நம் மதத்தின் தனி அம்சங்கள்

மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் ஒன்று, கர்மக் கொள்கை, Karma theory என்று சொல்கிறார்கள். நம் மதத்திலிருந்து வந்த பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும் ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை.

‘கர்மா தியரி’ என்ன? எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause and effect என்பதாகவும், action and reaction என்பதாகவும், இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்று ஃபிஸிக்ஸில் சொல்கிறார்கள். பௌதிகத்தில் சொல்வதையே மநுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி ‘கர்மக் கொள்கை’யை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவன்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்துதான் லோக வாழ்வு. எனவே, ஒன்றுக்கு இருக்கிற நியதி, தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும். மனிதனின் ஒவ்வொரு கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன் உண்டாகித்தான் தீர வேண்டும் என்பதே Karma theory. ‘பாப கர்மம்’ செய்தால் அதற்கான தண்டனையை மனுஷ்யன் அநுபவிக்க வேண்டும். ‘புண்ணிய கர்மம்’ செய்தால் அதற்கான நற்பலனை இவனை வந்தடையும் என்கிறது நம் மதம்.

இம்மாதிரி பாப, புண்ணிய கர்மங்களை மனிதன் அநுபவிக்க வேண்டும் என்பதனாலேயே அவனுக்குப் பல பிறவிகள் உண்டாகின்றன என்கிறது நம் மதம். நல்லது செய்ய வேண்டும், கெட்டது செய்யக் கூடாது என்பதைச் சகல மதங்களும் சொன்னாலும், அவை நம் மதம் மாதிரி இத்தனை அழுத்தம் கொடுத்து காரணம்—விளைவு (cause and effect) தொடர்பைச் சொல்லவில்லை. மறுபிறப்புக் கொள்கையை (reincarnation theory) மற்ற மதங்கள்—பாரத தேசத்தில் தோன்றாத மற்ற மதங்களில் எதுவுமே—சொல்லவில்லை. அது மட்டுமில்லை. இதற்கு மாறாகப் பல தினுசான கருத்துக்களைச் சொல்கின்றன. ஆனபடியால் அந்த மதஸ்தர்கள் மனிதனுக்குக் கர்மா தீருகிற வரை பல ஜன்மங்கள் உண்டு என்ற நம் கொள்கையை பலமாக ஆட்சேபிப்பார்கள். பொதுவாக அந்நிய மதஸ்தர் கருத்து என்னவென்றால், ‘இந்த ஒரே ஜன்மாவோடு மநுஷ்யனுக்குப் பிறவி தீர்ந்து விடுகிறது. இந்த ஜன்மா முடிந்தபின் அவன் உயிர் என்றைக்கோ ஒரு நாள் ஸ்வாமி கூறுகிற தீர்ப்பைக் கேட்பதற்காக ஓரிடத்தில் போய் இருக்கும். அந்த நாளில் (judgement Day) ஸ்வாமி இவன் இந்தப் பிறவியில் செய்த பாப, புண்ணியங்களைக் கணக்குப் பார்த்து இவனை நித்திய ஸ்வர்க்க வாசத்துக்கோ அல்லது நிரந்தர நரக வாசத்துக்கோ (eternal damnation) அனுப்பி விடுவார்’ என்பதேயாகும்.

என்னிடம் வந்த ஒரு வெள்ளைக்காரர் — இப்போதெல்லாம் என்னிடம் நிறைய வெள்ளைக்காரர்கள் வந்தபடி இருக்கிறார்களே! — அவர்களில் ஒருத்தர்; இவர் புஸ்தகம் கிஸ்தகம் எழுதிப் பிரசித்தி பெற்றவர் —வேடிக்கையாகச் சொன்னார். அவருக்கு பைபிளில் எங்கு பார்த்தாலும் கடவுள் அன்பே உருவானவர் (God is love) என்று சொல்லிவிட்டு, இப்படிப்பட்டவர் ‘ஒரு தப்புப் பண்ணினவனைத் துளிகூடக் கருணையில்லாமல் மீளவே வழி இல்லாத நித்திய நரகத்திற்கு அனுப்புகிறார் என்று சொல்லுவது பொருத்தமில்லாமல் தோன்றியதாம். எனவே ஒரு பாதிரியாரிடம் சமாதானம் கேட்டாராம். அதற்குப் பாதிரியார், நிரந்தர நரகம் இருப்பது வாஸ்தவம். ஆனால், நிரந்தரமாகக் காலியாகவே இருக்கிறது’ என்றாராம்!

