ரிக்-யஜுஸ்-ஸாமம்-அதர்வம்

“அனந்தா வை வேதா:” – வேதங்கள் எண்ணிறந்தவை என்றாலும், ரிஷிகள் சிலவற்றைத்தான் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய இஹ, பர நலனுக்கும் லோக க்ஷேமத்துக்கும் இதுவே போதும். அத்தனை வேதங்களையும் நாம் தெரிந்துகொண்டு பிரம்மா மாதிரிப் பிரபஞ்சங்களை சிருஷ்டிக்க வேண்டுமா என்ன? சிருஷ்டியாகிவிட்ட இந்த லோகம் நன்றாக இருக்கச் செய்வதற்கான அளவுக்கு நமக்கு வேதங்கள் தெரிந்தாலே போதும். இப்படிப் பல வேதங்களை ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். நாலு வேதம் என்று சொல்கிறோம். ஆனால் இது ஒவ்வொன்றிலும் பலவிதமான பாடங்கள், பாட பேதங்கள் உண்டு. பாடாந்தரம் என்று இதைச் சொல்வார்கள். ஒரே கீர்த்தனமானாலும், ஒரே ராகமானாலும் அதிலே மஹா வைத்யநாதய்யர் பாணி, கோனேரிராஜபுரம் பாணி, சரப சாஸ்திரி பாணி என்று வெவ்வேறு தினுசு இருக்கிறது. சில பாணியில் அதிகம் சங்கதிகள் பாடுகிற மாதிரி, சில ஸூக்தங்கள் ஒரு பாடத்தில் அதிகம் இருக்கும். ஒன்றுக்கொன்று மந்திரங்கள் முன்பின்னாக இருக்கும்.

இந்த பாடாந்தரம் ஒவ்வொன்றையும் ஒரு சாகை என்று சொல்வார்கள். சாகை என்றால் கிளை. வேத விருக்ஷத்தில் இவை ஒவ்வொன்றும் ஒரு கிளை. அநேக கிளைகளுடன் கப்பும் கவடும் விட்டுக்கொண்டு ஒரு மஹா விருக்ஷம் மாதிரி, அடையாறு ஆலமரம் மாதிரி, வேதம் இருக்கிறது. இத்தனை சாகைகள் இருந்தாலும், இவற்றை ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற நாலில் ஒன்றை சேர்ந்ததாகவே பிரித்திருக்கிறது.

இப்போது ஆராய்ச்சியாளர்கள் ரிக்வேதம் முந்தியது. யஜுர்வேதம் பிந்தையது என்றெல்லாம் சொன்னாலும், சாஸ்திரப்படி எல்லாம் அனாதிதான். சிருஷ்டித் தொடக்கத்திலேயே பிரம்மாவால் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டதான யக்ஞத்தில் நாலு வேதங்களுமே பிரயோஜனமாகின்றன என்பதைப் பார்க்கும்போது, இந்த முந்தி பிந்தி ஆராய்ச்சிகளெல்லாம் எடுபடவில்லை.

இப்படித்தான் ஒரு வேத சாகை என்றால், அதில் இருக்கப்பட்ட ஸம்ஹிதை, ப்ராம்மணம், ஆரண்யகம் என்ற பகுதிகளில் இதற்கு இது முந்தியது என்கிற ஆராய்ச்சியும் சரியில்லை. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது வேதம்; காலாதீதமான நிலையிலிருந்துகொண்டு திரிகாலங்களையும் பார்க்ககூடிய ரிஷிகள் கண்டுபிடித்துக் கொடுத்தது வேதம் என்பதை நம்பிவிட்டோமானால், எந்தக் காலக் கணக்கு ஆராய்ச்சியும் அதற்குப் பொருந்தாது என்று தெரியும்.

ரிக் வேதத்திலேயே பல இடங்களில் யஜுர் வேதம், ஸாம வேதம் முதலியவற்றைப் பற்றிய பிரஸ்தாவம் இருக்கிறது. ரிக்வேதம் பத்தாம் மண்டலத்தில் [தொண்ணூறாவது ஸூக்தமாக] வருகிற புருஷ ஸூக்தத்தில், இப்படி மற்ற வேதங்களைப் பற்றியும் வருகிறது. இதனாலேயே வேதங்களில் ஒன்று முன்னாடி, இன்னொன்று பின்னாடி என்றில்லை என்று தெரிகிறதல்லவா?

