வேதத்தின் முடிவும் சங்கரரின் முடிவும் ஒன்றே

“வேதாந்தம்” என்று சொன்னால் அதற்கு “வேதத்தின் முடிவு” என்று அர்த்தம்.”வேதத்தின் முடிவு” என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் உண்டாகிறது. வேதம் என்கிற புஸ்தகத்துக்கு முடிவான பாகமாக இருப்பது என்பது ஒரு அர்த்தம். வேதத்தின் முடிந்த முடிவான அபிப்பிராயம் எதுவோ, வேதத்தின் பரம தாத்பரியம் எதுவோ, அதற்கும் “வேதத்தின் முடிவு” என்றே பெயர் கொடுக்கலாம். “உன் தீர்மானம் என்ன?” என்று கேட்பதற்கு பதில், “உன் முடிவு என்ன?” என்று கேட்கிறோம் அல்லவா? இப்படி, வேதத்தின் முடிவு என்றால் வேதத்தின் தீர்மானமான கருத்து, வேதத்தின் உத்தேசம், வேதத்தின் லக்ஷ்யம் என்றும் அர்த்தமாகிறது.

உபநிஷத்துக்களுக்குத்தான் “வேதாந்தம்” என்ற பெயர் இருக்கிறது. மேலே சொன்ன இரண்டு அர்த்தங்களிலும் அது வேதாந்தமாக, அதாவ‌து வேதத்தின் முடிவாக, இருக்கிறது.

வேத புஸ்தகத்தை எடுத்துக் கொண்டால் முதலில் ஸம்ஹிதை, அப்புறம் பிராம்மணம், அதற்கப்புறம் ஆரண்யகம் என்று மூன்று பகுதிகள் வந்து, கடைசியாக, ஆரண்யகத்தின் முடிவிலேயே உபநிஷத்துக்கள் வருகின்றன.

வேதத்தின் கருத்தை, அர்த்தத்தை, அபிப்பிராயத்தை எடுத்துக்கொண்டாலும், முன்னே சொன்ன ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம் இவற்றில் வருகிற கர்மா, உபாஸனை, விசாரணை எல்லாவற்றுக்கும் முடிவான மோக்ஷத்தைப் பற்றி நேராக (direct-ஆக) எடுத்துச் சொல்கிற தத்வோபதேசமாக இருப்பவை உபநிஷத்துக்கள்தான்.

இப்படிப்பட்ட உபநிஷத்துக்கள் நூற்றுக்கு மேல் ஏராளமாக இருந்தாலும், முக்கியமானதாகப் பத்தைப் பொறுக்கி எடுத்து, ஆதிசங்கர பகவத்பாதாள் பாஷ்யம் (விரிவுரை) எழுதினார். ஈசம், கேனம், கடம், பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம், தைத்திரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், ப்ருஹதாரண்யகம் என்ற அந்தப் பத்துக்குப் பெயர்.

நம் மதத்தின் வேராக, ஆதார ஸ்தம்பமாக இருக்கப்பட்ட வேதத்தின் முடிந்த முடிவாக, இந்த உபநிஷத்துக்கள் தெரிவிக்கிற தத்வம் அத்வைதந்தான் என்று ஆசார்யாள் தம்முடைய பாஷ்யங்களின் மூலம் விளக்கியிருக்கிறார்.

‘இல்லை, அவை விசிஷ்டாத்வைதத்தைத்தான் சொல்கின்றன’ என்பதாக, நம் ஆசார்யாளுக்குப் பிந்தி வந்த ஸ்ரீ ராமானுஜாசாரியார் பாஷ்யம் செய்திருக்கிறார். அவருக்குப் பிறகு வந்த ஸ்ரீ மத்வாசாரியார் வேதாந்தத்தின் தாத்பரியம் த்வைதம்தான் என்று பாஷ்யம் எழுதியிருக்கிறார். இப்படியே வேதத்தை ஒப்புக்கொள்ளும் அநேக ஹிந்து மதப் பிரிவுகளின் ஆசார்யர்களும், உபநிஷத் தாத்பரியம் தங்கள் தங்கள் கொள்கையைத்தான் சொல்கிறது என்கிறார்கள்.

உபநிஷத்துக்கள் அத்வைதத்தைச் சொல்லவில்லை என்ற தங்கள் அபிப்பிராயத்துக்கு ஆதரவாக, மற்ற சம்பிரதாய ஆசார்யர்கள் முக்கியமாக என்ன சொல்கிறார்களென்றால், நம் ஆசார்யாள் லோகமெல்லாம் மாயை என்று சொல்வதற்கு மேற்படி தசோபநிஷத்துக்களில் (பத்து உபநிஷத்துக்களில்) நேராக ஆதாரம் இல்லை என்பதுதான்.

ஜகத்தை மாயை என்று அத்வைதத்தில் சொல்கிறதற்கு உபநிஷத்துப் பிரமாணமில்லை என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.

இது பிசகு.

ஒவ்வொரு உபநிஷத்தையும் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் சாந்தி மந்திரம் என்று ஒன்று சொல்ல வேண்டும். ஈசாவாஸ்யத்தில் ஆரம்பித்து பிருஹதாரண்யகத்தோடு முடிப்பதாகப் பத்து உபநிஷத்துக்களையும் பாராயணம் பண்ணும்போது, ஈசாவாஸ்யத்தின் முதலில் ஆரம்பமாகவும், பிருஹதாரண்யகத்தை முடிக்கும் போது கடைசியாகவும் வருகிறது ஒரே சாந்தி மந்திரம்தான். அதற்கு என்ன அர்த்தம் என்றால், “பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான உலகம் வந்திருக்கிறது. இப்படி இந்த உலகம் வந்த பின்பும் பிரம்மம் பூர்ணமாகவே இருக்கிறது” என்று அர்த்தம்.