ஆனால் யோசித்துப் பார்த்தால் இதை நாம் ஏற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும். ஸ்வாமி கருணை காரணமாகப் பாவியைக்கூட நரகத்துக்கு அனுப்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், அவர்கள் சித்தாந்தப்படி அவர் பாவியின் உயிரை எங்கே அனுப்பமுடியும். அவர்கள் கொள்கைப்படி மறு ஜென்மா இல்லையாதலால் பூலோகத்துக்கு மறுபடி அனுப்ப முடியாது. ஆனதால், பாபியையும் ஸ்வர்கத்துக்குத்தான் அனுப்ப வேண்டியதாகும். அப்படியானால் நாம் லோகத்தில் எந்த பாபத்தை வேண்டுமானாலும், எத்தனை பாபங்களை வேண்டுமானாலும் கூசாமல் செய்து கொண்டே போகலாம்; முடிவில் எப்படியும் ஸ்வாமி நம்மை ஸ்வர்க்கத்துக்கு அனுப்பி விடுவார் என்று ஆகும். அதற்கப்புறம் லோகத்தில் சகலரும் ஒழுங்கு தப்பித்தான் நடப்பார்கள்.

நம் மதப்படியும் கர்ம பலனைத் தந்து தீர்ப்புத் தருகிற பலதாதாவான ஈசுவரன் பரம கருணாமூர்த்திதான். ஆனால் அதற்காக லோகம் அதர்மத்தில் மனமறிந்து விழட்டும் என்று விடுகிறவன் அல்ல அவன். அதனால் என்ன பண்ணுகிறான்? நம் பாப பலனை (புண்ய பலனையும்தான்) அநுபவிப்பதற்காக நம்மை இன்னொரு ஜன்மா கொடுத்து மறுபடி இந்த உலகுக்கே அனுப்பி வைக்கிறான். ஸ்வர்க்க ஆனந்தம், நரகக் கஷ்டம் இரண்டும் இந்த உலகிலேயேதான் இருக்கின்றன. நாம் கலந்தாங்கட்டியாகப் பாபம், புண்ணியம் இரண்டும் போன ஜன்மாவில் பண்ணியிருப்பதால் இப்போது கெட்டது நல்லது இரண்டையும் சேர்த்து அநுபவிக்கிறோம்; ரொம்பப் பாவம் செய்தவர்கள் ரொம்பக் கஷ்டப் படுகிறோம்; ரொம்பப் புண்ணியம் செய்தவர்கள் நிறைய சந்தோஷப் படுகிறோம். பொதுவிலே பார்த்தால் ரொம்பக் கஷ்டப் படுகிறவர்கள் அல்லது சமமாக கஷ்ட—சுகம் உள்ளவர்கள்தான் இருக்கிறோமே தவிர, தாங்கள் பரம சுகமாக இருப்பதாக நினைக்கிறவர்கள் ரொம்பவும் துர்லபமாகவே இருக்கிறார்கள். இதிலிருந்தே நாம் அனைவரும் பொதுவில் பாபமே அதிகம் பண்ணியிருக்கிறோம் என்பது புரிகிறது.

பகவான் கருணை காரணமாக, ‘இன்னொரு ஜன்மாவிலாவது இவன் பாபத்தைக் கழுவிக் கொள்வானா’ என்று பார்ப்பதற்காக, ஒரு பெரிய வாய்ப்பாக (opportunity) பிறவியைக் கொடுக்கிறார். அதிலே குரு, சாஸ்திரம், க்ஷேத்திரங்கள் இத்யாதி வசதிகளை எல்லாம் கொடுத்து, இவனுடைய அழுக்கைத் துடைக்க முன்வருகிறார். ‘இவன் கையாலாகாதவன். ஒரு நாளும் தானாக முன்னேற மாட்டான்’ என்று அடியோடு உதவாக்கரையாக நினைத்து இவனுக்குப் பாவியானாலும்கூட ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறார் என்பதைவிட இப்படி இவனைக் கூட நம்பி, இவன் தன்னைத்தானே கடைத்தேற்றிக் கொள்வான் என்று நம்பிக்கை வைத்து, புனர் ஜன்மா தந்து, இதில் இவனுடைய நன்முயற்சிகளுக்குப் பலவிதத்தில் கைகொடுக்க ஸ்வாமி முன் வருவதாகச் சொல்வதுதான் நன்றாக இருக்கிறது. பொருத்தமாக இருக்கிறது. அதுதான் பரம கருணையாகவும் இருக்கிறது. ‘எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது?—எல்லாம் உன் செயல்’ என்று ஜீவன் சரணாகதி செய்கிறபோது ஸ்வாமியே இவனை ஒரே தூக்காகத் தூக்கிவிடுகிறார் என்பது வாஸ்தவம். ஆனால் இவனாக முயற்சியை விடுகிற சரணாகதியில் அநுக்கிரகம் செய்வது வேறு; இவனுக்கு முயற்சி செய்யவே லாயக்கில்லை என்று நினைத்து அநுக்கிரகம் செய்வது வேறுதான். புருஷ யத்தனம் என்று ஒன்று இருப்பதாக நினைக்கிற வரையில் அதில் ஜீவனை நம்பிவிட்டு வைப்பதுதான் பரம கருணை. அதுதான் நிஜமான அநுக்கிரகம்.

