எதிர்கொண்டு அழைப்பான்!

சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள் குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னோரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்து போகின்றன. பரமாத்மா ஆடாத அசங்காத சமுத்திரம் மாதிரி. மாயை என்கிற காற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம்மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஐக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.

சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று மழையாகி, உலகத்தில் பலவிதங்களில் நதி, ஓடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன. சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை. அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம்; அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம். வெயில் நாளானால் வீட்டுக் குழாய்களில் ஜலம் இல்லை; ரெட்ஹில்சில் ஜலம் இல்லை என்கிறோம். மழைக்காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் உடைப்பு என்று பேசுகிறோம். ஆனால் சிருஷ்டி காலத்தில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஓர் இம்மிகூட – க்ரெயின் கூட – இன்றுவரை குறையவில்லை, கூடவும் இல்லை. பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள்; வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்; பாங்குப் பணத்தை ‘ஷேர்’களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம் தான் பல விதங்களில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியேதான் லோகத்தில் உள்ள மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேகத்தில் இருக்க வேண்டும். அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்க வேண்டும்.

பரமாத்மா பலவாகத் தோன்றியிருக்கிறார். தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிறதாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை, குறைவும் இல்லை.

ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப் பரமாத்ம ஜீவாத்ம ஸம்பந்தத்தைச் சொல்லும்போது நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும். சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும், குளமும், குட்டையும், கிணறும் உண்டாகின்றன. இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை. ஆனால், எல்லா நதிகளும் சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன. வடக்கே ஒரு நதிக்கு ‘ஸோன்’ என்று பெயர். ‘சோணம்’ என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியே ஓடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. ‘கிருஷ்ண’ என்றால் கறுப்பு. இந்த நதி கறுப்பு மண் மீது ஓடுகிறது. ‘கங்கை’ என்றால் வெளுப்பு. இதுவும் அது ஓடிவருகிற பிரதேசத்தைப் பொறுத்து ஏற்பட்ட பெயர்தான். மூன்றும் ஒரே சமுத்திரத்தில்தான் கலக்கின்றன. சிகப்பு ரஜோ குணம், கறுப்பு தமோ குணம், வெள்ளை ஸத்வ குணம். மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.

Water finds its level—`தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரே மட்டத்தில் இருக்க முயலும்’ என்பார்கள். மலை உச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது. அங்கிருந்து கீழே கனவேகமாக, ஒரே இரைச்சலோடு நதி விழுகிறது. பூமியில் ஓடும்போது அத்தனை சத்தம் இல்லை. முடிவில் சமுத்திரத்தில் கலந்தபின் சத்தமே இல்லை. அப்போதுதான் நதி தன் லெவலுக்கு வருகிறது. அதாவது லெவலுக்கு வந்தவுடன் பரம சாந்தமாகிறது. எதிலுமே சரி, லெவல்—அதாவது அளவு அறிந்து, அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம்—வந்தால்தான் சாந்தம் உண்டாகும். லெவலுக்கு மீறிச் செய்கிற ‘தாட்பூட்’ காரியங்கள் பிறருக்குப் பிரமிப்பூட்டலாம். ஆனால் இதனால் நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வதுதான் பலன். உருட்டல், புரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர் கொண்டு சென்று வாங்கிச் செல்கிறது. இதனால்தான் நதியின் சங்கம ஸ்தானங்களுக்குச் சிறிது தூரம் முன்னாலிருந்தே உப்புக் கரிக்கிறது. நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரமும் நம்மை எதிர் கொண்டு அழைத்துப்போய் தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s