முகவுரை [முதற் பதிப்பிற்கு எழுதியது]

‘தெய்வத்தின் குரல் – முதற்பகுதி’யின் தொடர்ச்சியே இவ்விரண்டாம் பகுதி எனலாம். இப்பகுதியைப் படிப்பவர்கள் முதற்பகுதியைப் படித்திருக்க வேண்டியது அவசியம். எனவே அப்பகுதிக்கு எழுதிய முகவுரைக்கு அதிகமாக இங்கே நிறைய எழுத வேண்டுவதில்லை.

முதற்பகுதிக்கு வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பு அற்புதமானது — இன்றைய காலப்போக்கில் ஆறுதலானதுங்கூட. அறிவுக் களஞ்சியமான ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்களின் பொன்மொழிகளில் தத்வபரமானது, பக்திமயமானது, பண்பாட்டைக் குறித்தது, சமூக வாழ்வைக் குறித்தது ஆகியவற்றை நம் மக்கள் ஆவலுடன் படிப்பதில் அற்புதமோ, ஆறுதலோ ஏதுமில்லை. ஆனால் இவற்றின் அளவுக்கு முக்யத்வம் கொடுத்து அவர்கள் சாஸ்திரோக்தமான விதிகள், ஆசாரங்கள் குறித்து அருளிய நன்மொழிகளையும் முதற் பகுதியில் வெளியிட்டிருந்தோம். இதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்குமோ என்று உள்ளூர எனக்குச் சிறிது கவலை இருக்கத் தான் செய்தது. இதை அடியோடு களைவதாக — அதாவது அற்புதத்தோடு ஆறுதலும் தருவதாக — அப்பகுதி விசேஷ வரவேற்பினைப் பெற்றது. ஸ்ரீ பெரியவர்கள் சொல்லும்படி சாஸ்திரோக்தமாக வாழ மக்கள் முயல்வார்களோ, மாட்டார்களோ — ஆயினும் இவ்விஷயமாக அவர்கள் சொல்வதை மரியாதையுடன் கேட்கவாவது ஒரு கணிசமான மக்கட்பகுதி தயாராக இருக்கிறது என்ற உறுதி ஏற்பட்டது. சர்ச்சை உண்டாக்கக் கூடிய பாகம், அல்லது அலக்ஷ்யம் செய்யப்படக் கூடிய பாகம் என்று எண்ணப்பட்ட “வைதிக மதம்” என்ற பாகத்தையே என்னிடம் பெரும்பாலோர் பாராட்டிப் பேசினார்கள்; கடிதமும் எழுதினார்கள். இப் பொருள் குறித்து மேலும் ஸ்ரீ பெரியவர்கள் அருளியிருப்பதையெல்லாம் அறிவதற்குத் தாங்கள் ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

முக்கியமாக அந்த ஆவலை நிறைவேற்றுவதாகவே இந்த இரண்டாம் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ‘வேத மதம்’ என்ற பாகமே இதில் முக்கால்வாசி இடத்தைப் பெற்றுள்ளது. இவ்விஷயங்களை ஸ்ரீ பெரியவர்கள் ஒருவரே சொல்கிறார்களாதலால் பூர்த்தியாகக் கொடுத்து விட வேண்டும் — வேறெந்த பலனுக்காக இல்லாவிடினும், அலக்ஷ்யத்துக்கும், கேலிக்கும், வெறுப்புக்கும் ஆளாகியுள்ள ‘ஸநாதனிகள்’ என்கிறவர்களுக்கும் புஷ்டியுள்ள நியாயமான வாதங்கள் உண்டு என்று அச்செழுத்தில் உறுதியாக நிலைத்திருக்கட்டும் — என்ற அபிப்பிராயத்தில்  இப்பாகம் தொகுக்கப்பட்டுள்ளது.

பக்தி குறித்த நெஞ்சைத் தொடும் பாகமும், பண்பாடு, சமூக விஷயங்கள் குறித்த அறிவுக் கிளர்ச்சியும் உணர்ச்சியெழுச்சியும் தரும் பாகங்களும் இவ்விரண்டாம் பகுதியில் இல்லையே என்று விசனிக்க வேண்டாம். இவை எல்லாமும் குறைவற இந்நூலில் ஆங்காங்கு விரவி வருகின்றன. தொடக்கத்திலுள்ள விநாயகர் கட்டுரை, முடிவான ஹநுமார் கட்டுரை, ‘அத்வைதம்’ என்ற பாகத்தின் கடைசி இரு உரைகள், ‘புராணம்’ என்ற உரையின் பகுதிகள் ஆகிய இவை போதுமே பக்தியின் பெருமையை வலியுறுத்த!

என்னைப் பொறுத்த மட்டில் குறை உணர்ச்சி இல்லை. அத்வைத-த்வைத-விசிஷ்டாத்வைத-சைவ ஸித்தாந்திகளுக்கெல்லாம் பொதுவாக உள்ள ஹிந்து மத சாஸ்திரங்கள் அனைத்தைப் பற்றியும் இவ்வளவு விஷயங்கள் தர முடிந்ததில் நிறைவே கொள்கிறேன்.

முதற்பகுதி வாசகர்களில் அநேகரின் விருப்பத்தையொட்டியே இப்பகுதியில் ஸம்ஸ்கிருத மேற்கோள்களை நிறையக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஸம்ஸ்கிருத மொழியறிவு ஏற்படுவதற்கு எவ்வளவோ தடைகள் ஏற்பட்டுள்ள இன்று, வாசகர்கள் இவ்விதம் விரும்பியதும் ஆறுதல் அளித்த மற்றொரு விஷயமாகும்.

