அத்வைதமோ த்வைதமோ? ‍– அதுவும் பராசக்தி வசமே!

ஜலத்துக்கு நிறைவு சமுத்திரம். டம்ளரில், செம்பில், குடத்தில், அண்டாவில், கிணற்றில், குளத்தில், நதியில் என்று ஒன்றைவிட ஒன்று ஜாஸ்தியாக இருக்கிற ஜலம் கடைசியில் சமுத்திரம் என்று முடிகிறது. இப்படியே ஞானத்துக்கும் கிருபைக்கும் நிறைவான சமுத்திரம் பராசக்தி. நமக்குக் கொஞ்சம் அறிவு, கொஞ்சம் அன்பு இருக்கிறது. பிராணிகளுக்கு நம்மைவிடக் குறைவு. நம்மை விட ஜாஸ்தி அறிவுள்ள, ஜாஸ்தி கிருபா சக்தி உள்ள தேவ ஜாதிகள் இருக்கின்றன. நம்மிலேயே மஹான்களானவர்கள் மகா ஞானிகளாக, பரம காருண்யத்தோடு இருக்கிறார்கள். இந்த ஞானம், கிருபை பூரணமாக நிறைந்த இடத்தைத்தான் ஸ்வாமி, பரமாத்மா, பராசக்தி என்று சொல்வது.

எல்லாவற்றையும் அறிகிற ஞானம் அது; அறிகிறது மட்டுமில்லை, அறியப்படுகிற எல்லாமுமே அதுதான். அதற்கு வேறாக இன்னொன்று இருந்து, அதை இது அறிகிறது என்றில்லை. அப்படி இன்னொன்று இருப்பதற்கு இடம் இருந்து விட்டால், இது எங்கும் நிறைந்த பூரணம் ஆகாது. இன்னொன்று துளித்துளி இருந்து விட்டால் கூடச் சரி, இதற்குக் குறைதான் – இது அந்தத் துளியில் இல்லாததால் இது பூரணமில்லை; நிறைந்த ஒரே நிறைவில்லை என்றுதானே அர்த்தம்? இதனால் என்ன முடிவாகிறது என்றால், பரமாத்மாவைத் தவிர அறியப்படுகிற வஸ்து என்று இரண்டாவது பதார்த்தமே கிடையாது என்பதுதான்.

அப்படியானால் இத்தனை ஜீவாத்மாக்கள் வேறு வேறாக இருப்பத்தாக நினைத்துக் கொண்டிருக்கிறோமே இது என்ன? இது ஒரு பெரிய வேஷம்தான், மாயா நாடகம்தான். வேஷம் கலைந்து விட்டால், நிறைந்த நிறைவான ஒன்றே ஒன்றுதான். அதுவே அறிவாக நிற்கும். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிற அறிவு ! அது பூரணமானதால், அதனால் அறியப்பட வேண்டிய வஸ்து என்று வேறு எதுவுமே இல்லை. தன்னையே அறிந்து கொண்டிருக்கிற அறிவு அது.

இப்படி இரண்டாவதாக வேறே இல்லாமல் ஜீவாத்மாவை அந்தப் பரமாத்ம சமுத்திரத்தில் கொண்டு போய்க் கரைப்பதுதான் வாஸ்தவமான நிறைவு. இன்னொன்று என்று கொஞ்சம் இருந்தாலும் அதற்குக் குறைவுதானே? இன்னொன்றாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதும் அதுதான். “இதம் ஸர்வம் புருஷ ஏவ” என்று வேதம் சொல்கிறது 1. இப்படி வாஸ்தவமாக நிறைவதுதான் அத்வைதம், அத்வைதம் என்பது.

ஜீவாத்மாவானவன் அத்வைதமாக, பூரணமாக, நிறைந்த நிறைவாக ஆகிவிடுவதைப் பற்றி உபநிஷத்துக்கள் சொல்கின்றன. உபநிஷத்துக்கள் சொல்வதை ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்யாள் பல தினுசான பிரமாணங்களோடு தம்முடைய அநுபவத்தை சேர்த்து, லோகமெல்லாம் கொண்டாடுகிற சாஸ்திரமாக அநுக்கிரஹம் செய்திருக்கிறார். இதை புத்தி ஆராய்ச்சியால் (intellectual-‍ஆக) அலசிப் பார்த்தலும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும் என்று தெரிகிறது. ஸயன்ஸிலும் இப்போது ‘வேறு வேறு எலிமென்ட்ஸ் இல்லை. எல்லாம் ஒரே எனர்ஜி. மாட்டரும் எனர்ஜியும் கூட வேறு இல்லை’ என்று அத்வைதத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள்.

எல்லாம் சரி, ஒன்றுதான் இருக்க முடியும் என்பது intellectual-‍ஆக தீர்மானமாகித்தான் விட்டது. ஆனால் – இது ரொம்பப் பெரிய ‘ஆனால்’ – காரியத்தில் துளிக்கூடத் தெரியவில்லையே! இத்தனை வித்தியாஸ‌ங்கள் லோகத்தில் பிரத்தியக்ஷமாகத் தெரிந்துகொண்டுதானே இருக்கின்றன? ஒன்றுக்கொன்று இருக்கிற வித்தியாஸ‌ங்களைப் பாராட்டினால்தானே வாழ்க்கையே நடக்கிறது? ஒவ்வொரு காரியத்திலும் ஒன்றைச் சேர்க்க வேண்டும், இன்னொன்றை தள்ள வேண்டும் என்றுதானே இருக்கிறது? ‘வித்தியாஸமே இல்லை; எல்லாம் ஒன்று’ என்று சொல்லிக் கொண்டு, சேர்க்கக் கூடாததை சேர்த்தால் காரியமே கெட்டல்லவா போகிறது?

