நம் அறியாமை

உலகத்தில் புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு மதத்தினரும் ஏதாவது ஒரு புஸ்தகத்தைத்தான் நிரம்பவும் கெளரவமாக வைத்திருக்கிறார்கள். எல்லாம் புஸ்தகங்களேயானாலும், ஒரு புஸ்தகத்தை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். அதில்தான் ஜன்மம் கடைத்தேறும் வழிகள் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். அந்தப் புஸ்தகத்துக்குப் பூஜை செய்கிறார்கள்; நமஸ்காரம் செய்கிறார்கள். சில மதஸ்தர்கள் அந்தப் புஸ்தகத்திற்கே தனியாகக் கோயில்கட்டி வணங்குகிறார்கள். ஸீக்கியர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். அவர்களுடைய மதப் புஸ்தகத்தை அவர்கள் “கிரந்த ஸாஹேப்” என்று மரியாதையாகச் சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் தங்கள் ஆத்ம க்ஷேமத்திற்கு வேண்டிய மார்க்கங்களைச் சொல்லும் ஒவ்வொரு புஸ்தகத்தைப் பெற்றிருக்கிறார்கள். இவை எல்லாம் ஒரு மதஸ்தாபகரின் பெயரில் இருந்தாலும், வாஸ்தவத்தில் பரமாத்மாவின் வாக்கேதான், பகவானின் ஆக்ஞைதான் அந்தந்த மதஸ்தாபகர் வழியாக வந்தது என்கிறார்கள். இதனால் இவற்றை Revealed Text என்கிறார்கள். இதையே நாமும் “அபெளருஷேயம்” என்கிறோம். புருஷர்கள் (மனிதர்கள்) தாமே செய்வது பெளருஷேயம். இப்படியில்லாமல் பரமாத்மாவே மனிதனைக் கருவி மாத்திரமாகக் கொண்டு வெளியிடுவது அபெளருஷேயம்.

சரி, நம்முடைய வைதிக மதத்திற்கு ஆதாரமாக எந்தப் புஸ்தகம் இருக்கிறது? மற்ற மதஸ்தர்களை ‘உங்கள் மதப்புஸ்தகம் எது?’ என்று கேட்டால் அவர்களுக்கு சந்தேகமில்லாமல், இன்னது என்று தெரியும். கிறிஸ்தவர்கள் பைபிள் என்பார்கள். முஹம்மதியர்கள் குரான் என்பார்கள். பெளத்தர்கள் த்ரிபிடகம் என்பார்கள். பார்ஸியர் ஜெண்டவஸ்தா என்பார்கள். நம்மைக் கேட்டால் – இந்த காலத்தில் சைவர், வைஷ்ணவர், த்வைதி, அத்வைதி இன்னும் நம் தேசத்திலிருக்கப்பட்ட பல ஸம்பிரதாயத்தினருக்கும் பொதுவாக எந்த மதப்புஸ்தகம் இருக்கிறதென்றால் – எல்லோரும் சேர்ந்து எந்த ஒன்றைச் சொல்லலாம் என்பதே தெரியாமல் விழிக்கிறோம்! இதற்கு என்ன காரணம்?

முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. மற்ற ஜனங்களுக்கு எந்த மதத்தில் ஜனனம் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த மதத்தைப் பற்றிப் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். அல்லது மதப் படிப்பை முதலில் இரண்டு அல்லது மூன்று வருஷங்கள் படித்துவிட்டு அப்புறம் லெளகிகப் படிப்பைப் படிக்கிறார்கள். அதனால் சிறு பிராயத்திலேயே அவர்களுக்கு மதத்தைப் பற்றிய ஞானம் ஏற்பட்டு விடுகிறது. நம்முடைய மதத்தில் மதத்தைப்பற்றிப் படிப்பதே கிடையாது. அப்படி படிக்காததனால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கிறது? வேறு எந்த மதத்துக்காவது ஆள் வேண்டுமானால் நம்முடைய மதத்திலிருந்து பிடித்துக் கொண்டு போகிறார்கள். மற்ற மதஸ்தர்கள் தங்கள் மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு போவதில்லை. காரணம் பால்யத்திலிருந்தே மத சாஸ்திரங்களை அவர்கள் படிக்கிறார்கள். அதனால் அதனிடம் பற்று ஏற்படுகிறது. நாமோ பால்யத்தில் கொஞ்சம்கூட எட்டிப் பார்ப்பது இல்லை. என்ன வாசித்தாலும் ஏறாத வயதில் நாம் வாசிக்கிறோம். நம்முடைய மதப்புஸ்தகங்களை நாமே தூஷிக்கிறோம், அழிக்கிறோம்.

