ஒரு ராஜா – ராணிக் கதை

ராஜா ஒருத்தன். ராஜா என்றிருந்தால் சத்ரு ராஜா, யுத்தம் எல்லாமும் இருக்கத்தானே செய்யும்? இந்த ராஜாவை எதிர்த்து எதிரி ராஜா வந்தான். இவனுடைய துரதிருஷ்டம், யுத்தத்தில் இவன் தோற்றுப் போனான்.

‘வெற்றி; இல்லாவிட்டால் வீர ஸ்வர்க்கம்!’ என்று சில ராஜாக்கள் யுத்த பூமியிலேயே உயிரை விட்டு விடுவார்கள். இன்னும் சில ராஜாக்கள் தோற்றுப் போனால் ஓடி ஒதுங்கிப் பதுங்கிக் கொள்வார்கள். இவர்கள் எல்லோருமே வீரத்திலோ மானத்திலோ குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. பாய்கிற புலி பதுங்கும் என்கிற மாதிரி இவர்கள் பதுங்குவது பிற்பாடு படையெடுத்துப் பழி வாங்குவதற்காகத்தான். மகாசூரர்களும், மானஸ்தர்களுமான ராஜபுத்ர ராஜாக்கள் கூட, இப்படி முஸ்லீம்களின் படையெடுப்பின் போது ஓடிப்போய், பிறகு பெரிய சைனியம் திரட்டிக் கொண்டு வந்து சண்டை போட்டிருக்கிருக்கிறார்கள்.

என் ‘கதை- ராஜாவும்’ தோற்றுப் போனவுடன் பிராணஹத்தி பண்ணிக் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டான்.

அவன் மட்டுமாக ஓடவில்லை.

அவனது பத்தினியையும் குதிரை மேல் வைத்துக் கொண்டு ஓடினான்.

அப்போது அவள் நிறை கர்ப்பிணி.

இந்த நாளில் ‘அண்டர் க்ரவுன்ட்’ டாகப் போவது என்ற மாதிரி அப்போதும் உண்டு. இந்த ராஜாவுக்கு ரொம்பவும் அபிமான மந்திரி இப்படித்தான் தலைமறைவாகிவிட்டான். ராஜாவும் ராணியும் தப்பித்து ஓடியது அவனுக்கு மட்டும் அப்போதே தெரியும்.

ராஜாவின் குதிரை வனப் பிரதேசத்தில் போய்க் கொண்டிருந்தது.

அவனைத் தேடிப் பிடித்து வர, சத்ரு ராஜா நாலாபக்கமும் குதிரைப் படையை அனுப்பியிருந்தான்.

அவர்களில் சிலர் இந்தக் காட்டுக்கே வந்துவிட்டார்கள். ராஜா போவதைத் தூரத்தில் பார்த்து அவனைப் பின் தொடர்ந்து துரத்தி வந்தார்கள்.

இவனைத் துரதிருஷ்டமும் துரத்திக் கொண்டு வந்தது. சத்ருக்கள் கிட்டே கிட்டே வந்து விட்டார்கள்.

பக்கத்திலே ஒரு வேடன் குடிசை இருந்தது. அதைப் பார்த்ததும் ராஜாவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. குதிரையை நிறுத்தி, அதிலிருந்து இறங்கினான். ராணியையும் இறக்கினான்.

