விபூதி, திருமண்ணின் மகிமை

“விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரித்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

‘விபூதி பூதிரைச்வர்யம்’ எனறு “அமர கோச”த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும்.

எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போகும்! சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்து விட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் அவன். பஸ்மமாக நீற்று வெளுத்துப்போனதற்கு முந்திய மாறுதல் கறுப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.

பல வர்ணங்களைக்கொண்ட பொருட்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்தபின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம் ‘சாயம் வெளுத்துப் போய்விட்டது’ என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதிதான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்தபின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயமெல்லாம் பொய்; வெண்மையை உண்மை.

ஞானம் என்னும் தீ மூண்டபின், காரியங்கள் எல்லாம் பஸ்பமாகி விடும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், ‘பஸ்மமாகிவிடும்’ என்றால் எல்லாம் அழிந்து, புத்தர் சொன்னமாதிரி சூன்யமாகிவிடும் என்று அர்த்தமில்லை. விறகுக் கட்டைகள் தீயில் எரிந்து போனபின் எல்லாமே சூன்யமாகி விடவில்லை.; அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்றும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும்; மிகுந்து நிற்பதே ‘மகா பஸ்ம’மான பரமாத்மா.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் “முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று பாடினார்.

விபூதியைத் தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியைத் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும் அடையலாம். பெரும்பாலான மக்கள் விபூதியை அணிகிறார்கள். திருநீறு என்பதே சாதாரண மக்களால் துன்னூறு, துன்னூறு எனப்படுகிறது. கோயிலுக்குப் போனாலும் ஏதாவது பீடாபரிகாரமாக வேண்டுமானாலும், “துன்னூறு கொடுங்கள்” என்று மக்கள் கேட்பதை நாம் சகஜமாகப் பார்க்கிறோம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.

வைஷ்ணவர் திருமண் இடுவார்கள். துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக் கொள்வது வழக்கம்.

மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீற்றை இட்டுக் கொள்வதும் நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகின்றன. மன்னனும் மாசறக் கற்றோனும் பிடி சாம்பலாகி விடுகிறார்கள். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற தத்துவம் அதுதான், இதை ஞாபகப் படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம். ஸ்ரீரங்கத்தில் ம்ருத் ஸங்க்ரஹணம் செய்யும்போது வில்வ விருக்ஷ மண்ணை எடுக்கிறார்கள்.

வில்வம் லக்ஷ்மி வசிக்குமிடம். பசுவும் லக்ஷ்மியின் வாச ஸ்தானம். விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்மமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சாணம் எல்லாத் துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. மண்ணெண்ணையைக் காட்டிலும் அதிகத் துற்நாற்றம் உள்ள வஸ்து இல்லை எனலாம். அந்த துர்க்கந்தத்தைப் போக்கக்கூட பசுவின் சாணத்தை உபயோகிக்கிறோம். நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு. மஹா பஸ்மமான பரமாத்மாவும் விபூதி என்னும் பஸ்மமும் ஒன்றானபடியால் விபூதியை அணிவதனால் ஈச்வர சாக்ஷாத்காரம் ஏற்படும்.

நாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றையோ திருமண்ணையோ இடவேண்டும். திருமண் இடுவதற்கு, ‘நாமம் போடுவது’ என்று பெயர். மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம். இந்த துவாதச நாமங்களைச் சொல்லிப் பன்னிரண்டு இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள். இப்படி பகவந் நாமத்தைச் சொல்லி போட்டுக் கொள்வதாலேயே ‘நாமம் போடுவது’ என்று பெயர் வந்துவிட்டது.

திருநீறு, திருமண் இவற்றைத் தரிப்பது பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகிறது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s