வேதமும் வேதாந்தமும் முரணானவையா ?

வேதத்தின் கர்மகாண்டத்தில் என்ன காரியங்களை எல்லாம் சொல்லியிருக்கிறதோ, அதை எல்லாம் இல்லாமல் பண்ணுவதாக இருக்கிறது அதே வேதத்தின் ஞானகாண்டமான உபநிஷத்து! கர்ம காண்டத்தில் தேவதைகளை உபாஸிக்கச் சொல்லி, அதற்கு ஏகப்பட்ட வழிபாட்டு முறைகளைக் கொடுத்துவிட்டு, இங்கே உபநிஷத்தில் அதே வேதம், “தேவ பூஜை பண்ணுகிறவன் அசடு, அவன் பசுவுக்கு ஸமானம்” என்று கேலி பண்ணுகிறது!

இது இப்படி ரொம்பவும் விசித்ரமாக இருக்கிறது. ஒரே வேதத்தின் ஆரம்பத்தில் என்ன இருக்கிறதோ, அதற்கு முழுக்க மாறாக அதன் முடிவு இருக்கிறது! ஒரு பக்கம் கர்ம மயமாகவும், இன்னொரு பக்கம் ஞான மயமாகவும் வித்யாஸமாக இருக்கிறது. இந்த வித்யாஸத்தினால், “வேதம்” என்றாலே கர்மகாண்டம் என்றும், “வேதாந்தம்” என்றால் ஞான காண்டமான உபநிஷத் என்றும் பிரித்து அர்த்தம் பண்ணிக்கொள்கிற அளவுக்கு ஆகியிருக்கிறது.

வேதாந்தத்தைத்தான் கீதையில் பகவான் சொல்லியிருக்கிறார். அவரே அதே கீதையில் (கர்ம காண்டமான) வேதத்தைத் திட்டுத் திட்டு என்று திட்டுகிறார். புத்தரும், மஹாவீரரும்தான் முதலில் வேதத்தைத் திட்டினார்கள் என்று பொதுவில் சொல்கிறார்கள். இது சரியில்லை. ஸாக்ஷாத் கிருஷ்ண பரமாத்மாதான் இவர்களுக்கு முந்தியே வேதத்தை நன்றாக வைதிருக்கிறார். ஓரிடத்தில் (II.42-45) “வேதமெல்லாம் ஸத்வ-ரஜோ-தமோ குண ஸம்பந்தமானதுதான். இந்த முக்குணங்களையும் கடந்த நிலையை நீ அடையவேண்டும்” என்று அர்ஜுனனிடம் சொல்கிறார். “காமாத்மாக்களாக ஸ்வர்க்கத்தில் ஆசை வைத்து, போகத்தையும் ஐச்வர்யத்தையுமே நினைத்துக் கொண்டு, இந்த வேத கர்மடர்கள் மறுபடி மறுபடி ஜன்மா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஸமாதியில் உண்டாகிற நிச்சயமான புத்தி ஏற்படாது” என்றெல்லாம் நிந்திக்கிறார். இன்னோரிடத்தில் ( XI-48) “வேத யக்ஞ அத்யயனங்களால் நான் அடையத் தக்கவனில்லை” என்கிறார்.

வேதம்தான் ஸகல தர்மத்துக்கும் மூலம் என்று இத்தனை நேரம் நான் நீள நெடுக அளந்துவிட்டு, இப்போது இப்படிச் சொன்னால் முரணாக இருக்கும்!

தீர விசாரித்துப் பார்த்தால், இதிலே முரணாக ஒன்றும் இல்லை என்று தெரியும். சாதாரணமாக நாம் இருக்கப்பட்ட நிலையில், முக்குணங்களையும் கடந்து மனஸை ஆடாமல் அசையாமல் நிறுத்தித் தியானம் பண்ணுவது, உபநிஷத்தில் சொல்கிற ஆத்மாவின் ஸத்ய நிலையைத் தெரிந்து கொள்வது என்றால், துளிக்கூட முடியாமல்தானே இருக்கிறது? அந்த நிலையில் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் வேத கர்மாநுஷ்டானங்கள் யாவும் இருக்கின்றன. லோகம் என்பது நிஜம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற வரையில், இதிலே நாம் க்ஷேமமாக இருப்பதற்காகத் தேவதைகளை உபாஸிக்கிறோம். லோகம் நிஜம் என்று நினைப்பதால், அந்த லோகத்துக்கும் தேவர்களால் க்ஷேமத்தை உண்டு பண்ணுகிறோம். இந்த லோகம் மாதிரியே தேவலோகம் நிஜம், தேவதைகளும் நிஜம் என்று வைத்துக் கொண்டு அந்த தேவதைகளுக்கு உபகாரம் பண்ணி, அவர்களிடமிருந்து பிரத்யுபகாரமாகப் பல நன்மைகளை பெறுகிறோம். இந்த லோகத்தில் ஸந்தோஷமாக வாழ்க்கை நடத்துவது போலவே, தேவலோகத்துக்குப் போய் ஸ்வர்க்க போகங்களை அநுபவிக்க ஆசைப்படுகிறோம். இதெல்லாம் சரிதான். ஆனால் இதோடேயே நின்றுவிட்டால், முக்கியமான லக்ஷ்யத்தைக் கோட்டை விட்டதாக அல்லவா ஆகிவிடுகிறது? வாஸ்தவத்தில் நாம் பரமாத்மாவை சாச்வதமாகச் சேர்ந்திருப்பதுதானே லக்ஷ்யம்? அதை விட்டுவிட்டு, மற்றவற்றை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தால் அது அசட்டுத்தனந்தானே?

நாம் இருக்கிற நிலையில் லோகத்தைப் பொய்யென்று நினைத்துக் கொள்ள முடியவில்லை என்பதால், “சரி, மெய்யென்றுதான் வைத்துக் கொள்” என்று சொல்லி, லோக க்ஷேமத்துக்கான கர்மாக்களை வேதம் கொடுத்திருக்கிறது. நாம் உள்ள நிலையில் அரூபமான ஒரே பரமாத்மாவை அபேதமாக உபாஸிக்க முடியவில்லை என்பதால், அநேகம் தேவதைகளின் உபாஸனைகளை அது கொடுத்திருக்கிறது. ஆனால் இப்படிக் கர்மாவும் உபாஸனையும் பண்ணும் போதே, ‘லோகமெல்லாம் அடிபட்டுப்போய், கர்மாவும் நின்று விடுகிற ஞானநிலை நமக்கு வர வேண்டும்; பல தேவதைகளை உபாஸிப்பதாக இல்லாமல், பரமாத்மாவுக்கு அன்னியமாக நாம் என்றே ஒன்று இல்லை என்று கரைகிற நிலை வரவேண்டும். அதற்கு ஆரம்பப் படிகளாக சித்தசுத்தியும், மனஸின் ஐகாக்ரியமும் (ஒருமுனைப்பாடும்) ஏற்படுவதற்காகவே இந்த கர்மாக்களையும், உபாஸனைகளையும் வேதம் கொடுத்திருக்கிறது’ என்ற அறிவோடு பண்ண வேண்டும். அப்படியில்லாமல், வெறுமே லௌகிகமான க்ஷேமத்தை உண்டாக்கிக் கொள்வது, தேவதைகளிடம் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் மாதிரி யக்ஞம் கொடுத்து நன்மை பெறுவது என்று இதோடேயே நிறுத்திக் கொண்டால், ஸத்ய ஸாக்ஷாத்காரம் கிடைக்கவே கிடைக்காது. தேவலோகத்துக்குப் போனாலும், ஆத்மஸுகம் என்ற ஸத்ய ஸாக்ஷாத்கார ஆனந்தம் அதில் கிடைக்காது. மேலும், தேவலோக வாஸமும் நம் புண்ணியம் தீர்ந்தவுடன் முடிந்து, நாம் மறுபடி பூலோகத்தில் கர்ப்ப வாஸம் பண்ணுவதற்காகத் திரும்பித்தானாக வேண்டும். ஒரு அளவுக்கு நம் இப்போதைய மனப்பான்மைக்கு விட்டுக்கொடுத்தும், நம்மை இன்றுள்ள நிலையிலிருந்தே சிறுகச் சிறுக ( gradual-ஆக)ப் பக்குவப்படுத்தவுமே கர்மாவும், உபாஸனையும் வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால், இதோடேயே நின்றுவிடுவேன், மேலே போக மாட்டேன் என்றால், அது தப்பு.