“சத்ருக்கள் என்னை விடமாட்டார்கள். அவர்கள் ஏராளமான பேர்கள் இருப்பதால் நான் எதிர்த்து எதுவும் பண்ணுவதற்கில்லை. என் முடிவு நிச்சயம். ஆனால் என்னோடு நீயும் போய்விடக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால், என்னால் பழி வாங்கமுடியாவிட்டாலும், இப்போது நீ கர்ப்பவதியாக இருக்கிறாயல்லவா? உனக்கு நம் குலம் விளங்க ஒரு புத்திரன் பிறந்தாலும் பிறக்கலாம்; பிறக்கப் போகும் பிள்ளையாவது சத்ருவை ஜயித்து ராஜ்யத்தை மறுபடியும் நம் பரம்பரையின் கைக்குக் கொண்டு வரவேண்டும். ஆகையால் நீ பதிவிரதை என்பதற்காக என்னோடு செத்துப் போவதை விட, என் மனோரதத்தைப் பூர்த்தி பண்ணுவதற்காகவே உயிரோடிருந்து பிள்ளையைப் பெற்று வளர்க்கவேண்டும். இந்த வேடன் குடிசையில் அடைக்கலம் புகுந்து பிழைத்துக் கொள்” என்று ராணியிடம் ராஜா சொன்னான்.

அவளுக்கு அது தாங்க முடியாத கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் ராஜ தர்மம் என்ற ஒன்று, அதற்கென்றே மானம், கௌரவம் என்றெல்லாம் இருந்ததால், பதியின் வார்த்தையை அவளால் தட்டமுடியவில்லை. ‘புருஷன் சொல்வதுதானே நமக்கு வேதம்? அவன் சா என்றால் செத்துப் போகத் தயாராக இருக்கிற மாதிரியே, செத்துப் போவதுதான் சந்தோஷம் என்கிற ஸ்திதியில் அவன், ‘சாகாதே. நீ உயிரோடுதான் இருக்கவேண்டும்’ என்றால் அதையும் நாம் கேட்டுத்தானாக வேண்டும்’ என்று தன்னைத் தானே ஒரு மாதிரி தேற்றிக் கொண்டு குடிசைக்குள் போய் மறைந்து கொண்டு விட்டாள்.

சத்ரு வீரர்கள் வந்து ராஜாவைப் பிடித்துக் கொண்டார்கள்.

அவன் கதை அதோடு முடிந்தது.

அவர்களுக்கு ராணியையும் இவன் கூட அழைத்து வந்தது தெரியாது. ‘தனக்கு என்ன ஆபத்து வந்தாலும் வரட்டும்; அவளுக்கு வரக்கூடாது’ என்று தான் இவன் குதிரையில் அவளை முன்னே உட்கார வைத்து மறைத்துக் கொண்டு ஓட்டினான். பின்னாலிருந்து வந்த எதிரிகளுக்குக் குதிரை மேல் இவனுக்கு முன்னால் அவள் உட்கார்ந்திருந்தது தெரியவில்லை.

அதனால் ராணியைத் தேடிப் பார்க்காமலே அவர்கள், வந்த காரியம் முடிந்தது என்று ஸந்தோஷமாகப் போய்விட்டார்கள்.

வேடன் குடிசையில் வேடனின் அம்மாக் கிழவி இருந்தாள். பூர்ண கர்ப்பிணியாகத் தஞ்சம் என்று வந்த ராணியை மனஸார வரவேற்று வைத்துக் கொண்டாள்.

படித்தவர்கள், நாகரிகக்காரர்கள் என்கிற நம்மை விட, பாமரமான ஏழை ஜனங்களிடம் உபகாரம் செய்கிற ஸ்வபாவம், விச்வாஸப் பண்பு எல்லாம் எக்காலத்திலும் ஜாஸ்திதான்.

ராஜ ஸ்திரீயை வேட ஸ்திரீ தன் வயிற்றில் பிறந்த மகளைப் போல் வைத்துப் பராமரித்தாள்.

ராணி வயிற்றில் ஒரு பிள்ளை பிறந்தது.

அதோடு தன் கடமை ஆகிவிட்டது என்கிற மாதிரி பிரஸவத்திலேயே ராணி மரணம் அடைந்து விட்டாள்.

த்துப் பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டது.