இதனால் என்ன தெரிகிறது? காரியம் என்று இருக்கிற வரையில் ‘அத்வைதம் அத்வைதம் என்று சொல்லிப் பிரயோஜனமில்லை என்றுதான் தெரிகிறது! “காரியம் இருக்கிற வரையில் வித்தியாஸம் பார்த்துத்தான் ஆகவேண்டும்; காரியமேயில்லாத நிலையில் எல்லாம் ஒன்றாகவே பிரகாசிக்கும். காரியத்தில் வித்தியாஸம் பார்க்கும்போதுகூட, மனசுக்குள் எல்லாம் ஒன்று என்ற பாவத்தை வைத்துக் கொள்ளு. ‘ஸாரத்தில் எல்லாம் ஒன்றே; அந்த ஒன்றுதான் நாமும்! அதனால் நாம்தான் எல்லாமும்’ என்று எல்லாவற்றையும் ஆத்ம ஸ்வரூபமாகப் பார். அதாவது மற்ற வித்தியாஸங்களைப் பாராட்டினாலும் எல்லாவற்றிடமும் அன்பில் மட்டும் கொஞ்சங்கூட வித்தியாஸமில்லாமல், சகல ஜீவராசிகளிடமும் ஒரே மாதிரி அன்போடு பிரேம ஸ்வரூபமாக இருந்து கொண்டிரு” என்றுதான் ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆகக்கூடி காரியத்தில் அத்வைதம் இல்லை என்றாகிறது.

காரியம் என்றால், நினைப்பது கூடக் காரியம்தான். நினைப்பது மனசின் காரியம். மனசு ஒரு க்ஷணங்கூட நிற்காமல் எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கிறது. இது நடக்கிறவரை காரியம் தான், அத்வைதம் இல்லை. ‘நினைக்கிறது’ என்றால், ‘நினைக்கப்படுகிற வஸ்து’, ‘நினைக்கிற வஸ்து’ என்று இரண்டு வித்தியாஸ‌மான வஸ்துக்கள் இருக்கத்தானே செய்கின்றன? இது த்வைதம் தானே? நினைப்பே போய்விட வேண்டும்; மனசு அப்படியே நின்று விட வேண்டும்; அப்படி ஆனால்தான் அத்வைதம் அநுபவமாக ஸித்திக்கும்.

சரி, ஆனால் மனசு நிற்கமாட்டேன் என்கிறதே! என்ன பிரம்மப் பிரயத்தனம் பண்ணினாலும் அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருக்கிறதே! அது ஏகப்பட்ட வித்தியாஸங்களைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது? வெளிக்காரியத்தை நிறுத்திவிடுவது, மனஸின் காரியத்தையும் நிறுத்திவிடுவது, நிறுத்தாவிட்டால் கூட பிரேம ஸ்வரூபமாகி விடுவது என்றால் இதெல்லாம் நடைமுறையில் (practical-ஆக) கொஞ்சங்கூடச் சாத்தியமில்லாமல் இருக்கிறதே? என்ன பண்ணலாம்?

என்ன பண்ணுவது? எது சாத்தியமோ அதைத்தானே பண்ணமுடியும்? அத்வைதம்தான் பரம தாத்பரியமாக இருக்க முடியும் என்று புத்தியால் ஒத்துக் கொண்டது அப்படியே இருக்கட்டும். அந்த நினைப்பே (conviction-‍ஏ) உள்ளுக்குள்ளே கொஞ்சம் இருந்து கொண்டிருந்தால், இத்தனை காரியம், இத்தனை ஓயாத எண்ணத்துக்கும் நடுவிலே ஏதோ லவலேசம் ஒரு தெளிவு, சாந்தம் இருக்கும்.

ஆனால் இந்த அல்ப சாந்தி திருப்தி தரமாட்டேன் என்கிறதே! ‘நமக்கு நிறைவில்லாமல் இருக்கிறதே! நிறைந்து விட வேண்டும்’ என்று தாபமாகவும் இருக்கிறது! ஆனால் மனஸையும், காரியத்தையுமோ விடமுடியவில்லையே! அன்புருவாகவும் முடியவில்லை! இப்படி இரண்டுங்கெட்டானாகத்தான் நம்மில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் இருக்கிறோம். இப்போது என்ன பண்ணலாம்? ஒன்றுமே பண்ணாமலிருக்கிற அத்வைதம் அநுபவமாகிற வரைக்கும் ஏதாவது பண்ணத்தானே வேண்டும்?

அதனால் மனஸினால் எது சாத்தியமோ அதையே பண்ணலாம். இப்போது லோகம் என்று வேறாகத்தானே ஒன்று தெரிகிறது? அதிலே இருக்கிற பெரிய ஒழுங்கைப் (Order)ப் பார்க்கிறபோது, இதை எல்லாம் ஒரு பேரறிவுதான் உண்டாக்கி, நடத்திவருகிறது என்று தெரிகிறது. உண்டாக்குவது, நடத்துவது எல்லாம் மாயை என்ற சமாசாரம் இப்போது நமக்கு வேண்டாம். அதைச் சொல்லி கொண்டிருப்பதால், நமக்குத்தான் ஒரு பிரயோஜனமும் இல்லையே! ‘லோகத்தை நடத்துகிற ஒரு மஹாசக்தி இருக்கிறது; நமக்கு வேறாக இருக்கிறது; நாம் அற்பசக்தர்; அது மஹாசக்தி; நாம் சிற்றறிவு படைத்த கிஞ்சித்ஞர்; அது பேரறிவான ஸர்வக்ஞ சக்தி’, என்றே வைத்துக் கொள்வோம். ‘வைத்துக் கொள்வது’ என்ன? நாம் இருக்கிற நிலையில் இப்படித்தானே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது? இப்போது அந்தப் பேரறிவைத் தவிர அறியப்படுகிற வஸ்து இல்லை என்ற அத்வைத ஸமாசாரமெல்லாம் நமக்கு வேண்டாம். அது நமக்கு வேறாக இருந்தாலும் நம்முடைய சகல சமாசாரங்களையும் தெரிந்து கொள்கிறது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் அதற்கு தெரியும் என்ற அளவோடு நிறுத்திக் கொள்வோம். ஈ, எறும்பிலிருந்து யானை வரைக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு விதமான புத்தியைக் கொடுத்து, ஆஹாரத்தைக் கொடுத்து, ரக்ஷித்துக் கொண்டிருக்கிற பராசக்திக்கு சகல ஜீவராசிகளின் கஷ்டமும் தெரியத்தானே வேண்டும்? எல்லாம் தெரிந்து கொண்டிருக்கிற ஞான சமுத்திரமாக மட்டும் அது இல்லை; கிருபா சமுத்திரமாகவும் அது இருக்கிறது. நம் ஒவ்வொருத்தருக்கும் ஒன்றிடம் அன்பு, பிரியம் இருக்கிறதென்றால், இந்த அன்பு அத்தனைக்கும் மூலம் அந்தப் பராசக்தியிடமிருந்து தானே வந்திருக்கிறது? அதனால் அது கிருபா சமுத்திரமாகத்தான் இருந்தாக வேண்டும். அப்பேர்ப்பட்ட கிருபா சமுத்திரத்திடம், நாம் கஷ்டத்தைச் சொல்லி, குறையைச் சொல்லி, ‘ஐயோ! நிறைந்த நிறைவாக இல்லாமல், நான் இப்படி ரொம்பக் குறைந்து நிற்கிறேனே, என்னை நிறைந்து போகும்படி பண்ணு; குறையே இல்லாதபடி பண்ணு’ என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். இப்படிச் செய்து கொண்டே இருந்தால், அந்தப் பராசக்தி, அல்லது பரமாத்மாவே நமக்கு நிறைவான அத்வைதத்தை அநுக்கிரஹம் பண்ணிவிடும்.

