முகவுரை (1976)

“தெய்வத்தின் குரல்” என்று பெயரிட்டிருக்கிறோம்.  ஆனால், இம்மொழிகளை இயம்பியவர், தம்மை தெய்வமாக வைத்தா பேசியிருக்கிறார்?  தானே தெய்வமாகப் பேசுவதாக கீதாசாரியன் சொன்னானே, அப்படியா இவர் பேசியிருக்கிறார்?  தெய்வக் குமாரனாகப் பேசுவதாக இயேசுநாதர் சொல்லிக் கொண்டாரே, இன்னும் பல மத ஸ்தாபகர்களும் தெய்வக் கட்டளைகளையே தாங்கள் வெளியிடுவதாகச் சொன்னார்களே, அந்த முறையிலா இந்நூல்வழி பேசுபவர் பேசியிருக்கிறார்?  “எனதுரை தனதுரையாக” என்று சம்பந்தரும், “தன்னைத் தான் பாடி” என்று நம்மாழ்வாரும், இதே ரீதியில் மற்றும் பல அநுபூதிமான்களும் கூறுவது போல் இவர் எங்கேனும் கோடியாவது காட்டியிருக்கிறாரா?  இல்லவே இல்லை.  தம்மைத் தெய்வமாகக் காட்டிக் கொள்ளாதது மட்டுமில்லை; தாம் தெய்வத்தின் குரலை வெளியிடும் கருவி என்ற ரீதியில்கூடச் சொல்லிக் கொள்ளவில்லை.  அது மட்டுமல்ல, மகானாக மேம்பாடுற்ற மனிதராகக்கூட அவர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை.  தோஷங்கள் நிறைந்த நம்மில் ஒருவராக, வேஷங்கள் நிறைந்த நம்மில் ஒருவராகத்தான் தம்மை ஆங்காங்கு வர்ணித்துக் கொள்கிறார்.

ஆனால், இதைவிடப் பெரிய வேஷமில்லை என்று அடியார்கள் அறிவர். லௌகிக வேண்டுதல்களிலிருந்து பர ஞானம் வரையில் சகலவிதமான அநுக்ரஹங்களையும் எண்ணற்ற அடியாருக்கு வழங்கி வரும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவாளை பக்தருலகம் பரமாத்மாவாகவேதான் அறிந்திருக்கிறது. ஆனால், இங்கே இந்நூலில் இப்பரமாத்வாவின் அற்புத அநுக்ரஹச் செயல்கள் விரியவில்லை. வாக்குதான் விரிகிறது. நம்மில் ஒருவராக அவர் தம்மைச் சொல்லிக் கொண்டாலும், ஆழ்ந்து ஊன்றிப் படிக்கும்போது இவ்வாக்கே அவரது பரமாற்புத அநுக்ரஹமாக நெஞ்சில் மேவுகிறது. இது தெய்வத்தின் குரல்தான் என்று நம்மை உறுதியாக உணரச் செய்கிறது.

எதனால்?

நமக்கென்று தனிக்கருத்துக்கள், கொள்கைகள் உள்ளன. அதுதான் நம் தனித்தன்மையை உண்டாக்கும் தனி மனத்தின் லட்சணம், அவலட்சணமும் கூட. ஆனால் இந்தத் தொள்ளாயிரம் பக்கங்களை நீங்கள் படிக்கும்போது எங்கேனும் இதைப் பேசியவருக்கென்று ஒரு தனிகொள்கை, சித்தாந்தம், அபிப்பிராயம் இருப்பதாகத் தோன்றுகிறதா? எப்பேர்ப்பட்ட சம பாவம்! நடுநிலை! இப்படியும் ஒரு திறந்த மனம் இருக்க முடியுமா? எதையோ தனது என்று நிலைநாட்டிவிட வேண்டும் என்ற தனி மனித முனைப்பே இல்லாமல், எதைச் சொன்னாலும் அதற்கு இருக்கக்கூடிய ஆட்சேபணைகளையும் தயங்காமல் ஆய்ந்து, அலசி அலசிப் பார்த்துப் புட்டுப் புட்டு விளக்கும் தெளிவினை என்னென்பது? இவர்கள் ஓர் மதத் தலைவராயினும், மத ஸ்தாபகர்களைவிட மஹா கவியின் நோக்கும் வாக்கும்தான் உள்ளதை உள்ளபடி கண்டு உரைக்கும் என்கிறாரே (பண்பாட்டின் இதய ஸ்தானம்), அப்படிச் சொல்வது இவர்களது திறந்த மனதையும் காட்டுவதல்லவா? இன்னோரிடத்தில் ஆதி சங்கரரின் அத்வைதம் உள்பட எம்மதமும் அதன் சித்தாந்தச் சிறப்பால் விசேஷமாக வளர்ந்து விடவில்லை என்று ஆணியறைந்தாற்போல் சொல்கிறாரே! (மதபோதகரின் யோக்கியதாம்சங்கள்) இது எப்பேர்ப்பட்ட திறந்த உள்ளத்தைக் காட்டுகிறது!

ஸத்தியம் ஒன்றே குறிக்கோளாக, தனி மனித அபிப்ராயத்தை அறவே தொலைத்துவிட்டு, அவர் தமது தூய திரு உள்ளத்தைப் பூரணமாகத் திறந்து விட்டிருப்பதால், மகத்தான கோபுர வாயில் வழியாக மாருதம் முழு வீச்சுடன் பாய்வதே போல, அவர் மூலம் மெய்ப்பொருளின் திருக்குறலே பாய்கிறது.  அதனால்தான் இது தெய்வத்தின் குரலாக இருக்கிறது.

அநுக்கிரஹம் செய்வதில் பரம உன்னதமாக இருப்பவரே, உபந்நியாசம் செய்யும்போது, உரையாடும்போது பரம எளியராகிவிட, அந்த எளிமையில் ‘தனித்துவம்’ என்பதே இல்லாமல் ஆகிவிடுவதால், ‘தனியொரு தத்துவமே’, சத்தியமே அவர் மூலம் பேசி விடுகிறது.

