யாகம் செய்பவர்கள்

யாகம் பண்ணுகிறவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். எவன் பொருளைச் செலவழித்து தக்ஷிணை கொடுத்து யக்ஞம் செய்கிறானோ அவனுக்கு யஜமானன் என்று பெயர். ‘யஜ்’ என்றால் ‘வழிபடுவது’ என்று அர்த்தம். யஜமானன் என்பதற்கு root meaning யக்ஞம் பண்ணுபவன் என்பதே. இப்போது நம் தமிழ் தேசத்தில் முதலாளியை ‘யஜமான்’ – எசமான் – என்கிறோம். முதலாளிதானே சம்பளம் தருகிறான்? அதனால் யக்ஞத்திலே தக்ஷிணை கொடுத்து வந்த யஜமானனின் ஸ்தானத்தில் இவனை வைத்து விட்டோம். ஸாதாரண மக்களும் இப்படி முதலாளியை யஜமான் என்பதிலிருந்து, இந்த தேசத்தில் வேதவழக்கம் எவ்வளவு ஆழ வேரோடியிருக்கிறது என்று தெரிகிறது.

இன்னொரு வார்த்தையும் நம் தேசத்தின் ஆழ்ந்த வைதிகப் பிடிமானத்தைக் காட்டுகிறது. தமிழ் நாட்டில் ஒருத்தனுக்கு இலவசமாகச் சாப்பாடு போடுகிற இடத்துக்கு “சத்திரம்” என்று பேர் சொல்கிறோம். வடக்கே போனால், சத்திரம் என்று சொல்லமாட்டார்கள். “தரம்சாலா” என்பார்கள். “தர்ம சாலை” என்பதன் திரிபு அது. இங்கே தக்ஷிணத்தில் மட்டும் ஏன் சத்திரம் என்கிறார்கள்? சத்திரம் என்றால் என்ன? “ஸத்ரம்” என்பதுதான் ‘சத்திரம்’ என்றாயிருக்கிறது. ஸத்ரம் என்பது ஒரு வகை யாகத்தின் பெயர். அந்த யாகத்திற்கும் மற்ற யாகங்களுக்கும் என்ன வித்யாஸம் என்றால் மற்ற யாகங்களில் யஜமானன் என்கிற ஒருவன் தன் திரவியத்தைச் செலவு செய்து, தக்ஷிணை கொடுத்து, யாகம் பண்ணுகிறான்; ரித்விக்குகள் என்ற பிராம்மணர்கள் (புரோஹிதர்கள்) யஜமானனிடம் தக்ஷிணை வாங்கிக்கொண்டு அவனுக்காக யக்ஞத்தை நடத்தித் தருகிறார்கள். ஸத்ர யாகங்களில் மட்டும் யாகம் பண்ணும் அத்தனை பேருமே யஜமானர்கள். ஒரு யக்ஞத்தினால் லோக க்ஷேமமும், அதில் கலந்து கொள்கிற எல்லோருக்கும் சித்தசுத்தியும், அதைத் தரிசிப்பவர்களுக்குக் கூட நன்மையும் ஏற்படுகின்றனவென்றாலும், இதனால் விசேஷமாகப் புண்ணியம் அடைவது யஜமானன் தான். ஸத்ர யாகங்களில் ரித்விக்குகளே யஜமானர்களாக இருப்பதால் அத்தனை பேருக்கும் ஸமமான புண்ணியம். ‘இந்த யக்ஞம் தன்னுடையது’ என்ற உரிமை எல்லோருக்கும் இருக்கிற ஸோஷலிஸ யக்ஞம் இது! இதை வைத்தே, எவரானாலும் உரிமையோடு வந்து, யஜமானர்கள் மாதிரி வயிறாரச் சாப்பிட்டுப் போகிற இடத்துக்கு “சத்திரம்” என்று பேர் வந்துவிட்டது. இந்த வார்த்தையிலிருந்து, சத்திரத்தில் சாப்பிடுகிறவனைவிடச் சாப்பாடு போடுகிறவன் தன்னை உயர்வாக நினைக்கவில்லை என்ற உயர்ந்த பண்பும் தெரிகிறது. தமிழ் நாட்டில் ஸத்ர யாகங்கள் விசேஷமாக நடந்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.