ஒவ்வொரு சாகையிலும் ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம் என்ற மூன்று உண்டு என்றேன். பொதுவாக ‘வேத அத்யயனம்’ என்னும்போது இவற்றில் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் என்று மட்டுந்தான் அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ரிக்வேத ஸம்ஹிதையை மட்டும் புஸ்தகமாகப் போட்டு, அதற்கு “ரிக் வேதம்” என்று பெயர் கொடுத்து விடுகிறோம். ஏனென்றால் ஸம்ஹிதைதான் ஒரு சாகைக்கு ஆதாரமாக, உயிர் நாடியாக இருப்பது.

ஸம்ஹிதா என்றால், “ஒழுங்குபடுத்திச் சேர்த்து வைத்தது” என்று அர்த்தம். ஒரு வேதத்தின் தாத்பர்யம் என்னவோ, அவ்வளவையும் ‘ஸிஸ்டமாடிக்’காகச் சேர்த்து மந்திரங்களாகக் கொடுத்திருப்பதுதான் ஸம்ஹிதை.

ரிக் வேத ஸம்ஹிதை முழுக்கவும் பொயட்ரி (செய்யுள்) ரூபத்தில் இருப்பது. பிற்காலத்தில் ச்லோகம் என்று சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேதகாலத்தில் ‘ரிக்’ என்று பெயர். பிற்கால ச்லோகத்திற்கும் வேத ரிக்குக்கும் பெரிய வித்யாஸம் என்னவென்றால் ரிக்குகளைத்தான் ஸ்வரப்படி ஏற்றி, இறக்கி, அல்லது ஸமமாகச் சொல்ல வேண்டியிருப்பது. ‘ரிக்’ என்றால் ஸ்தோத்திரம் என்றும் அர்த்தம். ரிக் வேத ஸம்ஹிதை முழுக்கவும் இப்படிப்பட்ட ஸ்தோத்திரங்களாகவே இருக்கிறது. பல தேவதைகளைப் பற்றின ஸ்தோத்திரங்கள். ஒவ்வொரு ரிக்கும் ஒரு மந்திரம். ஒரு தேவதையைப் பற்றிப் பல ரிக்குகள் சேரந்து ஒவ்வொரு ஸூக்தமாக ஏற்பட்டிருக்கின்றன.

1 ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்]. ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது. அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது. வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம். அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால், அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு. அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் சரிதான். ரிக் வேதத்தின் கடைசி ஸூக்தம் அக்னியைப் பற்றியதாக இருந்தாலும் அதில்தான் இப்போது தேசியகீதம் – National Anthem – என்று சொல்வதற்கு மேலாக, ஸர்வ தேசத்திற்குமான ஒற்றுமைப் பிரார்த்தனை – International Anthem – இருக்கிறது! ” எல்லா ஜனங்களும் ஒன்று சேர்ந்து ஏக மனஸாக இணைந்து ஆலோசனை பண்ணட்டும். எல்லோருக்கும் ஒரே லக்ஷ்யமாக இருக்கட்டும். எல்லா ஹ்ருதயங்களும் அன்போடு ஒன்று சேரட்டும். இப்படி ஏகோபித்த எண்ணத்தோடு எல்லாரும் ஆனந்தமாக இருக்கட்டும்” என்று ரிக் வேதம் முடிகிறது.

‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன. ‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது. இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில் பொருத்திக் கொடுப்பதே (practical application) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது. ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது. காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.

ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர். ‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு. சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு. “வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.

இதைப்பற்றி ஒரு பெரிய கதை உண்டு. சுருக்கமாகச் சொன்னால், யாக்ஞவல்கியருக்கு முன்னால் யஜுர் வேதம் ஒன்றாகத்தான் லோகத்துக்கு வெளி வந்திருந்தது. அந்த யஜுர் வேதத்தை வைசம்பாயனரிடமிருந்து யாக்ஞவல்கியர் கற்றுக்கொண்டார். அப்புறம் வைசம்பாயனருக்கும் யாக்ஞவல்கியருக்கும் மனஸ்தாபம் உண்டான போது, குருவானவர் சிஷ்யரிடம், “நான் கற்றுக் கொடுத்ததை எல்லாம் திரும்பக் கக்கி விடு” என்றார். அவர் சொல்வது நியாயம்தான் என்று அப்படியே யாக்ஞவல்கியர் கக்கிவிட்டு, சூரியனை குருவாக ஏற்றுக்கொண்டு சரணாகதி செய்தார். அனந்தமான வேதங்களில் அதுவரை லோகத்துக்கு வராதிருந்த இன்னொரு வித யஜுர் வேதத்தை சூரிய பகவான் அவருக்கு உபதேசித்தார். அது வாஜஸநேயி என்றும், சுக்ல யஜுஸ் என்றும் பேர் அடைந்தது. இது ‘சுக்லம்’ என்பதால், ஏற்கெனவே வைசம்பாயனர் உபதேசித்தது, இதற்கு மாறாக ‘கிருஷ்ண’ யஜுர்வேதம் என்று பெயர் பெற்றது.