நம் படிப்பெல்லாம் வெள்ளைக்கார முறையில் உள்ள படிப்பு. பேச்சு, டிரஸ், நடவடிக்கை எல்லாமே வெள்ளைக்காரர்களைப் போல இருக்க வேண்டுமென்பதுதான் நம் ஆசை. சுதந்திரம் வந்த பிறகும் இப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறோம். முன்னைவிட அதிகமாக வெள்ளைக்கார நாகரிகத்தையே நம் வாழ்முறையாக்கிக் கொண்டிருக்கிறோம். ஸ்வதேசியம், பாரத நாகரிகம், நம்முடைய தனிப்பண்பாடு என்று பேசுவதில் மட்டும் குறைவில்லை. உள்ளே பரதேசியாக இருந்துகொண்டு வெளியில் சுதேசிப் பேச்சுப் பேசி என்ன பிரயோஜனம்? உள்ளும் புறமும் சுதேசியமாக இருப்பதென்றால், நம் தேசத்துக்கு முதுகெலும்பாக அநாதிகாலம் தொட்டு இருந்து வருகிற மதவிஷயங்களை பால்யத்திலேயே சொல்லிக் கொடுத்தால்தான் அது ஸாத்யமாகும். ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் [மதச்சார்பற்ற ராஜாங்கத்தில்] இதற்கு வழி பண்ணித் தரமுடியவில்லை! அதனால் பழைய வெள்ளைக்காரப் படிப்பே தொடர்ந்து வந்திருக்கிறது. அதில் சொல்லிக் கொடுப்பதெல்லாம் நம்முடைய சாஸ்திரங்கள் ‘ஸூப்பர்ஸ்டிஷன்’ (மூட நம்பிக்கை) என்பதுதான்! இதனால், “நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகம் என்ன? ஹிந்துக்கள் என்ற பெயருள்ள ஸகலருக்கும் பொதுவாக என்ன இருக்கிறது?” என்று கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாத நிலையில் இருக்கிறோம்.

விஷயம் தெரியாதவர்கள் மட்டந் தட்டினாலும், இதர தேசங்களிலுள்ள விஷயம் தெரிந்தவர்களும் ஆத்ம ஸாதகர்களும் நமது ஆத்ம வித்யையை (லெளகிகம் என்று தோன்றுகிற வித்யைகள்கூட நம் தேசத்தில் ஆத்மாபிவிருத்திக்கே ஸாதனமாக இருப்பதால் நம்முடைய அரசியல் சாஸ்திரம், எகனாமிக்ஸ், நாட்டிய சாஸ்திரம் உள்பட எல்லாம் ஆத்மவித்யை தான்) பாராட்டுகிறார்கள். தேடித் தேடி எடுத்துக் கொண்டு தர்ஜுமா (ட்ரான்ஸ்லேட்) பண்ணி வைத்துக் கொள்கிறார்கள். எனவே லோகத்தில் நமக்கு ஒரு கெளரவம் வேண்டுமானால், அது எதனால் நமக்குத் தன்னால் பிறரது மரியாதை கிடைக்கிறதோ அந்த சாஸ்திரங்களில் நம் அறிவை விருத்தி பண்ணிக் கொள்வதால்தான் ஏற்படும். ஸயன்ஸிலும் டெக்னாலஜியிலும் மற்றவர்களுக்கு மேல் நாம் பண்ணிக் கெளரவம் பெறமுடியாது. அப்படியே இரண்டொருத்தர் நம்மில் நோபல் பிரைஸ் வாங்கினாலும், இதனால் நாம் பூரிக்கலாமே தவிர லோகம் பூரிக்காது. “ஸயன்ஸும் டெக்னாலஜியும் நிறைவு தரவில்லை என்று நாம் ஹிந்துக்களிடம் போனால், அவர்கள் ஃபிலாஸஃபியை விட்டு விட்டு இதில் வந்து விழுந்திருக்கிறார்களே!” என்றுதான் நினைக்கிறார்கள். இந்தியாவில்தான், மற்ற அத்தனை தேசங்களின் மஹான்களைக் கூட்டினாலும், அதைவிட ஜாஸ்தியான மஹான்கள் தோன்றி ஆத்மானந்தத்தை அடைந்திருக்கிறாரகள் என்பதுதான் நம் பெருமை. அதற்கு ஆதாரமாக அவர்கள் கொடுத்துப் போயிருக்கிற சாஸ்திரங்களை நாம் தெரிந்து கொள்ளாமலிருப்பது ரொம்பக் குறைவான காரியம்.