அவர் ஏன் இப்படி நம்மோடு சேர்ந்து எளியராகி நிற்கிறார்? ஸத்தியமே அவர்களது லட்சியம் என்று சொல்லிவிட்டு, அவர்களே தமது பரமேசுவரத்துவத்தை மறைத்துப் பரம எளியர்போல் பொய்யாக நடிக்கிறார் என்றால் பொருந்தவில்லையே! இதற்கும் இவ்வாக்கிலேயே விடை இருக்கிறது. ஆதிசங்கரர் அம்பிகையைத் துதிக்கும்போது தம்மைக் கடையரில் கடையராகச் சொல்லிக் கொண்டு, “என்னையும் கூடக் கடாக்ஷியம்மா!”, “எனக்கும்கூட உன் திருவடியைத் தருவாய், தாயே!” என்றெல்லாம் விநய வடிவாக வேண்டுவதைச் சொல்லும் பெரியவாள், நாம் எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்று நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே, பரமேச்வராவதாரமான பகவத்பாத சங்கரர் நம்மில் ஒருவராகத் தம்மை வைத்துக் கொள்கிறார் என்று விளக்குகிறார். விளக்கம் தருபவரின் எளிமைக்கும் இதுவே விளக்கு. அவதார புருஷர்களும் எப்படி சாமானிய மானுடர்களோடு சேர்ந்து நிற்கிறார்கள், எதற்காக அப்படி நிற்கிறார்கள் என்பதற்கெல்லாம் நூலின் உள்ளே (முருகனின் வடநாட்டு அவதாரம், ஆசார்யாள் காட்டும் அம்பாள் ஆகியவற்றில்) விரியும் விளக்கம் இப்படி விளக்குபவரையும் விளக்கி வைக்கிறது.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

என்ற தமிழ் மறைப்படி, இந்த எளிய சான்றோரின் திருவாய் வழியே சத்திய தீபமே சுடர் வீசுகிறது; அதாவது தெய்வத்தின் குரலையே கேட்கிறோம்.

இங்கே 1932-லிருந்து சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆசான் அருளிய மொழிகளைத் தொகுத்துத் தந்திருக்கிறோம். 1973 தொடக்கத்தில் அவர்கள் சிவாஸ்தானத்தில் நீண்ட கால வாஸம்  தொடங்கிய வரையில் அருளிய வாக்குகள் இதில் உள்ளன. இதன்பின் அவர்கள் மோனம் விட்டுப் பேசியதே அபூர்வம். அப்படிப் பேசியதிலும் எதுவுமே இந்நூலில் சேர்க்கப்படவில்லை. இதை இங்கே குறிப்பிடக் காரணம், நூலிலுள்ள சில கருத்துக்கள் வெகு சமீப கால நடப்புகளுக்குத் தொடர்புள்ளதாகத் தோன்றும்; ஆனால் அவ்விதமல்ல எனத் தெளிவுபடுத்தவே.

நாற்பது ஆண்டு என்ன, நாற்பது யுகமானாலும் தெய்வத்தின் குரல் மாறுவதே இல்லை என்பதை அதிசயிக்கத்தக்க வண்ணம் வெகு அழுத்தமாக உணர்கிறோம். உலகியல் விஷயங்கள் மாறும்; மனித மனமும் பரிணமிக்கப் பரிணமிக்க அபிப்பிராயங்கள் மாறும். ஆத்மிக தெய்விக விஷயங்கள் மாறுவதில்லை. ஆயினும் மாறாத இவ்விஷயங்களை அணுகுபவர் முதிர முதிர, அவை குறித்தும் ஒருவரின் அபிப்பிராயங்கள் மாறுகின்றன. இந்தக் கருத்து மாற்றத்தை, அதனால் ஏற்படக்கூடிய முரண்பாட்டை (inconsistency)க் கண்டு பயப்படாமல், அவ்வப்போதும் தமது மனம் உள்ள பக்குவ நிலைக்குப் படுகிற உண்மையைக் கள்ளம் இன்றிச் செப்புவதே மாமனிதர்களின் சிறப்பு. ஆனால் பெரியவாள் வாக்கின் விசேஷம்தான் என்னென்பது! ஆதியிலிருந்து இன்றுவரை அவர் ஒரு கருத்தைக்கூட மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கவேயில்லை. 1972-ல் சொல்கிற அதே விஷயங்கள் வார்த்தைக்கு வார்த்தை 1932-ல் கூறியிருக்கிறார்! இது மேன்மேலும் முதிரத் தைரியமின்றி, ஒன்றையே வீம்பாகப் பற்றியிருப்பதல்ல! இதற்கு முற்றிலும் மாறாக அன்றே தம் எளிமையால் பூரண முதிர்ச்சியை, பக்குவ சிகரத்தை  அவர் எய்தி, அவரது பழுத்த பழமான மனத்தில் ஸத்ய ரஸமொன்றே முற்றிலும் நிறைந்து விட்டதால், அதில் மாறுதலுக்கு இடமே இல்லாமலாகிவிட்டது. லௌகிகம் என்பதும் இங்கு ஆன்மிகத்துக்கு அநுசரணைதான் என்பதால், ஆன்ம விஷயங்கள் மட்டுமின்றி லௌகிகத்திலும்கூட அவர் எள்ளத்தனையேனும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டிய பிரமேயம் ஏற்படவேயில்லை. என்றும் மாறாததே சத்தியம் என்ற லக்ஷணப்படி, இங்கு விரிவதைவிட சத்திய வாக்கு எங்கும் காணக் கிடைக்காது.

ஸ்ரீ பெரியவாளின் உபந்நியாசங்கள் பல ஏற்கெனவே நூல்களாக வந்திருக்கின்றன. அவற்றுக்கும் “தெய்வத்தின் குரலு”க்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம், இதுவரை தனித்தனியாக ஓரொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் ஆற்றிய உரைகள் தனிக் கட்டுரைகளாகவே வெளிவந்துள்ளன. இங்கேயோ ஒரே பொருள் குறித்து அவர் பல்வேறு உபந்நியாசங்களிலும், ஸ்ரீ முகங்களிலும், அறிக்கைகளிலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஒரு தலைப்பின் கீழ் தொகுத்துத் தரப்படுகின்றன. ஏற்கெனவே வெளியான நூல்கள், பத்திரிகைக் குறிப்புக்கள் கட்டுரைகள், ‘டேப்’கள், அயல்நாட்டினர் பலருக்கு அளித்த பேட்டிகள் ஆகியவற்றிலிருந்தும், அதோடு மேடைப் பிரசங்கமாக அல்லாமல் ஒரு சில அடியாரிடை அவர் அகஸ்மாத்தாக ஆற்றிய மகாப்பிரசங்கங்கள், தனிப்பட்டவர்களுக்குத் தந்த சந்தேக விளக்கங்கள், சம்பாஷணைகள் ஆகியவற்றிலிருந்தும் செய்யப்பட்ட தொகுப்பே இது.

இதில் சில உரைகளைப் படிக்கும்போது, அது ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலேயே ஆற்றப்பட்டதாக உட்சான்றிலிருந்து தோன்றும். ஆனாலும் இப்படிப்பட்ட உரைகளிலும் கூடப் பிற சந்தர்ப்பங்களில் அவர்கள் இதே பொருள் பற்றிக் கூறியனவும் நெய்யப்பட்டுத்தான் இருக்கின்றன. குறிப்பிட்ட சந்தர்ப்பம் என்று காட்டுகிற வாசகங்களை நீக்காததற்குக் காரணம், அந்தச் சந்தர்ப்பத்தைச் சொல்வதால் ஒரு ஜீவகளை, ஒரு மனநெருக்கம் உண்டாவதுதான்.

