காரியத்தில் பேதமும் மனோபேதமும்

‘ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆசாரங்கள்’ என்று சொன்னேன். அது தப்பு. ஜாதிக்காகத் தொழில் இல்லை; தொழிலுக்காகத்தான் ஜாதி. சுள்ளிகளை எந்த அடிப்படையில் வேதமதம் சின்னக் சின்னக் கட்டுகளாகக் கட்டிப் போட்டது? ஒவ்வொரு தினுசான தொழிலுக்கு ஒவ்வொரு வர்ணம் என்று பிரித்தது?

மேல் நாடுகளில் தொழில் பிரிவினை (Division of labour) என்று பொருளாதாரத்தில் (Economics) சொல்லிக் கொண்டு இன்னமும் அதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாமல் இருப்பதைப் பார்க்கிறார்கள். ஒரு சமுதாயம் நடக்க வேண்டும் என்றால் பல தினுசான தொழில்கள் நடக்கத்தான் வேண்டும். எனவே, தொழில் பங்கீடு (division of labour) செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், இத்தனை பேர்தான் இன்ன தொழிலைச் செய்யலாம்; இப்படியொரு விகிதாச்சாரத்தில் (proportion) ஒவ்வொரு தொழிலுக்கும் ஜனங்கள் வந்தால்தான் சமுதாயம் சீராக (balanced -ஆக) இருக்கும் என்பதற்கு யார், எப்படிக் கட்டுத் திட்டம் பண்ண முடியும். முடியவில்லை. எல்லோரும் சௌகரியமான தொழில்களுக்கே போட்டி போடுகிறார்கள்; எங்கே பார்த்தாலும் துராசை; போட்டா போட்டியினால் மனக்கசப்பு; அதைத் தொடர்ந்து பலவிதமான ஒழுக்குத் தப்பிதங்கள் என்று பிரத்தியக்ஷமாகப் பார்த்து வருகிறோம்.

இதே தொழில் பங்கீட்டைப் பாரம்பரியமாக வைத்து நடத்தி வந்த நம் தேசத்தில் அந்த ஒழுங்கு குலைகிறவரையில் சாந்தியும், சந்தோஷமும், சௌஜன்யமும், திருப்தியுமே இருந்து வந்தன. இப்போது கோடீசுவரனுக்குக்கூடத் திருப்தி இல்லாமல் இருக்கிறது. அப்போதோ ஒரு செருப்புத் தைக்கிறவன்கூட அக்கடா என்று நிறைந்து இருந்தான். எல்லோருக்கும் துராசைகளைக் கிளப்பிவிட்டு அத்தனை பேரையும் அதிருப்தியில் கொண்டு தள்ளியிருக்கிற புது ஏற்பாடுகள்தான் முன்னேற்றம்; இதுவரை செய்ததும் போதாது. இன்னும் வேகமாக இப்படியே “முன்னேற” வேண்டும் என்று எங்கும் பேச்சாயிருக்கிறது!

அந்தக் காலத்தில் துராசையில்லை. மநுஷ்யர்கள் ஒருத்தருக்கொருத்தர் பாந்தவ்யமாக ஒட்டிக் கொள்கிற சின்னச் சின்ன சமூகங்களாக இருந்துவிட்டதால், இப்படிச் சேர்ந்திருப்பதே பெரிய இன்பம் என்று அவர்கள் கண்டு கொள்கிறார்கள். அதோடு மதத்தில் நம்பிக்கை, தெய்வத்திடம் பயபக்தி, தங்களுக்கென்று குலதெய்வங்கள், அதற்கான வழிபாடுகள் இருக்கின்றன என்ற பெருமை, இதிலெல்லாம் நிறைந்து இருந்துவிட்டதால் அவர்களுக்கு வெளி வஸ்துக்களைத் தேடி மேலே மேலே இன்று தவிக்கிற தவிப்பு இல்லவே இல்லை. சமுதாயம் முழுவதும் நன்றாக இருந்தது.