முதலில் வேத கர்மாநுஷ்டானங்களைப் பண்ண மாட்டேன் என்பதும் தப்பு. அப்புறம், அதை ஒருநாளும் விடமாட்டேன் என்பதும் தப்பு. இந்தக் காலத்தில் எல்லோரும் முதலிலேயே, ‘யக்ஞமாவது? அத்யயனமாவது? இதெல்லாம் வேண்டவே வேண்டாம், நேரே உபநிஷத்துக்குப் போகிறோம்’ என்கிறார்கள். இதனால் புத்தி பூர்வமாக (intellectual) உபநிஷத்தைப் பற்றி நிறையப் பேசுகிற ஸ்திதிதான் வந்திருக்கிறதே தவிர, அநுபவத்தில் சாந்தர்களாக, வைராக்யசாலிகளாக, ஆத்ம ஞானிகளாக யாரும் வரக்காணோம்! ஆரம்பகாலத்திலேயே அதற்கான ஸாதனைகளான கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டதன் கோளாறுதான் இதற்கு காரணம். இது ஒரு விதத்தில் தப்பு என்றால் ஞானத்துக்கே வரமாட்டேன் என்று கர்மடர்களாகவே நின்று விடுவது, இன்னொரு விதத்தில் தப்பாக இருக்கிறது.

முதல் கிளாஸ், இரண்டாம் கிளாஸ் என்று ஒவ்வொன்றாகப் படித்துதான் பி.ஏ.வுக்குப் போக வேண்டும். எடுத்தவுடனேயே பி.ஏ.போவேன் என்றாலும் தப்பு; ஆரம்ப க்ளாஸ்களிலேயே ஃபெயிலாகிக் கொண்டு அப்படியே இருப்பேன், மேல் கிளாஸுக்குப் போக மாட்டேன் என்றால் அதுவும் தப்பு.

ஆதிகாலத்தில் பிந்திய கோஷ்டி நிறைய இருந்தது; இப்போது முன்னால் சொன்ன மாதிரியானவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கிருஷ்ணபகவான் காலத்தில், கர்மாநுஷ்டானத்தைவிட்டு ஞானத்துக்கு வராதவர்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களைத்தான் அவர் திட்டினார். வேதத்தை அவர் திட்டியதாகத் தோன்றுவதெல்லாம், வாஸ்தவத்தில் வேத தாத்பர்யத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், வேத கர்மாவோடு நின்றுவிட்டவர்களைக் குறித்து அவர் திட்டியதுதான்! உள்ளபடி வேதத்தை அவர் ஒரு நாளும் திட்டமாட்டார். வேதங்களை ரக்ஷித்துக் கொடுப்பதற்காகவே தான், அவர் திரும்பத் திரும்ப அவதாரம் பண்ணினது.

அவருடைய காலத்தை ஒட்டி, கிருஷ்ண பரமாத்மா இப்படி கர்ம மார்க்கக்காரர்களைத் திட்டினார். இப்போது அவர் புதிதாக கீதை சொன்னால், இன்றைக்கு வேத கர்மாவே வேண்டாம் என்று நேராக உபநிஷத்துக்களுக்குப் போகிறவர்களைத்தான் திட்டியிருப்பார். கீதையிலே கர்மடர்களைத் திட்டுவதைவிட இன்னம் கடுமையாகத் திட்டியிருப்பார் என்றுகூடத் தோன்றுகிறது!

ஏனென்றால் அதைவிட இதுதான் பெரிய தப்பு. முதல் கிளாஸ், இரண்டாம் கிளாஸ் எப்படியும் படித்துத்தான் ஆக வேண்டும். அவனுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுத்து மேல் கிளாஸுக்கு பிடித்துத் தள்ளிவிடலாம். ஆனால் முதலிலேயே பி.ஏ. போகிறேன் என்பவன் ஒரு வழிக்கும் வரவில்லை; அவனை ஒரு வழிக்கும் கொண்டு வரவும் முடியாது. ஆரம்ப கிளாஸில் படிக்கிறவன் கொஞ்சமாவது விஷயம் தெரிந்து கொள்கிறான். இவனோ ஒன்றும் தெரிந்து கொள்ளமுடியாது.

வேதத்துக்கும் வேதாந்தத்துக்கும் முரண்பாடே இல்லை. வேதாந்தத்துக்குப் பக்குவப்படுத்துவதற்காகவே வேதம் (கர்ம காண்டம்) இருக்கிறது. அது லோக ஸம்பந்தமானதுதான், பல தேவதைகளின் ஸம்பந்தமானதுதான், முக்குண ஸம்பந்தமானதுதான். ஆனாலும் லோகத்தைவிட்டு, தேவதையும் உபாஸனையும் வேறில்லை என்று குணம் கடந்த நிலைக்குப் போவதற்குப் பூர்வாங்கமாகவே அது அப்படியிருக்கிறது என்று புரிந்துகொண்டு, அதை அநுஷ்டித்தால் அது தானாக ஞானகாண்டத்தில் கொண்டு சேர்த்து விடும்.