யஜமானன் தரும் தக்ஷிணையை யக்ஞ முடிவிலே பெற்று அவனுக்காக அதை நடத்தித் தருகிற மற்ற பிராம்மணர்களுக்கு ‘ரித்விக்’ என்று பெயர். ரித்விக்குகளில் ஹோதா, உத்காதா, அத்வர்யு என்ற மூன்று பிரிவுகள் உண்டு. ஹோதா என்பவர் ரிக் வேத மந்திரங்களைச் சொல்லி, தேவதைகளை ஸ்துதித்து ஆஹூதிகளை ஏற்பதற்காக அவர்களைக் கூப்பிடுகிறவர். இவருக்கு உள்ள உயர்ந்த ஸ்தானத்தினால்தான், இன்றைக்கும் யாராவது நல்ல ஸ்தானத்தில் இருந்தால், “ரொம்பவும் ஹோதாவுடன் இருக்கிறார்” என்று சொல்கிறோம். ரிக் வேதத்தில் தேவதாபரமான ஸ்தோத்திரங்கள் நிரம்பியுள்ளன. காரிய ரூபத்தில் செய்யவேண்டிய யக்ஞ முறைகள் யஜுர் வேதத்தில் அதிகமாக இருக்கின்றன. இவற்றின்படி யக்ஞத்தை நடத்திக் கொடுப்பவர் அத்வர்யு. ஸாம கானம் என்பதாக ஸாம வேதத்தில் உள்ள மந்திரங்களை கானம் செய்வது, தேவதைகளை விசேஷமாக பிரீதி செய்விப்பதாகும். இதைச் செய்பவர் உத்காதா. இப்படி நடக்கிற யாகத்தை ஒருவர் மேற்பார்வை (ஸூபர்வைஸ்) பண்ணுகிறார். அவருக்கு ‘பிரம்மா’ என்று பெயர்.

பிரம்ம என்றே வேதத்துக்கும் பேர். வேதமான ‘பிரம்ம’த்தில் விசேஷமாக ஸம்பந்தப்பட்டவருக்கே ‘வேதியர்’ என்பது போல ‘பிராம்மணர்’ என்ற பேரும் ஏற்பட்டது. வேதம் பயில்பவனை பிரம்மசாரி என்பதும் இதனால்தான். இங்கே யாகத்தில் ஸூபர்வைஸருக்கு பிரம்மா என்று பேர். அவர் அதர்வ வேதப்படி இந்தக் காரியத்தைப் பண்ணுகிறார். இப்படியாக, ஹோதா, அத்வர்யு, உத்காதா, பிரம்மா என்ற நாலு பேர் நாலு வேதங்களை represent பண்ணுகிறார்கள். இப்படிச் சொன்னாலும் ஹோதாவுக்கும், அத்வர்யுவுக்கும், உத்காதாவுக்கும், முறையே ரிக், யஜுஸ், ஸாம வேதங்களில் இருக்கிற ஸம்பந்தம், பிரம்மாவுக்கு அதர்வத்தில் இல்லை என்கிற அபிப்ராயமும் பிற்காலத்தில் கொஞ்சம் வந்திருக்கிறது. பிரகிருதத்தில் [நடைமுறையில்] பார்த்தாலும், யக்ஞங்களில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் மற்ற மூன்று வேதங்களை அத்யயனம் செய்திருக்கிறார்களே தவிர அதர்வ அத்யயனம் செய்தவர்கள் இருக்கவில்லை. அதனால் ரிக், யஜுஸ், ஸாம என்ற மூன்று வேதங்களையும் கொண்டே ஸோமயாகம் முதல் அச்வ மேதம் வரையில் எல்லா யக்ஞங்களும் செய்யப்படுகின்றன என்றும் அபிப்ராயம் இருக்கிறது *.