பலவாகப் பிரிந்தாலும் ஸ்வாமியின் பெயரில் எல்லாரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவரவர்க்கும் குலதெய்வம் இருந்தபோதிலும், ஊருக்குப் பொதுவாக பெரிய கோயில் இருந்தது. அந்தக் கோயிலும், அதன் உத்ஸவாதிகளுமே ஊர் வாழ்க்கையின் மைய ஸ்தானமாக இருந்தன. இதைச் சுற்றியே, அதாவது பகவானின் பேரில், அத்தனை சமூகத்தாரும் அவன் குழந்தைகளாக ஒன்று சேர்ந்திருந்தார்கள். ஒரு தேர்த் திருவிழா என்றால் அக்ரகாரத்துக்காரனும் சேரிக்காரனும் தோளோடு தோள் இடித்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தார்கள். அந்த சௌஜன்யமான காலத்தை நினைத்தாலே மறுபடி அப்படி வருமா என்று இருக்கிறது. ஒரு வயிற்றெரிச்சல் இல்லை, வசைமாரி இல்லை. அவரவர் தன் காரியத்தை எளிமையாகச் செய்து கொண்டு மனஸில் ரொம்பியிருந்த காலம்.

இதை எல்லாம் ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், சமூகம் பலவாகப் பிரிந்திருந்தாலும்கூட ஹிந்து மதம் எத்தனையோ தாக்குதல்களைச் சமாளித்தது என்று சொல்வது சுத்தப் பிசுகு. சமூகம் பலவாகப் பிரிந்திருந்ததாலேயே அது இப்படி யுகாந்தரமாக ஜீவனோடு இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. எல்லோருக்குமான பொது தர்மங்களை மட்டும் சொல்லி, ஒரே சமூகமாக இருந்த மகா பெரிய மதங்கள் எல்லாம் அழிந்து போனதையும், இப்போது இருக்கப்பட்ட அம்மாதிரி மதங்களின் எதிர்காலமும் என்னவாகுமோ என்று பயப்பட வேண்டியிருப்பதையும் பார்க்கிறபோது, இதுதான் — அத்தனை சுள்ளியையும் ஒரே கட்டாகப் போடாமல், பல சின்னச் சின்ன கட்டுகளாகப் போட்டு, அந்தக் கட்டுகளை எல்லாம் தெய்வ பக்தியினால் ஒன்றாக முடிந்திருக்கிற வர்ணதர்மம்தான் — ஹிந்து மதத்தைச் சிரஞ்சீவியாக காப்பாற்றியிருக்கிறது என்று தெரிகிறது.

எல்லாருக்கும் ஒரே தர்மம் என்று வைத்துக் கொண்டதோடு நின்றுவிட்ட மதங்களில் எல்லாம், உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ வேறு தினுசான தர்மங்கள் வந்து தாக்கியபோது, அவை அடியோடு இற்று விழும்படியாயிற்று. இந்தியாவில் பல தினுசான தர்மங்களும் பொதுவான தர்மத்துக்குள் இருந்ததால், வேறு தர்மங்கள் உள்ளேயே எழுந்தால் அல்லது வெளியிலிருந்து வந்து தாக்கினால், அவற்றையும் தள்ள வேண்டியதைத் தள்ளி கொள்ள வேண்டியதைக் கொள்வதற்காக இடம் கொடுக்க முடியாது. நம் நாட்டுக்குள்ளே புத்த, ஜீன மதங்கள் வேதத்தின் ஒவ்வொரு அம்சத்தில் (aspect) எழுந்தன; அதனால் ஹிந்து மதமே இவற்றையும் தனக்குள் ஜெரித்துக் கொண்டுவிட்டது. பல பலவாக தர்மங்கள் விரிந்து இருந்ததால், இன்னும் புதிதான பலவற்றுக்கும் இடம் தந்து தனதாக்கிக் கொள்ள முடிந்தது; அவற்றை எதிரியாக நினைத்துச் சண்டை போட்டுத் தோற்றுப் போக வேண்டியதில்லை. முஸ்லீம்கள் வந்தபின் அவர்களுடைய சில பழக்கங்கள் மட்டும் நம்மவருக்கு வந்தன. தத்துவம் என்று எதையும் அவர்களிடமிருந்து எடுத்து கொண்டதாகச் சொல்வதற்கில்லையானாலும், உடுப்பு போன்ற சில விஷயங்களில், சங்கீதம், சிற்பம், சித்திரம் போன்றவற்றில் அவர்களுடைய வழிகளை (Moghul Influence) கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். அதுவும் நம்முடைய வைதிக கலாசார (Vedic culture)ப் பிரவாகத்தில் தனியாக நிற்காமல் கரைந்து போயிற்று. இதுகூட வடக்கேதான் ஜாஸ்தி நடந்தது. தென்னிந்தியா துருக்க இன்ஃப்ளூயென்ஸுக்கு ரொம்பவும் ஆளாகாமல் கூடியமட்டும் தன் பழைய வழியிலேயே இருந்தது.

