கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!

ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.

‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே? இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.

ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால் தான் அவற்றுக்கு உருவமும் உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.’ [ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.

இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். ‘எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன’ என்று கூறுபவரே, ‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை’ என்கிறார். (ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷு அவஸ்தித:). இங்கே ஆத்மா எல்லாவற்றையும் கடந்தது என்ற தத்துவம் பேசப்படுகிறது.

‘இது என்ன குழப்புகிறாயே’ என்றால், ‘நான் எல்லாருக்கும் விளங்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய) அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத:)’ என்று ஒரு போடு போடுகிறார்.

‘இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!’ என்று தோன்றுகிறதா?

நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். ‘நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருந்தால், ‘ஆயிரம்பேர் இருந்தால், ஆயிரம்பேருக்கும் விளங்க மாட்டேன்’ என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, ‘நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன்’ என்றால், ‘ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது விளங்குவேன்’ என்றுதான் பொருள். பகவான் ‘எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்’ என்றாரேயன்றி ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்’ என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.

அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். ‘நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும் என்னிடம் இல்லை’ என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.

“இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது” என்று சொன்னால் என்ன அர்த்தம்? மாலைக்குள் தான் பாம்பு இருக்கிறது; பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படித்தான். இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி ‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே? அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, ‘என்னிடத்திலும் பொருட்கள் இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை’ என்று கூறிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் என்பதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா?

கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:

‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.’

அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு’ – மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.

நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s