பிரம்மம் என்பதை “அத:” என்றும், உலகம் என்பதை “இதம்” என்றும் இந்த மந்திரத்தில் சொல்லியிருக்கிறது. “அத:” என்பது அது – அதாவது தூரத்தில் இருப்பது. “இதம்” என்பது இது – அதாவது கிட்டத்தில் இருப்பது. தமிழில் இருக்கிற மாதிரியேதான் ஸம்ஸ்கிருதத்திலும் இருக்கிறது. இப்போது நாம் இருக்கிற ஸ்திதியில் பிரம்மம் நமக்குத் தூரத்திலுள்ள விஷயமாகத்தான் இருக்கிறது; நமக்குத் தெரிவது கிட்டத்திலுள்ள உலகம்தான்.

தூரத்தில் இருப்பவனைக் கட்டை விரலுக்கு அடுத்த விரலை நீட்டிக் காட்டுகிறோம். இதனால் அதற்கு ஆள்காட்டி விரல் என்று பெயர். பெருமாளும் இப்படியே அது என்று தூரத்திலே காட்டப்பட வேண்டியவராகத்தான் இருக்கிறார். அதனால் அதைப் ‘பெருமாள் காட்டி விரல்’ என்று கூடச் சொல்லிவிடலாம். இதே விரலை ஆட்டினால் ஒருத்தனை மிரட்டுவதாக அர்த்தம் ஏற்படுகிறது. “உன்னை என்ன பண்ணுகிறேன் பார்!” என்று சொல்லிக்கொண்டு இந்த விரலைத்தான் ஆட்டுகிறார்கள். ஸம்ஸ்கிருதத்தில் ‘தர்ஜனம்’ என்றால் மிரட்டுவது, அதட்டுவது என்று அர்த்தம். அதனால் இந்த விரலுக்குத் ‘தர்ஜனீ’ என்றே பேர் வைத்திருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ இப்படி அதட்டுவதை வைத்துப் பேர் கொடுக்காமல், தமிழில் ‘அது’ என்று எட்டத்தில் இருக்கிற பெருமாளை இது காட்டுவதாக வைத்து, “ஆள்காட்டி விரல்” என்று சொல்லியிருப்பதுதான் பிடித்திருக்கிறது.

பேர் “தர்ஜினீ” என்றிருந்தாலும், பரம்பொருளைக் காட்டுகிறது என்ற அபிப்பிராயம் நம் சாஸ்திரங்களிலும் இருக்கிறது. வேதத்திலும், அதைவிட அதிகமாக மந்திர தந்திர ஆகமங்களிலும் அநேக முத்திரைகள் பிரயோஜனப்படுகின்றன. விரல்களால் செய்கிற அபிநயங்களுக்கு முத்திரை என்று பெயர். இப்படிப்பட்ட முத்திரைகளில் ஒன்றில், தர்ஜினீ என்ற விரலை ஆளைக் காட்டுகிற மாதிரியே வெளியே நீட்டி, அங்குஷ்டத்தை (கட்டை விரலை) உள்பக்கமாகத் தன்னை நோக்கி நீட்டிக்கொள்வதாக ஒரு முத்திரை உள்ள‌து. இதற்கு தத்வார்த்தம், “அது என்று எங்கேயோ இருப்பதாக நினைக்கப்படும் பரமாத்மாவேதான் ஜீவனுக்கு உள்ளேயும் இருக்கிறது” என்பது. இங்கே தர்ஜினீ அதட்டலுக்கு இல்லாமல் பெருமாளைக் காட்டவே உபயோகிக்கப்படுகிறது. இந்த முத்திரையில் வரும் தத்வத்தையே ஈசாவாஸ்யத்தில் “தத்தூரே தத்வந்திகே”, “தூரத்தில் உள்ளதே கிட்டத்தில் உள்ளே யிருக்கிறது” என்று சொல்லியிருக்கிறது. “அப்பாலுக்கு அப்பாலை, உள்ளிலங்கு சோதியை” என்று இதைத் தேவாரத்திலும் சொல்லியிருக்கிறது.

நான் மேலே சொன்ன சாந்தி மந்திரத்தில் ‘அது’ என்று பிரம்மத்தையும், ‘இது’ என்று ஜகத்தையும் சொல்லியிருக்கிறது. இந்த இடத்தில் ‘இது’ என்பது ஜீவனைக் குறிக்காமல் ஜகத்தைக் குறிக்கிறது. இப்போது பரமாத்மா நமக்குத் தெரியாமல், ஜகத்துதான் பார்வைக்கு நிஜம் மாதிரித் தெரிவதால், இதையும் பூர்ணம் என்று சொல்லியிருக்கிறது. ஆனாலும் இது வாஸ்தவத்தில் நிஜமில்லை, பூர்ணமில்லை என்பது பின்னால் வருகிற வார்த்தைகளைப் பார்த்தால் நிஸ்ஸந்தேஹமாக [ஐயமற]த் தெரிகிறது. இந்த ஜகத்தான பூர்ணத்தைக் கழித்த பிறகும் அந்தப் பிரம்மம் பூர்ணமாகவே இருக்கிறது என்று பின்னால் வருகிறது. ஜகத் வாஸ்தவமாகவே பூர்ணமாக இருப்பதால் இது ஸாத்யம் இல்லை. பூர்ணம் மைனஸ் பூர்ணம் என்பது ஸைபராகத்தான் வேண்டும். அப்படியில்லாமல் பூர்ணம் மைனஸ் ஜகத் என்பது பூர்ணமே என்றால் அப்போது ஜகத்துதான் ஸைபர் என்று ஏற்படுகிறது. ஸைபர் என்றால் இல்லாதது. இதைதான் மாயை என்பது. ‘இறுதி நிலையில் இல்லாமல் போவது; பார்வைக்கு மட்டும் நிஜம் மாதிரித் தெரிவது’ — இதுதான் ஆசார்யாள் மாயைக்குக் கொடுத்திருக்கிற லக்ஷணம் (Definition). பார்வைக்கு நிஜம் மாதிரி இருப்பதைத்தான் வியாவஹாரிக (விவகாரத்தில் உள்ள) ஸத்யம் என்று ஆசார்யாள் ஓரளவுக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள். இதே அபிப்பிராயத்தில்தான் விவகாரத்தின் view-விலிருந்து [கோணத்திலிருந்து] உபநிஷத்தும் ஜகத்தைப் “பூர்ணம்” என்றது. ஆனாலும் இதை இல்லாமல் பண்ணிக்கொண்டு பாரமார்த்திக ஸத்யமான (எப்போதும் உயர்ந்த ஸத்யமாக மாறாமலிருக்கிற) பிரம்மத்தில் சேரவேண்டும் என்ற ஆசார்யாளின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிற ரீதியிலேயே, உபநிஷத்திலும், இந்த ஜகத்தைக் கழித்த பின்னும் குறைவில்லாமலே பூர்ணமாக இருக்கிற, “அது”வை விசேஷித்துச் சொல்லியிருக்கிறது. “இது” போனபின்னும் “அது” அதுவாகவே கொஞ்சம்கூடக் குறைவில்லாமலிருக்கிறது என்று சொன்னால், அப்படிப்பட்ட “அதில்”தான் சேரவேண்டும் என்று உபதேசம் பண்ணுவதாகவே ஆகும்.