அப்புறம் வெள்ளைக்காரர்கள் வந்தபின் எல்லோருக்குமே — வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் தேசம் முழுவதிலுமே — வைதிக நம்பிக்கை குறைந்து வந்திருக்கிறது. ஏன் நிலைமை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிற்று? ஏன் இப்போது அரசியல் தலைவர்களாக இருக்கப்பட்ட எல்லோரும் வர்ண தர்மத்தை ‘காஸ்டிஸம்’ ,’காஸ்டிஸம்’ என்று கரித்துக் கொட்டும்படியாயிருக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்துக்கே ஜாதிதான் பெரிய தீமை செய்கிறது என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டாகியிருப்பது ஏன்? ஜாதி என்று சொன்னாலே ஜெயிலில் பிடித்துப்போட்டுவிடவேண்டும் என்ற நினைக்கிற அளவுக்கு ஆகியிருப்பது எதனால்?

இதற்கு எனக்கு தெரிந்தமட்டும் காரணங்களை, யார் பொறுப்பாளி என்பதை பின்னால் சொல்கிறேன்.1 தற்போது வர்ண தர்மத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்பவர்கள், எதனால் இப்படிச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம்; அவர்களுக்கு வர்ண தர்மத்தில் ரொம்பவும் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோலத் தெரிகிறது. இப்படி இருக்கக்கூடாது; எல்லாரையும் ஒரேமாதிரி ஆக்கி உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், இது காரிய சாத்தியம்தானா? இதைத் தெரிந்து கொள்வதற்கு ஜாதி முறை இல்லாத மற்ற தேசங்களைப் பார்த்தாலே போதும். எல்லாம் சமமாகி விடுவது ஒரு நாளும் நடக்காத காரியம் என்பதற்கு அந்தத் தேசங்கள் எல்லாம் பிரத்தியக்ஷ உதாரணங்களாக இருக்கின்றன. அங்கெல்லாம் உயர்த்தி—தாழ்த்தியில்லை என்றால் வர்க்கப் பூசல்கள் (class conflicts) இருக்கக்கூடாதுதானே? ஆனால் யதார்த்தத்தில் இப்படியா இருக்கிறது? எங்கே பார்த்தாலும் சௌகரியப்படுகிறவர்கள், சௌகரியப்படாதவர்கள் என்ற பிரிவும், இவர்களுக்குள் சண்டையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் தர்மத்தை உள்ளபடி புரிந்து கொண்டால் ஜாதியால் பெரியவன், சின்னவன் என்று வாஸ்தவத்தில் இல்லவே இல்லை. ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு அபிப்பிராயம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தைப் போக்கடிக்க வேண்டியதுதான் நம் கடமையே ஒழிய, அதற்காக அந்த முறையையே தொலைக்கக் கூடாது. இப்போதைக்கு ஜாதியில் உயர்த்தி—தாழ்த்தி எண்ணத்தையும், அதனால் உண்டான மனக் கசப்பையும் ஒத்துக் கொண்டாலும்கூட, மற்ற தேசங்களிலும் இந்த மனக்கசப்பு சமூகப் பிரிவுகளிடையே இருக்கத்தான் செய்கிறது. அங்கெல்லாம் ‘ஜாதியால் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுகிறான்’ என்று ஒருவனிடம் துவேஷம் இல்லாவிட்டாலும், பணத்தால் நம்மைவிட உயர்ந்தவன், பதவியால் உயர்ந்தவன் என்று இன்னொருத்தனிடம் வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவில் ஒருத்தனுக்குமே சாப்பாட்டுக்கோ, துணிக்கோ, ஜாகைக்கோ குறைச்சல் இல்லை. வேலைக்காரனிடம்கூட கார் இருக்கிறது என்கிறார்கள். எனவே, அவரவரும் திருப்தியாய் இருக்க வேண்டியதுதானே? ஆனால் நாம் பார்ப்பதென்ன? அங்கேயும் ஒரு கார் வைத்திருப்பவன் இரண்டு கார் வைத்திருப்பவனைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறான். பாங்கில் கோடி டாலர் வைத்திருப்பவன் இரண்டு கோடி டாலர் வைத்திருப்பவனைப் பார்த்து அசூயைப்படுகிறான். தனக்கு ஜீவிக்க எல்லா சௌகரியமும் இருந்துங்கூட, தன்னைவிடப் பணம் ஜாஸ்தி இருப்பவனைப் பார்த்து உரிமைச் சண்டை, சலுகைச் சண்டையெல்லாம் கிளப்புகிறான் என்றால் என்ன அர்த்தம்? அவன் தன்னைவிட உயர்ந்த ஸ்திதியில் இருக்கிறான் என்று இவன் நினைக்கிறான் என்றுதானே அர்த்தம்? இப்படியாக அங்கெல்லாம் உள்ளூற ஒரு தினுசில் உயர்த்தி — தாழ்த்தி எண்ணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