இப்படிப் பிரார்த்திப்பதுகூட இரண்டாம் பட்சம்தான். நம் குறையையெல்லாம் தானாகவே அறிந்திருக்கிற ஞான‌ சமுத்திரமாகவும், நாம் பிரார்த்திக்காமலே நம் குறையைப் போக்கக்கூடிய கருணா ஸமுத்திரமாகவும் இருக்கிற பரமாத்மாவிடம், இப்படி நாம், ‘அத்வைதத்தைக் கொடு, ஞானத்தை கொடு, நிறைவைக் கொடு’ என்று கூடப் பிரார்த்திக்க வேண்டியதில்லைதான். இப்படியெல்லாம் குறைப்பட்டு அழாமல், சந்தோஷமாக பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும். ‘நம்மை போல் இப்படி ஓயாமல் சஞ்சலித்துக் கொண்டிருக்காமல், நிச்சலனமாக, பரம சாந்தமாக ஒரு பரமாத்மா இருக்கிறார். அவர் கருணா சமுத்ரமாக இருக்கிறார்’ என்று நினைத்துக் கொள்ளும்போதே, நமக்கு ஆனந்தமாக இருக்கிறதல்லவா? அதனால், அவரை நினைத்துக்கொண்டு, இப்படி ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தால் போதும்! இந்த ஆனந்தத்தைக் கெடுத்துக் கொண்டு, ‘இதைக் கொடு’, ‘அதைக் கொடு’ என்று அழ வேண்டாம். அவரே நமக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டுப் போகிறார்!

இப்போது நமக்கு அவருடைய ஆக்ஞையாக வேதங்கள் போட்டிருக்கிற கடமைகள் இருக்கின்றன. இந்தக் கடமைகளை ஸந்தோஷமாகச் செய்து கொண்டிருப்போம். கடமை எல்லாம் காரியம்தான். காரியம் த்வைதம்தான். அதற்காக அழவேண்டாம். ‘இதுவும் ஸ்வாமி ஆக்ஞைதானே?’ என்று சந்தோஷமாகச் செய்வோம். மனசு ஒடுங்கமாட்டேன் என்கிறதா? பரவாயில்லை; அதற்காக அழ வேண்டாம். ஆனால் எதையாவது, கண்ட கண்டதுகளை நினைத்துக் கொண்டிருக்காமல், பராசக்தியுடைய கிருபையை நினைத்துக் கொண்டிருப்போம். அவளுடைய எல்லையில்லாத அழகை நினைத்துக் கொண்டிருப்போம். இம்மாதிரி காரணமேயில்லாத பக்தியைப் பண்ணிக்கொண்டு, கடமையை சுத்தமாக நடத்திக் கொண்டிருந்தால் அதுவே மனசுக்கு நிறைவாகத்தான் இருக்கும்.

மனஸே இல்லாமற் போய்விட்ட பெரிய நிறைவு – நிறைந்த நிறைவு என்று முடிவான ஒன்று – இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். அதுதான் நம் கைக்கு வராத வஸ்துவாக இருக்கிறதே! அதை நினைத்து இப்போது ஏன் அழவேண்டும்? ஏற்கனவே இருக்கிற குறைகள் போதாது என்று இந்த அழுகையும் ஒரு குறைதான்! எனவே, நம்மைப் பரமாத்மா இப்போது வைத்திருக்கிற ஸ்திதியிலேயே நமக்கு நிறைவாக, ஆனந்தமாக இருக்கிற வேத கர்மாநுஷ்டானம், பக்தி இவை நமக்குப் போதும். வேதத்தில் சொன்னபடி காரியங்களைப் பண்ணி, ஈசுவரார்ப்பணம் பண்ணிக்கொண்டு, அவரை அன்போடு நினைத்து, பக்தி பண்ணி ஆனந்தமாக இருந்தோமானால், நமக்குக் குறைப்பட்டுக் கொள்ளவே தோன்றாது.