நிரந்தர நரகத்துக்கு ஸ்வாமி எவரையும் அனுப்புவதில்லை என்பது ஒரு தனிப்பட்ட பாதிரியாரின் அபிப்ராயம்தான். அதுவேதான் கிறிஸ்துவம் முதலான, ‘ஒரே பிறவி’ மதங்களின் கோட்பாடு என்று சொல்லுவதற்கில்லை. ஒரே ஜன்மத்தில் ஒருத்தன் பண்ணுகிற புண்ணியத்துக்காக அல்லது பாபத்துக்காக அவனை ஸ்வாமி ஸ்வர்க்கம் அல்லது நரகத்துக்கு நிரந்தரமாக அனுப்பிவிடுகிறார் என்பதுதான் அம்மதங்களின் பொதுக் கருத்து, அதிலும் நாம் பொதுவாக பாபமே பண்ணுவதால் நரக தண்டனை பெறுகிறவர்கள்தான் ஜாஸ்தியாக இருப்பார்கள் என்பதால், தீர்ப்பு நாளைக்கே ரொம்பவும் பயங்கரமான பெயர்—Doomsday என்றே வைத்திருக்கிறார்கள். இது பகவானின் கருணைக்குக் குறைவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

நம் மதத்தின் புனர்ஜன்மக் கொள்கைக்கு ஆதரவாக ஒன்றை அழுத்தமாகக் காட்டலாம். வெள்ளைக்காரி ஒருத்தி என்னிடம் வந்து இந்த Reincarnation விஷயத்திற்கு நிரூபணம் (proof) கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை. அப்போது மடத்து முகாமில் ஒரு பண்டிதர் இருந்தார். அவருக்கு இங்கிலீஷும் வரும். அவரிடம் அவளை அங்கே உள்ள பிரஸவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோய், அங்கே பிறந்திருக்கிற குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டு வரும்படி சொன்னேன். அவளும் அப்படியே பிரஸவ ஆஸ்பத்திரிக்கு அவரோடு போய்விட்டு வந்து குழந்தைகளைப் பற்றிய குறிப்புகளைச் சொன்னாள். அதன்படி ஒரு குழந்தை கொழு கொழுவென்று இருந்தது; இன்னொன்று நோஞ்சானாக இருந்தது. ஒன்று அழகாக இருந்தது; இன்னொன்று அவலட்சணமாக இருந்தது. ஒன்று உசத்தியான ‘வார்டி’ல் சௌகரியமாகப் பிறந்தது; இன்னொன்று சொல்லி முடியாத கஷ்டங்களுக்கு நடுவே ஒரு பரம ஏழைக்குப் பிறந்தது. “ஜன்மாவின் கடைசியில் பகவான் ஒருத்தரை நிரந்தர நரகத்துக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது நமக்குக் கண்ணுக்குத் தெரியாத விஷயம். இப்போது பல ஜன்மங்களின் ஆரம்பத்தைப் பிரஸவ ஆஸ்பத்திரியில் பிரத்யக்ஷமாகப் பார்த்தாயே! இதில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்! ஏன் ஒன்று தாரித்திரியத்திலும் இன்னொன்று சம்பத்திலும் பிறக்க வேண்டும்? ஏன் ஒன்று ஆரோக்கியமாகவும் இன்னொன்று துர்பலமாகவும், ஒன்று லக்ஷணமாகவும் இன்னொன்று அவலக்ஷணமாகவும் இருக்க வேண்டும்? ஜீவனுக்கு ஒரே ஜன்மாதான் உண்டு என்ற உங்கள் மதக் கொள்கையை ஒப்புக் கொண்டால், அவை ஜனிக்கிற போதே இத்தனை பாரபட்சங்கள் இருப்பதைப் பார்க்கிற போது ஸ்வாமி கொஞ்சங்கூடக் கருணை அல்லது புத்திசாலித்தனம் இல்லாமல் மனம் போனபடி கன்னாபின்னா என்று காரியம் செய்து கொண்டிருக்கிறார் என்றுதானே ஆகிறது? அப்படிப்பட்ட ஸ்வாமி கருணை செய்வார் என்று நம்பி எப்படி பக்தி செலுத்துவது? பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களை ஒட்டிப் புனர் ஜன்மா அமைகிறது என்ற கொள்கையைத் தவிர, நீ பார்த்த ஏற்றத் தாழ்வுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்?” என்று கேட்டேன்.

அவள் ரொம்ப சந்தோஷத்தோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு போனாள்.