உபநிஷத் பாராயணத்தில் ஆரம்பம், முடிவு இரண்டிலும் வருகிற மந்திரமே மாயைக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொல்ல வந்தேன்.

 *               *             *                *               *

தசோபநிஷத்துக்களும், இன்னம் அதில் சேராத ச்வேதாச்வதரம், கெளஷீதகீ, ந்ருஸிம்ஹதாபினி போன்ற நீண்டகால வழக்கிலே வந்திருக்கிற மற்ற உபநிஷத்துக்களும் பொதுவாக ஒரே உத்தேசத்தில் ஏற்பட்டு, ஒரே லக்ஷ்யத்துக்கு அழைத்துப் போகிறவைதான்.

ஜீவர்கள் என்று நாம் இருக்கிறோம். நாம் வாழ்க்கை நடத்துகிற ஜகத் என்று ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் உண்டாக்கி, நடத்திக் கொண்டிருக்கிற ஈச்வரன் என்று ஒருத்தன் இருக்கிறான். ‘ஜீவ-ஜகத்-ஈச்வரன் என்கிற இந்த மூன்றும் என்ன? இந்த ஜகத் வியாபாரத்தில் ஜீவன் இன்பத்துக்கும் துன்பத்துக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பது போல் இல்லாமல், இவன் சாச்வதமான இன்பத்திலேயே இருக்க வேண்டுமானால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று ஆராய்ந்து, அனுபவ ரீதியில் பதில் சொல்வதுதான் உபநிஷத்துக்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான லக்ஷ்யம். இவை முடிவாகச் சொல்வது என்ன?

பிரம்மம் என்கிற ஒரு பரம்பொருள்தான் ஜீவன், ஜகத் இரண்டுக்கும் காரணம். அந்தக் காரணமும் அதன் விளைவான ஜீவ‍-ஜகத்துக்களும் வேறு வேறு இல்லை. ஏனென்றால் பிரம்மத்துக்கு வேறாக எதுவுமே இருக்கமுடியாது. இப்போது ஜகத்தையே நிஜம் என்று நினைக்கிற ஜீவாத்மா, அதை ஒதுக்கிவிட்டு, தன்னையே யார் என்று விசாரம் பண்ணிப் பார்த்து கொண்டால், ‘உடம்பு நானில்லை, இந்திரியங்கள் நானில்லை, மனஸ் நானில்லை, புத்தி நானில்லை, பிராணன் நானில்லை’ என்று ஒவ்வொன்றும் கழன்று போய் கடைசியில் ‘தான் பிரம்மமே’ என்று அறிந்து கொள்வான். ‘பரமாத்மா என்று ஒன்று ஜீவாத்மாவைப் படைத்தது என்று சொல்வதுகூட ஒரு மாயைதான். ஜகத்தெல்லாம் அந்த மாயையின் விளையாட்டுதான். வாஸ்தவத்தில் பரமாத்மா ஜீவாத்மா என்ற பேதமில்லாமல் ஆத்மா என்று ஒன்றுதான் இருக்கிறது. அந்த ஒன்றே ஸத்தியம் என்று தெரிந்து கொள்வான். அப்படி ஸத்தியத்தோடு இரண்டற (அ-த்வைதமாக) இருக்கிற போதுதான் சுக-துக்க ஊசலாட்டம் போய் ஒரே சாச்வத இன்பமாக, சாந்தியாக‌ ஆகிறது. அது தான் மோக்ஷம்.

இருப்பது ஒன்றுதான். பார்ப்பது பலவாக இருந்தாலும் உள்ளது ஒன்றே என்று அனுபவத்தில் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதனால் சாச்வத சாந்தியை, ஸதானந்தத்தைப் பெற வேண்டும். இதுதான் உபநிஷத்துக்களின் லக்ஷ்யம்.

இப்படி நான், அத்வைதந்தான் வேதாந்தத்தின் முடிவான ஸித்தாந்தம் என்று சொன்னால், மற்ற த்வைத, விசிஷ்டாத்வைத ஸித்தாந்திகள் ஆக்ஷேபம் பண்ணக்கூடும். அந்த ஸித்தாந்தங்களின் பெரியவர்களும் இதே உபநிஷத்துக்களுக்குத்தான் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். தங்கள் தங்கள் கொள்கையே ஒளபநிஷதமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால் அத்வைதந்தான் உபநிஷத்துக்களின் உபதேசம் என்றால் எப்படி ஏற்பது?