இப்படி நாம் ஈச்வராக்ஞையாகக் கர்மாக்களைப் பண்ணிக்கொண்டு, அவரிடம் காரணமேயில்லாத பக்தியை – இது வேண்டும், அதுவேண்டும் என்று அழாமல் ஆனந்தமாகச் செய்கிற பக்தியை – பூரணமாக வளர்த்துக் கொண்டே போவோம். அப்புறம் அவரே, ‘இவனை நமக்கு வேறே மாதிரி தனியாக விட்டுவைத்தது போதும்; நமக்குள்ளேயே கொஞ்ச‌ங்கூட பேதமில்லாமல் கரைத்துக் கொண்டு விடுவோம்’ என்று கருணை கொண்டு அத்வைத மோக்ஷம் கொடுத்து விடுவார். அது அவருடைய காரியம். அவருடைய காரியம்தான். அதிலே நாம் செய்கிறதற்கு எதுவும் இல்லை. நம்மால் முடியாத காரியத்தில் நாம் உபத்திரவப் படுத்திக்கொண்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்போது ந‌ம‌க்குத் தெரிவ‌து, ந‌ம்மை வேறுமாதிரி விட்டிருக்கிறார் என்ப‌துதான். இருக்க‌ட்டுமே! அவ‌ர் இஷ்ட‌ப்ப‌ட்டுத்தானே இப்ப‌டி விட்டிருக்கிறார்? இப்ப‌டி த‌னித்த‌னி ஜீவ‌னாக‌ இருக்க‌ வேண்டும் என்று நாமாக‌ உத்தேச‌ம் ப‌ண்ணியா இந்த‌ மாதிரி ஆகியிருக்கிறோம்? இல்லை. அவ‌ர்தான் த‌ன்னையே நாமெல்லாமாக‌ ஆக்கி, த‌ன்னிட‌மிருந்தே அவிழ்த்து விட்டாற்போல‌, இப்ப‌டி ஒரு பெரிய‌ நாட‌க‌ம் போட்டிருக்கிறார். அவ‌ர் நம‌க்கு வேறு மாதிரி ந‌ம்மை விட்டிருந்தால், அப்ப‌டியேதான் வைத்துக் கொள்வோமே! இந்த‌ ஸ்திதியிலும் ந‌ம்மால் முடிகிற‌ காரிய‌ம், ஒரே அன்போடு அவ‌ரைக் கிருபா ச‌முத்திர‌மாக‌, ஸ‌க‌ல‌ க‌ல்யாண‌ குண‌நில‌ய‌மாக‌ நினைத்து நினைத்து நினைத்து அதிலேயே உருகி உருகி ப‌க்தி செய்து கொண்டு ஆன‌ந்த‌மாகயிருப்ப‌து. இந்த‌ ஆன‌ந்த‌ம் போதுமே!

ஒரு குண‌மும், ரூப‌மும் இல்லாத‌ அத்விதீய‌ நிர்குண‌ ப்ர‌ம்ம‌த்தை ம‌ன‌ஸினால் பிடிக்க‌ முடியாது. ஸ‌குண‌மான‌ மூர்த்திதான் ம‌ன‌சுக்கு விஷ‌ய‌ம். அத‌னிட‌ம் செலுத்துவ‌துதான் ப‌க்தி. இது த்வைத‌ம்தான். இருக்க‌ட்டுமே! அணுவுக்குள் அணுவாக‌ இருக்கிற‌வ‌ர், நாம் ப‌க்தி செலுத்துகிற‌ மூர்த்திக்குள் ம‌ட்டும் இல்லையா என்ன‌? அவ‌ர் அணுவுக்குள் அணுவாயிருப்ப‌து ந‌ம‌க்கு அநுப‌வ‌த்தில் ஸித்திக்க‌ வேண்டுமென்றால், அவ‌ரே அப்ப‌டிப் ப‌ண்ணிவிட்டுப் போக‌ட்டும். அவ‌ர் ஸ‌ர்வ‌ வியாப‌க‌ர், நீக்க‌ம‌ற‌ நிறைந்த‌வ‌ர் என்றால், நாம் அன்போடு பூஜிக்கிற‌ ரூப‌த்திலும் இருக்க‌த்தானே வேண்டும்? அவ‌ரே எல்லாமும் என்று நாம் அநுப‌வித்துத் தெரிந்துகொள்ள‌ வேண்டுமானால், இதை அவ‌ரே தெரிவித்துவிட்டுப் போகிறார்! தெரிவிக்கிறார், தெரிவிக்காம‌ல் போகிறார், அது அவ‌ர் காரிய‌ம். அதைப் ப‌ற்றி ந‌ம‌க்குக் க‌வ‌லை இல்லை. ந‌ம‌க்கு இப்போது அவ‌ரை ப‌க்தியோடு ஸ்ம‌ரித்துக் கொண்டிருக்கிற‌ ஆன‌ந்தமே போதும். இதில் உண்டாகிற‌ நிறைவே போதும்.

அவர் வாஸ்தவத்தில் நிறைந்த நிறைவாக இருக்கட்டும், நிர்குணமாக இருக்கட்டும், அத்வைதமாகத்தான் இருக்கட்டும். அதைப்பற்றி நமக்கு என்ன வந்தது? நம்மால்தான் அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே! வாஸ்தவத்தில் அவர் எப்படியிருந்தாலும், நமக்கு த்வைதமாகத் தெரிகிற இத்தனை அழகு, இத்தனை அன்பு, இத்தனை அறிவு எல்லாமும் அவரிடமிருந்து வந்திருப்பதால், அவரை அத்தனை ஸெளந்தர்யமும், கருணையும், ஞானமும் உள்ள மூர்த்தியாக வைத்துக் கொண்டு பக்தி செலுத்துவோம். பிறகு அவரே அவருடைய வாஸ்தவ ஸ்வரூபத்தைக் காட்டிவிட்டுப் போகிறார். அவருடைய வாஸ்தவ ஸ்வரூபத்தை அவரேதான் காட்டமுடியும். நாம் செய்யக் கூடியது, நம் மனசுக்கு அந்த ஸ்வரூபம் எப்படி வந்தால் ஆனந்தமாக இருக்கிறதோ அப்படி நினைத்து பக்தி செலுத்துவதுதான். அதைச் செய்ய ஆரம்பிப்போம்.