சத்ரு ராஜாவே பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் ஜனங்களுக்கு அதில் திருப்தியில்லை. ஒரு ராஜ்யம் தோற்றுப் போனால்கூட ஜனங்களுக்குத் தங்கள் பழைய பாரம்பரிய ராஜா இல்லையே என்று தாபம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த ‘கதை-ராஜ்ய’த்திலிருந்த ஜனங்களுக்கு ராஜாவோடு ராணியும் தப்பித்துப் போனதோ, காட்டிலே அவளுக்குக் குழந்தை பிறந்ததோ தெரியாது. அதனால் தங்கள் கஷ்டத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு பொறுமையோடு இருந்தார்கள்.

மந்திரிக்கு மட்டும் ராஜ தம்பதி இரண்டு பேருமே ஓடியது தெரியுமல்லவா?அதனால் அவன் யோசித்தான். ‘ஈச்வர கிருபையில் ராணிக்குப் பிள்ளைக் குழந்தையாகவே பிறந்திருந்து, அது இப்போது எங்கேனும் வளர்ந்துவந்தால் பன்னிரண்டு வயசு இருக்கும் அல்லவா? பாரம்பரியமான யுவராஜா என்றால் சைன்யத்தை நடத்தி யுத்தம் பண்ணவும், மந்திரிகளின் ஆலோசனையோடு ராஜ்ய பாரம் பண்ணவும் பன்னிரண்டு வயசு போதுமே! அதனால், ராஜகுமாரன் கிடைக்கிறானா என்று தேடிக் கண்டுபிடித்து அவனை கொஞ்சம் தநுர்வேதத்தில் [போர்ப்பயிற்சியில்] தேற்றிவிட்டால், ஜனங்கள் ஒரு மனஸாக அவன் கீழ் சேர்ந்து சத்ரு ராஜாவை அப்புறப்படுத்துவார்களே!’ என்று நினைத்தான்.

ரகசியமாக கோஷ்டி சேர்த்து, அவன் பழைய ராஜாவின் சந்ததி இருக்கிறதா என்று தேடினான்.

வேடனின் குடிசைக்கு வந்து சேர்ந்தான்.

அங்கே அநேக வேடப் பசங்களோடு ராஜாவின் பிள்ளையும் ஒரு கோவணத்தைக் கட்டிக் கொண்டு, தலையை முடிந்து இறக்கை சொருகிக் கொண்டு, குந்துமணி மாலையும் புலிநகமும் போட்டுக்கொண்டு அணில் குத்தி விளையாடிக் கொண்டிருந்தான். ஆனாலும் வம்சவாரியான ராஜ களை, பழைய ராஜாவின் ஜாடையெல்லாம் அவனுக்கு இருந்ததால், புத்திசாலியான மந்திரிக்கு ஊகமாகப் புரிந்தது.

அந்த கிழவி இப்போதும் உயிரோடு இருந்தாள்.

அவளிடம் கேட்டான்.

காட்டு ஜனங்களுக்கு சூது, வாது, பொய், புரட்டு தெரியாது. அதனால் அவள் உள்ளபடி சொன்னாள். ரொம்ப வருஷம் முந்தி ஒரு கர்ப்பிணி இங்கே வந்து அடைக்கலம் கேட்டாள். அவளை நான் என் மகள் மாதிரி வளர்த்தேன். ஆனாலும் அவள், தான் யார், என்ன என்று சொல்லிக்கொள்ளாமலே இந்தப் பிள்ளையை பெற்றுப் போட்டுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு போய்விட்டாள். அதற்கப்புறம் இந்தப் பிள்ளைக்கு நானே அம்மாவாக இருந்து வளர்த்து வருகிறேன். ராஜகுடும்பம் மாதிரியான பெரிய இடத்து வாரிசு என்று ஊகிக்க முடிந்தாலும் இன்னார் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. எங்களில் ஒருத்தனாக எங்களோடேயே வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றாள்.

மந்திரிக்கு உடனே இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி ‘நம் ராஜகுமாரன்தான் இங்கே வளர்வது’ என்று புரிந்து விட்டது.

