அக்னியில் அடங்கிய அவதார புருஷர்கள்

குமாரிலப்பட்டர் நெருப்பில் அப்படியே அடங்கிக் குமார ஸ்வாமியாகிவிட்டார். தர்ம சாஸ்திரத்துக்காக சரீரத்தையே பரித்தியாகம் செய்தார். இப்படிப்பட்ட மகான்கள் போட்ட தியாக அஸ்திவாரம் நம் வைதிக மதத்துக்கு இருப்பதால், நடுவாந்திரத்தில் எத்தனை நாஸ்திகமும், அவைதிகமும், ‘சீர்திருத்தமும்’ வந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

இங்கே நம் ஞானசம்பந்தரும் ஒரு பெரிய அக்னி ஜோதிக்குள் சென்றுதான் மறைந்தார். அப்போது அவருக்கு வயசு பதினாறுதான். அந்த சின்ன வயசுக்குள் தமிழ்த் தேசம் முழுவதும் பர மத கண்டனம் செய்து வைதிக தர்மத்தை ஸ்தாபித்துவிட்டார்.

ஆசார்யாளும் பதினாறாவது வயசிலேயே பாஷ்யங்களை எழுதி பூர்த்தி செய்து விட்டார்; சரீரத்தையும் முடிக்க நினைத்தார். ஆனால் வியாஸர், “அவசரப்படாதீர்கள்! நீங்கள் எழுதின பாஷ்யங்களை நீங்களே உபதேசிக்க வேண்டும். தேசம் முழுக்க உள்ள மற்ற மதஸ்தரை நீங்களேதான் சந்தித்து வாதில் ஜயிக்க வேண்டும். உங்களுடைய தரிசன பாக்கியத்தை ஜனங்களுக்கெல்லாம், அவர்களைத் தேடிப்போய், அநுக்கிரகிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதனால் ஆசாரியாள் இன்னொரு பதினாறு வருஷம் மனுஷ்ய சரீரத்தை வைத்துக் கொண்டார்.

ஆசாரியாள் பாரத கண்டம் முழுவதிலும் வைதிக புனருத்தாரணம் பண்ண வேண்டியிருந்ததால், (இவருடைய வேலையில் பாதியான பௌத்த மத கண்டனத்தை ஏற்கெனவே குமாரிலப்பட்டரும், உதயனாச்சாரியார் என்ற நியாய சாஸ்திர நிபுணரும் செய்திருந்தும்கூட) முப்பத்திரண்டு வயசு மனுஷ்ய சரீரத்தில் இருக்க வேண்டியிருந்தது. தமிழ் தேசத்தில் மட்டும் இந்த காரியத்தைச் செய்த சம்பந்தருக்குப் பதினாறே வயசு போதுமாயிருந்தது. அப்பா அப்படி, பிள்ளை இப்படி!

அப்பாக்காரர் பிரம்மச்சரியத்திலிருந்து நேரே சன்னியாசத்துக்குத் தாவி அவதார காரியத்தைச் செய்தார். பிள்ளையோ – அவரை ‘ஆளுடை பிள்ளை’ என்றே சொல்வார்கள் – பிரம்மச்சரிய ஆசிரமத்திலேயே மகத்தான வேத தர்ம ஸ்தாபனத்தைச் செய்து விட்டார்.

சம்பந்தருக்குப் பதினாறு வயதானபோது கல்யாணம் செய்து கொண்டு கிருஹஸ்தாச்ரமம் ஏற்க வேண்டுமென்று பந்துக்கள் கேட்டுக் கொண்டார்கள். அம்பாளின் க்ஷீரத்தைப் பானம் பண்ணினவருக்கு எந்த ஸ்திரீயும் சாக்ஷாத் பரதேவதையாகத்தான் தெரிவாள். “அம்மா! உன் க்ஷீர விசேஷம், உன் பிள்ளைகள் இரண்டுபேரும் காமமே இல்லாத குமாரர்களாகவே எந்நாளும் இருக்கிறார்கள்” என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்யலஹரி’யில் சொல்கிறார். (வடக்கே கார்த்திகேயர் கடும் பிரம்மச்சாரி. அங்கே வள்ளி தேவசேனா சமாசாரமே தெரியாது.) இப்படிப்பட்டவர்தான் ஞான சம்பந்தர். இருந்தாலும் அப்போது ஈசுவர சங்கல்பத்தை அறிந்து, அம்மாவுக்காகச் சரி என்று ஒப்புக் கொண்டார்.

திருநல்லூர் பெருமணத்தில் கல்யாணம் நடந்தது. பாணிக்கிரணம் ஆயிற்றோ இல்லையோ, புதிசாகக் கல்யாணம் செய்துகொண்ட இளம் பத்தினியையும், இன்னும் வந்திருந்த அத்தனை பந்து மித்திரர்களையும் அழைத்துக் கொண்டு அந்த ஊர்க் கோயிலுக்குப் போனார் சம்பந்தர். கோயில் முழுவதும் ஒரே ஜோதி மயமாயிற்று. ஞானசம்பந்தர்,

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்(கு) உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமச்சி வாயவே !