ஆனால், நவீன காலத்தவர்களுக்கு இந்த விளக்கங்கள் (explanations) போதாது. ஸயன்ஸ்படி ப்ரூஃப் கேட்பார்கள். அப்படிப் பார்த்தாலும் இப்போது ‘பாராஸைகாலஜி’க்காரர்கள் இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி பண்ணி ஜன்மாந்தரங்கள் உண்டு என்பதற்கு ஆதரவாக அநேக விஷயங்களைச் சொல்கிறார்கள். உலகம் முழுக்க இவர்கள் சுற்றி வந்ததில் எத்தனையோ இடங்களில் பூர்வ ஜன்மாவை நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு சொன்ன பல பேர்களைப் பார்த்திருக்கிறார்கள். பூர்வ ஜன்மத்தில் இப்போதைய இடத்துக்குத் துளிகூட சம்பந்தமே இல்லாமல் வேறு எங்கேயோ இருக்கப்பட்ட தூர தேசங்களில் தாங்கள் பார்த்தவற்றை நினைவாகச் சொல்கிற பல பேர் இருக்கிறார்கள். இந்த ஜன்மாவில் கொஞ்சங்கூடச் சம்பந்தமில்லாத பலரிடம் அப்போது இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அந்த விவரங்களை எல்லாம் மறக்காமல் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வது உண்மை தானா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்காக பாராஸைகாலஜிக்காரர்கள் அந்தந்த ஊர்களுக்குப் போயிருக்கிறார்கள். போனால் அங்கே ஆச்சரியப்படுகிற மாதிரி இவர்கள் சொன்ன அடையாளங்களை, இவர்கள் பூர்வத்தில் சம்பந்தப்பட்டிருந்த மநுஷ்யர்களைப் பார்க்கிறார்கள். இது மாதிரி ஒன்று, இரண்டு அல்ல. ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன. நமக்கெல்லாம் முற்பிறவி சமாச்சாரங்கள் அடியோடு மறந்து போய்விட்டன. ஆனால், வெகு சிலருக்கு நினைவு இருக்கிறது. அநேகமாக இப்படிப்பட்டவர்கள் பூர்வ ஜன்மத்தில் இயற்கையாகச் செத்துப் போகாமல் (natural death) அதாவது, நோய் நொடி வந்து செத்துப் போகாமல், கொலை செய்யப்பட்டவர்களாகவோ அல்லது திடீரென்று ஒரு விபத்திலே சிக்கிக் கொண்டு அப்போது மரணமடைந்தவர்களாகவோ இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

*   *   *

மனிதன் விஷயத்தில் புனர் ஜன்மாவை (reincarnation)ச் சொல்லுவதுபோல், ஸ்வாமியின் விஷயத்தில் அவதாரங்களை (incarnation)ச் சொல்வது ஹிந்து மதம் ஒன்றுக்கே உரிய, இன்னொரு தனியம்சமாகும். ஸத்வஸ்து ஒன்றுதான்; அதுதான் இத்தனை ஜீவராசிகளாகவும் ஆகியிருக்கிறது என்பதே நம் மதத்தின் பரம தாத்பரியம். அப்படியானால் அந்த ஒரு பரம்பொருளே மாறி மாறி ஜனன மரணங்களுக்கு ஆளாகிற அத்தனை ஜீவராசிகளும் ஆகும். அது தவிர, இந்த ஜீவ – ஜட லோகத்தை எல்லாம் ரக்ஷிக்கிற ஈசுவரனாகவும் அது இருக்கிறது அல்லவா? இந்த ஈசுவரனுக்கு மநுஷ்யர்கள் போல் கர்ம பந்தம் இல்லை. மனிதன் கர்மத்தை அநுபவிக்கத்தான் பல ஜன்மா எடுக்கிறான். ஈசுவரன் இப்படி எடுக்க வேண்டியதில்லை. ஆனால், புதுப் பிறவிகளில் இந்த ஜீவன் பழைய கர்மத்தைக் கழுவிக் கொள்ளாமல் மேலே மேலே சேற்றை வாரிப் பூசிக் கொள்கிறானே என்பதைப் பார்த்து, அவனுக்கு வழிகாட்டி, கைதூக்கி விடுவதற்காகப் பரம கருணையுடன் ஈசுவரனும் பூலோகத்தில் பலமுறை அவதரிக்கிறான். அதர்மம் ஓங்கி, தர்மம் நலிகிற போக்கு உச்சமாகிற போது, அதர்மத்தை ஒட்டி, தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், ஸாதுக்களை ரக்ஷித்து, துஷ்டர்களைச் சிக்ஷிப்பதற்காகவும் பகவான் பல அவதாரங்களைச் செய்கிறான் — கிருஷ்ண பரமாத்மா கீதையில் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