அதை அவன் சொல்லி, பிள்ளையை அழைத்துப் போக முன்வந்தவுடன், கிழவி, வேடன் எல்லோருக்கும் ரொம்பவும் கஷ்டமாகி விட்டது. வளர்த்த பாசம்! ஆனானப்பட்ட கண்வ மஹரிஷி, ஜட பரதர் மாதிரியானவர்களையே வளர்த்த பாசம் ஆட்டி வைத்திருக்கிறதே! ஆனாலும் ராஜ்யகாரியம் என்பதால், இந்த வேடர்கள் தியாக புத்தியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் வேடப்பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த ராஜகுமாரனை மந்திரி கூப்பிட்டதும், அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓடப் பார்த்தான். அவனுக்கு வேட சகவாசம்தான் பிடித்ததே தவிர, இந்தப் பெரிய மநுஷ்ய சம்பந்தம் பிடிக்கவேயில்லை.

வேடப்பிள்ளை மாதிரியே, “இவங்கள்ளாந்தான் என் ஜாதி ஜனங்க, இவங்களைவிட்டு வரமாட்டேன்” என்று ஓடினான்.

அப்புறம் அவனைப் பிடித்து வந்து மந்திரி அவனுக்கு வாஸ்தவத்தையெல்லாம் விளக்கிச் சொன்னான். “நீ ராஜகுமாரன். நீ பிறக்கும் முன்பே, சத்ருக்களிடமிருந்து தப்பி இங்கே ஓடிவந்த உன் தகப்பனார் கொல்லப்பட்டார்.அதற்கப்புறம் வேடர் குடிசையில் உன்னைப் பிரஸவித்து விட்டு உன் அம்மாவும் போய்விட்டாள். அதிலிருந்து நீ இங்கே வளர்ந்து வருகிறாய். ஆனாலும் நீ ராஜ்யத்தையெல்லாம் ஆள வேண்டியவன். உன்னைத் தலைவனாக வைத்துக் கொண்டு தான் நாங்கள் அதை சத்ருவிடமிருந்து மீண்டும் ஜயிக்க ஆலோசனை செய்திருக்கிறோம். இப்போது நீ இருப்பதைவிடக் கோடி மடங்கு உயர்ந்த ஸ்திதியில் இருக்க வேண்டியவன். ‘மாட்டேன்’ என்று சொல்லலாமா?” என்று எடுத்துச் சொல்லி விளக்கினான்.

அந்தப் பிள்ளைக்கு வீரம், பித்ருபாசம், அதற்காக எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் எல்லாவற்றையும் மூட்டி விட்டான்.

தான் ராஜகுமாரன் என்று தெரிந்தவுடனேயே, அந்தப் பிள்ளைக்கு ரொம்ப சக்தி, தேஜஸ், காம்பீர்யம் எல்லாம் உண்டாகிவிட்டது.

அப்புறம் அவனுக்கு அஸ்திர சஸ்திர அப்பியாஸம், கொஞ்சம் சொல்லிக் கொடுத்தவுடனேயே அவற்றை நன்றாகப் பிடித்துக் கொண்டான்.

வேட ஜனங்களை விட்டுப் போனான். மந்திரியின் சகாயத்துடன் நாட்டில் சைனியம் திரட்டினான். ராஜ விச்வாஸம் கொண்ட ஜனங்கள், தங்கள் பழைய பாரம்பரிய வாரிசு வந்திருக்கிறான் என்றவுடன் உத்ஸாகமாக அவன் கீழ் ஒன்று சேர்ந்தார்கள்.