பகவானே கீதையில் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்:

பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யச்சாஸ்மி தத்வத: |
ததோ மாம் தத்வதோ ஜ்ஞாத்வா விசதே தத் அனந்தரம் || 2

“ஒருத்தன் என்னிடம் பக்தி செலுத்திக் கொண்டேயிருந்தால், நான் யார், எப்படிப்பட்டவன் என்று உள்ள‌படி தெரிந்துகொள்கிறான். அம்மாதிரி என்னை உள்ளபடி தெரிந்து கொண்டபின், எனக்கு வேறாக இல்லாமல் என்னுள்ளேயே புகுந்து விடுகிறான்” என்கிறார்.

அவருக்கு வெளியிலே நாம் இருக்கிற மட்டுந்தான் அவரை பார்த்து பக்தி பண்ணலாம். உள்ளேயே புகுந்து விட்டால்? அப்போது அவர் வேறு, நாம் வேறு இல்லை. ஒன்றாக, அத்வைதமாக, ஆகிவிடுவோம். ஆனால் இப்படி ஆவது எப்போது ஸாத்யம் என்றால், ‘என்னிடம் பக்தி செய்து, உள்ளபடி என்னைத் தெரிந்து கொண்டபின் தான்’ என்கிறார். ‘ததோ மாம்’ என்பதில் உள்ள ‘ததோ’, ‘தத:’, என்பதற்குப் ‘பின்னால்’, ‘அப்புறம்’ என்று அர்த்தம். இப்போது பண்ணக் கூடியது பக்தி; அப்புறம் நடக்க வேண்டியது அந்த சமயத்தில் நடக்கட்டும்! ‘பக்தி பண்ணிக்கொண்டேயிரு: அப்புறம் நான் உள்ளபடி எப்படியிருக்கிறேன் என்பதை நானே காட்டி, உன்னை அத்வைதமாக கரைத்துக் கொள்கிறேன்’ என்கிறார்.

‘தத்வத:’, ‘தத்வத:’ என்று இரண்டு தடவை சொல்கிறார். அதாவது ‘பக்தியினால் என்னை உள்ளபடி தெரிந்து கொள்கிறான்; உள்ளபடி தெரிந்து கொண்டபின் நானே ஆகிவிடுகிறான்’ என்கிறார்.

பக்தியினால் அவரை உள்ளபடி தெரிந்து கொள்கிறோம் என்றால், பக்தி செய்கிறபோது அவரை உள்ளபடி தெரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தமாகிறது. பக்தி செய்ததற்குப் பலனாகத்தான் அவர் தமது வாஸ்தவ ஸ்வரூபத்தைத் தெரிவிக்கிறார். அப்படியென்றால், பக்தி செய்யும்போது அவரை நமக்கு உள்ளபடி தெரியவில்லை என்றுதானே அர்த்தம்?

‘தெரியாதவரிடம் எப்படி பக்தியை செலுத்துவது?’ என்றால் பக்தி ஆரம்பிக்கிற சமயத்திலும் அவர் அடியோடு தெரியாதவரல்ல; உள்ளபடி, அதாவது அவருடைய பூர்ண ஸ்வரூபம்தான் இப்போது நமக்குத் தெரியவில்லை. அந்தப் பூர்ணம்தான் அத்வைதமாக, ஒரே நிறைவாக, மனசுக்கு எட்டாமல் இருக்கிற‌து. அந்த வாஸ்தவ ஸ்வரூபம் நமக்குத் தெரியாவிட்டால் போகட்டும். அதனால் பாதகமில்லை. அது தெரிந்து விட்டால் தான் பகவான், பக்தன் என்ற பேதமேயில்லையே! அப்புறம் பக்திக்கு இடம் ஏது? பக்திக்கு விஷயம் அபூர்ணமாகத்தான் இருக்க முடியும். பக்தன் வேறு, பகவான் வேறு என்கிறபோதுதான் பக்தி உண்டு. அதாவது பக்தியின்போது பக்தனையும் தாமேயாகக் கரைத்துக் கொள்ளாத மாதிரிதான் பகவான் இருக்கிறார். அந்த அளவுக்கு அபூர்ணமாகத்தான் இருக்கிறார். அவர் பக்தன் மனஸுக்குப் பிடிபடுவதாலேயே அபூர்ணம்தான். இருந்துவிட்டுப் போகட்டும். நம்மையும் அதற்குள்ளேயே கரைத்து கொண்டு விட்ட பூர்ண‌த்தை நாம் நினைக்காததால் பரவாயில்லை. நினைக்க முடியாததை எப்படி நினைப்பது? ஆனாலும், அந்த பூர்ணத்தையே கொஞ்சம் அபூர்ணமாக்கி, அனந்த கல்யாண குண நில‌யமாக, ஒரே அழகும், கிருபையுமாக ஒரு ஸ்வரூபத்தை நம் மனஸினால் நினைத்துப் பார்க்க முடிகிறதல்லவா? இந்த ஸ்வரூபத்திடம் பக்தி பண்ணி, நெக்குருகி நெக்குருகி ஆனந்திக்க முடிகிறதல்லவா? இம்மாதிரி பக்தி பண்ணினால் அப்படியே அவர் பரம அழகோடு கிருபையோடு வருகிறார். பிறகு வாஸ்தவ ஸ்வரூபத்தைத் தானே பிரகாசித்துவிட்டுப் போகிறார்; அவரோடு நம்மை அபேதமாக ஆக்கிக் கொள்கிறார்.அதெல்லாம் அவர் வேலை.

பக்தி செய்கிறபோது, நாம் நினைப்பது அவருடைய வாஸ்தவ ஸ்வரூபத்தை இல்லைதான். ஆனால் அந்த யதார்த்த ஸ்வரூபத்தை அறிய இந்தப் பக்தியை விட்டால் வேறு வழியில்லை.

‘பக்த்யா மாம் அபிஜானாதி’: ‘பக்தியினால் என்னை அறிந்துகொள்கிறான்’. ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்வது மட்டுமில்லை – ‘ஜானாதி மட்டுமில்லை; அபிஜானாதி – நன்றாக, முழுக்க, அதாவது வாஸ்தவ ஸ்வரூபத்தையே அறிந்து கொண்டு விடுகிறான். பிறகு ஒன்றாகி விடுகிறான்.

