எளிய வாழ்வு

‘வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது’ என்ற வார்த்தை இப்போது ரொம்பவும் அடிபடுகிறது. சர்க்கார் திட்டங்கள் இதற்குத்தான் என்கிறார்கள். எல்லோருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான வஸ்திரம், வசிப்பதற்கு ஒரு சின்ன ஜாகை இருக்க வேண்டியதுதான். இதற்கே சர்க்கார் திட்டம் போட வேண்டும். இதற்கு அதிகமாகப் பொருளைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் ‘வாழ்க்கைத் தரம்’ என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். தேவைகளை அதிகமாக்கிக்கொண்டு அவற்றுக்காக ஆலாப் பறப்பதால் நிறைவு ஒருவருக்கும் கிடைக்காது. இதைப் பிரத்யக்ஷத்தில் பார்க்கிறோம். நாம் மேலைநாட்டுக் காரர்கள் மாதிரி, போக போக்கியங்களுக்குப் பறக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டுக்காரர்களோ அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கூட நாம் புத்தி பெறவில்லை என்றால், அதுதான் துரதிருஷ்டம்.

‘ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட வேளையில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதாலோ, வீட்டை ஏர்-கண்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்!

மன நிறைவு வெளி வஸ்துக்களால் ஒருநாளும் கிடைக்காது. வெளி வஸ்துக்களைச் சேர்க்க சேர்க்க மேலும் மேலும் சௌகரியத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு புதுப்புது வஸ்துக்களைக் கண்டுபிடித்து வாங்கிக் கொண்டேதான் இருப்போம். நாம் இப்படி இருப்பதைப் பார்த்து வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை வெறியை உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, சண்டை எல்லாம் உண்டாகின்றன. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக ஏக முஸ்தீபுடன் இறங்கிய பின்தான் சகலருக்கும் எப்போது பார்த்தாலும், எதையாவது வாங்கிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான். இப்போது கோடீசுவரனிலிருந்து எல்லோருக்கும் இந்தக் குறை இருப்பதால் எல்லோருமே தரித்திரர்களாகத்தான் ஆகியிருக்கிறோம். பணம் இல்லாவிட்டால்தான் தரித்திரம் என்பதில்லை. பணம் அதிகமாகிவிட்டதாலேயே, எல்லோரும் தரித்திரர்களாகியிருக்கிறோம்.

இந்த போக்கிய வஸ்துக்கள் அதிகமாக ஆக, ஆத்மிக நாட்டம், நல்ல சித்தம் எல்லாமே போய் விடுகின்றன. மேல்நாட்டில் எத்தனை சஞ்சலம், விபசாரம், கொலை, கொள்ளை என்று பார்க்கிறோம்! அதெல்லாம் இங்கேயும் வருவதற்குப் பூர்ண கும்பம் கொடுக்கிறோம். வேண்டாத வஸ்துக்களை அவசியத் தேவை என்று நினைத்துக் கொண்டு அவற்றுக்காக ஆத்மாபிவிருத்தியை அலட்சியம் செய்துவிட்டு, பணவேட்டையிலேயே இறங்கியிருப்பதுதான் நவீன வாழ்க்கை முறை. போதுமென்ற மனசோடு நிம்மதியாக வாழ்ந்த காலம் போய்விட்டது.

இப்போது யாருக்குமே நிறைவு இல்லை; பழைய நிம்மதி இல்லை. சமூக வாழ்விலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும்? எல்லோருக்கும் எல்லா ஆசையும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது; ஆசாபங்கத்தில் துவேஷம் பிறக்கிறது.