“ஸ்வய நன்மை மட்டுமில்லாமல், லோகத்திலுள்ள ஸமஸ்த பிராணிகளுக்கும் வேத சப்தமும், யக்ஞமும் க்ஷேமம் கொடுப்பதாயிற்றே! இவன் லோகம் பொய் என்று ஞானியாக போய்விட்டால், லோக க்ஷேமம் என்ன ஆவது?” இப்படித் தோன்றுகிறது. “அவனுக்கு லோகம் பொய்யாக போய்விட்டாலும் நமக்கு அது நிஜம் மாதிரித் தானே இருந்து கொண்டு உபத்ரவப்படுத்துகிறது? இந்த உபத்ரவம் தீருவதற்கு யக்ஞம் மாதிரியான அநுஷ்டானம் எதுவும் ஞானி பண்ணவில்லையே!” என்று தோன்றுகிறது. ஆனால் ஞானி இருக்கப்பட்ட உத்தமமான ஸ்திதியைப் பார்த்தால், அவன் யக்ஞம் என்ற ஒன்று பண்ணித்தான் லோக க்ஷேமத்தை உண்டுபண்ணவேண்டும் என்றே இல்லை. அவன் வாழ்க்கை முழுக்கவே யக்ஞமாகத்தான் இருக்கிறது. அவன் லோகத்தை அடியோடு பொய்யென்று நினைத்தாலும் சரி, அல்லது இந்த லோகம் பகவானின் லீலை என்று நினைத்தாலும் சரி, அவன் மூலமாக இந்த லோகத்துக்குப் பகவானின் அநுக்ரஹம் ஓயாமல் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஞானிகளிடம் ஜனங்கள் கூட்டங் கூட்டமாகப் போவதற்குக் காரணம் என்ன? அவர்கள் ஜனங்களை விட்டுப் போனாலும் கூட, இவர்கள் போய் அவர்களுடைய காலில் விழுவதற்கு காரணம் என்ன? அவர்கள் செய்கிற அநுக்ரஹந்தான் காரணம். அவர்கள் உத்தேசித்துச் செய்கிறார்களோ இல்லையோ, அவர்கள் மூலமாக ஈச்வராநுக்ரஹம் லோகத்துக்குப் பாய்கிறது. அவர்களது சந்நிதானத்திலேயே ஜனங்களுக்கு ஒரு தாப சாந்தி கிடைக்கிறது. லோக ரீதியான வேண்டுதல்கள்கூட நிறைவேறுகின்றன. தனக்கு அன்னியமாக தேவதை இல்லை என்ற ஞானத்தை அடைந்துவிட்ட ஞானியே தேவதைகளுக்கெல்லாம் மேலே பெரிய அநுக்ரஹத்தைப் பண்ணி விடுகிறான். அதனால், அவன் யக்ஞம் செய்யவில்லையே, லோக க்ஷேமத்துக்கு எதுவும் செய்யவில்லையே என்று நினைப்பது தப்பு.

பிற்காலத்திய வேதாந்த (ஹிந்து) மதத்தை, வேத கர்மாநுஷ்டான காலத்திலிருந்து பிரித்து, “இந்த ஹிந்துக்களுக்கு individual salvation (தனி மநுஷ்யனின் மோக்ஷம்) தான் முக்யம்; லோக க்ஷேமத்தை இவர்கள் கவனிப்பதேயில்லை; தியானம், யோகம், ஸமாதி எல்லாம் இன்டிவிஜுவல் ஸால்வேஷனையேதான் மையமாகக் கொண்டவை” என்று பிற மதஸ்தர்கள் சொல்கிறார்கள். “கிறிஸ்து, நபி, புத்தர் மாதிரி அன்பு (love) ஸஹோதரத்வம் (brotherhood) இவற்றைச் சொல்லி social consciousness [சமூக உணர்வை] ஹிந்து மதம் வளர்க்கவில்லை” என்கிறார்கள். ஆனால் நம் மதத்தைச் சரியாக புரிந்து கொண்டால் வேத மதம், வேதாந்த மதம் என்று பிரிப்பதே முழுப் பிசகு. கடைசியில் ஸந்நியாஸாச்ரமத்தில் எவன் வேதாந்தியாக ஞானவிசாரம் பண்ணி, இண்டிவிஜுவல் ஸால்வேஷன் அடைகிறானோ, அவனேதான் அதற்கு முந்திய ஆச்ரமங்களில் அத்யயனமும், கர்மாநுஷ்டானமும் பண்ணும் வைதிகனாக இருந்துகொண்டு, இவற்றால் லோக க்ஷேமத்தை உண்டு பண்ணுகிறான். அப்படிப் பண்ணியதே தான் இவனுக்கு சித்த சுத்தியைக் கொடுத்து, தன்னுடைய சொந்த மோக்ஷத்துக்கு நேர்வழியான வேதாந்தத்தில் சேர்க்கிறது. அதிலே ஸித்தி அடைந்து ஞானியான பிறகும், இவன் காரியம் என்று பண்ணாமலே, தன் ஸந்நிதான விசேஷத்தாலேயே லோகாநுக்ரஹம் பண்ணிக் கொண்டிருக்கிறான். தனி மநுஷ்யனின் விமோசனம் ( individual salvation), சமூக க்ஷேமம் (collective welfare ) என்ற இரண்டில், எது மதத்துக்கு முக்கியமாக இருக்க வேண்டும் என்ற பெரிய கேள்வியை இங்கே நான் ஆராயவில்லை. அது தனி விஷயம். சமூகம் ஷேமம் அடைவதும், அடையாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு மதத்தைச் சேர்ந்தவன் பரமாத்ம தத்வத்தை அநுபவத்தில் தெரிந்து கொள்கிற ஞானியாகாவிட்டால் அந்த மதம் இருந்தாலென்ன, இல்லாவிட்டால் என்ன?

இந்த ஞானநிலைக்கு வருவதற்காகத்தான் அத்தனை கர்மாவும் உபாஸனையும் வைத்திருக்கிறது. வித்யாஸமே இல்லாமல் எல்லாம் ஒன்றாகிப் போய்விடுகிற ஞான நிலையை அடைவதற்கு வழியாகவேதான் நூறாயிரம் வித்யாஸமுள்ள வர்ணாச்ரம தர்மங்கள், இன்னார்தான் இன்ன பண்ணலாம் என்ற அதிகார பேதங்கள் எல்லாம் பூர்வாங்கமாக வைத்திருக்கிறது. வெறும் கர்மாவோடு, வித்யாஸத்தோடு நின்றுவிட்டால் தப்பு. ‘கர்மாவைச் சொல்கிற வேத பாகம்தான் அர்த்தமுள்ளது. ஞானத்தைச் சொல்கிற பாகம் அர்த்தமில்லாதது’ என்று சொன்ன பூர்வ மீமாஸகர்களைத் திட்டுகிற உத்தேசத்தில்தான், கிருஷ்ண பரமாத்மா வேதத்தையே திட்டுகிற மாதிரிப் பேசுகிறார். அவர் வாஸ்தவத்தில் திட்டினது ‘வேத வாத ரதா: என்று அவரே சொல்கிறபடி, வேதத்தைப் பற்றி வெறும் வாய்ச்சவடாலில் அர்த்தம் பண்ணிக்கொண்டு அதிலேயே சந்தோஷப்பட்டுவிட்டு, அதன் லக்ஷ்யமான அநுபவ ஞானத்துக்கு யத்தனம் பண்ணாதவர்களைத் திட்டினதுதான்.