நமக்கு ஆதாரமான மதப் புஸ்தகத்தின் பேரே தெரியவில்லை. “தெரியாததால் என்ன மோசம்? தெரிந்து கொள்வதால் என்ன லாபம்?” என்றுகூடக் கேட்கிறோம்.

பாரத நாகரிகம் என்று லோகம் பூராவும் கொண்டாடுகிற பெரிய ஸம்பிரதாயத்தின் வாரிசுகளாக வந்திருக்கிற நாம் இப்படி இருக்கலாமா? “நம் பண்பாடு என்னவானால் என்ன? பணம் தான் பெரிசு” என்று கண்டம் கண்டமாகப் பறந்து கொண்டிருக்கலாமா? இப்படி மற்ற தேசங்களுக்குப் போனவர்கள் பல பேர் என்னிடம் வருகிறார்கள். “நாங்கள் போயிருக்கிற தேசங்களில் உள்ளவர்கள் எங்களிடம் நம் மதத்தைப் பற்றி கேட்கிறார்கள். வேதத்தைப் பற்றி, உபநிஷத்தைப் பற்றி, கீதையைப் பற்றி, யோகத்தைப் பற்றி, கோயில்களைப் பற்றி, புராணங்களைப் பற்றி, இன்னம் இப்படி நம் மதத்திலுள்ள அநேக தத்வங்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்கிறார்கள். எங்களுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த அளவுகூட நம் மதத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. ரொம்பவும் அவமானமாக இருக்கிறது. அதனால் நீங்களாவது சுருக்கமாக நம் மத ஸித்தாந்தங்களை, தத்வங்களைப் புஸ்தகமாகப் போட்டுக் கொடுங்களேன்!” என்று கேட்டுக் கொள்கிறார்கள். அதாவது விதேசியமாக இருப்பதுதான் நமக்குப் பெருமை என்று நாம் நினைத்தாலும், அந்த விதேசிகள் நாம் இப்படியிருப்பதைப் பார்த்து மட்டமாகத் தான் நினைக்கிறார்கள். லோகத்துக்கெல்லாம் பழமையான ஒரு நாகரிகத்தவர்களுக்கு அதனிடம் பற்று போய்விட்டதே என்ற நம்மைப்பற்றிக் குறைவாகத்தான் மற்றவர்கள் நினைக்கிறார்கள்.

நாம் எதையுமே படிக்காமல், எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. ஏதோ அறிவு போதாத ஜனங்கள் என்று வைத்து விடுவார்கள். ஆனால் இப்போது நாம் படிப்பதும், பேசுவதும், எழுதுவதும் கொஞ்சநஞ்சமல்ல. அத்தனையும் ஸயன்ஸ், டெக்னாலஜி, அரசியல், வேறு தினுசான ஆராய்ச்சிகள், ஸினிமா, கண்ட கண்ட நாவல் என்று இப்படித்தான் இருக்கின்றன. அறிவு இல்லாத ஜனங்களாக இல்லாமல், நிறைய புத்தியைச் செலவழித்து நாம் இத்தனை படித்த போதிலும், எழுதிய போதிலும், நம் தேசத்துக்கே விசேஷமாயுள்ள அத்யாத்ம சாஸ்திரங்களைப் புறக்கணிக்கிறோம் என்பதாலேயே நம்மைப் பிற தேசத்தார் மிகவும் குறைவாக நினைக்கிறார்கள்.