சுலபத்தில் சுலபமாக, மதுரத்தில் மதுரமாகப் பேச்சு மொழியில் பெரியவாள் கூறுவதைக் கறந்த பால் கறந்தபடி தரவேண்டும் என்பதே உத்தேசம். ஆங்கிலத்தில் வெளியான கட்டுரைகள், பேட்டிகள் ஆகியவற்றையும் முடிந்த மட்டில் அவர்களே தமிழில் எப்படிப் பேசியிருப்பார்களோ அப்படித் தான் ஆக்கி ஆங்காங்கு நுழைய விட்டிருக்கிறேன். அவர்களது வாய்மொழி வரும் பேச்சு மொழியின்பத்துக்காகவே, “அதுகள்”, ‘உசத்தி”, “ரொம்ப” போன்ற வார்த்தைகளை இலக்கணப்படுத்தாமலே கொடுத்திருக்கிறேன். அப்படியும் எங்கேயோ சில இடங்களில் மிகவும் இலக்கணத் தமிழாக இருக்கிறதே என்று தோன்றலாம். இதற்குக் காரணம் பெரியவாளே எப்போதாவது உபந்நியாசத்தினிடையே செந்தமிழில் சிறிது நேரம் பேசுவார்கள். மகாநாடுகளுக்கு அனுப்பும் செய்தி, புத்தகங்களுக்கான ஸ்ரீமுகம், பத்திரிகைகளுக்கு விடும் அறிக்கை இவற்றிலும், இலக்கண மொழியையே கையாள்வார்கள். இவற்றிலிருந்து எடுத்துக் கோத்த பகுதிகள் மற்றவற்றிலிருந்து மாறுபட்டுத்தான் இருக்கும்.

தனிப்பட்ட உரையாடல்களில் உடனிருந்தோர் கூறுகிற சில அபிப்பிராயங்களைப் பெரியவர்கள் வாங்கிக்கொண்டு, அதன்மீது விளக்கங்களை அளிப்பார்கள். இந்நூலில் இவ்விதமான சம்பாஷணைகளிலிருந்து ஏராளமான குறிப்புக்கள் விரவலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் உடனிருப்போர் கூற்றுக்களின்மேல் பெரியவாள் பேசுகையில் அக்கூற்றுக்களும் பெரியவாளுடையதாகவேதான் இழைத்துத் தரப்படுகின்றன, அவரது திருவுளச் சம்மதமான ஒரு கூற்றை அவரது கூற்றாகவே சொல்வதில் தவறில்லை என்ற கருத்தில் இந்த சுதந்திரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் கண்குத்திப் பாம்பாக இக்காரியத்தைச் செய்தபோதிலும் ஒரு சில தவறுதல்கள் நேர்ந்திருக்கலாம். இப்படி உதாரணமாக ஒன்று எனக்கே “பிழைதிருத்தம்” போடுவதற்காக எல்லா ஃபாரங்களையும் சேர்த்துப் படிக்கும் போது அகப்பட்டது. அதாவது, இங்கும் மட்டும் இருப்பானேன்? என்ற உரையிலும்,  வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?  என்ற உரையிலும் சிவாஜி க்ஷத்திரியர் அல்ல என்று பெரியவாளே சொல்வதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் வர்ணாசிரம தர்மம், மந்திர சப்தங்களின் சக்தி இவை பற்றி இந்நூலில் உள்ள கட்டுரைகளில் (வைதிக மதம் எனும் தலைப்பில்) காணும் கருத்துக்களில் பல, அவர், காலஞ்சென்ற ஃபிலிப் ஸ்ப்ராட் (‘ஸ்வராஜ்யா’ ஆசிரியராக இருந்தவர்) என் மூலம் கேட்டனுப்பிய சந்தேகங்களுக்கு நெல்லூரிலும் ஓங்கோலிலும் தந்த விளக்கங்களேயாகும். இவற்றிடையேதான் சிவாஜி பிரஸ்தாவமும் வந்தது. சிவாஜி க்ஷத்ரியரல்ல என்பது ஸ்ப்ராட் தெரிவித்த கருத்து. அப்படியே வைத்துக் கொண்டாலும் என்று பெரியவாள் கூறினாரே ஒழிய அதைத் தாம் ஏற்றதாகவோ மறுத்ததாகவோ காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இங்கே என் கவனக்குறைவால் அது பெரியவாளின் முடிவான கருத்தே என்பது போல் வெளியாகியுள்ளது. இப்படி வேறு ஓரிரு தவறுகளும் இருக்கலாம். இவற்றுக்காக வாசகர்களை மன்னிக்கக் கோருவதுடன், பெரியவாளையும் அபசாரம் பொறுக்கப் பிரார்த்திக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு தலைப்புக் குறித்தும் ஏராள விஷயங்களை, எங்கெங்கோ உள்ளவற்றை, எப்படி எப்படியோ நினவுபடுத்தி ஒருங்கிணைக்கச் செய்வதில் அவர்கள் புரிந்துள்ள திவ்வியாநுக்கிரஹத்தை எண்ணும் போது, மிகக் குறைவாகவே அடிசறுக்க வைத்திருப்பார்கள் என்றும் திண்ணமாக நம்புகிறேன். அந்தச் சறுக்கலும்கூட அகங்காரத்துக்குத் தரும் தண்டனை என்ற வெகுமானம் என்றே கொள்ளலாம்.

கூறியது கூறல் என்ற குற்றமும் சில இடங்களில் உள்ளது. ஆனாலும் ஓரிடத்தில் வந்ததாயிற்றே என்று இன்னோரிடத்தில் அதை எடுத்துவிட்டாலோ, ஏதோ பொக்கை விழுந்ததுபோல் வெற்றிடம் தட்டுவதைக் கண்டேன். இதைவிடத் திருப்பித் திருப்பி வருவது சிலாக்கியம் என்றே புனருக்தி தோஷத்தை மனமறிந்து செய்திருக்கிறேன், தோஷமாக நினைத்தல்ல! எத்தனையோ விஷயங்களைத் திரும்பத் திரும்ப நினைக்கிறோம், பேசுகிறோம். பேசும் தெய்வத்தின் சில வாக்குகளை மீள மீளக் கேட்டால்தான் என்ன? அப்படியாவது அவை நெஞ்சுள் ஆழத் தோயட்டுமே!

*      *      *

நூலில் வரும் உரைகளில் பெரும்பாலனவை ‘கல்கி’யில் அருள் வாக்குகளாக வெளிவந்துள்ளவை. ஆயினும், பத்திரிகைகளின் தவிர்க்க முடியாததான பக்கக் கட்டுப்பாட்டால் இந்த அருள் வாக்குகளில் சில பகுதிகள் குறைக்கப்பட்டிருந்தன. இங்கே பூரண ரூபத்தில் இவை வெளியாகின்றன.