முதலில் கர்மா வேண்டும். அதாவது வேதம் சொன்னபடி காரிய ரூபத்தில் கடமைகளைப் பண்ண வேண்டும். ஆனாலும் கர்மா இல்லாமல் போகிற பெரிய ஆத்மாநுபூதி நிலைக்குப் போவதற்கே இது ஆரம்பப் படி என்று தெரிந்து கொண்டு பண்ண வேண்டும். இதே மாதிரி, முதலில் தேவதா உபாஸனை வேண்டத்தான் வேண்டும். ஆனாலும், உபாஸிக்கப்படும் தேவதையும் உபாஸகனான தானும் வேறில்லை என்று ஆகிறதற்கு ஆரம்ப ஸாதனமாகவே உபாஸிக்கிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டும். முதலில் வித்யாஸங்கள் பார்க்கத்தான் வேண்டும். லோக வியாபாரம் ஒழுங்காக நடக்க வேண்டுமானால், நமக்குள் காரியங்களைப் பல தினுஸாகப் பிரித்துக்கொண்டு, அந்தந்த காரியத்தையும் சுத்தமாகப் பண்ணுவதற்கு என்ன தனிப்பட்ட ஆசார அநுஷ்டானாதிகள் உதவி செய்யுமோ, அப்படிப் பிரிந்துதான் அவரவருக்கான தர்மங்களைக் கடைபிடிக்கவேண்டும். ஆனாலும் இதுவும், கடைசியில் ஸகல வித்யாஸமும் போய், எல்லாமும் எல்லாரும் “தானே” என்று தெரிந்து கொள்வதற்குத்தான் என்ற அடிப்படை உணர்ச்சி இருக்க வேண்டும். வேத அத்யயனம், வேத கர்மாநுஷ்டானம் எல்லாம் அந்த வேதமே அவசியமில்லாமல் போய்விடுகிற அகண்டமான மஹா அநுபவத்துக்கு வழிதான் என்று வைத்துக் கொண்டு, அவற்றை அப்பியாஸம் பண்ண வேண்டும். புஷ்பம் இருந்தால்தான் பிறகு பழம் உண்டாகும். புஷ்பம் பார்க்க ரொம்ப அழகாக இருந்தாலும், அது காய்ந்து போய் விழுந்தால்தான் பழம் உண்டாகும். பூவே இல்லாமல் காய்க்க வேண்டும் என்று, இந்த நாளில் வைதிகாநுஷ்டானமே இல்லாமல் வேதாந்தத்துக்கு போகிறவர்கள் நினைத்தால், அது யதார்த்தத்துக்குச் சரியாக வராது. இதனால் பூவோடேயே நின்றுவிட வேண்டும் என்று நினைத்து, வேதாந்த ஞானத்துக்கு யத்தனம் செய்யாமல் கர்மடர்களாக நின்றுவிட்டால், அதுவும் தப்புத் தான். எதிலும் sense of proportion வேண்டும்.

கீதையில் சொன்ன மாதிரியே, பிருஹதாரண்யக உபநிஷத்திலும் (IV.3.22) “எவன் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து கொண்டு விட்டானோ அவனுக்கு அந்த நிலையில் வேதம் அத்தனையும் வேதமில்லாமல் போய்விடும்; தேவர்கள் யாவரும் தேவரல்லாமல் போய்விடுவார்கள்; பிராமணர்கள் பிராமணரில்லாமல் ஆகிவிடுவார்கள்; சண்டாளன் சண்டாளனில்லாதவனாகி விடுவான் என்று சொல்லியிருக்கிறது.

“ச்ருதி” என்று வேதத்தைச் சொல்கிற போது அதில் ஸம்ஹிதை மட்டுமின்றி பிராம்மணமும், ஆரண்யகமும் (உபநிஷத்துக்களும்) அடக்கந்தான். கீதை ‘ச்ருதி’ இல்லை. அது ‘ஸ்மிருதி’யைச் சேர்ந்ததாகவே சொல்வது வழக்கம். ஸ்மிருதிகளைப் பற்றிப் பிறகு பதினாலு வித்யையகளில் ஒன்றான தர்மசாஸ்திரத்தைப் பற்றி சொல்கிறபோது சொல்கிறேன். “வேதகர்மாவும் உபாஸனையும் ஞானத்தில் கொண்டு போய் விடாவிட்டால் பிரயோஜனம் இல்லை” என்று கீதையான ஸ்மிருதி சொல்கிறது. ‘ச்ருதி-ஸ்மிருதி-புராணம்’ என்கிற மூன்று பிரமாணங்களில், புராணத்திலும் அநேக இடங்களில் வெறும் கர்மாநுஷ்டானத்தோடு நின்று விடுவதைக் கண்டித்திருக்கிறது. தாருகா வனத்தில் ரிஷிகள் கர்ம மார்க்கமே ஸகலமும் என்று தங்களுடைய யக்ஞோபாஸனையிலேய கர்வப்பட்டுக் கொண்டிருந்தபோது, பரமேச்வரன் அவர்களுடைய அஹங்காரத்தை அழித்த கதையை சைவமான புராணங்கள் சொல்கின்றன. பாகவதத்திலும் இப்படியே யக்ஞபத்தினிகளின் உபாக்யானத்தில், ஒன்றுமே தெரியாமல் innocent-ஆக இருந்த அந்தப் பிராம்மண ஸ்திரீகளுக்குத்தான் யக்ஞபுருஷனான மஹாவிஷ்ணுவே பாலகிருஷ்ணனாக வந்திருக்கிறான் என்று தெரிந்தது என்றும், அவர்களுடைய புருஷர்களான கர்மமார்கக்காரர்கள் இதைத் தெரிந்து கொள்ள முடியாமல், பிறகு ரொம்பவும் பச்சாதாபப் பட்டார்கள் என்றும் வருகிறது.

ஆனாலும், பிரமாணங்களில் ச்ருதிப் பிரமாணத்துக்குப் பிறகுதான் ஸ்மிருதி-புராணப் பிரமாணங்களைக் கொள்ள வேண்டும். கர்மா மட்டும் போதாது என்பதற்கு ச்ருதிப் பிரமாணமும் இருக்கிறது என்பதற்கு இங்கே பிருஹதாரண்யக உபநிஷத்தை quote செய்தேன். ஆனாலும் “ச்ருதியை கர்மகாண்டம், ஞான காண்டம் என்று பிரிக்கிறபோது, இது ஞான காண்டமான உபநிஷத்தில் வருவதுதானே? ஞான காண்டத்தில் ஞானத்தைச் சிறப்பித்துச் சொல்லி, கர்மாலக்ஷ்யம் இல்லை என்று சொல்லியிருப்பதில் விசேஷம் ஒன்றுமில்லையே!” என்று கேட்கலாம். ஆகையால் கர்ம காண்டத்திலேயே, ‘கர்மாவே எல்லாம், அதுவே லக்ஷ்யம்’ என்று நினைப்பதைக் கண்டனம் பண்ணியிருக்கிறது என்பதையும் காட்டுகிறேன். வேதத்தில் சொல்லியிருக்கிற பல விதமான யக்ஞங்களையுமே அதன் நோக்கமறிந்து செய்வது சிலாக்கியந்தான் என்று பகவான் கீதையிலே “ஏவம் பஹூவிதா யக்ஞா விததா ப்ரஹ்மணோமுகே” என்று பாராட்டிச் சொல்லிவிட்டு, ஆனால் இந்த ஸகலவிதமான கர்மாநுஷ்டானங்களும் ஞானத்தில் தான் பூர்த்தியடைகின்றன –

ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே

-என்றதை 1 , வேதத்தின் கர்மகாண்டத்திலேயே ஒரு அழுத்தமான திருஷ்டாந்தத்தால் சொல்லியிருக்கிறது. “வெறும் கர்மாநுஷ்டானங்களை மாத்திரம் செய்து கொண்டு, ஈச்வரனை எவனொருவன் உணராமல் இருக்கிறானோ, அவன் நெருப்பிலே விறகைப் போட்டுப் புகையை மாத்திரம் எழுப்பிக் கொண்டிருக்கிறான். அவன் மூடன், அவன் ஆத்ம ஸ்வரூபத்தை ஒருநாளும் அறிந்து கொள்ளமாட்டான்” என்று ச்ருதியில் கர்மகாண்டத்திலேயே தைத்திரீய காடகத்தில் (முதல் ப்ரச்னம், கடைசி அநுவாகம், 4-ம் வாக்யம்) வருகிறது. விறகை மூட்டினால் அதன்மேல் வெண்கலப் பானையை வைத்துச் சாதம் வடிக்க வேண்டும். அப்படித் தன்னையே ஞானத்தில் பக்குவம் பண்ணிக்கொள்ளப் பிரயத்தனப்படாமல் (‘பக்குவம்’ என்றால் சமைக்கப்படுவது என்றே அர்த்தம். நமக்குள்ளே இப்படி முழுமை பெற்று, அரிசி சாதமாகிறாற்போல் நன்றாகக் குழைந்து விடுவதையும் ‘பக்குவம்’ என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறோம்) வெறுமே யக்ஞாதிகள் செய்கிறவன், வெண்கலப் பானையை ஏற்றாமலே அடுப்பை எரிய விடுகிறவன்தான். இப்படி வேதமே சொல்கிறது. யக்ஞத்திலே நெருப்பில் ஹவிஸைப் போடாமலே பெரிசாக அக்னியை வளர்த்து என்ன பிரயோஜனம்? புகை ஜாஸ்தியாவதுதான் பலன்! இநத மாதிரிதான் கர்ம பலனையே ஹவிஸாகப் போட்டு எரிக்கிற புத்தியோடு யக்ஞத்தைச் செய்யாவிடில், அது வெறும் புகையாகப் போய் விடுகிறது. “பிரம்மாக்னியில் ஆத்மாவை ஹவிஸாகத் தர வேண்டும். ஸம்யமம் என்ற புலனடக்க அக்னியில் இந்திரிய நுகர்ச்சிகளை ஹோமம் பண்ண வேண்டும்; பஞ்சப் பிராணன்களை ஒன்றிலொன்று ஹோமம் பண்ணவேண்டும்” என்றெல்லாம் பகவான் கீதையில் சொன்ன ஸ்திதிக்குப் போவதற்காகத்தான் திரவ்ய ரூபமான, காரிய ரூபமான வைதிக யக்ஞங்கள் எல்லாம் இருக்கின்றன. இதைத் தெரிந்து கொள்ளாமல் எத்தனை யக்ஞம் செய்தாலும் ஒருவன் கொஞ்சங்கூட புத்திசாலியே இல்லை; அவனுக்குப் புத்தியே இல்லை என்று வேதமும் சொல்கிறது. அவனுடைய புத்தி எங்கே போகும்? ஹோமப் புகை போலத்தான் அதுவும் போகிற இடமெல்லாம் கருப்பாகப் பண்ணிக் கொண்டு, கடைசியில் பிசுபிசுவென்று ஒன்றுமில்லாமலாகிவிடும்.

வேத கர்மாவை ஈச்வரார்ப்பணம் பண்ணினால், அது கட்டுவதற்குப் பதில், கட்டிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக அவிழ்ந்துவிட ஆரம்பிக்கும். நிஷ்காம்யமாக, பகவத் பிரீதிக்காகவே கர்மாவைப் பண்ணப்பண்ண அது சித்தசுத்தியைத் தந்து, முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட ஸ்தானத்துக்கு அழைத்துக்கொண்டு போகும்.

யக்ஞம் என்ற பெயர் இதைத்தான் குறிப்பிடுகிறது. இங்கிலீஷில் இதை “sacrifice” என்றுதானே சொல்கிறார்கள்? யாகம் என்றால் தியாகம் என்றுதான் அர்த்தம். “ந மம” (“எனதில்லை”) என்று ஒன்றை நெருப்பிலே போடுகிற தியாக சித்தம்தான் யக்ஞத்தின் உயர்நிலை. நெருப்பிலே போட்டதை எடுக்க முடியுமா? எடுத்தாலும் அது க்ஷண காலத்தில் உருச் சிதைந்துதானே போகிறது? அந்த மாதிரி அஹங்கார மமகாரங்களை பஸ்மமாக்க வேண்டும். இப்படி உயர்ந்த அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதான “யக்ஞம்” என்பதை, அதன் பேருக்கு நேர் விரோதமாக ஸ்வர்க்கப் பிராப்தி முதலான சொந்த லாபங்களுக்காக, அல்ப பலன்களுக்காக‌, ஒருத்தன் பண்ணினால் அவன் முட்டாள்தானே?

கர்ம காண்டம், ஞான காண்டம் என்பனவற்றுக்குள் முரண்பாடு (contradiction) இல்லை. கர்மகாண்டத்திலேயே அநேக இடங்களில் கர்மாவின் லிமிடேஷனைச் சொல்லி, ஞானத்தையே விசேஷித்திருக்கிறது. ரொம்பவும் உயர்ந்த ஞானப் பிரதமான தத்துவங்களைச் சொல்கிற நாஸாதீய ஸூக்தம், புருஷ ஸூக்தம், திரயம்பக மந்திரம் முதலியவை வேதத்தின் ஸம்ஹிதா பாகத்திலேயே வருகின்றன. உபநிஷத்துக்களில் இல்லை. இதற்கு எதிர் வெட்டாக உபநிஷத்துக்களிலும் நாசிகேதாக்னி முதலான பல கர்மாக்களைச் சொல்லியிருக்கிறது. கர்மாநுஷ்டானங்களில் விசேஷமாகப் பிரயோகமாகிற மந்திரங்கள், தைத்திரீய உபநிஷத்திலிருந்தே கிடைக்கின்றன. ஒன்றுக்கொன்று விரோதமானது என்றால் இப்படியிருக்குமா? ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் போக வேண்டும் என்பதே தாத்பரியம்.

கர்மாவை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணினால், அதுவே ஞானத்துக்கு உபாயம் என்று ஸ்மிருதியான கீதையில் சொன்னதற்கு ஆதாரம் ச்ருதியான உபநிஷத்தில் இருக்கிறது. தசோபநிஷத்துக்கள் என்ற பத்தில், முதலாவதாக வைக்கப்பட்டிருக்கிற ஈசாவாஸ்யத்தில் இதைத்தான் எடுத்தவுடனேயே உபதேசித்திருக்கிறது. ‘நூறு வருஷம் வேத கர்மாக்களைப் பண்ணிக் கொண்டிரு. ஆனாலும் ஈச்வரார்ப்பண புத்தியோடு பண்ணு. அப்போது அது உன்னைக் கட்டிப்போடாது’ என்கிறது. ஆகையால் உபநிஷத் என்றாலே inaction (காரியமில்லாமலிருப்பது), கர்மாவுக்கு விரோதமானது என்று நினைத்தால் சரியில்லை.

கர்மாதான் லக்ஷ்யம் என்று நினைத்துவிடக் கூடாது. லோக க்ஷேமத்தை உண்டு பண்ணுவதற்காகவும் சித்த சுத்திக்காகவும் தேவதைகளை உபாஸித்தாலும் அதோடு நின்று விடக்கூடாது. ஞானத்தை அடைந்து பரமாத்மாவைத் தவிர தான் என்று ஒன்றில்லை, லோகமென்று ஒன்று இல்லை, தேவதைகள் என்று வேறு இல்லை என்கிற நிலையை அடையவேண்டும். இந்த நிலையை அடைந்தால் வேதமும் வேதம் இல்லாமல் போய்விடும் என்று, அந்த வேதமே சொல்கிறது 2 .