என்ற பஞ்சாக்ஷரப் பதிகத்தைக் கசிந்து கசிந்து கண்ணீர் மல்கிப் பாடிக்கொண்டே அவர்கள் எல்லோரையும் ஜோதிக்குள் அனுப்பிவிட்டுத் தாமும் பரமானந்தமாக அதற்குள் புகுந்து இரண்டறக் கலந்து விட்டார்.

அவர்கள் இவருக்குக் கல்யாணம் செய்து பந்தத்தில் மாட்ட நினைத்தால், ஞானசம்பந்தரான இவரோ அத்தனை பேருக்கும், பந்தத்தைப் போக்கி, கூண்டோடு கைலாசம் அனுப்பிவிட்டார். இதுதான் பெரிய கல்யாணம், திருநல்லூர் பெருமணம்.

பரமேசுவரனின் நேத்ர அக்னியிலிருந்து வந்த சுடரே குமாரஸ்வாமி. திருப்புகழ் சொன்னபடி ‘நெருப்பையும் எரிக்கும் ஞானாக்னி அவர். அதனால் இரண்டு அவதாரங்களிலும் அக்னிக்குள்ளே சொஸ்தமாகச் சென்று ஸ்கந்தலோகத்துக்குத் திரும்பினார்.

அவர் ஞானாக்னியானாலும் இருதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜல சம்பந்தமும் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில்தான் சிவ தேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. சரவணப் பொய்கை அம்பாளே. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் ‘காங்கேயன்’ என்று பெயர்.

எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. ஷஷ்டிப் பெண்களுக்கும் பாலனானார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகிக் ‘கார்த்திகேயர்’ ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கிருத்திகை; திதியில் ஆறாவது ஷஷ்டி; இவருக்கு ஆறு முகம்; ஆறு அக்ஷரம் கொண்ட ‘ஷடக்ஷரி’` இவருடைய மந்திரம். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸரியம் என்று ஆறு பகைவர்களைகக் கொன்று ஞானம் அருளும் ஆறு படை வீரர் அவரே.

சுப்ரமண்யரின் ஒர் அவதாரமான குமாரிலப்பட்டரை ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் நேரில் சந்தித்து வாதத்தில் ஜயித்தார்; இன்னோர் அவதாரமான ஞானசம்பந்தரைப் பற்றி ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்லிப் புகழ்திருக்கிறார். காலக் கணக்கு பார்க்கிறவர்கள், இது சம்பந்தரைப் பற்றியது இல்லை, ஆசார்யாள் தம்மையே சொல்லிக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அது எப்படியானாலும் அந்த சுலோகத்தின் தாத்பரியத்தைதத் சொல்கிறேன் (தவ ஸ்தன்யம் மன்யே*)

“ஹிமகிரி குமாரியான அம்மா! உன்னுடைய க்ஷீரம் என்பது உன் இருதயத்திலிருந்தே வருகிற அமிருதம். அது பானம் பண்ணின குழந்தைக்கு அருளைப் பொழிந்தது மட்டுமில்லை; இந்த அருளை அந்தக் குழந்தை லோகத்துக்கெல்லாம் தருவதற்காக, அந்தக் குழந்தைக்கு மேலான வாக்குசக்தியையும் உன் க்ஷீரம் தந்துவிட்டது. இந்த க்ஷீரம் ஸாரஸ்வதமானது – ஸரஸ்வதீ மயமானது. பிரவாகமாக வருகிற உன் க்ஷீராம்ருதத்தைப் பானம் பண்ணிய குழந்தை, பிரவாகமாகக் கவிதை செய்துவிட்டது. பரம கிருபையோடு நீ அதைத் தமிழ்க் குழந்தைக்கு (த்ரவிட சிசு;) அளித்தாய். அதன் சிறப்பால் அந்தக் குழந்தை மகா பெரிய கவிகளுகெல்லாம் பெரியவராகி, எல்லோர் மனஸையும் வசீகரித்து விட்டது” என்று ஆசார்யாள் சொல்கிறார்.

ஆதியில் முருகக் கடவுள் சங்கப் புலவராக இருந்தார். பிறகு புலமையோடு சக்தி, ஞானம், வைதிகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரக்ஷிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார். குமாரிலப்பட்டர் செய்த அதே வைதிக தர்ம ஸ்தாபனத்தைத்தான் இவரும் செய்தார். “நான்மறை ஞானசம்பந்தன்” என்றே தம்மைச் சொல்லிக் கொள்கிறார்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s