எல்லாமே ஸ்வாமி என்பது ஒரு நிலை; அது நம்மால் கிரகிக்க முடியாத நிலை. அப்புறம் உயர்வானதிலெல்லாம் ஸ்வாமி விசேஷமாகப் குடிகொண்டிருப்பதாகக் கீதையின் விபூதி யோகத்தில் சொன்ன நிலை. மனித வாழ்வில் இந்த உயர்வை ஏற்படுத்துவதற்காகத் தூதர்களாக அவன் ஆசாரிய புருஷர்கள், மகான்கள், ஞானிகள், யோகிகள், பக்திமான்களை அனுப்பி வைப்பது ஒரு நிலை. இதெல்லாமும் போதவில்லை என்று, தானே ஓர் அவதாரமாக இந்த லோகத்துக்கு இறங்கி வருகிறது ஒரு நிலை. ‘அவதரணம்’ என்றால் ‘இறங்கி வருவது’ என்றே அர்த்தம். பரத்துக்குப் பரமாக, பராத்பரமாக — ‘அப்பாலுக்கு அப்பால்’ என்பார்கள். அப்படி இருக்கப்பட்ட ஈசுவரன் இறங்கி வந்து, நமக்கு நடுவில் பிறந்து தர்ம ஸ்தாபனம் பண்ணுவது அவதாரம் எனப்படுகிறது.

சித்தாந்த சைவர்கள் சிவபெருமான் அவதரித்ததாக ஒப்புக் கொள்வதில்லை. ஆதிசங்கர பகவத்பாதாள் ஈசுவராவதாரம், ஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்றெல்லாம் சொல்வதை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கர்ப்பவாசம் செய்வது, மாம்ஸ மயமான நரதேகத்தில் இருப்பது எல்லாம் ஸ்வாமிக்கு இழுக்கு என்பது அவர்களுடைய அபிப்பிராயம். அத்வைதிகளுக்கோ கர்ப்பவாஸம் செய்த மாம்ஸ சரரீரத்தில் இருக்கிற இத்தனை பேருமே ஸாரத்தில் பிரம்மம்தான். ஆகையால், ஈசுவராவதாரத்தில் அவர்களுக்கு நிஷித்தமாக எதுவும் தெரியவில்லை. ஸித்தாந்த ரீதியில் வைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் பல ஒற்றுமையிருந்த போதிலும், பிரம்மமேதான் ஜீவனாயிருக்கிறது என்ற அத்வைதத்தை வைஷ்ணவர்கள் அப்படியே ஒப்புக் கொள்ளாத போதிலும், வைஷ்ணவர்கள் யாவரும் அவதார கொள்கையை ஒப்புக் கொள்கிறார்கள். பொதுவாக லோக வழக்கிலும் அவதாரம் என்றாலே மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள்தான் நினைக்கப்படுகின்றன. வைஷ்ணவர்கள் அவதாரங்களை ஒப்புக் கொள்வதற்குக் காரணம், பகவான் பரம காருண்யன் ஆனபடியால் ஜனங்கள் உஜ்ஜீவிக்கச் செய்வதற்காகத் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் குறைவுபடுத்திக் கொள்வான் என்று அவர்கள் நம்புவதுதான்.

உள்ளுக்குள்ளே தான் ஸ்வாமியே என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, வெளியில் ஏதோ, மநுஷ்யன் போல் வேஷம் போடுவதால், அவருக்குக் கொஞ்சங்கூட தோஷமோ, குறைவோ வந்துவிடவில்லை.

மொத்தத்தில் ஹிந்து மதம் எனப்படும் வைதிக நெறி அவதாரக் கொள்கையை ஏற்கிறது என்றே சொல்லி விடலாம். ஏனென்றால், சைவர்களும் தங்களது முழுமுதற் கடவுளான சிவ பெருமான் அவதரிப்பதில்லை என்று சொன்ன போதிலும், மகாவிஷ்ணு தசாவதாரம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்கள்.

*   *   *

அரூபமான ஒரே பரமாத்மா பல ரூபங்களில் பல தேவதைகளாக வருகிறதென்று சொல்லி, அவற்றுக்காக விக்கிரக ஆராதனைகளை ஏற்படுத்தியிருப்பது நம் மதத்தின் இன்னொரு பிரத்தியேக அம்சம். இதனால் அந்நியர்கள் நம்மைப் பல — தெய்வக் கொள்கையினர் (poly-thesis) என்கிறார்கள். இப்படிச் சொல்வது சுத்தத் தப்பு. ஒரே தெய்வத்தைப் பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக எண்ணுவதாகாது. அவ்வாறே ‘ஹிந்துக்கள் விக்கிரகம்தான் ஸ்வாமி என்று நினைத்து, விக்ரஹ ஆராதனை (ldolatry) செய்கிறார்கள்’ என்பதும் முழுப் பிசகு. விக்ரஹம் மட்டும்தான் ஸ்வாமி என்று விஷயமறிந்த ஹிந்து எவனும் நினைக்க மாட்டான். எங்குமுள்ள ஸ்வாமி இவன் மனஸை ஒருமுகப்படுத்தி ஆராதிக்க வசதியாக இந்த விக்ரஹத்தில் இருப்பதாகத்தான் நினைத்து ஆராதிக்கிறான். எந்த மதமானாலும் சின்னங்கள் (Symbol) வைத்துப் பூஜிப்பதையோ, தியானிப்பதையோ பார்க்கிறோம். அப்படி இருக்க, ஹிந்துக்களின் மூர்த்தி பூஜையை மட்டும் உருவ வழிபாடு என்பதோ, அதற்காகப் பரிகசிப்பதோ துளிக்கூட நியாயமற்றதாகும்.