அது பிற்பாடு நடக்க வேண்டிய கதை. இப்போது பரமாத்மாவை வேறாகவே வைத்து பக்தி செய்வோம். நிறைந்த நிறைவான முழு ஸ்வரூபமாக இல்லாமல் ஸகுணமாகவே பக்தி செய்வோம். இதில் நமக்குக் கிடைக்கிற நிறைவிலேயே திருப்தியாக இருப்போம்.

அத்வைத சாஸ்திரங்களில்கூட, “ஈச்வர அநுக்ரஹாத் ஏவ பும்ஸாம் அத்வைத வாஸனா” என்று சொல்லியிருக்கிறது. ஈச்வர அநுக்ரஹத்தால்தான் ஒருத்தனுக்கு அத்வைத வாஸனை, அத்வைதத்தில் ஒரு ருசி, பிடிமானமே உண்டாகும் என்று அர்த்தம். இப்படி ஈச்வரன்தான் ஒரு ஜீவனுக்கு அத்வைதத்தில் ருசியை உண்டாக்குகிறான் என்றாலே, அப்படி ஒருத்தன் இந்த ஜீவனுக்கு வேறாக உட்கார்ந்திருக்கிறான் என்று ஆகிவிடுகிறது! ஈச்வரன் தனக்கு வேறாக எதுவுமே இல்லை என்ற பாவத்திலேயே இருந்தால், எப்படி, எதனிடம் கருணை கொண்டு அநுக்ரஹம் பண்ண முடியும்? தனக்கு வேறாக இன்னொன்று இருப்பதாக நினைக்கிறபோது தானே அவன் அநுக்ரஹம் என்ற ஒன்றைச் செய்யவே இடம் ஏற்படுகிறது? ஆகையினால், இந்த மாயா நாடகத்தில் ரொம்பவும் வேடிக்கையாக, ஜீவாத்மா மாதிரி இருக்கிற நாம் மட்டும்தான் நமக்குப் பரமாத்மா வேறு என்று நினைக்காமல், அந்தப் பரமாத்மாவும் இப்படி நம்மை வேறாக நினைத்து விளையாடுவதாக ஆகிறது! ‘இந்த ஜீவன் தானாக அத்வைதத்துக்கு ஆசைப்படவில்லை; ஈச்வரன்தான் அந்த ஆசையை உண்டாக்குகிறான்’ என்றால் ஜீவனுக்கு வேறுமாதிரி அவன் இருக்கிறான்; அப்புறம் வேறாக இருக்க வேண்டாமே என்ற ஆசையை ஜீவனுக்கு அநுக்ரஹம் பண்ணுகிறான் என்றுதானே அர்த்தம்? அநுக்ரஹம் பண்ணுகிறவன், அநுக்ரஹத்தைப் பெற்றுக் கொள்கிறவன் என்று இரண்டு பேர்வழிகள் இருந்துவிட்டால் த்வைதம்தான். ‘அநுக்ரஹம் பெறுவதற்காக ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு அதைச் செய்கிறேன்’ என்று ஈச்வரனே வேறு மாதிரி இருக்கிறபோது, அவனை வேறாகவே நினைத்து பக்தி செய்வதில் பிசகே இல்லை.

அநுக்ரஹம் செய்வதற்காக அவன் வேறு மாதிரி இருக்கிறான். அத்வைத வாஸனையையும் அவனே ஏற்படுத்துகிறான் என்றபின், அந்த அநுக்ரஹ மூர்த்தியே அத்வைத அநுபவத்தையும் கொடுத்துவிட்டுப் போகட்டுமே! வாஸனையை உண்டாக்கினவன்தான், அதைப் பூர்த்தி பண்ண முடியும். பூர்த்தி பண்ணுவதற்காகத்தானே வாஸனையை உண்டாக்குகிறான்? இப்படி ஒரு நல்ல ஆசையை உண்டாக்கினவன் அப்புறம் கைவிட்டு விடுவானா? தான் ஆரம்பித்த காரியத்தை அவனே செய்து முடித்துக் கொள்கிறான். முடிக்கிறான், முடிக்கவில்லை. அது அவன் சமாசாரம். அதில் நம் காரியம் எதுவும் இல்லை.

நம் காரியம் அவனை ஸகுணமாக உபாஸிப்பது. இதனால் அவனுக்குக் குறை உண்டாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டாம். அவனேதான் சொல்கிறானே, “முதலில் நீ என்னை என்னவென்று நினைத்து பக்தி பண்ணினாலும் அப்படியே ஒரு மாதிரி இருப்பேன். அப்புறம் வாஸ்தவத்தில் நான் என்னவோ அதுவாக‌ நானே பிரகாசித்துவிடுவேன்” என்கிறானே!

∗                                         ∗                                           ∗

பிரகாசிப்பது அவர் காரியம். அவரை நாம் பிரகாசிக்கப் பண்ண முடியாது. முடியாததற்கு நாம் பிரயத்தனப்படுவது வியர்த்தம்தான்; இருக்கிற குறையை ஜாஸ்தியாக்கிக் கொள்வதுதான்.