அது தவிர, சாஸ்திர சம்பிரதாயப் படியான சில விஷயங்களைப் பொது மக்களுக்கான பத்திரிகைகளில் வெளியிட முடியாத ஒரு துர்பாக்கியமான சூழல் நம் நாட்டில் நிலவுவதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். துளிக்கூட பட்சபாதமேயின்றி இவ்விஷயங்களைப் பெரியவர்கள் ஸாங்கோபாங்கமாக அலசி விளக்கியிருந்தும்கூட, இவற்றை ஒரு ‘பாபுலர் ஜர்ன’லில் வெளியிடுவதால் அநாவசிய சர்ச்சைகள் கிளம்பிப் பத்திரிகைகாரர்களுக்குச் சிரமம் உண்டாகிவிடுமோ எனத் தோன்றியதால் இவற்றைப் பிரசுரிக்கவில்லை.

ஆயினும், இன்று நம்மிடையே உள்ள மகாபுருஷர்களில் ஸ்ரீ பெரியவர்கள் மட்டுமே இந்த ஸநாதன சாஸ்திர நெறிகளை விசேஷமாக வலியுறுத்துபவராதலால் — வேறு விதத்தில் சொல்வதானால், ஸ்ரீ பெரியவர்கள் இந்த ஸநாதன சாஸ்திர நெறிகளை மட்டுமே விசேஷமாக வலியுறுத்துபவராதலால் — இவற்றை வெளியிடாதிருப்பதை ஆசார்ய ‘ஹ்ருதய’த்தைப் பூரணமாக, உள்ளபடி தெரிவிக்காததேயாகும் எனத் தோன்றியது. எனவேதான் எந்நாளும் நிற்கிற விதத்தில் இன்று அவர்களது வாக்குகள் நூலாக உருவாகையில், இப்படிப்பட்ட தர்ம சாஸ்திர விஷயங்களை நிறையச் சேர்த்திருக்கிறேன். “வைதிக மதம்” என்ற பகுதியில் வந்துள்ள பெரும்பாலான கட்டுரைகள் இப்படிப்பட்டனவே.

இங்கே பெரியவாளும் ‘தமது கொள்கை’ என்பது போல் விசேஷமாக வைதிக தர்ம சாஸ்திரங்களை வலியுறுத்துவதாகச் சொல்வது, தொடக்கத்தில் அவர்கள் ஸத்தியம் ஒன்றே லக்ஷியமாக எல்லா விஷயங்களையும் திறந்த உள்ளத்தோடு பார்த்து விளக்குவதாகச் சொன்னதற்கு முரணாகத் தோன்றலாம். அப்படியல்ல. ஆய்ந்து பார்த்து அபிப்பிராயங் கொள்ளும் விஷயங்கள் மட்டுமின்றி, சாஸ்திர விஷயங்களில் நம்பிக்கையின்மீதே ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைகளும் உள்ளன. இவற்றில் ஓரளவுவரைதான் பகுத்தறிவு ஆராய்ச்சி எடுபடும். அந்த அளவுவரை அசாத்திய தீரத்தோடு — எளிமைக்கே உரிய அதிசய தீரத்தோடு
— நம் ஆசாரியப் பெருமான் திறந்த மனத்தோடு புட்டுப் பார்க்கிறார். ஆனால் நம்பிக்கையின்மீது ஏற்க வேண்டியவற்றில் இதே எளிமையால் பூரண சரணாகதி செய்து, இங்கே தமது அற்புத புத்தி தீக்ஷண்யத்தைச் சிறிதும் கொண்டு வருவதில்லை. ’ரிஷிகளும் ஆதிசங்கரரும் சொன்னால் அது அப்படியே சத்தியம்தான்’ என்பதாக அவர்கள் வகுத்த நெறிகளையே வலியுறுத்துகிறார். இங்கேயும் “தமது” கொள்கை என்ற அபிமானத்தால் வலியுறுத்தவில்லை. தான் என்பதற்கே இங்கே வேலையில்லை. ரிஷிகள் சொன்னது, சகல ரிஷிகளின் ஸாரமாக வந்த ஆதிசங்கரர் ஆதரித்தது என்ற சரணாகதி நிலையிலேயே தர்ம சாஸ்திர விதிகளை, அமைப்புக்களை வலியுறுத்துகிறார்.

இங்கு ஒரு விஷயம் வலியுறுத்த வேண்டும். சாமானிய மாந்தர் போல ஸ்ரீ பெரியவாள் தர்ம சாஸ்திர நியதிகளை நம்பிக்கையுடன் ஏற்றது மட்டுமல்ல, அப்படி ஏற்றபின் அவற்றை அணுவணுவும் நடத்திக் காட்டிய செவ்வியால் அவை ஸத்தியமானவை என்று அநுபவ பூர்வமாக உணர்ந்தவர்கள் அவர்கள்.