ஹிந்து மதஸ்தர்கள் ரொம்பவும் பெருமைப்பட வேண்டிய அம்சம், இந்த மதம் ஒன்றுதான் தன்னை அநுசரிப்பதுதான் மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி உரிமை (exclusive right) கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும். யார் யார் எந்தெந்த சமய மார்க்கத்தில் போனாலும் கடைசியில் ஒரே பரமாத்மாவிடம் வந்து சேருவார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிற விசால மனப்பான்மை (catholic outlook) நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதனால்தான் பிறரை ஹிந்துவாக மத மாற்றம் (Conversion) செய்ய நம் சாஸ்திரங்கள் இடம் கொடுக்கவில்லை.

இயேசு கிறிஸ்வின் உபதேசங்களைப் பின்பற்றாதவர்களெல்லாம் நரகத்துக்குத்தான் போவார்கள். முகமதுநபி (Prophet) யின் உபதேசத்தை அநுசரிக்காதவர்களுக்கு கதி மோக்ஷம் கிடையாது என்றெல்லாம்தான் அந்தந்த மதஸ்தர்கள் சொல்கிறார்கள். அவர்களிடம் நாம் கோபப்படக்கூடாது. அவர்கள் வாஸ்தவமாகவே அப்படி நினைக்கலாம். அந்தந்த மதத்தில் இருப்பதால் தங்களுக்கு கிடைத்திருக்கிற நிறைவைப் பார்த்து, மற்றவர்களுக்கு இத்தனை நிறைவு இருக்கமுடியாது என்று நினைத்து, நல்லெண்ணத்தின் பேரிலேயே மற்றவர்களையும் தங்கள் வழிக்கு மாற்ற ஆசைப்படுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். வெளிப் பார்வைக்குக் கெடுதலாக தோன்றுகிற வழிகளைக் கடைபிடித்தாவது ஒரு நல்ல லக்ஷியத்தைச் சாதிக்கலாம் என்று நினைத்தே அவர்கள் பலவிதமான முறைகளைக் கையாண்டு மற்றவர்களைத் தங்கள் மதத்துக்கு இழுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அவர்கள் படை எடுத்து, சண்டை போட்டு, வாள் மூலம்கூட மதமாற்றத்தைச் செய்தது இப்படித்தான் என்று வைத்துக் கொள்ளலாம். இஸ்லாம் பெரும்பாலும் ஆயுத பலத்தாலேயே விஸ்தரிக்கப்பட்டது; கிறிஸ்துவ மதம் பணபலத்தால் விஸ்தரிக்கப்பட்டது என்று சொல்லுவது முண்டு. கிறிஸ்துவர்களும் படை எடுப்புக்கள் செய்தார்கள். ஆனால் மிஷனரிகளின் பரோபகாரப் பணியும் சேர்ந்து கொண்டது. பாலைவனமான அராபிய தேசத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு இல்லாத பணவசதி வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது. மிஷனரிகள் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி என்றெல்லாம் வைத்து, ஏழை எளியவர்களை அழைத்து அப்படியே அவர்களை தங்கள் மதத்தில் தள்ளிக் கொண்டார்கள்.

பலவந்தத்தையோ அல்லது உதவியைக்காட்டி வசீயப்படுத்துவதையோ நாம் ஏற்காமலிருக்கலாம். ஆனால் தங்கள் மதத்தைப் பரப்பினால் எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாகும் என்று அவர்கள் நிஜமாகவே நம்பியிருப்பார்கள் என்பதை நாம் சந்தேகிக்க வேண்டாம்.