அதர்வ வேதத்துக்கு என்று தனிப்பட்ட யக்ஞங்கள் இருக்கின்றன. அதர்வத்தில் சொல்லியுள்ள யாகத்தை இந்திரஜித் நிகும்பிலையில் பண்ணினான் என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருக்கிறது.

மற்ற மூன்று வேதங்களுமே அதிகம் பிரசாரத்தில் இருப்பவை. நாலு வேதங்கள், சதுர்வேதங்கள் என்று வித்யாஸ்தானங்களில் சொன்னாலும் அதர்வத்தை நீக்கி மற்ற மூன்றையுமே “த்ரயீ” என்ற பெயரில் வேதங்களாக விசேஷித்துச் சொல்வது வழக்கம்.

(“சாந்திகம்” என்பதாக சாந்தியையும், “பௌஷ்டிகம்” என்பதாக புஷ்டியையும், சத்ருக்களுக்குக் கெடுதலை உண்டாக்குகிற “ஆபிசாரகம்” எனப்படுபவையுமான மூன்று வித யாகங்கள் அதர்வத்தில் ஏராளமாக உள்ளன.)


* யாகங்களில் பிரம்மாவின் மேற்பார்வைக்கான கர்மா மிகக் குறைவானதே. கர்மாக்கள் செய்கையில், அவ்வப்போது அத்வர்யுவானவர் பிரம்மாவை அனுமதி கேட்பார். அதற்கு பிரம்மா ‘ஓம்’ என்று சொல்லி அனுமதி தருவார். ஸோமயாகங்களில் பிரம்மாவுக்குச் சற்று அதிகப் பங்கு உண்டு. இவைகளை அதர்வ வேதம் விதிக்கிறது. ஸோமயாகத்தில் ப்ராம்மணாச்சம்ஸி, ஆக்னீத்ர‌ன், போதா என்ற மூன்று ரித்விக்குக‌ளுக்குத் த‌லைவராக‌ பிர‌ம்மா வருகையில் அவ‌ருக்கான‌ காரிய‌ங்க‌ள் அதர்வ‌வேத ஸ‌ம்ஹிதையில் 19-20 காண்டங்களிலுள்ளன.

அவ்வப்போது யக்ஞத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கான பிராயச்சித்தத்தைக் கூறுவதும் பிரம்மாவின் பொறுப்பே.

அதர்வ வேதப்படியே பிரம்மாவின் ஸ்தானம் அமைந்திருப்பதாக அவ்வேதமே கூறுகிறது. மற்ற மூன்று வேதங்களைக் கொண்டு மட்டும் யக்ஞம் நடத்த முடியாது என்று அதர்வ வேதத்தின் ‘கோபத ப்ராம்மணம்’ கூறுகிறது. அதர்வ வேதியாக இல்லாதவன் ப்ரம்மாவாக இருக்கக்கூடாது என்றும் அந்த ப்ராம்மணம் சொல்கிறது.

ஆயினும் எக்காரணத்தாலோ ஆபஸ்தம்பர் முதலிய தர்ம சாஸ்திரக்காரர்கள் அதர்வ வேதத்தை விலக்கி பிரம்மாவின் காரிய‌ங்க‌ளையும் மந்திரங்களையும் மற்றவர்களே செய்யும்படி இடமளித்து விட்டார்கள். ஆனால் அதர்வவேதி வேண்டாம் என்றே சொல்லி விடவில்லை. (இவ்விவரங்கள் ஸ்ரீ அக்னிஹோத்ரம் ராமானுஜ தாதாசாரியார் உதவியவை.)

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s