கம்யூனிஸ்டு தேசம் மாதிரி எல்லாருக்குமே சம்பளத்தை சமமாக அளந்து தருவதாக வைத்துக் கொண்டாலும், அங்கேயும்கூட ஒருத்தன் ஆபீஸராகவும், இன்னொருத்தன் கிளர்க்காகவும் இருக்கத்தான் வேண்டியிருக்கிறது. வெளியிலே சண்டைபோட முடியாதபடி ராஜாங்க நிர்பந்தம் வேண்டுமானால் இருக்கலாமேயொழிய, இந்த மாதிரி பதவியிலும் ஸ்தானத்திலும் வித்தியாசம் இருக்கிற வரையில் உள்ளூறப் போட்டி, அசூயை இருக்கத்தான் செய்யும். கம்யூனிஸ்ட் தேசங்களில்தான் ரொம்ப உயர்ந்த லெலவிலேயே இந்தப் போட்டி ஏற்பட்டு ஏற்பட்டு, இன்றைக்கு சர்வாதிகாரி மாதிரி இருக்கிற ஒருத்தன் நாளைக்குப் போன இடமே தெரியாமல்போய், இன்னொருத்தன் அந்த ஸ்தானத்தில் வந்து உட்காருகிறான்; பதவியால் போட்டியிருக்கிறது என்பதால் எல்லாம் ஒரே பதவியாக ஆக்குவதும் சாத்தியமில்லை. அதாவது உயர்த்தி — தாழ்த்தி என்பது ஏதோ ஒரு தினுசில் இருந்து கொண்டுதான் இருக்கும்.

சமூக சௌஜன்யத்துக்குக் குந்தமாகப் போட்டியிலும் அசூயையிலும் கொண்டுவிடுகிற இப்படிப்பட்ட உயர்த்தி — தாழ்த்தி ஏற்பாடுகளைவிடப் பாரம்பரியத்தால் உண்டானதாகத் தப்பாக நினைக்கப்படுகிற ஏற்றத் தாழ்வுதான் இருந்து விட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றுகிறது. இதனால் தேசத்தில் பொதுவாக சாந்தியும், அவரவருக்குத் திருப்தியும், ‘இதுதான் நமக்காக ஏற்பட்டது’ என்பதில் போதுமேன்ற மனசும் இருந்தன அல்லவா?

