ஸ்வாமி நாமா? இல்லை என்றால்….?

ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள். அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார். “நான்தான் ஸ்வாமி” என்றுதான் ஹிரண்யகசிபுவும் சொன்னான். அவனை ஸ்வாமியே நரசிம்மமாக வந்து சம்ஹாரம் செய்யும்படி ஆயிற்று. ஆசார்யாள், “நாம்தான் ஸ்வாமி” என்று சொல்வது ஹிரண்யகசிபு சொன்னது போலவா?

இல்லவே இல்லை. “நான்தான் ஸ்வாமி” என்று ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார். ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார். இப்போது நாம் உத்தரணி ஜலத்தைப்போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஸ்வாமி அகண்ட சக்தியுடன் சமுத்திரமாக இருக்கிறார். அந்தச் சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணி ஜலம், தான் தனி என்கிற அகங்காரத்தைக் கரைத்து சமுத்திரத்தில் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்.

நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களும் உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே! எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி! எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, ‘ஸ்வாமியே நாம்’ என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப் பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, ‘ஜீவன் ஸ்வாமி அல்ல; இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து; இவன் வேறு; அவர் வேறு’ என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத் தான் இருந்தாக வேண்டும்.

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

மனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப புண்ணியமற்ற நிலையை அடைந்து, அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்து பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்? இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக, அத்வைதமாக ஆகிவிடுவோம். ‘நீ வேறெனாதிருக்க, நான் வேறெனாதிருக்க’ என்று அருணகிரிநாதர் பாடிய அனுபவத்தை அடைவோம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s