அவனைத் தவிர வேறு அடியோடு இல்லை என்பது அத்வைதம். உயிர் என்று, ஜீவாத்மா என்று ஒன்று இருந்தாலும், உயிருக்குயிராக, அந்தர்யாமியாக அவன் ஒருத்தனே இருக்கிறான் என்பது விசிஷ்டாத்வைதம். அவன் வேறு, நாம் வேறுதான்; ஆனால் அவன்தான் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான் என்பது த்வைதம். த்வைதம்தான் நமக்கு நன்றாகத் தெரிகிறது. தெரிந்ததைப் பிடித்துக் கொண்டோமானால், மேலே மேலே தெரிந்து கொள்ள வேண்டியதை அவனே தெரியப்படுத்துவான். அப்போது அணுவுக்குள் அணுவாக, உயிருக்கு உயிராக அவனை அநுபவிப்போம். அப்புறம் நாம் அநுபவிக்கிறோம், அவனை அநுபவிக்கிறோம் என்ற வித்தியாசம் கூட இல்லாமல், அத்வைதமாகி விடுவோம். இதெல்லாம் பரமாத்மாவின் அநுக்கிரஹத்தினால் நடக்கவேண்டியவை. நம்மால் நடத்திக் கொள்ள முடிவதாகத் தெரிவது, கடமையைப் பண்ணுவது; கூடிய மட்டும் நம்முடைய ஆசைக்காக இல்லாமல், ஈசுவர ஆக்ஞை இப்படி என்று காரியம் பண்ணுவது; அவனிடம் பக்தியோடு இருப்பது; இதுதான். ஸ்வாமியை நினைக்காமல், வெறுமே ‘அன்புருவமாக இரு’, ‘பிரேமஸ்வரூபமாக இரு’ என்றால், நம்மால் முடியவில்லை. காரியம் உள்ள மட்டும் கோபமும் த்வேஷமும் வரத்தான் செய்கின்றன, ஆனால் அன்புருவான ஸ்வாமியிடம் நாம் அன்பு வைத்து, காரியங்களை அவருக்கே அர்ப்பணம் செய்யத் தொடங்கினால், தானாகவே எல்லாரிடமும் அன்புமயமாகிறோம். இந்த அன்பே பெரிய ஆனந்தம், நிறைவு.

மனஸை ஆடாமல் நிறுத்தி, அத்வைதமாக ஸத்யத்தை அநுபவிக்க முடியாத நாம், ‘நீ வேறு, நான் வேறு’ என்றே த்வைதமாக பக்தி பண்ணி, அந்த ஸந்தோஷத்திலேயே திருப்தியாக இருப்போம். அப்புறம் அவனே விசிஷ்டாத்வைதமாக உயிருக்குயிராகப் பிரகாசிக்கட்டும்; அல்லது அத்வைதமாக ஆக்கிக் கொள்ளட்டும்.

முக்கியமாக ஒரு சரீரம்தான் நம்மை அவனுக்கு வேறு மாதிரி ஆக்கியிருக்கிறது. இந்த சரீரத்துக்குள் அந்தர்யாமி என்றுகூட அவனை வைத்துக் கொள்ளாமல், சரீரத்தோடு நின்று, வேறு வேறாகவே இருந்து விட்டால் த்வைதம். அப்படி த்வைதமாக இருந்தால்கூட, அழகுப் பிரவாஹமாக, கருணா ஸமுத்திரமாக ஒரு பராசக்தியை நினைத்து பக்தி செய்ய முடியும்; அதிலிருந்து கிடைக்கிற ஆனந்தத்தைப் பெறமுடியும். ஆகையினால், உயிர் – உயிருக்குயிர் என்ற பேதம் அடிப்பட்டுப்போன அத்வைதத்துக்கோ, ‘உயிர் நாம், உயிருக்குயிர் அவர்’ என்ற விசிஷ்டாத்வைதத்துக்கோ தவிக்காமல், த்வைதமாகவே, ‘நாம் இப்படி உடல் எடுத்திருக்கிறோம்; இந்த உடம்புதான் நாம்; இதை வைத்துக்கொண்டும் அந்தப் பரமாத்மாவை, பராசக்தியை நினைத்து ஆனந்திக்க முடிகிறதோ இல்லையோ? இப்படியே தான் இருப்போமே ! இந்த உடம்பு என்ன, இன்னும் புழு உடம்பு வந்தாலும் வந்துவிட்டுப் போகட்டுமே! அந்தப் புழு அவனுக்கு வேறாகவே இருந்தாலுங்கூட அவனை நினைக்க முடியுமானால், அவன் அதை மோக்ஷ லோகத்தில் சேர்த்துக் கொள்வானானால், அப்படித்தான் வேறாகவே ஆனந்தமாக இருந்துவிட்டுப் போவோமே! என்று நம்மைத் திருப்தர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாதிருக்க வரம் தரவேண்டும்

என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்ன மாதிரி, பகவத் ஸ்மரணம் எப்போதும் இருக்கவேண்டும் என்பது தான் விஷயம். அது இருப்பதே அலாதி ஆனந்தம். இந்த ஆனந்தம் நம் அஞ்ஞான நிலையிலேயே காரிய சாத்தியமாக இருக்கும் போது, ‘உடம்பு இருக்கிறதே, மனசு இருக்கிறதே, இதெல்லாம் தொலைந்து ஆத்மா மட்டும் பிரகாசிக்கவில்லையே!’ என்று துக்கப்பட வேண்டாம்.

அப்பர் ஸ்வாமிகள் பக்தர். ஆதலால் அவர் இப்படிச் சொன்னது பெரிசில்லை. ஞான மார்க்கத்துக்கு, அத்வைதத்துக்கு பரமாசாரியாளாக இருக்கிற நம் சங்கர பகவத்பாதர்களே, ‘சிவாநந்த லஹரி’யில், ‘நான் புழுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! இல்லை, கொசுவாகத்தான் பிறந்துவிட்டுப் போகிறேனே! அதனாலெல்லாம் என்ன மோசம் போய்விட்டது? இல்லை, ஒரு மாடாகத்தான் ஜன்மா எடுத்தால் என்ன? உன்னுடைய பாதத்தை ஸ்மரிக்கிற பரமானந்த வெள்ளத்தில் மட்டும் ஹ்ருதயம் தோய்ந்து கிடக்குமானால், அப்போது எந்த உடல் வாய்த்தால்தான் என்ன?” என்கிறார்.

நரத்வம் தேவத்வம் நகவன ம்ருகத்வம் மசகதா பசுத்வம் கீடத்வம்…..

கீடம் – புழு. ‘கீடத்வம்’ தான் அப்பர் சொன்ன ‘புழுவாய்ப் பிறக்கினும்’. மசகதா – கொசுத்தன்மை; Mosquito இதிலிருந்து வந்ததுதான். கொசுவாக இருந்துங்கூட பக்தி பண்ணமுடியுமானால், அந்த ஜன்மா எடுக்கக்கூட பயப்படவேண்டாம்.