ஆனால், அவர்கள் நம்பிக்கை சரிதானா? கிறிஸ்துவை, நபியைப் பின்பற்றா விட்டால் நரகந்தானா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தத் தனி பாத்தியதை (exclusive right) செல்லுபடியாகாது என்று தெரிகின்றது. ஏனென்றால் கிறிஸ்து வந்து இரண்டாயிரம் வருஷங்கள்தான் ஆகிறது. நபி பிறந்து 1400 வருஷங்கள்தான் ஆகிறது. அதற்குமுன் ஆயிரம், பதினாராயிரம், லக்ஷம் வருஷங்களாகப் பிறந்து செத்துப் போனவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள்? இவர்களுடைய சித்தாந்தப்படி அவர்கள் கிறிஸ்து அல்லது நபியை தங்கள் ரக்ஷகராகக் (Saviour) கொள்ளாததால், சிருஷ்டி தோன்றிய நாளிலிருந்து அன்றுவரை வந்தவர்களெல்லாம் நரகத்துக்குத்தான் போயிருக்க வேண்டும். இப்போது இந்த மதங்களில் இருக்கிறவர்களின் முன்னோர்கள் இந்த மத ஸ்தாபகர்களின் முன்னோர்கூடத்தான் ஸ்வர்க்கம் போயிருக்க முடியாது. இவர்கள் ஹிந்துக்களைப் போலப் பல ஜன்மங்கள் உண்டு என்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி ஒப்புக் கொண்டாலாவது கிறிஸ்துவுக்கும், நபிக்கும் முற்பட்டவர்கள் மறுபடி மறுபடி பிறக்கிறபோது இந்த இரண்டு பேருக்குப் பிற்பாடும் ஜன்மா எடுத்து, இவர்களை அநுசரிக்கிற வாய்ப்பு (chance) பெற்று, கதிமோக்ஷம் அடைய வழியிருக்கிறது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இந்த மதங்களிலோ ஜீவனுக்கு ஒரே ஜன்மாதான் என்று சொல்லியிருக்கிறது. ஆதலினால், எத்தனையோ ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தோன்றிய இத்தனை ஜன்மங்களும் கூண்டோடு நரகத்துக்குத்தான் நிரந்தர வாசமாகப் போயிருக்க வேண்டும் என்றாகிறது. தான் சிருஷ்டித்த ஜனங்களுக்கு லக்ஷோபலக்ஷம் வருஷங்கள் வழிகாட்டுகிற ஆசார்யர்களையே அனுப்பி வைக்காமல், அவர்களை மீளா நரகத்தில் போடுபவனாக ஒரு கடவுள் இருக்கிறான் என்றால், அப்படிப்பட்ட இரக்கமே இல்லாத கடவுளை எதற்காக ஆராதிக்க வேண்டும்? எதற்காக அவனை அடைய வேண்டும்? அதாவது, கடவுளை அடைவதற்காக ஏற்பட்ட மதமே வேண்டாம் என்று சொல்லி விடலாம்.

*   *   *

பலவிதமான தேசங்கள், அவற்றில் பலவிதமான சீதோஷ்ண ஸ்திதிகள், அதற்கேற்ற பயிர் பச்சைகள், இவை எல்லாவற்றுக்கும் அநுகுணமாக பிற்பாடு ஒரு பண்பாடு என்று லோகத்தில் இருக்கிறது. இதில் எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதான வேதம் தான் ஆதியில் எல்லாவிடத்திலும் இருந்திருக்கிறது. பிற்பாடு அங்கங்கே ஜனங்களின் ஆசை அபிலாஷைகள் மாறி மாறி, அதிலிருந்தே அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அநுஷ்டானங்களை உடைய வேறு மதங்கள் வந்திருக்கின்றன. அதனால்தான் எந்த மதத்தைப் பார்த்தாலும்—இப்போது அநுஷ்டானத்தில் இருக்கப்பட்ட மதங்கள், இந்த மதங்களுக்கு முன்னால் அந்த தேசங்களில் இருந்த பூர்வீக மதங்கள் இவற்றில் எதைப் பார்த்தாலும்—அதிலெல்லாம் வைதிக மதத்தின் அம்சங்கள், சின்னங்கள் இருக்கின்றன. பாரத தேசத்தில் மட்டும் அந்த ஆதி மதமே தங்கி விட்டது. அதற்கப்புறமும் அது காலத்தால் தனக்கு பிற்பட்ட மதங்களை கௌரவ புத்தியுடனேயே பார்த்திருக்கிறது. ‘அந்த அன்னிய ஜனங்களின் பக்குவத்தை ஒட்டியே இந்த அன்னிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. இவையே அவர்களுக்கு சிரேயஸைத் தரும்’ என்று கருதியிருக்கிறது. ‘தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது’ (live and let live) என்று சொல்கிறார்களே அந்த உத்திஷ்டமான கருத்தே ஹிந்து மதத்தின் லட்சியமாக இருந்திருக்கிறது. அதோடுகூட மற்ற தேசத்தினருக்கு ஆத்மசிரேயஸ் அளிக்கக் கூடிய பௌத்தம், ஜைனம் முதலிய மதங்களையும் தானே பெற்றெடுத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

*   *   *

இது வரையில் தத்வ ரீதியில் (Philosophical) , வழிபாட்டு ரீதியில் (theological) ஹிந்து மதத்தில் இருக்கிற விசேஷ அம்சங்கள் சிலதைச் சொன்னேன்.

