நாகரிக வியாதிக்கு மருந்து

இரண்டு கட்சிக்காரர்களின் இழுப்புக்கு நடுவே ஜனங்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரங்களின் வழியிலேயே போக வேண்டும் என்று சொல்கிற நாங்கள் ஒரு பக்கம் இழுக்கிறோம்; சாஸ்திரங்களை மாற்ற வேண்டும் என்கிற ‘சீர்திருத்தக்காரர்கள்’ இன்னொரு பக்கம் இழுக்கிறார்கள். நவீனப் படிப்புமுறை காரணமாகச் சிறு பிராயத்திலிருந்தே சீர்திருத்தங்கள் எனப்படும் மாறுதல்களை சிலாகித்துத்தான் ஜனங்கள் படித்திருக்கிறார்கள். படிப்பு இப்படி இருந்தாலும், பழக்கம் அடியோடு போகவில்லை. யுகாந்திரமாக வந்துள்ள நமது சாஸ்திர தர்மங்கள் துளித்துளி எல்லார் வீட்டிலும் சமூகத்தில் பழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பழக்க வாசனை ஒரு பக்கமும், ஜனங்களை இழுக்கின்றன. இப்போது ஏற்படுத்திக் கொண்ட நாகரிக வாழ்க்கையில் திருப்தி இல்லை என்று எல்லோருக்கும் தெரிகிறது. பழைய காலத்தில் இருந்த நிம்மதி இன்று இல்லை என்று அனைவருக்கும் சர்வ நிச்சயமாகத் தெரிகிறது. இப்போது முன்னைவிட அதிகப் பணம் இருப்பதாக பாவனை இருந்தாலும், தரித்திரம் போகவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. ‘எல்லாம் சுபிக்ஷமாயிருக்கிறது; நம் தேவைக்கு அதிகமாகவே தானியம் விளைந்திருக்கிறது’ என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், எங்கே பார்த்தாலும் திகில் போகவில்லை. முன்னே இருந்த கூரை அல்லது ஓட்டுவீடு இப்போது மாடிக் கட்டிடமாகி விட்டது. அப்போதெல்லாம் ஏதோ நாலைந்து பாத்திரங்கள், பனைமட்டைப் பெட்டி, சுரைக்குடுக்கைகள் இவை மட்டுமே வீட்டுக்குவீடு இருந்தனவென்றால், இப்போது ஏராளமாக பண்டங்கள் வந்து நிரம்பிவிட்டன. இவையெல்லாம் நாகரிக வாழ்க்கையில் வந்தவைதான். ஆனாலும் அன்று இருந்த நிம்மதி இன்று இல்லவே இல்லை என்று தெரிகிறது.

பழைய ஆசாரப்படி நிம்மதியாக வாழ வேண்டும் என்று உள்ளுக்குள்ளேயே நினைக்கிறார்கள். ஆனால் வெளியிலே நாகரிகத்தையும், சீர்திருத்தப் பெருமையையும் விடுவதற்குத் துணிச்சல் இல்லை. இரண்டு வழியிலும் சேராமல் சங்கடப்படுகிறார்கள். இந்த இரண்டுங்கெட்டான் நிலைக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்; அநேகமாக எல்லாவீடுகளிலும் காந்தியின் படமும் இருக்கிறது. என் படமும் இருக்கிறது. ஆனால் காந்தி சொன்னாரே என்பதற்காக விதவா விவாஹம் பண்ணிக் கொள்கிற துணிச்சலும் முக்காலே மூணு வீசம் பேருக்கு வரவில்லை; நான் சொல்கிறேனே என்று குடுமி வைத்துக் கொள்கிற துணிச்சலும் இல்லை. பாவம்; ஜனங்கள் நிலை தெரியாமல் இரண்டுக்குமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். உறுதி வேண்டும்; சாஸ்திரத்தில் தளராத பிடிப்பு, தைரியம் அவசியம் வேண்டும்.