இப்போதெல்லாம் குடியரசு யுகத்தில் ஒருத்தரைத் தலைவர் என்று ஸ்தோத்திரம் பண்ணி ஊரையெல்லாம் இரண்டு படுத்துகிற மாதிரி டெமான்ஸ்ட்ரேஷன்கள் பண்ணிவிட்டு, கொஞ்ச காலமானால் அவரை எவரும் சீந்தாமல் தூக்கிப் போடுகிற மாதிரி இல்லை, ராஜ விச்வாஸம் என்பது. அது நின்று நிலைத்து ஹ்ருதயபூர்வமாக இருந்து வந்த விஷயம். ராஜாக்களும் இந்த விச்வாஸத்தைப் பெறுவதற்குப் பாத்திரர்களாகவே ரொம்பவும் ஒழுக்கத்தோடு குடிஜனங்களைத் தம் பெற்ற குழந்தைகளைப் போலப் பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அதிகாரம் வந்து, அந்த ருசியில் கண்டது காணாதது போல் ஒழுங்கு தப்பிப் போகிற மாதிரி இல்லை, பாரம்பரிய ராஜ்யாதிகாரம் என்பது. இந்தக் கதையில் வரும் பையன் மாதிரி திடீர் அதிகாரம் வந்தால்கூட பாரம்பரியப் பண்பு அவர்கள் தலைதெறிக்கப் போகாமலே கட்டுப்படுத்தும். புராணங்களைப் பார்த்தால் வேனனையும் அஸமஞ்ஜனையும் போல் எங்கேயாவது நூற்றிலே ஒரு ராஜாவோ ராஜகுமாரனோ முறை தப்பிப் போனால் அப்போது ஜனங்களே அவனைத் தொலைத்து முழுகியிருக்கிறார்கள். மொத்தத்தில் ‘யதா ராஜா ததா ப்ரஜா’ [அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி] என்ற மாதிரி, அப்போது இரண்டு பக்கத்திலும் தர்மத்துக்குப் பயந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் என்று வெறும் ராஜாங்க ரீதியில் போடுகிறபோது, முதலில் அதைப் பண்ணுகிறவர்கள் சரியாகயிருக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. இந்த சட்டங்களுக்கெல்லாம் மேலான த்ரிலோக ராஜாவான பரமேச்வரனின் சட்டமான தர்மசாஸ்திரத்துக்கு அடங்கியே ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்கள் ஆகிய இருவரும் இருந்தால்தான் லோகம் நன்றாயிருக்கும். பூர்வகாலங்களில் ஆளப்படுகிறவர்களுக்கும் ஆளுகிறவர்களே இப்படி தர்மத்துக்கு அடங்கியிருந்து வழி காட்டியிருக்கிறார்கள். இதனால்தான் ஜனங்களுக்கு ஸ்வபாவமாக, ராஜவிஸ்வாசம் என்ற ஆழ்ந்த, நிஜமான பற்று இருந்து வந்திருக்கி்றது. ‘இவர்கள் தன் ஜனங்கள்’ என்ற பாந்தவ்யம் ராஜாவுக்கும், ‘இவன் நம் ராஜா’ என்ற அன்பு ஜனங்களுக்கும் இருந்து வந்தது.

கதையில் சொன்ன பையன், சத்ருவை ஜயிக்க மந்திரியின் ஏற்பாட்டில் ஆயத்தம் பண்ணுகிறான் என்றவுடன் ஜனங்களெல்லாம் அவன் கட்சியில் சேர்ந்து யுத்தத்துக்கு கிளம்பிவிட்டார்கள்.

சுலபத்தில் சத்ருவை ஜயித்தும் விட்டார்கள்.

பையனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி ராஜா ஆக்கினார்கள்.

அவனுக்குத் தான் வேடனாக இருந்த எண்ணமே அடியோடு மறந்து போய்விட்டது. பூர்ண ராஜாவாகவே இருந்தான்.

இந்தக்கதையை நான் சொல்லவில்லை. பெரிய ஆசார்யர் ஒருத்தர், அத்வைத ஸம்பிரதாயத்தின் ஆதிகாலப் பிரவர்த்தகர்களில் ஒருத்தர் சொல்லியிருக்கிறார். குரு தத்வத்தைச் சொல்லும்போது இப்படிக் கதை சொல்லியிருக்கிறார். நான் கொஞ்சம் காது,மூக்கு வைத்தேன்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s