இசை வழியே ஈசுவராநுபவம்

கல்வித் தெய்வமான சரஸ்வதி கையிலே வீணை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். பரமேசுவரனின் பத்தினியான சாக்ஷாத் பராசக்தியும் கையிலே வீணை வைத்திருப்பதாகக் காளிதாஸர் ‘நவரத்னமாலா’ ஸ்தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின் ஸாதுரியத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.

ஸரிகமபதநி ரதாம் தாம்
வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாந்தம் |

இப்படி சங்கீதத்தில் முழுகியுள்ள சிவகாந்தா (சிவனின் பத்தினி) சாந்தாவாகவும், (அமைதி மயமாகவும்) ம்ருதுள ஸ்வாந்தாவாகவும் (மென்மையான திரு உள்ளம் படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாஸர். அவளை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.

சாந்தாம் ம்ருதுள ஸ்வாந்தாம்
குசபரதாந்தாம் நமாமி சிவகாந்தாம் ||

அவர் சுலோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல ஸங்கீத அநுபவத்தினால்தான் அவளுடைய உள்ளம் மிருதுளமாக—புஷ்பத்தைப்போல் மென்மையாக, கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.

சாக்ஷாத் பராசக்தியை இப்படி ஸங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு சியாமளா என்று பெயர். ஸங்கீதத்தில் தோய்ந்து ஆனந்த மயமாகவும், சாந்த மயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளாதேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக் கொண்டேயிருக்கும். தெய்வீகமான ஸங்கீதம் ததும்பும் சந்நிதியில், சாந்தமும் ஆனந்தமும் தாமாகவே பொங்கும்; சிவகாந்தாவிடம் சரண் புகுந்தால் நமக்கு இந்தச் சாந்தமும் ஆனந்தமும் கைகூடும்.

இந்த சுலோகத்திலிருந்து ஸங்கீதமானது ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம், கருணை ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று தெரிகிறது.

வேத அத்யயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற ஈசுவராநுபவத்தை தெய்வீகமான ஸங்கீதத்தின் மூலம், நல்ல ராக தாள ஞானத்தின்மூலம் சுலபமாகவும் சௌக்கியமாகவும் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்கிய மகரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

‘அப்ரயத்னேன’—கடுமையான பிரயாசை இல்லாமலே — ஸங்கீதத்தால் மோக்ஷ மார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார். நம் மனஸைத் தெய்வீகமான ஸங்கீதத்தில் ஊறவைத்து அதிலேயே கரைந்துபோகச் செய்தால் கஷ்டமில்லாமல் ஈசுவரனை அநுபவிக்கலாம். நாம் பாடி அநுபவிக்கும் போதே, இந்த ஸங்கீதத்தைக் கேட்கிறவர்களுக்கும் இதே அநுபவத்தைத் தந்துவிடலாம். வேறு எந்த சாதனையிலும் பிறத்தியாருக்கும் இப்படி ஸமமான அநுபவ ஆனந்தம் தர முடியாது. சங்கீதம் என்ற மார்க்கத்தின் மூலம் தங்கள் இருதயங்களைப் பரமேசுவரனிடம் சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள், சங்கீதமே சாக்ஷாத்காரத்தைத் தரும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.

அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. நாதம் ஈசுவரன் அல்லது பிரம்மம். அம்பாள் சங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள் என்றால், பிரம்மமும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும். அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, ஸங்கீதத்தின் மூலம் அவளை உபாஸிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s