அத்வைதம் என்பது த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றையும் தழுவி முதல் படிகளில் ஒப்புக் கொள்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் இந்த ஆக்ஷேபணை வராது.

உபநிஷத்துக்களில் அநேக விஷயங்கள் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று சொல்லும்படியாக மாறுபட்டு இருக்கத்தான் செய்கின்றன. ஓர் இடத்தில் ‘ஜீவாத்மா வேறே, பரமாத்மா வேறே, ப்ரபஞ்சம் வேறே’ என்பதாகவும், இன்னோரிடத்தில் ‘நான் என்கிற உயிர் ஜீவாத்மா; அந்த உயிருக்குள் உயிர் பரமாத்மா; எங்கும் நிறைந்திருக்கும்படியான பரமாத்மா இப்படி ஸர்வாந்தர்யாமியாக இருக்கிறார்’ என்பதாகவும், வேறு ஒரு இடத்தில் ‘இரண்டும் ஒன்றுதான்’ என்பதாகவும், இப்படி அநேக வாக்கியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும் உபநிஷத்துக்களில் நடுநடுவே சொல்லியிருக்கும்படியான சில வாக்கியங்களை எடுத்துக் கொண்டு, ஒன்றுக்கொன்று விரோதம்போல் இருக்கிற விஷயங்கள் எல்லாம் முரணானவை அல்ல என்றும், அவை எல்லாமே சரிதான் என்றும் காட்டுகிறார்கள். அத்வைதப் பிரகாரமாகப் பார்த்தால், பரமாத்மாதான் ஸர்வாத்மகனாக இருக்கிறான் என்றும், விசிஷ்டாத்வைதப் பிரகாரம் பார்த்தால் அவன்தான் அந்தர்யாமியாக உடலில் உயிர்போல் இருக்கிறான் என்றும் அர்த்தம் பண்ணித் தீர்மானம் செய்கிறார்கள். இப்படி இரண்டுக்கும் மத்தியஸ்தம் பண்ணி வைக்கும்படியான வாக்கியங்களை ‘கடக வாக்கியங்கள்’ என்பார்கள். இந்தக் கடக வாக்கியங்களை எடுத்துக் கொண்டு உபநிஷத்துக்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விஷயங்களே சொல்லப்படவில்லை என்று தீர்மானம் பண்ணுகிறார்கள்.

இதிலே புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்றால் ‘இந்த ஆத்மாவே பிரம்மம்தான்’; ‘இந்த ஸர்வமும் பிரம்மமே அல்லவா?’; ‘நான் பிரம்மமாக இருக்கிறேன்’; ‘நீ அதுவாகவே (பிரம்மமாகவே) இருக்கிறாய்’ என்கிற மாதிரிப் பளீர் பளீர் என்று அத்வைதத்தைச் சொல்கிற உபநிஷத் மந்திரங்களை, மஹாவாக்கியங்களை, மற்ற ஸித்தாந்திகள் ஒப்புக் கொள்வதற்கு அவர்களுடைய ஸித்தாந்தம் இடம் கொடுக்காததால், எப்படியெப்படியோ சுற்றி வளைத்து, வார்த்தைகளைத் திருப்பி, அக்ஷரங்களையும் பதங்களையும் வேறு விதமாகச் சேதம் பண்ணி வேறே அர்த்தத்தை கற்பிக்க வேண்டியதாகிறது. ஏனென்றால் ஜீவாத்ம பரமாத்ம அபேதத்தை (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைதத்தை) எந்த நிலையிலும் அவர்கள் ஒத்துக் கொள்ளமுடியாமல் இருக்கிறது. அப்படி ஒப்புக் கொண்டுவிட்டால் அந்த ஸித்தாந்தங்கள் அப்புறம் நிற்க முடியாது. ஆனால் அத்வைதியின் விஷயம் இப்படியில்லை. இப்போது விவகாரத்தில் இது பேத பிரபஞ்சமாகத்தான் தெரிகிறது என்பதால், ஆரம்ப நிலையில் அவன் த்வைதத்தையும் ஒப்புக் கொள்கிறான். அப்புறம் இத்தனை பேதங்களுக்குள்ளும் உயிருக்குயிராக ஒரே பொருள் இருக்கிறது என்பதாகப் பேதப் பிரபஞ்சம் — பேதமற்ற சைதன்யம் இரண்டையும் ஏற்கிற விசிஷ்டாத்வைதத்தையும் ஒப்புக் கொள்கிறான். இந்தப் படிகளில் ஏறித்தான் அபேதமாக ஜீவப்பிரம்ம ஐக்கியத்தை அடைய வேண்டும் என்கிறான். ஆகையால் த்வைத, விசிஷ்டாத்வைத பரமாக வருகிற உபநிஷத் மந்திரங்களுக்கு அவன் வலிந்து அத்வைத பரமாக அர்த்தம் பண்ண வேண்டியிருக்கவில்லை. அவையும் ஒரு ஸ்டேஜில் வாஸ்தவமே என்று, உள்ளபடியே அர்த்தம் பண்ண அத்வைதியால் முடிகிறது.