மநுஷ்ய உடம்பாக இருந்தாலும், அதை வைத்துக் கொண்டே ஆனந்தமாக பக்தி பண்ணிக்கொண்டு, ஸமஸ்த ப்ராணிகளிடமும் நிறைந்த அன்போடு கர்மாவைச் செய்யமுடிகிறபோது, ‘உடம்பு வேண்டாம், புனர் ஜன்மா வேண்டாம்’ என்றெல்லாங்கூட ப்ரார்த்திக்க வேண்டியதில்லை.

எந்த உடம்பு வந்தாலும், எப்படிப்பட்ட ஜன்மா வாய்த்தாலும், அந்த பரமாத்மாவை அன்பே உருவான தாயாக பாவித்து, ஸாக்ஷாத் அந்தப் பரதேவதையின் சரணாரவிந்தத்தில் நீங்காத நினைவை வைத்து விட்டால் போதும். அவள் ஞானாம்பிகை. ஞானப்பால் கொடுப்பவள். கர்மாவினாலும், பக்தியினாலும் நம் மனஸிலிருக்கிற அழுக்கை எல்லாம் துடைத்து விடுவாள். அது பளிச்சென்று ஸ்வச்சமாக கண்ணாடி மாதிரி ஆகி, அதன் ஆட்டமெல்லாம் நின்று போனால் பூர்ண ஸ்வரூபம் தானே அதில் பிரகாசித்துவிடும். அந்த நிலையை அவளே அநுக்ரஹிப்பாள். இப்படித்தான் அநுக்ரஹிக்க வேண்டும் என்று நாம் சொல்ல வேண்டாம். வைகுண்டம், கைலாசம் மாதிரி தன் லோகம் என்பதாக ஏதோ ஒன்றில் நம்மைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு சேவா பாக்யம்தான் தரட்டும்; அல்லது அது வேறு, நாம் வேறு இல்லை என்று பூர்ணமாக நிறைந்து விடுகிற நிலையைத்தான் தரட்டும். எதுவானாலும் சரி.

அந்த நிலை நமக்குத் தெரியாதது, அதைத் தரப்போகிறதும் இன்னொருத்தர். நமக்குத் தெரிந்தது த்வைதம். ஏன் த்வைதம் தெரிகிறது என்றால் மனசு நிற்கவில்லை. மனசு ஏன் நிற்கவில்லை என்றால் ஆசாபாசம், த்வேஷம், பயம், துக்கம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. இவற்றிலேயே அலைந்து கொண்டு மனசு அசுத்தமாகி விட்டதால் நிற்கமாட்டேன் என்கிறது. அதனால் நமக்கு முதலில் சித்தசுத்தி வரவேண்டும். அதற்குக் கடமையைச் செய்து கொண்டு பரமாத்மாவை பக்தியோடு நினைத்துக் கொண்டிருப்பதுதான் வழி. இதை சந்தோஷமாகச் செய்வோம்.

செய்து பார்த்தால் இதுவே ஆனந்தமாயிருக்கும். சித்தசுத்தி அது இது என்ற ல‌க்ஷ்யங்களைக்கூட அப்போது நாம் நினைக்க மாட்டோம். ஆனந்தமாக பக்தி பண்ணிக் கொண்டு, அன்பாகக் காரியங்களைச் செய்து கொண்டு, நாம் பாட்டுக்கு நிம்மதியாக இருக்க ஆரம்பித்துவிடுவோம். அநுக்ரஹத்தை பராசக்தி தானாகப் பண்ணுவாள். அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது. நமக்கு நிஜமான பக்தி உண்டாகி ஆனந்தமாக இருக்கத் தெரிந்து கொண்டோமானால், கட்டாயப்படுத்தவும் தோன்றாது. அதனால் அவளுக்கு எப்படி இஷ்டமோ அப்படி த்வைதமாகவே வைத்து அநுக்ரஹம் செய்யலாம்; அல்லது அந்த அநுக்ரஹம் விசிஷ்டாத்வைதமாக இருக்கலாம்; அத்வைதமாக இருந்தாலும் இருக்கலாம். எதுவானாலும் சரி என்று அந்தப் பராசக்தியின் கையில் விட்டுவிட்டு, நாம் பக்திப் பண்ணிப் பண்ணியே பரமானந்தமாக இருந்து கொண்டிருப்போம்.

அத்வைதந்தான் பரம ஸத்தியம். நாம் மனஸை நிறுத்திவிட்டு அந்த ஸத்தியத்தை அநுபவிக்க முடியுமானால் விசேஷந்தான். ஞான மார்க்கம் இதற்காக ஏற்பட்டதுதான். ‘ஆனால் நம்மில் பெரும்பாலாருக்கு அதில் போக முடியவில்லையே! இதற்காக அழுது கொண்டேயிருக்க வேண்டியதுதானா? என்று தோன்றியது. அப்புறம், ‘அழவேண்டாம். நம்மால் முடிந்த கர்மத்தையும் பக்தியையும் அழாமல் பண்ணிக் கொண்டிருந்தாலே போதும். ஸகலப் பிரபஞ்சங்களின் வியவகாரங்களையும் நடத்திக் கொண்டிருக்கிற பராசக்தியின் சித்தப்படிதான் நமக்கு அத்வைத சித்தி உள்பட எந்த லக்ஷ்யமும் ஸித்திக்குமாதலால், நாம் இருக்கிற நிலையிலேயே நமக்கு ஒரு நிறைவையும், இதற்கு மேலே நிறைந்த நிறைவான அத்வைதத்தையுங்கூட அந்தப் பராசக்தியின் அநுக்ரஹத்தால் பெற்றுவிடலாம்’ என்ற தெளிவு உண்டாயிற்று. அதைத்தான் சொன்னேன்.


1. ‘புருஷஸூக்த’த்தில் வரும் பதங்களை முன்பின்னாக மொழிந்தது.

2. கீதை XVIII.55

One thought on “அத்வைதமோ த்வைதமோ? ‍– அதுவும் பராசக்தி வசமே!

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s