பராசக்தியே மஹாலக்ஷ்மி

ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. “இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை” என்றது அசரீரி.

உடனே ஆசாரியாள், “இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும் தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!” என்றார். “அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்கிரகம் பண்ணம்மா” என்று லக்ஷ்மியைப் பிரார்த்தித்தார்.

லக்ஷ்மியிடம் அவர் ஏழைப் பிராமண ஸ்திரீக்காக முறையிட்டதற்கு “கனகதாரா ஸ்தவ”த்திலேயே உட்சான்று (Internal evidence) இருக்கிறது. “தத்யாத் தயாநுபவனோ” என்கிற சுலோகத்தில் இது வெளியாகிறது. “சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!” என்கிறார், இந்தச் சுலோகத்தில்.

இப்படி அவர் ஸ்தோத்திரத்தைப் பாடி முடித்ததும், மஹாலக்ஷ்மிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஓர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழிந்து விட்டாள்.

இதனால்தான் அந்த ஸ்தோத்திரத்துக்கு “கனகதாரா ஸ்தவம்” என்கிற பேரே உண்டாயிற்று. ‘கனகதாரா’ என்றால் ‘பொன்மழை’ என்று அர்த்தம். ‘ஸ்தவம்’ என்றாலும் ‘ஸ்துதி’ என்றாலும் ஒன்றேதான்.

ஆசாரியாள் முதல் முதலாகச் செய்த ஸ்துதி இதுதான் என்பது இதற்கு ஒரு விசேஷமான பெருமை. ஆசார்யாளுடைய அன்பு, பிராம்மண பத்தினியின் அன்பு. மஹாலக்ஷ்மியின் அன்பு, எல்லாம் இதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாகக் காலக்ஷேபம் நடத்துவதற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும்.

ஆசாரியாள் “எல்லாம் ஒன்றே” என்று சொன்னவர் முடிவில் ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமே பேதமில்லை என்றவர். அதனால் அவருக்குத் தெய்வங்களிடையே பேதபுத்தியே கிடையாது. எல்லாத் தெய்வங்களும் ஒரே பராசக்தியின் ரூபங்கள் தாம் என்று அவர் எப்போதும் வலியுறுத்துவார். அம்மாதிரி ஒரு சுலோகம் இந்த ஸ்தோத்திரத்திலும் இருக்கிறது. ‘கீர்தேவதேதி’ என்று ஆரம்பிக்கும். “கருடக் கொடியோனான மஹா விஷ்ணுவின் பத்தினி என்று சொல்லப்படுகிற நீயேதான் வாக்தேவியான ஸரஸ்வதியாகவும், தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும், சந்திர மௌலீசுவரரின் பத்தினியான பார்வதியாகவும், இருக்கிறாய். மூன்று லோகங்களுக்கும் குருவான ஒரு பரமாத்மா இருக்கிறது. அதன் சக்தியே நீ. இருவருக்குமாகச் சேர்ந்து உலக சிருஷ்டி பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார்.

பராசக்தியான காமாக்ஷியும் காஞ்சி மண்டலத்தில் இதே மாதிரியாகப் பொன் மழை பொழிந்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேதத்தைக் காட்டியிருக்கிறாள்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s