பிருஹதாரண்யகத்தில் (III.7) விசிஷ்டாத்வைதமாக அந்தர்யாமித்வத்தைச் சொல்லியிருக்கிறது. “எவர் பிருதிவியில் இருந்து கொண்டு பிருதிவியினுள்ளும் உறைகிறாரோ, எவரைப் பிருதிவி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்குப் பிருதிவி சரீரம் ஆகிற‌தோ, எவர் பிருதிவிக்கு உள்ளே நின்று அதை ஆளுகிறாரோ அவர்தான் உன் ஆத்மாவான அந்தர்யாமி; அமரமாக இருப்பவர். எவர் எல்லா ஜந்துக்களிடமும் இருந்துகொண்டு, அவை எல்லாவற்றுக்கும் உள்ளேயும் உறைகின்றாரோ, ஆனால் எவரை அவை தெரிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு எல்லா ஜந்துக்களும் சரீரமாகின்றனவோ, எவர் அவை எல்லாவற்றுக்கும் உள்ளே நின்று ஆட்டிப் படைக்கிறாரோ அவர்தான் உன் ஆத்மாவான அந்தர்யாமி; அமிருத ஸ்வரூபமாயிருக்கிறவர்” என்று இங்கே வருகிறது. இம்மாதிரி ஒன்று வந்துவிட்டால் அந்தந்த ஸித்தாந்திகள், “இதுதான் முடிவு, அத்வைதமில்லை” என்கிறார்கள். அப்புறம் பார்த்தால் அத்வைதமாகத்தான் வருகிறது! அதை இவர்கள் மாற்றி அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. விசிஷ்டாத்வைதப்படி அந்தர்யாமியும் ஜீவாத்மாவும் வித்யாஸமானவர்கள். ஆனால் இங்கேயோ ஏஷ த ஆத்மா அந்தர்யாமி என்று சொல்லியிருக்கிறது. ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு இல்லை; பொதுவாக ஒரே ஆத்மாதான். அதுவேதான் ஒரு நிலையில் ஜீவன் மாதிரியும், அவனுக்கு உள்ளே புகுந்து இயக்குகிற அந்தர்யாமி மாதிரியும் இருக்கிறது என்றே இதிலிருந்து ஏற்படுகிறது.

இப்படியே “த்வைதம்” என்று உபநிஷத்தில் வந்தால் மேலே என்ன வருகிறது என்று பார்க்காமல், அதுவே தாத்பரியம் என்கிறார்கள்.

முடிந்த முடிவாக மாண்டூக்ய உபநிஷத்தில், பிரணவ ஸ்வரூபத்தைத் தீர்மானம் பண்ணுகிற இடத்தில், அது “மூன்று நிலைகளையும் தாண்டிப் பிரபஞ்சம் ஒடுங்கி லயிக்கும் இடம், அதுவே சிவம் (உயர்ந்த க்ஷேமம்), அத்வைதம், இப்படியிருக்கிற அந்த ஓங்காரம் ஆத்மாவேதான். எவன் இதை அறிந்தவனோ அவனே அறிந்தவன்” என்று தெளிவாக அத்வைத நிலைதான் ஆத்மஸாக்ஷாத்காரம் என்று சொல்லியிருக்கிறது. த்வைதம் என்பதை இப்படி முடிந்த நிலையாகவா நிர்த்தாரணம் பண்ணியிருக்கிறது? இல்லை. ‘த்வைதம்’ என்ற வார்த்தை பிருஹதாரண்யகத்தில் வருகிறது. “த்வைதம்” போல எந்த நிலை இருக்கிறதோ, அந்த நிலையில்தான் ஒருத்தன் இன்னொன்றை முகர்கிறான், இன்னொன்றைப் பார்க்கிறான், இன்னொன்றை அறிகிறான். எந்த நிலையில் (த்வைதம் போய்) எல்லாம் ஆத்மாவாகவே விளங்குமோ அப்போது எதனால் எதை முகர்வான், பார்ப்பான், அறிவான்? எதனால் இது எல்லாம் அறியப்படுகிறதோ அதை எதைக் கொண்டு அறிய முடியும்? என்று வருகிறது (II.4.14; IV.5.15). இதிலிருந்து ‘எல்லாவற்றையும் அறிகிற ஆத்மாவை த்வைதமாக இருந்துகொண்டு அறியவே முடியாது. அத்வைதமான அப்படிப்பட்ட நிலையைத்தான் அடைய வேண்டும்’ என்றே உபநிஷத் சொல்கிறது என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. த்வைதத்தை அது நிர்த்தாரணம் பண்ண‌வில்லை (நிலை நாட்டவில்லை). விவகாரத்தில் [நடைமுறையில்] எல்லாம் பேதப்பட்டு த்வைதமாகத் தெரிந்தாலும், இந்த விவகாரம் நிஜமில்லை என்பதால்தான், “எங்கே த்வைதம் போல இருக்கிறதோ”: “யத்ர ஹி த்வைதம் இவ பவதி” என்று சொல்கிறது. த்வைதமாகவே இருந்தால் தான் அது நிஜம். த்வைதம் போல இருக்கிறது என்றால் அது நிஜமில்லை; வேறு நிஜமான ஒன்றுதான் இது போலத் தெரிகிறது என்றே அர்த்தமாகும். த்வைதத்துக்கு வேறான ஒன்று என்றால் அது அத்வைதம்தான். அதனால், அத்வைதம்தான் நிஜமென்றாகிறது. இதை ஒட்டியே “யத்ர வா ஸர்வம் ஆத்மா ஏவ அபூத்” அதாவது “எப்பொழுது எல்லாம் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ” என்றும் அத்வைதத்தை ஸந்தேஹமறச் சொல்லியிருக்கிறது. ‘த்வைதத்தைப் போல’ என்று சொல்லப்பட்டாலும் ‘ஆத்மாவைப் போல’ என்றில்லை! ‘போல’ என்ற இடத்தில் த்வைதமும், ‘ஆத்மாகவே ஆகிவிட்டதோ’ என்ற இடத்தில் அத்வைதமும் சொல்லப்படுகிறது. ‘ஏவ’ என்று ஒரு பதம் அத்வைதமான ஆத்மாவைச் சொல்லுமிடத்தில் இருக்கிறது. ஒரு பதத்துக்குப் பிறகு ‘ஏவ’ வந்தால் அதற்கு மேலே முடிவாக வேறொன்று சொல்வதற்கில்லை என்று கொள்ள வேண்டும். ஆத்மா ‘ஏவ’ என்ற இடத்தில், ‘எல்லாம் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ’ என்று சொல்லப்படுகிறது. ‘ஆத்மாவாக’ என்று மட்டும் சொல்லாமல் ‘ஆத்மாவாகவே’ என்பதனால் முடிவு ஆத்மஸ்வரூபமே என்று தெரிந்து கொள்ள வேண்டும். “போல” என்றால் தோற்றமே யொழிய ஸத்யமில்லை. “அவனைப்போல” என்றால் அவன் இல்லை என்று தெரிகிறது. ஆகவே “த்வைதம் போல” என்றால் ‘த்வைதம் இல்லை’ என்பதுதான் ஸித்தாந்தம். நம்முடைய கண்ணுக்குத் தோன்றுகிறது த்வைதம். அது வெறும் தோற்றம். சாஸ்திரத்தைக் கொண்டு தெரிந்து கொள்வது அத்வைதம். அதுதான் ஸித்தாந்தம். ‘ஸர்வம் ஆத்மைவ’ என்பதே ஸத்யம்.