இன்று அவர்களது தெய்வத் தன்மையை ஸர்வ தேசங்களிலும் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஏதுமறியா ஒரு பதின்மூன்று வயது பாலன்தான் திடுமென ஒருநாள் ஜகத்குரு சங்கராசாரியாராகி மடாதிபத்தியமும், பீடாதிபத்தியமும் பெற்றது மட்டுமின்றி, வாஸ்தவமாகவே தெய்வ மஹா சங்கரராயிருக்கிறார். இதன் மர்மம், அவதார ரஹஸ்யம் நமக்கு எட்ட முடியாததுதான். ஆயினும் ஓரளவு ஊகிக்கலாம். சற்றும் எதிர்பாராமல் ஒருநாள் தான் பீடாதிபதிகளாக நியமனமானதாக அறிந்த சிறுவன், முதலில் அஞ்சி நடுங்கவே செய்தான். ஆயினும் இது ஈச்வராக்ஞை என்று தெளிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் வேத வேதாந்த பரிசயமில்லாத ஒரு பள்ளிக்கூடப் பையனை ஏன் பூர்வாசாரியார் தம் வாரிசாக நியமிக்க வேண்டும்? ஸ்ரீ காமகோடி பீடத்தின், ஸ்ரீ சாரதா மடத்தின் அதிபதியாக இவர் இருக்க வேண்டும் என்பது இறைக் கட்டளைதான். அப்படியானால், அம்மடத்தின் கொள்கைகளைத்தானே இவர் பற்றியொழுக வேண்டும்? இங்கே சொந்தக் கொள்கைகளுக்கு ஏது இடம்? இதனை உணர்ந்துதான் அன்றே நம் ஆசாரியப் பெருமான், இம்மடத்தின் கொள்கைகளாக ஆதி சங்கரர் வைத்திருந்த வைதிக தர்ம சாஸ்திரங்களுக்கே  சரணாகதி செய்துவிட்டார் போலும்! நம்பிக்கையின்மீதே அவற்றை ஏற்றிருப்பார். ஏற்றது மட்டுமின்றி, அப்பழுக்கின்றி ஆசார நியதிகளை வாழ்க்கையிலே நடத்தினார். ஸத் பாத்திரமாயினும், அஸத் பாத்திரமாயினும் ஏதோ ஓரிடத்தில் ஒருவர் பூரண சரணாகதி செய்து “தான் அறப்பெற்றால்” அவரிடம் தானே தெய்விக சக்தி குடிகொண்டுவிடும் என்று அவர்கள் கூறுவதை அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? என்ற உரையில் கேட்கலாம். இதற்கு ஓர் உயிருள்ள உதாரணமாக சாஸ்திரங்களுக்கே சரணாகதி செய்த ஸ்ரீ பெரியவாள் அளப்பரும் அநுக்கிரக  சக்தி பெற்று தெய்வ புருஷராகி விட்டார். இதன்பின் அவர் நம்பிக்கையின்பேரில் எதையும் ஏற்க வேண்டியதில்லை. ஏனெனில் எந்த மர்ம சத்தியமும் அவர்முன் தன் உள்ளாழத்தைத் திறந்து காட்டிவிடும். ஆகையால் தாம் நம்பிக்கையால் ஏற்ற சாஸ்திரக் கோட்பாடுகளையே அவர் அநுபவத்தில் கொண்டுவந்து பிற்பாடு அநுபூதி சிகரத்திலிருந்து அவற்றின் ஸத்தியத்துவத்தை  உணர்ந்துதான் நமக்கும் எடுத்துரைக்கிறார் என்பதே உண்மை. இங்கே கொள்கைப் பிடிவாதம் என்பது லவலேசமும் இல்லை என்பதே உண்மை. ஸத்யத்தை ஸத்யமாகச் சொல்கிறார்; தம் கொள்கை என்பதற்காக ஒன்றை வாதிக்கவில்லை.

 

*      *      *

 

இந்நூலைப் பல பகுதிகளாகப் பிரித்திருப்பது பற்றிச் சில வார்த்தைகள்: பகுதி பகுதியாக சமயம், சமூகம், ஆத்மிகம், லௌகிகம், கர்மம், பக்தி, ஞானம் என்று அடியோடு பிரிந்திராமல் எல்லாம் ஒருங்கிணைந்த வாழ்வு (integrated life) தான் வேத தர்மம் காட்டுகிற வழி. பரம லௌகிகமும்கூட பரமாத்ம தத்துவத்துக்கு அழைத்துப்போக உதவுமாறு வகை தொகை செய்யப்பட்டிருப்பதே நம் மதத்தின் சிறப்பு.  எனவே, இந்த முழு வாழ்வையே நமக்கு லக்ஷியமாக விளக்கும் நம் பெரியவாளின் அருள்வாக்கிலும் அத்வைதத்திலிருந்து அணு விஞ்ஞானம் வரை, அம்பிகையிலிருந்து அகத்து விஷயம்வரை எல்லாமும் கலந்துதான் வரும்.  ஆகவே, இங்கு பல பகுதிகளாகச் செய்திருக்கிற பாகுபாடு விசாலமான பங்கீடுதான் (broad division). “அத்வைதம்” என்ற பகுதியில் வரும் ஓரிரு கட்டுரைகள் “கர்ம மார்க்கம்” என்ற பகுதியில் வந்தாலும் பொருத்தம்தான். “வைதிக மதம்”, “பொதுவான தர்மங்கள்”, “சமூக விஷயங்கள்” என்ற பகுதிகளில் வரும் கட்டுரைகள் பரஸ்பரம் தொடர்புடையனவே. ஒன்றையொன்று இட்டு நிரப்புவனவே.

விநாயகப் பெருமானுடன் சுக்லாம்பரதரம் குட்டிக் கொண்டவுடனே அடுத்து “அத்வைதம்” என்ற பகுதியைக் கொடுப்பதால், அத்வைதிகளாக அல்லாதாருக்கு ருசி குறையுமோ என்று முதலில் தோன்றிற்று.  ஆனாலும் அத்வைத பரமாசாரியர்களின் அபராவதாரமேயான நம் பெரியவாள் வாக்குகளில் இதற்கு முதலிடம் தருவதே தர்மம் எனத் தெளிந்தேன். அவர்கள் பரம தாத்பரியமாக, ஸத்யமாகக் கூறுவதைத்தானே முதலிடம் கொடுத்துக் கௌரவிக்க வேண்டும்? ‘அல்லாதார்’ என்று நாம் ஏன் சிலரை நினைக்கவேண்டும்? அனைத்தும் தழுவும் அன்பினால் “அல்லாதாரை”யும் அனைத்தும் தழுவும் அத்வைதத்தில் இழுத்து அணைக்கக் கூடியதன்றோ ஆசான் அருள்மொழி!

 

*      *      *

 

இந்நுலைப் படிப்பவர்கள் மிகவும் மகிழப்போகிறார்கள் என்பதில் ஐயமேதும் இல்லை. ஆனால் இது படித்து மகிழவேண்டிய நூல் மட்டுமில்லை, நடத்திக்காட்ட வேண்டிய விஷயங்கள் இதில் ஏராளமாக உள்ளன. இப்போதனைகளில் பலவற்றை ஏற்கெனவே பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் நாம் படித்து ஆஹா என்று சந்தோஷப்பட்டுத்தான் இருக்கிறோம். ஆனால் எவ்வளவு தூரம் நடத்தப் பிரயாசை செய்தோம் என்று பார்த்தால் வெட்கப்பட வேண்டியதாகவே ஆகும். பொறுப்பாளி யார் பரிகாரம் என்ன?, அதம பட்சப் பரிகாரம், என் காரியம் ஆகிய உரைகளில் வேதரக்ஷணத்துக்காக நாம் செய்யவேண்டியது பற்றி அவர்கள் கல்லும் கரையுமாறு முட்டிக் கொண்டிருக்கிறார்களே! இது முன்னரே பலர் கேட்டதுதானே! காரியத்தில் என்ன செய்தோம்? இவ்வளவு பெரிய காரியம்தான் என்றில்லை. வியாஸருக்கு வருஷத்தில் ஒரே ஒருநாள் உத்ஸவம் செய்யுமாறு அவர்கள் வற்புறுத்தியதை (நம் தருமத்தின் மூல புருஷர் என்ற உரையில்) நடைமுறையாக்கினோமா? இப்படிக்கூடத் தனிக் காரியமாக மெனக்கெடாமல், நாம் வழக்கமாக உண்ணுகிறபடி உண்ணும்போதே கோவிந்த நாமத்துடன் விழுங்கும்படி (சம்பு சங்கரரானார்! என்ற உரையில்) ஒரு குட்டி ஆக்ஞை இட்டார்களே, இதைக்கூட எவ்வளவு பேர் செய்கிறோம்? நேரிலே அவர்களே இருந்துகொண்டு சொன்ன போதே கேட்காதவர்கள் அச்செழுத்தில் படித்து அநுஷ்டானத்துக்குக் கொண்டு வருவோமா?