இவற்றோடு சமூக ரீதியில் (sociological) நம் மதத்துக் கென்று ஒரு பெரிய தனி அம்சம் இருக்கிறது.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அதில் ஃபிலாஸஃபி (தத்வம்) , தியாலஜி (தெய்வ வழிபாடு) இரண்டும் வரும். அதோடு தனி மனிதர் ஒழுக்கம் பற்றியும் கொஞ்சம் வரும். சமூக ஒழுக்கம் பற்றியும் ஏதோ கொஞ்சம் வரும். ‘அண்டை வீட்டுக்காரனைச் சகோதரனாக எண்ணு; விரோதியையும் நண்பனாக நினை! உன்னிடம் மற்றவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே நீ மற்றவர்களிடம் இரு; ஜீவ குலத்திடம் எல்லாம் அன்பாக இரு; சத்தியமே பேசு! அஹிம்சையை கடைபிடி’ என்று உபதேசிக்கிற நெறிகள்—ethics—ஒவ்வொரு மதத்திலும் இருக்கும். தர்மம், morality எல்லாம் இதில் சேரும். ஓரளவுக்கு இதிலேயே சமூக அம்சம்—(“ஸோஷாலாஜிகல்” என்று சொன்னேனே அந்த அம்சம்) இருக்கிறது எனலாம். ஆனால் ஓரளவுக்குத்தான். மற்ற மதங்களில் சமூக வாழ்க்கையியல் அமைப்பைப் பற்றிய விஸ்தாரமான பிரஸ்தாபம் கிடையாது.

ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும் சமூக வாழ்வுக்கான அடிப்படை (sociological foundation) ரொம்பவும் கெட்டியாக, ‘வர்ணாச்ரம தர்மம்’ என்ற விசேஷமான அம்சம் உண்டாயிருக்கிறது.

வர்ண தர்மம் என்பது ஒன்று: ஆச்ரம தர்மம் என்பது இன்னொன்று, தனி மநுஷ்யன் இன்னின்ன பிராயத்தில் இப்படியிப்படி இருக்க வேண்டும் என்பது ஆசிரம தர்மம். முதலில், சின்ன வயசில் பிரம்மச்சாரியாக இருந்து குருகுலத்தில் வித்தியாப்பியாசம் பண்ண வேண்டும். இரண்டாவது யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு குடித்தனம் நடத்திப் பிரஜாவிருத்தி செய்ய வேண்டும். மூன்றாவதாக, வயசான பின் வீடு வாசலை விட்டு வனத்துக்குப் போய் வாழ வேண்டும். லோக வாழ்க்கையில் ரொம்பவும் பட்டுக்கொள்ளாமல் வைதிக கர்மாக்களை மட்டும் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்புறம் நாலாவது ஆசிரமத்தில் இந்த வேத கர்மாக்களைக்கூட விட்டுவிட்டு, லௌகீக சம்பந்தங்களை அடியோடு கத்தரித்துவிட்டு, சன்யாசியாகிப் பரமாத்மாவிடமே மனஸைச் செலுத்த வேண்டும் என்று விதிப்பது ஆசிரம தர்மம். இந்த நாலு ஆசிரமங்களுக்கு பிரம்மச்சர்யம், கார்ஹஸ்த்யம் (க்ருஹஸ்த தர்மம்), வானப்ரஸ்தம், ஸந்நியாசம் என்று பெயர். இது தனி மனிதனுக்கான தர்மம்.

சமூகம் society முழுவதற்குமான ஏற்பாடுதான் வர்ண தர்மம் என்பது. இப்போது ரொம்பவும் கண்டனத்துக்கு (criticism) ஆளாகியிருப்பது இந்த வர்ண தர்மம்தான். வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் வர்ணம் வேறு. ஜாதி வேறு. வர்ணங்கள் நாலுதான்; ஜாதிகளோ ஏகப்பட்டவை, பிராம்மணர் என்ற ஒரே வர்ணத்தில் அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டியார், நாயக்கர் என்று பல ஜாதிகள் வருகின்றன. வேதத்திலும் (யஜுர் வேதம்—முன்றாவது அஷ்டகம்—நாலாவது ப்ரச்னம்) தர்ம சாஸ்திரத்திலும் பல ஜாதிகள் பேசப்படுகின்றன. அந்தப் பெயருள்ள ஜாதிகள் இப்போது இல்லை. அதெப்படியானாலும் ஜாதிகள் பல; வர்ணங்கள் நாலே நாலுதான். ‘நம் மதத்துக்கே பெரிய களங்கம்; மநுஷ்யர்களிடையே உசத்தி-தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற பொல்லாத ஏற்பாடு’ என்று இப்போது நினைக்கப்படுகிற வர்ண தர்மம் என்ன என்று, நன்றாக பக்ஷபாதமில்லாமல் ஆராய்ந்து பார்த்தால், சமுதாய வாழ்வின் ஒழுங்குக்காகவே ஏற்பட்ட ஒப்பற்ற சாதனம் அது என்று தெளிவாகும்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s