கிருஷ்ண யஜுர் வேதத்தில் ஸம்ஹிதை, பிராம்மணம் என்று முழுக்கத் தனித்தனியாகப் பிரிக்காமல், ஸம்ஹிதா மந்திரங்களுக்கு அங்கங்கேயே ப்ராம்மண பாகங்களைச் சேர்த்திருக்கிறது. கலந்து போனதை ‘கிருஷ்ண’ என்று சொல்வது வழக்கமாதலாலேயே இந்த வேதத்திற்கு அப்படிச் பெயர் வந்ததாகவும், கலக்காமல் தனித்தனியே ஸ்வச்சமாயிருப்பதை ‘சுக்லம்’ என்று சொல்லும் வழக்கப்படி மற்றது அந்தப் பேர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.

அத்தனை தேவதைகளுக்குமான ஸ்தோத்திர மயமாக இருப்பது ரிக்வேதத்தின் பெருமை. அதோடு சமூக வாழ்க்கை முறைகளையும் அதுவே நன்றாக எடுத்துச் சொல்கிறது என்று அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக ஸூரியனுடைய புத்திரியின் கல்யாணத்தைப்பற்றி அது சொல்லியிருப்பதை அனுஸரித்துத்தான் விவாஹச் சடங்கே உருவாகியிருக்கிறது. புரூரவஸ்- ஊர்வசி ஸம்வாதம் [உரையாடல்] போன்ற பல நாடக விசேஷமுள்ள பகுதிகளும் ரிக்வேதத்தில் உண்டு. பிற்காலத்தில் காளிதாஸாதிகள் இவற்றை விஸ்தரித்து எழுதியிருக்கிறார்கள். உஷஸ் [விடியற்காலையின் அதிதேவதை] பற்றிய வர்ணனை போன்ற ரிக் வேதப் பகுதிகளை, மிக உத்தமமான கவிதை என்று ரஸிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

வேதங்களில் முதலாவதாக ரிக் வேதத்தை வைத்ததாலேயே, அதற்கு ஒரு ஏற்றம் இருக்கத்தானே வேண்டும்? யஜுர் வேதத்தில் உள்ள கர்மா, ஸாம வேதத்தில் பண்ணப்பட வேண்டிய (ஸாம) கானம் இவற்றிற்கும் தாய்ச் சரக்கு ரிக்வேத ரிக்குகள்தான்.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை. தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும், பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான். அதோடு கூட ரிக் வேதத்தில் இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் இதில்தான் வருகின்றன. உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான். ரிக் வேதத்திலும் பஞ்சருத்ரம் என்று ஐந்து ஸூக்தங்களை எடுத்திருந்தாலும், இன்று ‘ஸ்ரீருத்ரம்’ என்ற மாத்திரத்தில் யஜுர் வேதத்தில் வருவதைத்தான் குறிப்பிடுவதாயிருக்கிறது. இதனால்தான் பரம சாம்பவரான அப்பய தீக்ஷிதர் தாம் யஜுர் வேதத்தில் பிறக்காமல் போனதற்காக விசனப்படுகிறார்! அவர் ஸாம வேதி.

இன்றைக்கு அதிகம் பேர் அநுஸரிப்பது யஜுர் வேதத்தைத்தான். யஜுர் வேதிகள் தான் மெஜாரிட்டி. வடக்கே இருப்பவர்களில் பெரும்பாலோர் சுக்ல யஜுர் வேதிகளாகவும், தெற்கத்திக்காரர்களில் பெரும்பாலோர் கிருஷ்ண யஜுர் வேதிகளாகவும் இருக்கிறார்கள். உபாகர்மா (ஆவணி அவிட்டம்) என்று கவர்மென்டில் லீவ் விடுவதானால்கூட ரிக்வேதிகளுக்கோ, ஸாம வேதிகளுக்கோ என்றைக்கு உபாகர்மமோ அன்றைக்கு விடுவதில்லை; யஜுர் உபாகர்மாவுக்குத்தான் லீவ் விடுகிறார்கள். யஜுர்வேதிகள் மெஜாரிட்டியாக இருப்பதாலேயே இப்படியிருக்கிறது.