ஒருவாறு இப் பகுதியோடு சாஸ்திர ஆசாரங்கள் குறித்த அருள்வாக்குகளைப் பூர்த்தி செய்து விட்டதாகவே சொல்லலாம். திருவருளும் குருவருளும் கூட்டிவைத்து, ”தெய்வத்தின் குரல்” மூன்றாம், நான்காம் பகுதிகள் வெளியாகுமாயின் அவற்றில் ஏனைய விஷயங்களே முக்கியமாக இருக்கும்.

 

*    *    *

 

முகவுரை எவ்வளவு சுருங்கினாலும், மனம் சுருங்காமல் நன்றி செலுத்தும் ஆனந்தத்தைக் குறைக்கலாமா?

பற்பல இடங்களிலிருந்து தொகுத்த இவ்வுரைகளுக்காகப் பலரை நெஞ்சார நினைத்து நன்றி கூறுகிறேன். ‘கல்கி’ ஸ்தாபனம், பி. ஜி. பால் கம்பெனி, ஸ்ரீ ஆர். அனந்த நாராயணன், ஸ்ரீ கே. நீலகண்டய்யர் ஆகியோருக்குப் பெயர் குறிப்பிட்டு நன்றி கூறுகிறேன்.

பெயர் குறிப்பிடாவிடினும் இந்தப் பகுதியில் ஏராளமான பகுதிகளை உதவிய ஒரு மாதரசிக்குக் கப்பல் கப்பலாக நன்றிக் கப்பம் கட்டவேண்டும். பல்லாண்டுகளாக ஸ்ரீ பெரியவர்களின் பொதுப் பேச்சுக்களையும்விட ரஸமான மஹாப் பிரஸங்கங்களாகத் திகழும் அவர்களது தனிப்பட்ட ஸம்பாஷணைகளைச் செவ்வையாக, அவர்களுடைய அழகிய எளிய மொழியிலேயே எடுத்தெழுதிய இவ்வம்மையாரின் தொகுப்பு முதற் பகுதிக்கும் ஓரளவு உதவி புரிந்தது; இவ்விரண்டாம் பகுதிக்கோ பெருமளவு சகாயம் செய்திருக்கிறது. இதில் விசேஷம், கடந்த சுமார் பத்தாண்டுகளாகப் பெரியவர்கள் மேடைப் பிரஸங்கத்தை அறவே நிறுத்திவிட்ட போதிலும், இதன் பின்னரும் அவர்கள் உரையாடல்களாக நிகழ்த்திவரும் பேருரைகளில்  சிலவற்றை அம்மையாரின் தொகுப்பிலிருந்து பெற முடிந்ததால், நிகழ்காலப் போக்குகளையும் பிரச்னைகளையும் பற்றிக் காஞ்சி மாமுனிவரின் திருவுளக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற அநேக அருள்வாக்குகள் இந்நூலிலேயே முதன்முறையாக அச்சேறியுள்ளன.

சில விஷயங்களில் சந்தேக விளக்கம் பெறவேண்டியிருந்தது. ஸ்ரீ பெரியவர்கள் முன்கூட்டித் தயாரித்துப் பேசுவதில்லையாதலால், ஹிந்து மதத்தின் ஆதார சாஸ்திரங்களைப் பற்றிப் பேசுகையில் பலவற்றைக் குறித்து முழு விவரங்களும் அளித்த போதிலும் சிலவற்றில் சில விவரங்கள் விட்டுப் போயிருந்தன. இந்த நூலிலேயே இவ்விவரங்களும் பூர்த்தியாகாவிடில், மேற்கண்ட சாஸ்திரங்களைப் பற்றி வேறெவ்விதத்திலும் மக்களுக்குத் தெரிவிக்க வாய்ப்பில்லையே என்பதால் இச் சில விஷயங்களையும் தெரிந்து கொண்டு இதிலே சேர்த்துவிடத் துணிந்தேன். இவ்விஷயத்திலும், ஏனைய விஷயங்களில் சந்தேக விளக்கம் தருவதிலும் எள்ளெனும் முன் எண்ணையாகப் பரம உபகாரம் புரிந்த ஸர்வஸ்ரீ  அக்னிஹோத்ரம் ராமாநுஜ தாதாசாரியார், ந.ரா. முருகவேள், கா.ஸ்ரீ. ஸ்ரீநிவாஸாசாரியார், வி.ஆர்., லக்ஷ்மீகாந்த சர்மா ஆகிய சான்றோர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை அளிக்கிறேன்.

புதுப் புதுப் பகுதிகள் கிடைக்கக் கிடைக்க, பழைய பகுதிகளிலேயே புது விளக்கங்கள் சேரச் சேர, அவற்றையொட்டி நான் கையெழுத்துப் பிரதியையும் ப்ரூஃப்களையும் பன்முறை மாற்றியும் மனம் கோணாது செய்த மெட்ரோபாலிடன் அச்சகத்தாருக்கும்; இது போன்ற ‘இடைஞ்சல்கள்’ ஏற்பட ஏற்படத் தமது தளராமைக்கும் பொறுமைக்கும் ஜயக்கொடி நாட்ட மேலும் வாய்ப்புக்கள் கிடைப்பதாக உற்சாகமே கொண்டு, என்னையும் உற்சாகப்படுத்திய ‘வானதி’ உரிமையாளர் ஸ்ரீ திருநாவுக்கரசு அவர்களுக்கும் நான் நன்றி என்று எழுதும் முன் இந்தப் பேனாவே எழுதிவிடும்!

கிடைக்காத இந்தக் கைங்கரிய பாக்கியத்தை அருளிய ஸ்ரீ பெரியவர்களுக்கு எந்நாளும் நமஸ்காரம்.

                                  ரா. கணபதி
(தொகுப்பாசிரியர்)

சென்னை – 53
20-9-78

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s