அம்பாளின் இருப்பிடம்

பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் பல வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது. முக்கியமாக ஸ்ரீ வித்யா என்கிற தேவி உபாஸனா மார்க்கத்தில் சொல்கிறபோது, அவள் அமிருத சாகரத்தின் மத்தியில், மணித்வீபம் என்கிற மணிமயமான தீவில் இருப்பதாகச் சொல்கிறோம். மணித்தீவில் பல கோட்டைகள் உத்தியான வனங்களுக்குள், சிந்தாமணிகளயை இழைத்துச் செய்த கிருகத்துக்குள் இருக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், ஸதாசிவன் இவர்கள் நாலு கால்களாகவும், உட்காருமிடமாகவும் அமைந்து உருவான மஞ்சத்தின்மேல், பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது. அவள் இருக்கும் இடத்தை ஸ்ரீபுரம் என்று கூறியிருக்கிறது. அமிருத ஸாகரத்தில் இருப்பதாகச் சொல்கிற மாதிரியே ஸ்வர்ணமயமான மேருசிகரத்தில் இந்த ஸ்ரீபுரம் இருப்பதாகவும் சொல்வதுண்டு.

தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும் சொல்லியிருக்கிறது. ‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள். அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயே ‘சந்திர மண்டல மத்யகா’ என்று ஒரு நாமம் வருகிறது.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ளது சந்திரன். நிலாச் சாப்பாடு, நிலாவில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம். இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை. சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது. கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன். அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது. தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.

பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது. அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது. ‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை lunatic என்கிறார்கள். Lunar என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம். இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது. சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

சந்திரனில் அம்பாள் அமர்ந்திருப்பதாகச் தியானிக்க வேண்டும். தியானம் செய்கிறவனுக்கோ புலித்தோலை ஆசனமாக விதித்திருக்கிறது. சந்திரனுக்கு நேர் எதிராக புலி என்றால் உக்கிரமாக இருக்கிறது. புலி எப்படி தன் லக்ஷியமான இரையை ஒரே பாய்ச்சலில் பிடித்து விடுகிறதோ அப்படி நம் தியான லக்ஷியத்தை மனசு விடாப் பிடியாகப் பிடித்துக்கொள்வதற்கே வியாக்ராஸனம் விதித்திருக்கிறது. அதில் அமர்ந்து அம்பாளை சந்திர மண்டல வாஸினியாக தியானித்தால், நம் மனமும் அவள் மனத்திலிருந்து வந்த சந்திரனைப்போல் குளிர்ச்சி அடையும். சந்திரன் தாபத்தைப் போக்குவதுபோல் நம் தாபமும் சமனமாகும். சந்திரிகையில் இருட்டு விலகுகிற மாதிரி அஞ்ஞானம் விலகும்.

சூரியனை ஞான ஸ்வரூபமாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் சூரியப் பிரகாசம் தாபம் உண்டாக்குகிறது. அதுவே சந்திரனில் பிரதிபலித்து பரம சீதளமாகிறது. சந்திரனுக்கு ஸ்வபாவமாக ஒளி கிடையாது. அம்பாள் சூரியனைப்போல் ஸ்வயம் பிரகாசமாகவும், சந்திரனைப்போல் சீதளமாகவும் இருக்கிறாள். தாபத்தைப் போக்கும்போதே ஞானப் பிரகாசமும் தருகிறாள். ஞானம் தருகிற குருமூர்த்தி அவளேதான். காளிதாஸர் ‘தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்’, ‘குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்’ என்று அம்பிகையை வர்ணிக்கிறார். எனவே சந்திரமண்டலத்தில் குரு பாதத்தையும் தியானிக்கலாம். நம் தாபங்கள் விலகவும், ஞானப்பிரகாசம் உண்டாகவும், நாம் எல்லோரிடம் குளிர்ந்து இருக்கவும் இம்மாதிரி சந்திர மண்டலத்தில் அம்பாளையோ, குரு பாதுகையையோ தியானிக்க வேண்டும். அம்பாளையோ குருவாகத் தியானிக்க வேண்டும்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s