வாஸ்தவத்தில் அத்தனை தொழிலும் சமூக க்ஷேமத்துக்காக உண்டானவைதான். ஒன்று உயர்வு, இன்னொன்று தாழ்வு என்றில்லை. எந்தத் தொழிலைச் செய்தாலும் ஆசை வாய்ப்படாமல் அதைச் சுத்தமாக (Perfect)ப் பண்ணி ஈசுவரார்ப்பணம் செய்தால் அதைவிடச் சித்த சுத்திக்கு வேறு மருந்தில்லை. ஒன்று உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்பது அடியோடு பிசகு. ஆனால் இப்படி பிசகாக நினைத்தால்கூடப் பரவாயில்லை; மற்ற தேசங்களிலும் இதைவிடப் பிசகான ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் இங்கேயில்லாத போட்டி, சண்டைதான் அங்கெல்லாம் உண்டாகின்றன என்று சொல்ல வந்தேன்.

நாம் பிரிந்து பிரிந்தே ஒற்றுமையாக இருந்து நம் நாகரிகத்தை பெரியதாக வளர்த்திருக்கிறோம். மற்றவர்கள் பிரியாமல் இருப்பதாக நினைத்துக் கொண்டே, ஒற்றுமையில்லாமலிருந்துதான் அந்த நாகரிகங்கள் விழுந்து விட்டிருக்கின்றன. இங்கே காரியத்தில் மட்டும் பேதமிருந்து உள்ளூற ஐக்கியம் இருந்ததால் நாகரிகம் வளர்ந்தது. அங்கெல்லாம் காரியத்தில் பேதமில்லாமல், அதனால் வந்த போட்டியாலேயே மனோபேதங்கள் உண்டானதென்றால் வெளி நாகரிகங்கள் படை எடுத்து வந்தபோது அவற்றிடம் உள்ளூர் நாகரிகங்கள் தோற்றுப்போக நேர்ந்தது.

எல்லாவற்றையும் ஒன்றாகவும் பண்ணி உயர்வாகவும் வைத்திருப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லாம் ஒரேயடியாகப் பிரித்து பேதப்பட்டுக் கிடப்பதும் உதவாது. இரண்டுக்கும் மத்தியமாக சமரசமாக ஒரு வழியை தர்ம சாஸ்திரம் தந்திருக்கிறது. நான் அதற்குப் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். அதனால்தான் அநுஷ்டானத்தில் வேற்றுமையும் வேண்டும்; இருதயத்தில் ஒற்றுமையும் வேண்டும் என்கிறேன். இரண்டையும் குழப்ப வேண்டாம் என்கிறேன்.

வெளிக் காரியங்களில் எத்தனை வேற்றுமை இருந்தாலும், இதயத்தில் அன்பு இருந்தால் தேசத்தில் பரம சாந்தமே இருக்கும். யுக யுகாந்திரமாக நம் தேசத்தில் அப்படித்தான் சமூகம் சாந்தமாக இருந்து வந்தது. அவரவரும் சுயநலனை மட்டும் எண்ணாமல், ‘சகல ஜனங்களுக்காகவும் நாம் இந்தக் கர்மத்தைச் செய்கிறோம்’ என்ற மனோபாவத்துடன் தங்கள் பரம்பரைக் கர்மத்தைச் செய்தால் ஏற்றத் தாழ்வு இல்லை. என்ன விபரீதம் ஏற்பட்டாலும் சாமானிய தர்மங்களை அனைவரும், விசேஷ தர்மங்களை அவரவரும் கூடிய வரையில் ரக்ஷித்து வந்தால் எந்த நாளும் நமக்குக் குறை வராது.


1இந்நூலின் பின்னால் வரும் “பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன?” என்ற உரை.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s