வெறும் பொழுது போக்காகவோ, தாற்காலிக ஆனந்தத்துக்காகவோ அன்றி, நம்மை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட இந்நூலை வெளியிடுகையில், இந்தத் தாபத்தை தெரிவிக்காமலிருக்க முடியவில்லை.

எளியராக இவ்வுரைகளை ஆற்றிய அதே ஸ்ரீசரணர்கள்தாம், தமது உரை நம்முள் உறையுமாறு தம் திவ்விய மகிமையால் நம்மை உந்துவிக்க வேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டியதுதான்.

 

*      *      *

 

இந்நூலில் இருப்பதை நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். நமது வேத வேதாந்த சாஸ்திரங்கள் மட்டுமின்றி, பர மதக் கோட்பாடுகள், மொழியியல், சிலா சாஸனம் கலாநுட்பம், சரித்திரம், பொருளாதாரம், கணிதம், விஞ்ஞானம் – குறிப்பாக அதில் பௌதிக சாஸ்திரம் – இவற்றில் ஸ்ரீசரணர்களுக்கு உள்ள தேர்ந்த ஞானத்தையும், இவை அனைத்தையும் இசைவுபடுத்துவதில் அவர்களுக்குள்ள திறனையும் வியப்பீர்கள். ஆனால் இத் தொகுப்பாசிரியனுக்கோ இவை வியப்பூட்டவில்லை. கூர்த்த அறிவு வாய்ந்த ஒருவர் ஒப்பற்ற தூயவாழ்வும் வாழ்ந்து விட்டால் ஒருமுறை காதால் கேட்பதும், கண்ணால் பார்ப்பதும்கூட நீங்காது பதிந்துவிடுமாதலால் இதை “மேதா விலாஸம்” என்றே வைத்து விடலாம். இதற்குத் தெய்விகத்தை இழுக்க வேண்டியதுகூட இல்லை. எனவே, எனக்கு வியப்பூட்டுவது அவர்கள் பரம லௌகிகமான நுட்பங்களைக்கூட எப்படி அறிந்திருக்கிறார் என்பதுதான். பாலகனாகவே குருபீடத்துக்கு வந்து ஞானபாலனம் தொடங்கிவிட்ட இவருக்கு, வாத்ஸல்யத்தால் ஒருவனுக்கு ஏற்படும் குதூகலங்கள் (இயற்கை ஏமாற்றுகிறது! அம்பாள் ஏமாற்றுகிறாள்) அண்டை வீட்டானிடம் காரணம் இன்றி ஏற்படும் போட்டி (ஸ்வாமி என்றால் குமாரஸ்வாமியே), கன்னிகாதானம் செய்கிற பிதாவின் மனம் துடிக்கும் துடிப்பு (முக்திக்கு முந்தைய நிலையில் பக்தி) போன்ற விஷயங்கள் இத்தனை துல்லியமாகத் தெரிவதைப் பார்க்கும் போதுதான் — அதாவது, பரம லௌகிகத்தைப் பார்க்கும் போதுதான் — அவரது தெய்விகம் தெரிகிறது! இதற்குமேல் நூலில் இருப்பதை இங்கு சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இதில் இல்லாததைச் சொல்லத்தான் வேண்டும் — உரையாற்றியவரை முற்றிலும் அறிவதற்கு! ஏனெனில் இதில் இருப்பதைவிடவும் பெரியது, இனியது, இதிலே இல்லாதது.

வேத வேதாந்தங்களிலும், அத்வைத சாஸ்திரங்களிலும், மந்திர சாஸ்திரங்களிலும், ஸம்ஸ்கிருத இலக்கியத்திலும் பெரியவாளுக்கு உள்ள பெருஞானத்தில் ஒரு சிறு வாய்க்காலே அவரது பொதுப் பிரஸங்கங்களிலும், சாமானியமான தனியாருடன் ஸம்பாஷணைகளிலும் இழிவது. இதுவே நமக்கு வியப்பூட்டுகிறதெனில் இதன் மஹா சமுத்திர விசாலம் வெளியாவது வித்வத் ஸதஸ்களிலும் பாஷ்ய பாடம் நடத்தும்போதும்தான் என்று இவற்றில் கலந்து கொள்ளும் மகாபண்டிதர்கள் கூறுகிறார்கள். அவ்விஷயங்கள் அறிஞர் பெருமக்களே கிரகிக்கக்கூடியதாதலின் இங்கு அவற்றை சேர்க்க வேண்டியதில்லைதான். ஆயினும் வருங்கால அறிஞர்களின் பொருட்டும், பெரியவாள் என்ற வைரமணியின் புலமைப் பட்டை உலகுக்குத் தெரியவும், இவ்விதமான அருள் வாக்குகளையும் பண்டிதர்கள் தொகுத்துத் தரவேண்டுமென்பது என் விருப்பம்; வேண்டுகோள்.

இந்நூலில் இல்லாத பெரிய விஷயம் இது. இனி இந்நூலுக்குள்ளேயே இருந்தும் இல்லாத இனிய விஷயத்துக்கு வருகிறேன். ஆம், இதற்குத் “தெய்வத்தின் குரல்” என்று பெயரிட்ட போதிலும், எழுத்துக்கள்தாம் உள்ளனவே அன்றிக் குரல் இல்லை. அச்சு மையில் வடித்த எழுத்துக்கள் அநுபவத்தில் வடித்த அந்த அமுதக் குரலுக்கு எப்படி ஈடாகும்?