ஏராள நூல்கள் நம் மத விஷயமாக உள்ளன. நமக்கு அதெல்லாம் வேண்டியிருக்கவில்லை. நாமும் நிறைய படிக்கிறோம். ஆனால் எல்லாம் தேசாந்தர புஸ்தகங்கள்தான். மில்டன், வேர்ட்ஸ்வொர்த் எழுதினதெல்லாம் நமக்குத் தெரியும். பவபூதி என்ன எழுதினார், ஒட்டக்கூத்தர் என்ன எழுதினார் என்றால் தெரியாது. லூயி டைனாஸ்டி, ஃஜார் டைனாஸ்டி நமக்குத் தெரியும்; ஸூர்ய வம்சம், சந்திர வம்சம் தெரியாது. ஏன், நம் கோத்ர ரிஷிகள் பேரே தெரியாது! நமக்கு ஸம்பந்தமில்லாதவை கட்டுக்கட்டாகத் தெரியும். ஆனால், எதைக் கண்டு லோகம் பிரமிக்கிறதோ, அதற்கு ஆதாரமான நம் சாஸ்திரங்களின் பேர்கூடத் தெரியாது. சாஸ்திரக்ஞர்கள் சொல்ல வந்தாலும், நாம் காது கொடுத்துக் கேட்பதில்லை. அசட்டை செய்கிறோம். நம் தேசம் இப்படியொரு ஹீன ஸ்திதியில் இருக்கிறதே என்று ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

‘நம் பண்பாட்டைப் பற்றித் தெரிந்து கொண்டால் பணம் வருமா?’ என்று நாம் கேட்டுக் கொண்டிருப்பதால் இப்படி ஆகியிருக்கிறது. வாஸ்தவத்தில் நாம் பணம் சம்பாதிப்பது, வாழ்க்கை நடத்துவது முதலான ஸகல விஷயங்களும் அந்தப் பண்பாட்டை நாம் பூரணமாகத் தெரிந்துகொண்டு, அநுஷ்டித்து, நிறைவு பெறவேண்டும் என்பதற்குத்தான்! என்ன காரணத்துக்காக நம் மதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தப்பான கேள்வி. அதற்கு காரணம், பிரதி பிரயோஜனம் எதிர்பார்ப்பது முழுப் பிசகு. நாம் செய்கிற எல்லாக் காரியங்களுக்கும் பிரயோஜனமாக இருப்பதுதான் மதமே தவிர, இதனால் வேறு பிரயோஜனம் வேண்டும் என்பதில்லை. மதாநுஷ்டானத்தால்தான் எல்லாவற்றையும்விட மிகப் பிரயோஜனமான சாந்தமும், பிரேமையும், மோக்ஷமும் கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு, அதனால் பணம் வருமா, வசதி கிடைக்குமா என்று மட்டும் பார்த்து, ‘என்ன பிரயோஜனம்?’ என்கிறோம். பற்று, பிரேமை இருந்துவிட்டால் இப்படி பிரதிப் பிரயோஜனம் எதிர்பார்க்கும் எண்ணமே எழாது. எதற்கு இது காரணமாக இருந்தால் நாம் இதை விரும்புவோமோ, அந்தப் பணம், வசதி முதலானவற்றையெல்லாம் இதற்கு காரணமாக வைத்துக் கொண்டு விடுவோம்.