எனவே, வசதி உள்ளவர்கள் எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது; மற்ற ஜனசமூகத்துக்கும் நல்லது. பழைய காலத்தில் இப்படித்தான் இருந்தது. வேத சாஸ்திரத்தை ரக்ஷித்தவர்களுக்கு எத்தனை ராஜமானியம் வேண்டுமானாலும் தருவதற்கு ராஜாக்கள் சித்தமாயிருந்தார்கள். ஆனாலும், அவர்கள் பொருளில் ஆசை வைக்கவே கூடாது என்று சாஸ்திரம் விதித்தது. இதை இன்றைக்கும் சில வார்த்தைகளிலிருந்தே ஊகிக்கலாம். ‘வெண்கலப் பானை’ ‘வைர ஓலை’ போன்ற வார்த்தைகளைக் கேட்கிறீர்கள். பானை, மண்ணால் செய்தது. முற்காலத்தில் வசதி உள்ளவர்களும் பானைதான் வைத்து சமைத்தார்கள். அப்புறம் வெண்கலப் பாத்திரம் வந்தது. அதுவே வெண்கலப் பானை ஆகிவிட்டது. ‘ஓலை’ என்பது காதிலே வெறும் பனை ஓலையைச் சுருட்டிப் போட்டுக் கொள்வதைக் குறிக்கும். அம்பிகைக்கூட பனை ஓலைத்தோடுதான் போட்டிருந்தாள். (தாலீ தலா பத்த தாடங்க) என்று ‘சியாமளா தண்டகம்’ சொல்கிறது. பிறகு வைரத்தில் தோடு செய்தார்கள். இருந்தாலும் ‘வைர ஓலை’ என்று பழைய பெயரும் ஒட்டிக் கொண்டது. அந்தக் காலத்தில் வசதியுள்ளவர்கள் எட்டு அடுக்கு வீடு கட்டிக் கொண்டதில்லை. எல்லோருடைய வீடும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும். நம்முடைய சிற்பம் முதலிய சாஸ்திரங்களின் பெருமை தெரிவதற்காக ராஜாக்கள், மந்திரிகள், பெரிய மாளிகை கட்டிக் கொண்டிருந்தார்கள். வைசியர்களும் பெரிய வீடுகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பொது ஜனங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்த பிராம்மணர்கள் சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்தவர்கள்தான். எல்லா விஷயத்திலும் அவர்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் சாஸ்திர விதி. அரண்மனைக்கும் மேலாகக் கோயில்தான் ஊருக்கே பெரிய வீடு; கோயில் ஸ்வாமிக்குத்தான் ரொம்பவும் உயர்ந்த நகை நட்டு, ஆபரணம் எல்லாம். உத்ஸவம்தான் ஊருக்கெல்லாம் கல்யாணம் மாதிரி. தனிமனிதர்களின் டின்னர், டீ பார்ட்டி, ஆடம்பரம் எதுவும் அப்போது கிடையாது. வசதியுடையவர்கள் எளிமையாக வாழ்ந்த வரையில் மற்றவர்களுக்கும் இவர்களிடம் துவேஷமில்லை. பிற்பாடு வேதரக்ஷணத்தையும், கிராமத்தையும் விட்டு அவர்கள் பட்டணத்துக்கு வந்து பண வேட்டையில் விழுந்ததும்தான் சமூகத்தின் சௌஜன்யமே சீர்குலைந்து விட்டது. பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப எல்லோரும் பிரயாசைப்பட வேண்டும்.

காந்தி இருந்த வரைக்கும், ‘எளிய வாழ்க்கை, எளிய வாழ்க்கை’ (Simple living) என்ற பேச்சாவது இருந்தது. இப்போது அந்த அபிப்பிராயமே போய்விட்டது. மறுபடி அந்த முறைக்கு மக்களைக் கொஞ்சத்தில் கொஞ்சமாவது திருப்ப வேண்டும். நிறைவு மனசில்தான் இருக்கிறது என்று உணர்ந்து, அவரவரும் கடமையைச் செய்து கொண்டு எளிமையாக இருக்க வேண்டும். அவரவரும் இப்படித் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மனசினால் நிறைந்து சுபிட்சமாக இருக்க சந்திர மௌளீசுவரர் அநுக்கிரகம் செய்வாராக!

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s