வேதம் என்பது என்ன? பரமேச்வரன் போட்ட சட்டம். அந்த சட்டத்தைப் பிரஜைகளான சகல ஜனங்களும் மதித்து நடக்க வேண்டும். ஆனால் ஞானியாகி ஸதா ஸர்வகாலமும் பரமாத்ம ஸத்யத்திலே ஒருவன் உள்ளும் புறமும் ஊறியிருக்கிற போது, அவன் இந்த வேத சட்டத்தைப் பார்த்துப் பார்த்துக் காரியங்களைப் பண்ண வேண்டும் என்பதில்லை. அதனால்தான், ‘வேதம் வேதமில்லாமல் போகிறது’ என்று சொல்லியிருக்கிறது. நாமும்தான் வேதத்தைச் சட்டமாக மதிக்கவில்லை. நமக்கும் வேதம் வேதமாக இல்லாமல் தானிருக்கிறது! ஆனால் ஞானம் என்றால் என்ன என்றுதான் நமக்கு வாஸனைக்கூடத் தெரியவில்லை.

உபநிஷத்துக்கள் என்கிற பரவித்தையில் கொண்டு சேர்க்கிற உபாயமே கர்மகாண்டம் என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால், வேதமானது (அதாவது, அதன் கர்மகாண்டம்) மற்ற ஹிஸ்டரி, ஜாகரஃபி மாதிரி அபர வித்தையாகத்தான் (அதாவது லௌகிக அறிவு நூலாகத்தான்) நின்றுவிடும். முண்டக உபநிஷத்தில் (I.5) வேதத்தையும் அபரவித்தையோடு சேர்த்திருப்பதற்கு இதுதான் அர்த்தம். இம்மாதிரி தாற்காலிக சௌக்கியத்தோடு வேதத்தின் பயனை நிறுத்திக் கொண்டு விடுபவனை உபநிஷத் வெறும் பசுப்பிராயமானவன் என்றே சொல்லியிருக்கிறது.

ஸகல தேவதைகளும் எதில் தோன்றியிருக்கின்றனவோ, அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடுகிற ஞானிக்கு அந்தத் தேவதைகளும் அந்நியமில்லை. பரமாத்மோவோடு பரமாத்மாவாக இவன் இரண்டறக் கலந்துவிட்ட பிறகு, தேவதைகளுங்கூட இவனுக்குள் இருக்கிறவர்களே. தேவதைகளை உபாஸிக்கிற காலத்திலேயே இவனுக்கு இது அநுபவத்தில வராவிட்டாலுங்கூட, ‘நாம் வெளியே நமக்கு வேறாக தேவதை என்று ஒன்றை உபாஸனை பண்ணுகிறோமே, இதுவுங்கூட ஆத்மாவுக்கு அந்நியமானதில்லை’ என்ற எண்ணம் இருந்துகொண்டேயிருக்க வேண்டும். வெளிக்காரியத்தில் பிரிந்து பிரிந்து வித்யாஸமாகத்தான் செய்ய வேண்டுமென்றாலும், இந்த வித்யாஸங்கள் எல்லாம் ஒடுங்கிப் போகிற ஒரே மூல தத்வத்தில் நாம் கடைசியிலே சேரவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். இப்படியில்லாமல் “எவனொருவன் தேவதையைத் தனக்கு முழுக்க வேறானது என்றே நினைத்து உபாஸித்திருக்கிறானோ, அவன் ஸத்தியத்தைத் தெரிந்து கொள்ளாதவன், அவன் தேவர்களுக்குப் பசு மாதிரியானவன்” என்று பிருஹதாரண்ய உபநிஷத்தில் (I.4.10) சொல்லியிருக்கிறது.

பசு என்று சொன்னதற்கு நிரம்ப அர்த்தமுண்டு. மநுஷ்யனுக்கு உள்ள ஆறாவது அறிவு இல்லாமல், வெறும் மிருகப் பிராயமாக இருப்பவன் என்பது மேலெழுந்தவாரியான அர்த்தம். உள்ளர்த்தத்தைச் சொல்கிறேன்: நாம் எதற்குப் பசுவைப் போஷிக்கிறோம்? அது நமக்குப் பால் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். நமக்கு அது க்ஷீரத்தைக் கொடுக்கிறது என்பதற்காகத்தான் நாம் அதற்குப் புல்லும், வைக்கோலும், புண்ணாக்கும், பருத்திக் கொட்டையும் போடுகிறோம். இதே மாதிரி நாம் யக்ஞத்தில் ஹவிஸ்ஸுகளை ஹோமம் கொடுத்து தேவதைகளுக்குப் பிரீதியைச் செய்கிறோம். இப்படி நாம் செய்வதற்குப் பிரதியாகத்தான், அவர்கள் நமக்கு மழை, தான்ய விருத்தி முதலான பல அநுக்ரஹங்களைச் செய்கிறார்கள். நாம் முன்னேயே சொன்ன மாதிரி இந்தத் தேவதைகள் மநுஷ்ய இனத்தைவிட உயர்ந்தவர்களானாலும், இவர்களும் நிறைந்த நிறைவான ஆனந்தத்தை அடைந்தவர்கள் இல்லை. மநுஷ்ய ஜன்மா எடுத்தே ஞானியாக ஆகிவிட்ட ஒருவன் அடைகிற பிரம்மானந்தத்தில் லக்ஷத்தில் ஒரு பங்கு கூட தேவர்களுக்குக் கிடையாது.

தைத்திரீய உபநிஷத்திலும் (II.8) பிருஹதாரண்யக உபநிஷத்திலும் (IV.3.33) மநுஷ்ய லோக ஆனந்தம், பித்ரு லோக ஆனந்தம், தேவலோக ஆனந்தம், அந்த தேவர்களுக்குள்ளேயே இந்திரனின் ஆனந்தம், பிருஹஸ்பதியின் ஆனந்தம், பிரஜாபதியின் ஆனந்தம் என்று ஒன்றைவிட ஒன்று நூறு மடங்கானது என்று ஒரு பெருக்கல் வாய்ப்பாடு சொல்லிக்கொண்டே போய், கடைசியில்தான் பிரம்மானந்தம் என்ற ஞானியின் ஆனந்தத்தைச் சொல்லியிருக்கிறது. ஆதலால், தேவர்களும் குறையுள்ளவர்கள்தான். அதோடுகூட, எல்லாக் குறையையும் பூர்த்தி செய்கிற ஞானத்துக்காக அவர்கள் பாடுபடுவதும் இல்லை. தங்களுக்கு மநுஷ்யர்களால் உண்டாகிற லாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, நாம் செய்கிற யக்ஞம் முதலான உபாஸனைகளை எதிர்பார்த்துக் கொண்டுதான் அவர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மநுஷ்யர்கள் ஞானிகளாகி விடுவதும் பிடிக்கவில்லை. ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் இப்படி வியக்தமாகச் சொல்லியிருக்கிறது. ‘மனிதர்கள் ஆத்மாவை அறிந்து கொள்வது தேவர்களுக்குப் பிரியமாக இல்லை’ என்று அந்த உபநிஷத்தில் (I.4.10) சொல்லியிருக்கிறது. காரணம் என்ன? ஆத்ம ஞானியாக ஆகிவிட்டால் அப்புறம் ஒருவன் தேவர்களைத் திருப்திப் படுத்துகிற யக்ஞாதி கர்மங்களைப் பண்ணமாட்டான்.