சாஸ்திர விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுப்பது என்று வந்தால்கூடத் கடைசியில் வெறும் லௌகிக சௌகரியத்தை மட்டும் அநுசரிக்கும்படித்தான் ஏற்பட்டுவிடும். சிலர் நல்லெண்ணத்துடனேயே என்னிடம் வந்து, “தர்ம சாஸ்திரங்களை ரிஷிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நீங்களும் ரிஷி மாதிரி இருக்கிறீர்கள். அதனால் காலத்துக்குத் தகுந்தபடி சாஸ்திரங்களை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கேட்கிறார்கள். வயலில் களை எடுப்பதுபோல இப்போது கால நிலையை அநுசரித்துச் சில ஆசார தர்மங்களை எடுத்துவிட வேண்டும் என்பது இவர்கள் அபிப்ராயம். இப்போது சிலவற்றைக் களை என்று நினைத்து நான் எடுத்தால், இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பின் இன்னொருத்தர் வேறு சில ஆசாரங்களைக் ‘களை’ எடுக்கலாம். இப்படியே போய்க்கொண்டிருந்தால், எது பயிர், எது களை என்கிற வியவஸ்தை இல்லாமல் வயல் முழுவதுமே போய்விடும்.

ரிஷிகள் ஏதோ சொந்த அபிப்பிராயத்தில் சொன்னார்கள் என்பதற்காக தர்ம சாஸ்திரத்தை நாம் அநுசரிக்கவில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். என்றைக்கும் மாறாமல் சாசுவதமாக இருக்கும் ஈசுவர ஆக்ஞையான வேதத்தை அநுசரித்தே ரிஷிகள் இந்த விதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதால்தான் இவற்றைப் பின்பற்றுகிறோம். அதை உள்ளபடி ரக்ஷிக்கத்தான் பிரயத்தனப்பட வேண்டுமேயன்றி, மாறுதல் செய்வதற்கு என்று அதிகாரம் இல்லை.

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகிக நாகரிகத்தை விட்டுவிட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்கவேண்டியதில்லை. பணத்துக்காக பறக்காதபோது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசம் கிடைக்கும்; வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னால் உண்டாகும்.

கர்ம அநுஷ்டானங்களைப் செய்யப் பணவசதி வேண்டியதேயில்லை. ஆடம்பரமாக செலவு செய்து பூஜை செய்யவேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும், வில்வ பத்திரமும் பூஜைக்கு போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தையே நைவேத்தியம் என்று காட்டினால் போதும். ‘விவாகமும் சாஸ்திர அநுஷ்டானம்தானே? அதற்கு ஏகமாகச் செலவாகிறதே!’ என்று கேட்கலாம். ஆனால் இப்போது நடக்கிற ஆடம்பரம் எதுவுமே சாஸ்திர சம்மதமான விவாகத்துக்குத் தேவையில்லை. குறிப்பாக, இப்போது விவாகங்களில் மிகப் பெரிய செலவாக உள்ள வரதக்ஷிணைக்குச் சாஸ்திர சம்மதமே இல்லை. சாஸ்திர சம்மதமான கர்மங்களுக்குப் பணம் முக்கியமாக இருந்தால், பணக்காரர்களுக்கு மட்டும்தான் நம் மதம் உரித்தானது என்றாகிவிடும். உண்மையில் அப்படி இல்லவே இல்லை.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நாலு வாழ்க்கைப் பயன்களில் இன்பத்தை மட்டும் தேடி அதற்காகப் பொருளுக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். இதை மாற்றி வீட்டுக்காக (மோக்ஷத்துக்காக) அறத்தின் (தர்மம்) மூலம் பாடுபட வேண்டும். வாழ்க்கையை எளியதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டாம்; அறங்களை அப்போது பின்பற்ற முடியும். அறத்தின் பயனாகக் கிடைக்கிற பேரானந்த வீட்டையும் பெறமுடியும்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s