‘இங்கே ஆத்மா என்றிருக்கிறதே, பரமாத்மா என்றல்லவா இருக்கவேண்டும்?’ என்று கேட்கலாம். பரமாத்மா என்றால் அல்பாத்மா வேறு இருக்க வேண்டும். அப்படி ஒன்று இல்லை. ஆதலினால் பரமாத்மாவும் இல்லை. எல்லாம் ஒரே ஆத்மாதான். த்வைத நிலையில்தான் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டாகச் சொல்வது. அத்வைதமாக மாறினால் ஒரே ஆத்மாதான்.

மோக்ஷம் என்பது பயமில்லாத இடம். அது பயமுள்ள இடமானால் அங்கே போவதற்கு நாம் பாடுபட வேண்டியதேயில்லை. அத்வைதிகளைத் தவிர மற்றவர்களுக்கு மோக்ஷத்திலும் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு (த்வைதம்) உண்டு. இரண்டில்லாமல் ஆவதை அவர்கள் சொல்வதில்லை.

உபநிஷத் என்ன சொல்கிறது? த்வைதம் இருந்தால் அங்கே பயம் இருக்கத்தான் செய்கிறது என்கிறது1. ‘பரம் பொருளில் ஒருவன் கொஞ்சம் பேதத்தை (த்வைதத்தை) கல்பித்துவிட்டாலும், உடனே பயத்துக்கு இடம் ஏற்பட்டுவிடுகிறது’ என்று சொல்கிறது. ‘த்வைதத்தால் பயமும் துக்கமும் உபத்ரவமும் உண்டாகின்றன’ என்று பல இடங்களில் உபநிஷத்துக்கள் சொல்கின்றன. இரண்டு வித்யாஸமான வஸ்துக்கள் இருந்தால்தான் ஆசை, பயம், துக்கம் முதலியவை உண்டாகின்றன.

நமக்குப் பிரியமானவர்கள் இறந்துபோனால் துக்கம் உண்டாகிறது. நாமே போனால் துக்கமிருக்காதே என்று நினைக்கிறோம். நாம் போவதில் நமக்கு துக்கம் கிடையாது. ஆகையால் எல்லாரும் நாமாக இருந்துவிட்டால் துக்கமே இல்லை. துக்கம் தோன்றினால் பேத நினைவு இருக்கிறது. பிரியம் எதனால் உண்டாகிறது? இரண்டு என்னும் நினைவில்தான். நமக்கு இன்னொன்றாக இருப்பதிலேதான் பயமும், ப்ரியமும், துக்கமும் உண்டாகின்றன. பகவானே இப்படி வேறாக இருந்தாலும் இவை உண்டாகும். ஆகவே அவரே நாமாகி விட்டால்தான், துக்கமே இல்லை, பயமே இல்லை, ஆசை த்வேஷங்களுக்கும் இடம் இல்லை. மோக்ஷத்தில் அப்படி இரண்டற்று ஆகிவிட்டால்தான் அது நிஜமான விடுதலை.

ஆகையினால்தான் இரண்டாவது வேண்டாம், அத்வைதந்தான் ஸத்யமென்று வேதாந்தம் முறையிடுகிறது. இந்த விஷயத்தை நம் ஆசார்யாள் தீபம்போல் எடுத்துக்காட்டி, ‘மறவாதீர்கள்’ என்று விளக்கியிருக்கிறார். “பாஷ்ய தீபம்” என்று பாஷ்யத்துக்குப் பெயர்.

வேதத்தில் ‘த்வைதம்’ என்று வந்திருக்கிறது என்றவுடன், ‘த்வைதம்’ தான் வேத முடிவு என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அது எந்த இட‌த்தில், எதற்காக, எந்த முடிவுக்கு முன்பு சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆலோசிப்பதில்லை.