சாஸ்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ப்ராஹ்மேணன நிஷ்காரணோ தர்ம: ஷடங்கோ வேத அத்யேயோ ஜ்ஞேயச்ச என்று இருக்கிறது1. அதாவது, பிராம்மணனானவன் ஒரு காரணமும் இல்லாமலே வேதங்களையும், சாஸ்திரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. சின்ன வயதில்தான் இப்படிக் காரணம் கேட்காமல், பிரயோஜனத்தை எதிர்பார்க்காமல் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்ளத் தோன்றும். ‘சரித்திரம் எதற்குப் படிக்கிறோம்? பூகோளம் எதற்குப் படிக்கிறோம்?’ என்று கேட்காமலே ஒரு குழந்தை ஸ்கூலில் படிக்கிறபோதே, நம் மதக் கிரந்தங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிற்பாடு காலேஜுக்குப் போகிறபோது இவன் ஒரு உத்தேசத்தை, பிரயோஜனத்தை நினைத்துத்தான் படிக்கிறான். வக்கீலாக வேண்டும் என்றுதான் பி.எல் படிக்கிறான்; வாத்தியாராக வேண்டும் என்றுதான் எல்.டி. படிக்கிறான்; டாக்டராக வேண்டுமென்றுதான் எம்.பி.,பி.எஸ் படிக்கிறான். லெளகிகமான பிரயோஜனத்தில் இப்போது ஆசை வந்துவிட்டது. அதனால் “மதப் புஸ்தகத்தை தெரிந்து கொண்டு என்ன ஆக வேண்டும்? தெரிந்து கொள்வதால் என்ன லாபம்?” என்றுதான் கேட்பான். அதனால் இந்தக் கேள்வி முளைப்பதற்கு முன்பே, பால்யத்திலேயே இந்த விஷயங்களை ஆரம்பித்து விடவேண்டும். அப்போது தானே பற்று ஏற்பட்டுவிடும். அப்புறமும் விடமாட்டான். பணம் காசைக் கொடுக்காவிட்டாலும் Sports-‍ல் (விளையாட்டில்) ஆசை உண்டாகிற மாதிரி, ஸங்கீதத்திலோ ஸினிமாவிலோ ஆசை உண்டாகிற மாதிரி, மதவிஷயத்திலும் ஏற்பட்டுவிடும். தாற்காலிகமான இன்பத்தைக் கொடுக்கிற விளையாட்டு, விநோதங்களிலேயே இப்படி பிரதிப் பிரயோஜனம் எதிர்பார்க்காத பற்று உண்டாகிறது என்றால், சாச்வத செளக்யத்தைக் கொடுக்கக் கூடியதான மதவிஷயத்தில் உண்டாகாமல் போகாது. ஆதாரக் கல்வி (Basic Education)யை நாம் சரியாக அமைத்துத் தராததில்தான் தோஷம் இத்தனையும் இருக்கிறது.

‘மதத்தை பற்றித் தெரிந்துகொண்டால் அது சோறு போடுமா?’ என்று கேள்வி கேட்கிற நிலைமை இன்று இருப்பது ரொம்ப அவமானம். ‘அத்யயனம் [வேதப்பயிற்சி] சாப்பாடு போடுமா என்று கேட்காதே! நாம் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதும் அத்யயனம் பண்ணத்தான் என்று ஆக்கிக் கொள்ளு’ என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. காரணம் கேட்காமல் சாஸ்திரங்களைத் தெரிந்துகொள் என்கிறது.

இப்படிக் காரணம் கேட்காமல் படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிற மதத்தில் குழந்தை பிறந்தவுடன் நம்முடைய வித்தையை அறிய முடியாமல் கத்தரித்துவிடுகிறோம்! லெளகிக வித்தையை எடுத்தவுடன் வாசிக்கச் செய்கிறோம். பால்யப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆஸ்திக புத்தி வரும்படி நாம் பழக்கலாம். இந்த விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் குழந்தைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்வதாயிருந்தால் டாம்பீக அம்சங்களுக்காக நூற்றுக் கணக்கில் செலவழிக்கிறார். அந்தச் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட காரியத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரியாக உருவாக்கினால் நம்முடைய மதநம்பிக்கை போகாது. உபநயன வைபவத்தின் செலவைவிட உபநயன லக்ஷ்யத்திற்காகச் செலவு செய்வது விசேஷம். இந்த விஷயங்களில் பிரைவேட் டியூஷன் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லி வைக்கவேண்டும். அந்த விஷயங்களை அறிந்த வாத்தியார் மட்டும் ஏன் ஒருவித லாபமும் இன்றி இருக்க வேண்டும்? அவருக்கும் உபயோகமாக இருக்கும். மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேஹமே வராது. நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகமே இன்னதென்று தெரியாத கேவல நிலை வராது.