நம்முடைய வீட்டு வேலைக்காரன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு ஸ்வல்ப சம்பளம் கொடுத்து வருகிறோம். வேறு புது வேலைக்காரன் வந்தால் அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டும். நமது வேலைக்காரன் மேலே பரீக்ஷைகளில் பாஸ் பண்ணி வேறு வேலைக்குப் போய் விருத்தியாக எண்ணுகிறான். பரீக்ஷைக்குப் போகிறான். நாம் அவன் பரீக்ஷையில் தேறவேண்டுமென்று நினைப்போமா? மாட்டோம். தேறக் கூடாதென்றுதான் நினைப்போம். தேறிவிட்டால் அவனுக்குக் கௌரவம் வந்துவிடும்; வேறு வேலைக்குப் போய் விடுவான். அவன் போய்விட்டால் அவனைப் போல் ஸ்வல்ப சம்பளத்தில் ஒரு வேலைக்காரனும் நமக்குக் கிடைக்க மாட்டான். இதைப் போலத்தான் இங்கேயும் இருக்கிறது. மநுஷ்யன் ஞானியாக உயர்ந்து, தங்கள் உபாஸனையை விட்டுவிடுவது தேவர்களுக்குப் பிடித்தமில்லை!

ஞானி தேவர்களுக்குப் பிரியமில்லாதவன் என்றால் ஞானியாக இல்லாதவன்தான் அவர்களுக்குப் பிரியன் என்றாகி விடுகிறது. ஆகையால் தேவர்களுக்குப் பிரியமானவன் அஞ்ஞானி, அறியாதவன் என்றாகிறது. அதனால்தான், மூர்க்கன் என்பதற்கே ‘தேவானாம் ப்ரியன்’, அதாவது தேவர்களுக்குப் பிரியமானவன் என்று வியாகரணத்தில் இன்னொரு பெயர் கொடுத்திருக்கிறது! இந்த பெயருக்கு உபநிஷத்தில் மூலம் இருக்கிறது.

சங்கர பகவத்பாதாள் பிரம்ம ஸூத்ர பாஷ்யத்தில்[I.2.8] பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்றால் ஜீவாத்மாவின் கஷ்ட ஸுகங்கள் பரமாத்மாவுக்கும் உண்டாகும் என்று நினைக்கிறவனுக்கு பதில் சொல்லும்போது, “நீ என்ன ரொம்ப அசடாயிருக்கிறாயே!” என்ற அர்த்தத்தில், ‘தேவானாம் ப்ரியனாக இருக்கிறாய்!” என்கிறார்: இதம் தாவத் தேவானாம் ப்ரிய ப்ரஷ்டவ்ய: .

தேவர்களுக்குப் பிரியமானவன் – “தேவானாம் பிரியன்” – என்ற பெயரைக் கேட்டால், இதோ பெரிய டைட்டில் மாதிரித் தோன்றுகிறது. ஆனால், அதற்கு நிஜ அர்த்தத்தை பார்த்தால் ‘அசடு’ என்று இருக்கிறது.

அசோக சக்ரவர்த்தியின் கல் வெட்டுத் தூண்களில் அவரை “தேவானாம் ப்ரிய” என்றே சொல்லியிருக்கிறது. அசோகர் காலத்துக்கு முந்தியே, பாணினி தமது வியாகரண புஸ்தகத்தில் தேவானாம் ப்ரியன் என்றால் மூர்க்கன் என்று எழுதி வைத்திருக்கிறார். ஆகையால், பௌத்தனான அசோகனை மட்டம் தட்டவே பிற்காலத்து வைதிகர்கள் அவன் சாஸனத்தில் போட்டுக் கொண்டிருக்கிற டைட்டிலுக்கு அசடு என்று அர்த்தம் பண்ணிக் களங்கம் உண்டாக்கிவிட்டார்கள் என்று நினைப்பது தப்பு. வேத தாத்பரியம் தெரியாதவனைத்தானே நம் ஆசாரியாள் ஸூத்ர பாஷ்யத்தில் தேவானாம் ப்ரியன் என்கிறார்? அசடு என்ற அபிப்ராயத்தில் இப்படிச் சொன்னார். ஆனால் அந்த அபிப்ராயத்தை விட்டுவிட்டு, வேதத்தை ஆட்சேபிக்கிறவன் எப்படிப்பட்டவனானாலும் அவனுக்கு இந்தப் பெயரைக் கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில், அவைதிக மதமான பௌத்தத்தைச் சேர்ந்த அசோக சக்ரவர்த்திக்கு ‘தேவானாம் ப்ரிய’ என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

வைதிக மார்க்கத்தை அநுஸரித்து உபநிஷத் வாயிலாக ஞானியாக ஆன ஒருவன், தேவதைகளைப் பீரிதி பண்ணும் யக்ஞத்தை விட்டு விடுவதால் அவன் தேவர்களுக்குப் பிரியமில்லாதவனாகி விடுகிறானென்றால், பௌத்தத்திலோ யாருமே யக்ஞம் பண்ணக் கூடாதாகையால், அவர்கள் எல்லோரையுமே தேவருக்குப் பிரியமாகாதவர்களாகத்தான் சொல்ல வேண்டும். ஆனாலும், “அவைதிக பௌத்தத்தை விசேஷமாக ஆதரித்த அசோகனை, ‘தேவானாம் ப்ரிய’ என்று சொல்லியிருக்கிறதே, ஏன்?” என்றால், அவன் வேதாந்தத்தின்படியான ஞானத்தை அடைந்து, தேவர்களுக்கு அப்பிரியமாக ஆகமாட்டான் என்பதை மட்டும் நினைத்து, இப்படிச் சூசகமாகப் பெயர் கொடுத்த மாதிரி இருக்கிறது. அதாவது நல்ல புத்தி சாதுர்யமுள்ளவனாகவும், தேவர்களுக்குப் பிரீதியாக உள்ள யக்ஞ கர்மாக்களைப் பண்ணாதவனாகவும் ஒருவன் அவைதிக பௌத்தம் போன்ற மதத்தில் இருந்தாலும் கூட, அவன் வேதாந்தம் சொல்லுகிறபடி ஞானியாக மாட்டான் என்ற அளவில், அவனையும் தேவானாம் ப்ரியன் என்று சொல்லுகிற வழக்கம் வந்திருக்கலாம்.

அல்லது, விஷயம் தெரியாத சில்பியோ ராஜாங்க அதிகாரியோ, ‘தேவானாம் ப்ரியன்’ என்றால் நல்ல பேராக, நல்ல அர்த்தமாகத் தெரிகிறதே என்று நினைத்து சாஸனத்தில் அப்படி வெட்டியிருக்கலாம்…

தேவானாம் ப்ரியனாக யக்ஞம் பண்ணிக் கொண்டிருப்பவன் ஞானியாக ஆகிக் கர்மாநுஷ்டானத்தை விட்டுவிட்டால் ‘நமக்கு ஒன்றும் கிடைக்காதே’ என்று தேவதைகள் பிரதிபந்தங்கள் (இடையூறுகள்) செய்வார்கள். ரிஷிகளின் தபஸைக் கலைப்பதற்கு ரம்பை, மேனகை முதலியவர்களை அனுப்புவார்கள் என்று புராணங்களில் பார்க்கிறோம்.