மோக்ஷத்திலும் ஸ்வாமி வேறு, ஜீவன் வேறு என்று இருந்தால், “எவன் தனக்கு அந்நியமாக தேவதையை உபாஸிக்கிறானோ அவன் பசுப் பிராயமானவன்” என்று உபநிஷத்தில் சொன்ன நிலையே2 மோக்ஷத்திலும் நீடிக்கிற‌து என்றுதான் அர்த்தம்! மோக்ஷத்திலும் பகவான், பக்தன் என்ற பேதமுண்டு என்கிற சைவர்களும், வைஷ்ணவர்களும் இதற்கு வேறுவிதமாக அர்த்தம் பண்ணுவார்கள். ‘அந்யாம் தேவதாம் உபாஸ்தே’ என்று மூலத்தில் இருப்பதற்கு ‘தனக்கு அந்நியமாக தேவதையை உபாஸிக்கிறவன்’ என்று பொருள் கொள்ளாமல், ‘சிவன் அல்லது விஷ்ணு என்ற தேவதைக்கு அந்நியமாக ஒன்றை எவன் உபாஸிக்கிறானோ அவன் பசுவுக்கு ஸ‌மானம்’ என்று அர்த்தம் சொல்வார்கள். சிவன்தான் பரதெய்வம், அல்லது விஷ்ணுதான் பரதெய்வம் என்கிற அபிப்பிராயத்தின் பேரில், மற்ற தேவதைகளின் உபாஸனையை இப்படிக் கண்டனம் செய்து தங்கள் தேவதைகளின் உபாஸனையை மோக்ஷ உபாயம் என்று சொல்வார்கள். “அந்யாம் தேவதாம்” என்றால் ஒரு தேவதைக்கு அன்னியமான இன்னொரு தேவதை என்று அர்த்தம் ஏற்படத்தானே செய்கிறது? இதை எப்படித் தப்பு என்று சொல்லலாம்?” என்று கேட்கலாம். ஆனால் மந்திரத்தில், “அந்யாம் தேவதாம் உபாஸ்தே” என்றவுடனேயே, மேலே இன்னம் விளக்கமாக, அந்யோஸெள அந்யோஹம் அஸ்மீதி (அந்ய: அஸெள அந்ய: அஹம் அஸ்மி இதி) என்று வருகிறது — அதாவது ‘இந்த தேவதை வேறு; நான் வேறு; நாங்கள் ஒருவருக்கொருவர் அன்னியமானவர்கள்’ என்ற எண்ணத்தோடு எவன் உபாஸிக்கிறானோ (அவன் பசுவுக்கு ஸமானம்) என்று ஸ்பஷ்டமாக வருகிறது. ஒரு தேவதைக்கு அன்னியமாக இன்னொரு தேவதையை உபாஸிப்பதைப்பற்றி இல்லை, உபாஸகனான தனக்கு அன்னியமாகவே தேவதை இருப்பதாக நினைத்து உபாஸிப்பதைத்தான் பசுத்தனம் என்று சொல்லியிருக்கிறது. அதனால் இங்கேயும் அத்வைத மோக்ஷம்தான் குறிக்கப்படுகிறது. இங்கே பகவான், பக்தன் என்ற பேதமில்லை. தேவதை, அதன் உபாஸகன் என்ற பேதம் இல்லை.

முக்கியமாக‌ நம் மதம் சைவம், வைஷ்ணவம் என்றுதான் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. சிவன்தான் உசத்தி, விஷ்ணுதான் உசத்தி என்று இந்த இரண்டு சம்பிரதாயக்காரர்களும் நீண்ட காலமாகச் சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், பிரம்மத்துக்கும், ஜீவனுக்கும் பேதம் சொல்லாத நம் ஆசார்யாள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பேதம் சொல்வாரா? சொல்லவே மாட்டார். ஸகல தேவதைகளும் அவருக்குப் பரமாத்ம ஸ்வரூபந்தான். ஆனால் மற்ற ஸித்தாந்திகள் எல்லோரும் பேதம் சொல்கிறவர்கள்தான். சில பேர் சிவன்தான் [பரமாத்மா] என்பார்கள்; சிலர் விஷ்ணுதான் பரமாத்மா என்பார்கள். இந்த விஷயத்தில் உபநிஷத் என்ன சொல்கிறது என்று பார்த்தால், இங்கேயும் நம் ஆசார்யாளின் அபிப்பிராயந்தான் உபநிஷத்தின் அபிப்பிராயம் என்று தெரிகிறது. அதாவது உபநிஷத் அபிப்பிராயத்தையேதான் ஆதி சங்கரர் சொன்னார் என்று தெரிகிறது.

நம் மதத்துக்கு ஆதாரமான வேதங்களுக்கு அந்தமாக இருக்கப்பட்ட முக்கியமான பத்து உபநிஷத்துக்களில் சிவ-விஷ்ணு ஏற்றத் தாழ்வுகள் எங்குமே சொல்லியிருக்கவில்லை. அவற்றில் ஒரே ஒரு இடத்தில்தான் “விஷ்ணு” என்ற சொல்லே வருகிறது. அதே போல் “சிவ” என்ற சப்தமும் ஒரு தரம்தான் வருகிறது. மாண்டூக்ய உபநிஷத் முடிவில், மூன்று ஸ்திதிகளைக் கடந்த துரீயமான அத்வைத நிலை சிவமாக இருக்கிறது என்று வருகிறது. ஆகவே இங்கே சொன்னது ‘சிவம்’ என்கிற பரம மங்களமான பரமாத்ம தத்வமே தவிர ‘சிவன்’ என்கிற மூர்த்தியில்லை. கடோபநிஷத்தில் 3 ஜீவனானவன் விவேகமுள்ள புத்தி என்கிற ஸாரதியைக் கொண்டு நன்றாக அடக்கப்பட்ட மனஸ் என்ற கடிவாளத்தால், இந்திரியக் குதிரைகளைக் கட்டுப்படுத்தி நடத்தி, ஸம்ஸாரத்தைக் கடந்து மோக்ஷ எல்லைக்குச் செல்கிறான் என்று சொல்லி, அதுவே விஷ்ணுவான பரமபதம் என்று சொல்லியிருக்கிறது. தத் விஷ்ணோ: பரமம் பதம் என்று இருக்கிறது. இதே வார்த்தை ஸம்ஹிதையிலும் வருகிறது – ஸூரிகள் எனப்படும் ஞானிகள் விஷ்ணுவான பரமபதத்தை ஸதா காலமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வருகிறது 4. வைஷ்ணவர்கள் “தத் விஷ்ணோ: பரமம் பதம்” என்பதற்கு அர்த்தம் செய்யும்போது விஷ்ணுவை சங்க சக்ர கதா பாணியான மூர்த்தியாகச் சொல்லி, அவர் இருக்கிற வைகுண்டலோகமே பரமபதம் என்கிற மோக்ஷம் என்று இங்கே உபநிஷத்தில் நிலை நாட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். “விஷ்ணுவுடைய பரமபதம்” என்பது அவர்களுடைய பாஷ்யம். “விஷ்ணுவாகிய பரமபதம்” என்பது அத்வைதிகளுடைய பாஷ்யம். அத்வைதிகள் சொல்வது போல் அர்த்தம் செய்யாவிட்டால், ஞானிகள் விஷ்ணு இருக்கிற ஒரு இடத்தைத்தான் பார்க்கிறார்கள், விஷ்ணுவையே பார்க்கவில்லை என்று ஆகும். அப்படிச் சொல்வது ஞானிகளைக் குறைத்துச் சொல்வதாகும். விஷ்ணுவைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். பார்ப்பது என்றால் அநுபவிப்பது, தன்னில் தானாக அநுபவிப்பது என்றே அர்த்தம்.