ரிக் வேதத்திலுள்ள ‘புருஷ ஸூக்தத்’திலேயே சில மாறுதல்களோடு யஜுர் வேதத்திலும் வருகிறது. இன்று ‘புருஷ ஸூக்தம்’ என்றால் பொதுவாக யாஜுஷமானது (யஜுர் வேதத்திலுள்ளது) தான் என்றாயிருக்கிறது.

அத்வைதிகள் விஷயத்திலும் யஜுர் வேதத்துக்கு ஒரு விசேஷம் இருக்கிறது. எந்த ஸித்தாந்தமானாலும் அதற்கு ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று இருக்கவேண்டுமென்பது வித்வான்கள் சொல்வார்கள். ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது. பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை. இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம். அத்வைத ஸித்தாந்தத்தில் “வார்த்திககாரர்” என்றால் ஸுரேச்வராச்சார்யாள் என்பவரையே குறிக்கும். அவர் எந்த பாஷ்யத்துக்கு வார்த்திகம் செய்தார்? உபநிஷத்துக்களை ஸூத்திரத்தின் ஸ்தானத்தில் வைத்தால், ஆசார்யாள் (சங்கரர்) அந்த உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் பண்ணினார். பிரம்ம ஸூத்ரம் என்பதற்கும் பாஷ்யம் செய்தார். இந்த பாஷ்யங்களை மேலும் விளக்கியே, ஆசார்யாளின் நேர் சிஷ்யரான ஸுரேச்வரர் வார்த்திகம் எழுதினார். அப்படி எழுதும்போது, ஆசார்யாள் செய்த பத்து உபநிஷத பாஷ்யங்களையும் எடுத்துக் கொள்ளாமல், அவற்றில் இரண்டை மட்டுமே எடுத்துக் கொண்டு, அவற்றுக்கு வார்த்திகம் எழுதினார். அந்த இரண்டு, தைத்ரீய உபநிஷத்தும், பிருஹதாரண்ய உபநிஷத்தும் ஆகும். இவற்றில் தைத்திரீயம் கிருஷ்ண யஜுஸைச் சேர்ந்தது; பிருஹதாரண்யகம் சுக்ல யஜுஸைச் சேரந்தது. ஆக இரண்டுமே யஜுர் வேதம்தான்.

தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில் முதலாவதான ‘ஈசாவாஸ்யம்’, முடிவான ‘ப்ருஹதாரண்யகம்’ இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில் உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.

‘ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம். ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக் கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி? ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது. ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா? இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான். ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது. பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான். ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் பிரீ்தி அடைந்து விடுகிறார்கள். யக்ஞங்களில் ஆஹுதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது 2 .

ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹுதி கொடுத்துப் பண்ணுகிற யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.

ரிக்வேத மந்திரங்களேதான் என்றாலும், ஆத்ம சிரேயஸையும் தேவதா ப்ரீதியையும் விசேஷமாக அளிக்க வல்ல கானரூபத்தில் அமைந்துவிட்டதால், ஸாம வேதத்துக்குத் தனிச் சிறப்பு சொல்லப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்: “வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார். நல்லது, கெட்டது எல்லாமே அவர்தான். இருந்தாலும் தன்னுடைய தெய்வீகம் விசேஷமாகப் பிரகாசிக்கிற இடங்களை அர்ஜுனனுக்குச் சொல்லிக் கொண்டு வரும் போது, ஸாம வேதத்தையே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அம்பாளுக்கு “ஸாம கான ப்ரியா” என்றே லலிதா ஸஹஸ்ர நாமத்தில் ஒரு பேர் வருகிறது. ‘ரிக்வேத ப்ரியா’, ‘யஜுர்வேத ப்ரியா’ என்று இல்லை. சியாம சாஸ்திரிகளும் “ஸாம கான விநோதினி” என்று மீனாக்ஷியைப் பாடியிருக்கிறார். சிவ அஷ்டோத்திரத்தை எடுத்துக் கொண்டால், அங்கேயும் “ஸாம ப்ரியாய நம:” என்று வருகிறது. ‘சந்தோக சாமம் ஓதும் வாயான்’ என்று தேவாரமும் போற்றுகிறது. ஈச்வரன், அம்பாள், விஷ்ணு என்று மூன்று – பேரையும் ‘ரத்ன த்ரயம்’ என்பதாக, தேவதைகளின் உச்சஸ்தானத்தில் இருக்கப்பட்டவர்களென்று அப்பய தீக்ஷிதர் நிர்த்தாரணம் பண்ணியிருக்கிறார் (நிலை நாட்டியிருக்கிறார்) . அப்படிப்பட்ட மூவருக்கும் ஸாம வேத ஸம்பந்தமே விசேஷமாகச் சொல்லியிருக்கிறது.

அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம். அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு. ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.

யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை. இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய் தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள், ‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன. முமுக்ஷுவானவன் (ஞான சாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்று வசனம் இருக்கிறது. அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

 

பிற்காலத்தில் அதர்வ அத்யயனம் விட்டுப் போனாலும், நீண்ட காலம் அது வழக்கில் இருந்திருக்கிறது என்று கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. திண்டிவனத்திற்குப் பக்கத்தில் பேரணிக்குக் கிட்டே எண்ணாயிரம் என்ற ஊரிலும், காஞ்சீபுரத்திற்குப் பக்கத்திலுள்ள வாலாஜாபாத் ஸமீபத்திலேயும் கிடைத்திருக்கிற கல்வெட்டுக்களில், ஆங்காங்கே இருந்த பெரிய வித்யாசாலைகளைப் பற்றித் தகவல்கள் இருக்கின்றன. இவற்றைப் பார்த்தால், பிற்காலச் சோழர் ஆட்சி காலத்திலுங்கூடத் தமிழ் தேசத்தில் அதர்வ வேத அத்யயனம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.

வடக்கே ஒரிஸாவில் இருக்கும் பிராமணர்களில் பதினெட்டுப் பிரிவுகள் உள்ளன. அவர்களில் ‘ஆதர்வணிகர்’ என்றே ஒரு பிரிவுக்குப் பெயர். அதர்வ வேதிகள் என்பதே இதற்கு அர்த்தம். இப்போதும் குஜராத், ஸெளராஷ்டிரம், கோசலம் முதலான தேசங்களில், ரொம்பவும் அபூர்வமாக அதர்வ வேதிகள் இருக்கிறார்கள் 3 .

மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது. மூன்று வேதம் என்பதால் இங்கே அதர்வத்தைச் சேர்க்கவில்லை என்றாகிறது. இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ணுமுன் புனருபனயனம் (இரண்டாம் முறை பூணூல் கல்யாணம்) பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது. பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர். அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும். அதர்வ வேதத்துக்கு வேறு காயத்ரி உண்டு. இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது, அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ண வேண்டுமானால் இன்னொரு முறை உபநயனம் செய்து கொண்டு அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு, பிறகு அந்த வேதத்தைக் கற்க வேண்டும். மற்ற மூன்று வேதங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்றில் மற்ற இரண்டை அத்யயனம் பண்ண வேண்டுமானால், இப்படி புனருபனயனம் செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த த்ரிவேதிகளுக்கும் பொதுவாக ஒரே காயத்ரி இருக்கிறது.


1 நான்கு வேத ஸம்ஹிதைகளும் சேர்ந்து 20,500 மந்திரங்கள்.

2 ஸாமவேத ஸம்ஹிதையில் ரிக் வேத ஸ்தோத்திரங்கள் உள்ள ‘அர்ச்சிக’ என்ற பாகமும், ‘கானம்’ என்ற பாகமுமாக இரண்டு பிரிவுகள் உள்ளன. கானங்களில் க்ராம கானம், அரண்ய கானம், ஊஹ கானம், ஊஹ்ய கானம் என்ற நாலுவகை உள்ளன.

3 ஸ்ரீ பெரியவர்கள் மேற்கொண்ட நன்முயற்சிகளால் அதர்வ வேத அத்யயனம் மீளவும் பொலிவு பெற வாய்ப்புள்ளது. தமிழக வித்யார்த்திகளும் குஜராத்தில் உள்ள ஸினோருக்குச் சென்று அதர்வ வேதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s