சொல்லும், செயலும், சித்தமும் அடங்கிய அத்வைத வேந்தர், உரையாடும்போது உணர்ச்சி மயமானதுபோல், காவிய ரஸங்கள் அனைத்தும் கொந்தளிக்கத் தமது அங்க பாவங்களாலும் குரல் மாறுபாடுகளாலும் புனைகிற திவ்ய நாடகத்தை இங்கே காகிதத்தில் கறுப்பு இங்கியில் எப்படிக் காட்டுவது? “நிறைந்த நிறைவு”, “சாந்தி”, “ஆனந்தம்” ஆகிய ஓரிரு வார்த்தைகளை அவர்கள் ஊறி ஊறிச் சொல்கிற பாங்கிலேயே ஒரு உணர்ச்சிப் பிரபஞ்சம் (அல்லது உணர்வு கடந்த பிரபஞ்சம்) உண்டாகிவிடுமே! சுலோகங்களையும், செய்யுள்களையும் அவர் இசைக்கும் அழகு — ஆஹா! அர்த்த பாவம் ஒரு பக்கம் இருக்க, ஆலாபனையாக ஓர் இம்மிகூடப் போகாமலே அவற்றில் துளும்பும் ராகபாவத்தை என்னென்பது? பெரியரில் பெரியராகவும், நம்மிலே ஒருவராகவும், நம்மிலும் குழந்தையாக பச்சைப் பிள்ளையாகவும் அவரைக் காட்டுவது இந்த நாநயமும், அங்க பாவங்களும் அல்லவா! “குழந்தை ஸ்வாமி“ என்று அவர் சொல்கிற சொகுஸிலேயே கந்தனும் கணநாதனும் குழைந்து வந்து நிற்பார்களே! “பெரிய மலையை பாலக்ருஷ்ணன் தூக்கினான்” (சேவையே மேலான பாக்கியம்) என்பதில் அவர்கள் “பெரிய”வுக்குக் கொடுக்கிற அழுத்தம் கோவர்த்தன கிரியாகவே இருக்குமெனில், “பால”வை நெளிக்கும் நெளிவில் கண்ணனின் பரம மதுரமும், அவனது அற்புதத் தியாக சேவையுமே சுருண்டு வந்துவிடும். “ஞானசம்பந்தர் கசிந்து கசிந்து கண்ணீர் மல்கிக்கொண்டே” (அக்னியில் அடங்கிய அவதார புருஷர்கள்) போனது இங்கே சில இங்கித் துளிகள்: ஆனால் நேரில் கேட்டாலோ நம் கண்களே கசிந்து துளிக்கும். “லக்ஷ்மணன் மூர்ச்சித்தபோது ராமர் புலம்பினார்; சமுத்திர ராஜனிடம் ரௌத்ராகாரமாகக் கோபம் கொண்டார்” (அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்?) என்னும் போது முதல் ஒரு வாக்கியத்திலேயே பாச ராகவனைப் படம் பிடித்துக்காட்டி, மறுகணத்தில் மறு வாக்கியத்தில் வீரராகவனை விசுவரூப தரிசனம் செய்வித்து விடுவாரே! பார்வதீ பரமேசுவரர்கள்–ஸநத் குமாரர் உரையாடல் (முருகனின் பூர்வ அவதாரம்) போன்ற சம்பாஷணைகள் வந்துவிட்டால் போதும், அற்புதக் கதாசிரியராகவும், வசன கர்த்தாவாகவும், நடிகர்களாகவும் அவரே ஆகி விடுவார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைப் பற்றிய பேச்சு வந்துவிட்டால், அடாடா, பிரேமையின் பூரணச்சந்திரனாகவே ஆகிக் குரலில் நிலவைப் பொழிந்துவிடுவார், இச்சந்திர சேகரப் பெருமான். பிரிந்து தோன்றும் எல்லாவற்றையும் சேர்த்துக் கோத்து அன்பில் இழைக்கின்ற அவதாரம் அன்றோ? நம் நலனின் பொருட்டே அவர் சிற்சில சமயங்களில் வலிந்து கோபம் கொண்டு கூறிய வார்த்தைகள் இங்கு எழுத்திலும் சுரீல் என்று தைக்கும். சுள்ளென்று இருப்பதை உள்ளவாறே காட்டும் சக்தி உள்ள எழுத்துக்கு ஏனோ அவர் ஜில்லென்றிருக்கும் ஸ்வபாவமான அன்பைக் காட்டத்தான் முடியவில்லை! அம்பாள் என்கிற அன்பைப் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே ஆசார்யரது குரல் அந்த அன்பில் ஊறிக்கனத்துக் கொள்ளுமே! அந்தப் புனித கனத்தை இங்கே எப்படிக் கொடுப்பது? குமாரிலபட்டருக்கு முன் ஆசாரியாள் செய்த அன்பு உபதேசத்தால், உபந்நியாசம் கேட்போரை லேசிலும் லேசாக்கினாரே (முருகனின் வடநாட்டு அவதாரம்)  அதில் லவலேசத்தை இங்கே காட்டமுடியுமா? பரமேசுவரன் சம்ஹார காலத்தில், ‘அடக் குழந்தே! ரொம்ப அலைந்து திரிந்து களைத்துவிட்டாயப்பா, கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்’ என்று சொல்வதாக உபந்நியசிக்கும்போது (காமாக்ஷியின் கருமை) அதைக் கேட்ட நமக்கு, ‘இதோ, அந்தப் பரமேசுவரன் நமக்கு விச்ராந்தி தரவே பெரியவாளாக வந்து ‘வா’ என்று கூப்பிடுகிறான்! அவர் மடியில் மானஸிகமாக விழுந்து நம் பாரத்தை எல்லாம் தொலைப்போம்” என்று தோன்றச் செய்தாரே, அந்த பாவம் அச்செழுத்தில் வருமா?

நேராக அவரே தம் திவ்யமான, நிர்மலமான, அந்தரங்கமான அன்பை நம்மிடம் கொட்டி, “உங்களில் ஒருத்தனாகப் பழகிவிட்டதால் எனக்கே உங்களிடம் சிநேகிதம், ஸ்வாதீனம் வந்துவிட்டது” (என் காரியம்), ”நான் நீங்கள் எல்லாம் ஒன்று தான்” (என் காரியம்), என்பது போன்ற அமர வாசகங்களை மொழிந்தபோது, நேரில் உண்டான உன்னத உணர்ச்சியில் சதகூறிட்ட ஒரு துகள்தான் இங்கு கிடைக்க முடியும்.

ஆனால், புஸ்தகம் என்று வந்துவிட்டால் இது தவிர்க்க முடியாதது. பின் இக் குறையை ஏன் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் முடிந்த மட்டில் மானஸிகமாவது அதைப் பூர்த்தி செய்துகொண்டு இந்நூலால் அதிகப் பயன் பெறுவதற்குத்தான்.

கல்கத்தாவுக்குப் போகிறோம். குளிப்பதற்காகக் குழாயைத் திருப்பிவிடுகிறோம். தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. அதுவே ஆனந்தமாகத்தான் இருக்கிறது. அப்போது குளியலறைக்கு வெளியே வீட்டுக்காரர், “இங்கே குழாய்த் தண்ணீர் முழுதும் கங்கையாக்கும்” என்கிறார். உடனே வெறும் நீர் என்கிற அளவிலேயே முன்பு ஏற்பட்ட நம் ஆனந்தம் எப்பேர்ப்பட்ட தெய்விகமான பரிணாமத்தையும், அதனாலேயே விஸ்தாரமான பரிணாமத்தையும் பெற்று விடுகிறது? கங்கையின் சுழிப்பும், கொழிப்பும் குழாயில் இல்லாவிடினும்கூட, “கங்கா ஸ்நானம்” என்றவுடன், ஓர் உயர்வு வந்துவிடுகிறதே! அப்படியேதான் வெறுமே இவ்வாக்குகளைப் படித்தாலும் மகிழத்தான் செய்வீர்கள். ஆனால் இதில் ஒவ்வோர் எழுத்தும் அன்பு கங்கையின் பூஞ்சிதறல் என்பதை மனஸில் வாங்கிக் கொண்டாலோ அந்த மகிழ்ச்சி திவ்யாநுபவமாகிவிடும். இப்படியே இந்நூலில் ஸ்நானம் பண்ணுங்கள்; இதனைப் பானம் பண்ணுங்கள்; தியானம் பண்ணுங்கள்!