அப்படி படிக்காததனால் பலவித அபிப்பிராயங்கள் நம்மவர்களிடத்தில் இருக்கின்றன. ஒருவர் ஆஸ்திகராக இருக்கிறார். வேறொருவர் நாஸ்திகராக இருக்கிறார். மற்றொருவர் பக்தி இல்லாமல் வெறும் கர்மாநுஷ்டானம் மட்டும் செய்கிறார். வேறொருவர் அநுஷ்டானமின்றி பக்தி மட்டும் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதங்கள் ஏகப்பட்ட விதமாக இருக்கின்றன. இதற்காகச் சண்டை வேறு! ஸந்தேஹங்களோ ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. மதப்படிப்பை இளம் பருவத்திலேயே படித்திருந்தால் எல்லாருடைய அபிப்பிராயமும் ஒன்றாக இருக்கும். ஸந்தேஹம் இருக்காது. மதப்படிப்பைப் படிக்கிற மற்ற மதங்களில் இத்தனை கக்ஷிகள் இல்லை என்பதைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம்.

நம்முடைய மதப் புஸ்தகம் என்ன? புஸ்தகத்தைத் தீர்மானம் பண்ணுவதே இந்தக் காலத்தில் சிரமமாக இருக்கிறது. நம்முடைய புஸ்தகம் எதுவோ அதில் சொல்லியிருக்கிறபடி நாம் அநுஷ்டானம் செய்து வந்தால் நமக்கு க்ஷேமம் உண்டாகும்.

மத க்ரந்தங்களில் எது சொல்லியிருக்கிறதோ அதே விஷயம் வேறு புஸ்தகங்களில் சொல்லியிருந்தாலும் தமது மதப் புஸ்தகம் இதுதான் என்று ஒன்றையே ஒவ்வொரு மதஸ்தர்களும் கொண்டாடுகிறார்கள். இன்றைக்கு ஒருவன் ஒரு புஸ்தகம் எழுதுவான்; நாளைக்கு ஒருவன் வேறு எழுதுவான். அவைகளில் நல்லதும் இருக்கலாம்; தப்பும் இருக்கலாம். ஆகையால் ஏதாவது ஒன்றை ஸ்திரமாக ஏற்படுத்திக் கொண்டால் நல்லதல்லவா? அதற்காகத் தான் பல மதஸ்தர்களும் தங்கள் தங்களுக்குப் பிரமாணமாக ஒவ்வொரு புஸ்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது மதம் என்ன என்பதை எந்த மதப் புஸ்தகங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்? லைப்ரரிகள் கொள்ளாமல் லக்ஷக்கணக்கில் நம் மத விஷயமாக புஸ்தகங்கள் இருக்கின்றன. விஷயங்களும் அதிகமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் மூளை குழம்பிப் போகும் போல் இருக்கிறது. ஒன்றுக்கொன்று அப்படி வித்யாஸம் இருக்கும். ஆனாலும், இதற்கெல்லாம் ஆதாரமாகப் பொதுவான ஒரு சில நூல்கள் உண்டு.

நம்முடைய மத அநுஷ்டானத்தால் நல்ல அனுபவத்தையடைந்தவர்கள் இருக்கிறார்கள். உலகத்தையே மறந்து ஆனந்தமாக ஏகாந்த நிஷ்டையில் இருந்து கொண்டு, என்ன பண்ணினாலும் பொருட்படுத்தாமல், சாந்த ஸமாதியில் சாகாமற் கிடந்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களை நாம் பிரத்தியக்ஷமாகவும் பார்க்கிறோம். புஸ்தகங்களின் மூலம் ஸதாசிவ பிரம்மேந்திரர்கள், பட்டினத்தார் முதலியவர்களைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். இவ்வளவு அநுபவிகள் மற்ற மதங்களில் மிகவும் குறைவு. இத்தகைய மதத்திற்குப் பிரமாண க்ரந்தங்கள் இல்லாமலா போகும்?


1வ்யாகரண மஹா பாஷ்ய‌ம், ப்ரதம பஸ்பசாந்ஹிகம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s