ஞானியாகும்வரையில் மனிதன் தேவதைகளுக்குரிய கர்மாக்களைச் செய்து கொண்டிருக்கிறான். அதற்காக, அவர்கள் மனிதனுக்கு நல்லது பண்ணுகிறார்கள். மழை பெய்யச் செய்கிறார்கள். அதற்காக ஹவிர்பாகம் கொடுக்க வேண்டும். நமக்கு இந்த உலகத்தில் ஒருவர் ஓர் உபகாரம் செய்தால் பிரதி உபகாரம் செய்ய வேண்டுமல்லவா? அதைப்போல மழைக்கும் செய்யவேண்டும். அதற்காகத்தான் யக்ஞம் செய்கிறோம். யாராவது ஒரு பிராம்மணர் தேவதைகளுக்கு ஹவிர்பாகம் கொடுக்கிறார். அவர் எல்லோருக்கும் பிரிதிநிதியாக இருந்து கொடுக்கிறார். யாராவது ஒருவர் வரி கொடுப்பதைப் போல் அவர் கொடுக்கிறார்.

ஆகவே ஞானியாகும் வரைக்கும் மனிதன் தேவதைகளுக்குப் பிரியமான கர்மாக்களைச் செய்து அவர்களுக்குப் பிரியமானவனாக இருக்கிறான். மாடு கறந்து பால் பெற்றுக் கொள்வது போலத் தேவர்கள் அவன் மூலம் லாபத்தை அடைகிறார்கள்.

மாடு கறப்பது இல்லையானால், அந்த மாட்டால் மனிதனுக்கு என்ன பிரயோஜனம்? அதுபோல மனிதன் பசுவைப்போல இருக்கிறவரையிலும் தேவதைகள் அவன் மேல் பிரியமாக இருப்பார்கள்; பசுவாயில்லாமற்போனால் வெறுப்பார்கள்: உபத்திரவப் படுத்துவார்கள். அதாவது இரண்டு அர்த்தப்படியும் மனிதன் தேவதைகளுக்குப் பசுவாக இருக்கிறான். அறிவில்லாதவன் என்ற அர்த்தத்தில் மாடு மாதிரி இருப்பதால்; கறவை நின்ற பசுவை நாம் ரக்ஷிக்காத மாதிரி கர்மாவை நிறுத்தினவனைத் தேவர்கள் ரக்ஷிக்காமல் விடுவதாலும் பசு மாதிரி!

தேவதை தனக்கு வேறல்ல என்று அறிவதே ஞானம். அதற்குத்தான் வேதாந்தம் வழி சொல்லிக் கொடுக்கிறது. கர்மாவும் தேவதா உபாஸனையுங்கூட நின்று போய், அனைத்தும் தானாகிவிடுகிற நிறைந்த நிலைக்கு வழி சொல்கிறது. அந்த வேதாந்தத்துக்கு நம் தேசத்தில் எத்தனை கௌரவம் இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு பெரிய அத்தாட்சி சொல்கிறேன்.

அனந்தமாக இருந்த வேதங்களில் ரிஷிகள் பிடித்துக் கொடுத்ததே ஓரளவுதான். ஆனால் அதுவுங்கூட கலிகால அற்பசக்தர்களால் அப்பியஸிக்க முடியாதது என்பதால், 1180 சாகைகளாகப் (கிளைகளாக) பிரித்து, இதில் ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், முடிவிலே உபநிஷத் என்று வைத்து, இதில் ஒன்றையாவது ஒருத்தன் அத்யயனம் பண்ணவேண்டும் என்று வைத்தார்கள். பிற்காலத்தில், இதிலும் அநேகம் வழக்கொழிந்து போய்விட்டன. பாக்கியையும் தீர்த்துக்கட்டிவிடுகிற நிலைமைக்கு இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நாம் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறோம்! அது இருக்கட்டும். நான் சொல்ல வந்தது, ஒவ்வொரு சாகையிலும் ஒரு உபநிஷத் இருக்கிறது. அம்மாதிரி, இப்போது பூர்ணமாக உள்ள சாகைகளில் இருக்கிற உபநிஷத்துக்களோடுகூடத் தற்போது பிரசாரத்தில் வேறு பல உபநிஷத்துக்களும் இருக்கின்றன. இந்த உபநிஷத்துக்கள் எந்தச் சாகையைச் சேர்ந்தனவோ, அந்தச் சாகையில் ஸம்ஹிதை, பிராம்மணம் முதலிய பாகங்கள் தற்போது அத்யயனம் செய்யப்படவில்லை. அவற்றில் பலவற்றின் ‘டெக்ஸ்ட்’ கூட நமக்கு அகப்படவில்லை. ஆனாலும், அவற்றைச் சேர்ந்த அந்த உபநிஷத்துக்கள் மட்டும் இன்று வரை அழியாமல் வந்திருக்கின்றன. உதாரணமாக ரிக் வேதத்தில் ‘சாங்காயன சாகை’ என்பதன் ஸம்ஹிதா பாகம் இப்போது அத்யயனத்தில் இல்லை; அதை இழந்து விட்டோம். ஆனாலும் அந்த சாகையின் முடிவிலே வருகிற கௌஷீதகீ உபநிஷத் மட்டும் இன்றைக்கும் நம்மிடையே ஜீவனோடு இருந்து வருகிறது. ரிக் வேதத்திலேயே ‘பாஷ்கல மந்த்ரோபநிஷத்து’ என்று ஒன்று நமக்கு வந்திருக்கிறது. அடையாறு லைப்ரரியில் இதன் சுவடிகள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இது எந்தச் சாகையின் முடிவில் வருகிறதோ, அந்த “பாஷ்கல சாகை” என்பதன் ஸம்ஹிதையைப் பற்றியோ பிராம்மணத்தைப் பற்றியோ நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ‘கடோபநிஷத்’ என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தில் கடசாகை என்பதைச் சேர்ந்தது. உபநிஷத் என்பது ஆரண்யகத்தின் கடைசியில் வருவது என்று முன்பே சொன்னேனல்லவா? ஆனால் இன்றைக்குக் கடோபநிஷத்து மிகவும் பிரஸித்தமாக, தசோபநிஷத்துக்களிலேயே ஒன்றாக இருந்த போதிலும், இதற்கான ஆரண்யகம் நமக்குக் கிடைக்கவில்லை. அதர்வ அத்யயனம் வட இந்தியாவில் சில பாகங்களில் கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொண்டிருப்பது தவிர, தக்ஷிண தேசத்தில் அடியோடு மறைந்து போய்விட்டிருக்கிறது. ஆனாலும், பத்து உபநிஷத்துக்களில் மூன்று (‘ப்ரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’) அதர்வ வேதத்தைச் சேர்ந்தவைகளாகவே இருக்கின்றன.

அதாவது கர்மாக்களுக்குப் பிரதானமாக இருக்கிற சாகா (சாகையின்) பாகங்கள் மறைந்து போகும்படி விட்டுவிட்டாலும், தத்வத்தை மட்டும் விடக்கூடாது என்று, நம் தேசத்தில் இப்படி ஞான உபாயமான உபநிஷத்துக்கள் பலவற்றை விசேஷமாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

உபநிஷத்துக்கள் ஏகப்பட்டன இருந்திருக்கின்றன. இருநூறு வருஷங்களுக்கு முன் காஞ்சீபுரத்திலே இருந்த ஒரு யதிகள் 108 உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். அவருக்கு ‘உபநிஷத் பிரம்மேந்திராள்’ என்றே பேர் ஏற்பட்டுவிட்டது. இன்னமும் அங்கே அவர்களுடைய மடம் இருக்கிறது.


1 IV.32-33.

2 ப்ருஹதாரண்யகோபநிஷத் IV.3.22

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s