உள்ள அனைத்தையும் எவன் தன் ஆத்மாவுக்குள்ளேயே இருப்பதாகப் பார்க்கிறானோ (‘அநுபச்யதி’), அனைத்துக்குள்ளும் தன் ஆத்மாவே இருப்பதாகப் பார்க்கிறானோ (‘அநுபச்யதி’) அவனுக்குத்தான் எதனிடமும் வெறுப்பில்லை. அவனுக்கு மோஹமும் இல்லை, சோகமும் இல்லை’ என்று ஈசாவாஸ்ய உபநிஷத்தில் அத்வைத திருஷ்டியைச் சொல்கிறபோது, ‘அநுபவிக்கிறான்’ என்ற அர்த்தத்தில்தான் “பச்யதி” (பார்க்கிறான்) என்ற வார்த்தை வந்திருக்கிறது. அத்வைத திருஷ்டி என்று இப்போது நான் சொன்னதில்கூட, திருஷ்டி (பார்வை) என்பது அநுபவத்தைத்தானே சொல்கிறது? இதே போலத்தான் “விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி” என்றால் விஷ்ணுவான பரமபதத்தை (பிரம்மத்தை) எப்போதும் அநுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சரியாகப் பொருள் கொள்ளவேண்டும்.

வேறாகப் பார்த்தால் பயம் உண்டாகிவிடும் என்று உபநிஷத்திலேயே இருக்கிறதே! எனவே வேறாக இன்றி இப்படித் தானாக ஆகி விஷ்ணுவை அநுபவிப்பது என்றால், விஷ்ணு என்பது மாண்டூக்யத்தில் சொன்ன சிவம் மாதிரி ஒரு மூர்த்தியாக இல்லாமல் பரமாத்ம தத்வமாகத்தான் இருக்கவேண்டும். அதனால்தான் விஷ்ணுவைப் “பரமம் பதம்” என்று சொல்லியிருக்கிறது. “பரமம் பதம்” என்றால், ‘மிகவும் உத்தமமான ஸ்தானம்’ என்று ஆசார்யாள் பாஷ்யம் செய்திருக்கிறார். ஆத்மா தன்னைத் தானே உணர்ந்து கொள்வதுதான் பரமோத்தம ஸ்தானம். அது ஒரு இடமில்லை. ஒரு இடம் என்றால், மற்ற இடங்களில் அது இல்லை என்றல்லவா ஆகிவிடும்? அது ஸர்வ வியாபகமானது. ‘விஷ்ணு’ என்ற வார்த்தைக்கு root meaning-ஏ ‘எங்கும் வியாபிப்பது’ என்பதுதான். ‘வ்யாபன சீலம்’ என்றே இங்கு ஆசார்ய பாஷ்யத்தில் இருக்கிறது. எங்கேயும் வியாபித்தது என்றால் கை கால் உள்ள மூர்த்தியாக இருக்கமுடியாது; பரம்பொருள் என்ற ஸத்ய தத்வமாகத்தான் இருக்கவேண்டும்.

இப்படியாக உபநிஷத்துக்களில் சிவ, விஷ்ணு என்ற இரண்டும் ஒரே ஸத்ய வஸ்துவைத்தான் சொல்கின்றன, ஆக, ஜீவனும் பிரம்மமும் ஒன்றென்பது; ஜகத்து மாயை என்பது; சிவன், விஷ்ணு என்ற இரண்டில் ஏதோ ஒன்றுதான் பரமாத்மா என்று பேதம் சொல்லாமலிருப்பது – என்றிப்படி நம் சங்கர பகவத் பாதர்கள் சொல்லியிருக்கிற முடிவுகள்தான் வேதாந்தத்தின் முடிவும் என்று தெரிகிறது. 5


1.தைத்திரீயம் II.7; ப்ருஹதாரண்யகம், I.4.2

2. ப்ருஹதாரண்யகம், I.4.10

3. III.9

4. ரிக்வேதம் I.22.20

5. வேதாந்தமெனப்படும் இவ்வுபநிஷதக் கருத்துக்களை, “வேத மதம்” என்ற பிரிவிலுள்ள “வேதம்” என்ற உரையில் வரும் “உபநிஷதங்கள்“, “வேதமும், வேதாந்தமும் முரணானவையா?“, “தசோபநிஷத்திக்கள்“, “வேதங்களின் முக்ய தாத்பரியம் என்ன?” என்ற பகுதிகளிலும் பார்க்க.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s