 

*      *      *

 

பெரியவாளின் அமரத்துவம் வாய்ந்த அமுத வாக்குகளைப் புத்தக உருவில் சிரஞ்சீவியாக்கித் தரும் பரமபாக்கியம் வானதி உரிமையாளர் ஸ்ரீ திருநாவுக்கரசுக்குக் கிட்டியிருக்கிறது. இந்நூலைத் தம் பதிப்பகத்தால் கொண்டுவர வேண்டும் என்பதில் அவர் காட்டிய அந்தரங்க ஈடுபாடு பலித்துவிட்டது. எத்தனையோ பதிப்பகத்தாருக்கு இந்த ஆசை இருந்தது. இப்பணியை ஏற்று நடத்த பல அற நிலையத்தினர் முன் வந்திருப்பர். எனினும் ஸ்ரீ திருநாவுக்கரசு அவர்களுக்கே ‘லக்கி பிரைஸ்’ விழுந்ததென்றால் காரணம் அவரது தவம்தான். வான் நதியை பகீரதன் தவத்தால் சங்கரன் சிரத்தில் கங்கையாகக் கொண்டு வந்ததுபோல், நம் சங்கரரின் வாக்கு கங்கையை வானதி நூலாகக் கொண்டு வந்துவிட்டது.

ஸ்ரீ திருநாவுக்கரசு கெட்டிக்காரர். ஆரம்பத்திலேயே ஸ்ரீ ஜகத்குரு ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருளாசி பெற்றுவிட்டார். தொட்டதெல்லாம் தங்கமாக்கும் புதுப் பெரியவாளின் அநுக்கிரகம் பெற்றபின் காரியம் பலிப்பதில் விந்தையென்ன?

அச்சகத்தார் மிக நல்ல முறையில் சிரத்தையுடன் அச்சிட்டிருக்கின்றார்கள். அவர்களுக்காகவும், பதிப்பகத்தாருக்காகவும் நான் வேண்டுவது இதேபோல இன்னொரு பாகம் “தெய்வத்தின் குரல்” அவர்கள் மூலமே வெளியாக வேண்டுமென்பதுதான்.

இதே அளவுக்கு இன்னொரு வால்யூம் கொண்டு வரவும் விஷயங்கள் உள்ளன என்ற நல்ல சமாசாரத்தை இங்கு வாசகர்கள் காதில் போடுகிறேன்.

இவ்வருள் வாக்குகளில் பெரும்பாலானவற்றை இதழ்தோறும் பிரசுரித்து வந்தவர்களும், இவற்றில் பலவற்றை எடுத்தெழுதுவதில் பேருதவி புரிந்து ‘டேப்’களைத் தந்தவர்களுமான “கல்கி” நிறுவனத்தாருக்கு எப்போதுமே உள்ள ஆசாரியரின் அருளை நாமும் “உபரி”யாக வேண்டிக்கொள்வோம். இதேபோல் “காமகோடி பிரதீபா” ஸஞ்சிகை மூலமும், அநேக நூல்கள், டேப்கள் மூலமும் ஏராளமான அருள் வாக்குகளை அளித்துள்ள பி.ஜி.பால் கம்பெனியும் நம் நிறைந்த நன்றிக்குப் பாத்திரமாகிறது.

 

*      *      *

 

என் பெயரிலேயே சில புஸ்தகங்கள் எழுதியிருக்கிறேன். எழுதிக்கொண்டும் இருக்கிறேன். ஆதியில் பெரியவர்கள் வீசிய கடாக்ஷ விசேஷம் — எல்லாம் தெய்வ சம்பந்தமான விஷயங்களை வாசகர்களுக்கு நினைப்பூட்டுவதாகவே உள்ளன. இப்படி ஒரு நல்ல சேவை செய்யக் கிடைத்ததில் மகிழவே செய்கிறேன். ஆனாலும், என் பெயரில் வந்த, வரவிருக்கிற அந்த நூல்களை விட, இப்போது சாக்ஷாத் ஸ்ரீ பெரியவாள் பெயரில் வரும் இந்நூலைத் தொகுத்துத் தந்ததில்தான் மாபெரும் மகிழ்ச்சி, நிறைவு காண்கிறேன். வியாஸர் தாமே பதினெண் புராணங்கள் எழுதினார்; பிரம்மசூத்திரம் எழுதினார்; ஐந்தாவது வேதம் எனப்பெறும் மஹாபாரதம் எழுதினார். ஆயினும் இவற்றை எல்லாம்விட அவருக்குப் பெருமை, ஸாக்ஷாத் ஸர்வேசுவரனே ஆதியில் அளித்திருந்த அனந்தமான வேதங்களைப் பிற்பாடு அவர் ஓரிடத்தில் தொகுத்து நூலாகத் தந்ததுதான். “வியாஸர்” என்ற பெயருக்கே “தொகுப்பாசிரியர்” என்றுதான் பொருள். அன்று வியாஸருக்கு அடித்த யோகம் அவரது அடித்துகளான ஒருவனுக்கு இன்று லபித்திருப்பதால், ஆறாவது வேதம் எனத்தக்க இந்நூலுக்குச் சிறியனான நான் தொகுப்பாசிரியனாக இருக்கிறேன். இங்கே என் பெயரைப் போட்டுக் கொள்ள வேண்டாம் என்றே முதலில் எண்ணினேன். பிறகு ஸ்ரீ பெரியவாளின் காரணமில்லாத பெருங்கருணை என்னவெல்லாம் செய்கிறது, அது எப்படி இருபதாண்டுகளுக்கு முன் உதவாக்கரையாக் கிடந்த ஒருவனை இன்று அவரது மணி வாக்குகளையே தொடுத்து அம்பாள்மயமான அவர் பாதத்தில் சூட்டுமளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாடறியவேண்டும் என்பதற்காகவே, பெயர் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும் எனத் துணிந்தேன்.

ஸ்ரீசரணர்களின் திவ்ய சரணங்களை நமஸ்கரித்து வாசகரனைவருக்கும் சகல மங்களங்களையும் பிரார்த்திக்கிறேன்.

ரா.கணபதி

சென்னை – 53

29 – 2 – 76
மஹா சிவராத்திரி

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s