சில கதைகளும் வாதங்களும்

அறுபத்து நான்கு வாதங்களை கங்கேச மிச்ரோபாத்யாயர் என்பவர் தமது ‘தத்வ சிந்தாமணி’யில் சொல்லியிருக்கிறார். இதுவரை தத்வ விஷயங்களில் மண்டையைக் குழப்பிக் கொண்டதால் இப்போது கொஞ்சம் கதை சொல்கிறேன். கங்கேசருடைய கதைதான்.

கங்கேசர் பூர்வத்தில் மஹா அசடாக இருந்தார். அவர் வங்காளத்தில் இருந்தவர். குலீன பிராம்மண குலத்தைச் சேர்ந்தவர். குலீனர் என்றால் நல்ல குலத்தில் உண்டானவர்கள் என்று அர்த்தம். நல்ல குலத்தில் பிறந்த இவர்களுக்கே மட்டமான பிராமணப் பெண்களையெல்லாம் கல்யாணம் செய்து கொடுத்து விடுவது வங்காளதேசத்து வழக்கம். அதனால் குலீனர் ஒருவர் ஐம்பது பேருக்கு மேல் கல்யாணம் பண்ணிக் கொள்வதுமுண்டு. கங்கேச மிச்ரர் ஒரு பெண்ணை மட்டும் கல்யாணம் பண்ணிக் கொண்டு மாமனார் வீட்டிலேயே இருந்தார். அசட்டுக்கு ஒரு பெண்ணுக்கு மேலே யார் கொடுப்பார்கள்?

வங்காளிகள் மத்ஸ்யம் சாப்பிடுவார்கள். வங்காளத்தில் ஆறு மாஸம் தேசமுழுவதும் பிரவாஹமாகவே இருக்கும். கறிகாய் போட இடமிருக்காது. அதனால் இந்த மாஸங்களில் மத்ஸ்யத்தை அவர்கள் உபயோகப்படுத்துவார்கள். கிழக்கு வங்காள தேசத்தார் அதை ‘ஜல புஷ்பம்’ என்றே சொல்லுவார்கள். அதாவது அது வெஜிடேரியன் உணவு என்று அர்த்தம்!

கங்கேசருடைய மாமனார் வீட்டில் அந்த ஸாமான் சமைப்பது வழக்கம். “மாப்பிள்ளை” என்று மரியாதையாகக் கூப்பிடாமல் கங்கேசரை “கங்கா” என்று எல்லோரும் கூப்பிடுவார்கள். அவர் அசடு என்பதால் அவர் இலையில் எலும்பை மட்டும் பரிமாறுவார்கள். மற்றவர்கள் இலையில் ஸத்தைப் பரிமாறுவார்கள். பிறகு அவரை எல்லோரும் பரிஹாஸம் செய்வார்கள்.

அது அவருக்குப் பொறுக்கவில்லை. ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லாமல் காசிக்குப் போய்விட்டார். அங்கே போய்ப் பத்து வருஷம் படித்தார். வீட்டிலுள்ளவர்கள், அசடு எங்கேயோ போய்விட்டதென்று பேசாமல் இருந்து விட்டார்கள்.

அவர் படித்து விட்டு வீட்டுக்கு வந்தார். எங்கேயோ சுற்றி அலைந்து வந்திருக்கிறது, இன்னமும் அசடாகவே இருக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள். வழக்கப்படி அஸ்தியை [மீன் எலும்பைப்] பரிமாறினார்கள். அப்பொழுது அவர் சொன்னார்:

“நாஹம் கங்கா: கிம்து கங்கேச மிச்ர:”

‘நான் கங்கா அல்ல; கங்கேச மிச்ரனாக்கும்’ என்று அர்த்தம். ‘அசட்டு கங்காவாக இருந்தால் – கங்கையிலேதான் அஸ்தியை கரைக்கிறதாலே – எனக்கும் அஸ்திபோடுவது நியாயந்தான்! ஆனால் இப்போது அந்த கங்கா பேருக்குப் பின்னாடி ‘மிச்ரா’ போட்டுக் கொள்கிற யோக்யதையோடு, படித்துப் பண்டிதனாகவாக்கும் வந்திருக்கிறேன்!’ என்று ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்து விட்டார்.

வேட்டகத்துக்காரர்களுக்கு அவர் பெருமை தெரிந்தது.

அந்த கங்கேசமிச்ரர்தான் பிறகு “நவ்ய ந்யாயம்” என்ற பெயரில் புத்துயிர் பெற்று எழுந்த ந்யாய சாஸ்திரத்தின் மூல புருஷராகித் ‘தத்வசிந்தாமணி’யை எழுதினவர். அதற்கு ரகுநாத சிரோமணி என்பவர் ‘தீதிதி’ என்று ஒரு வியாக்கியானம் எழுதி இருக்கிறார். அவர் காலத்திற்குப் பின்புதான் ‘சிரோமணி’ என்னும் பட்டம் வழக்கத்தில் வந்தது. கதாதரர் என்பவர் அதில் பத்து வாக்கியத்திற்கு வியாக்யானம் ஒரு பெரிய புஸ்தக ரூபமாக எழுதியிருக்கிறார். ஆனாலும் ஒரு வாக்கியங்கூட அதிகமாகத் தோன்றாது. ‘கதாதரியில் (கதாதரர் எழுதிய புஸ்தகத்துக்கு ‘கதாதரி’ என்று பெயர்) ஐந்து வாதம் வாசித்தால் அவன் புத்திசாலியாவான்; பத்து வாதங்கள் வாசித்தால் இன்னும் கெட்டிக்காரனாகிறான்; அதில் ப்ராமாண்யவாதம் என்ற ஒன்று இருக்கிறது; பிரமாணங்களைப் பற்றிய வாதமே ப்ராமாண்ய வாதம். அதை வாசித்தவன் எல்லோரையும் விடக் கெட்டிக்காரன் ஆகிறான்’ என்று சொல்வதுண்டு. ‘கதாதரி’யை இன்றும் தர்க்க சாஸ்திரம் படிப்பவர்கள் வாசித்து வருகிறார்கள்.

ப்ராமாண்ய வாதம் என்றேனே, அதைச் சொல்வதென்றால் மூளை குழம்பும். ஆனால் நம் ஆசார்யாள் அவதாரம் பண்ணிய காலத்தில் மண்டனமிச்ரரின் வீட்டு வாசலில் இருந்த கிளிகள்கூட இந்த பிராமாண்ய வாதத்தை ‘டிஸ்கஸ்’ பண்ணிக் கொண்டிருந்தனவாம்!

மண்டனமிச்ரரின் ஊரான மாஹிஷ்மதிக்கு சங்கர பகவத் பாதாள் போனார். அந்த ஊரில் நதியிலிருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு போகிற பெண்களைப் பார்த்து, “மண்டன மிச்ரரின் வீடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். அந்த ஊரிலே ஸாமான்ய ஸ்திரீகளுக்குக் கூட நிரம்பப் பாண்டியத்யம் இருந்தது. அதனால் ச்லோக ரூபமாகவே ஆசாரியருக்கு அவர்கள் பதில் சொன்னார்கள். இப்படி மண்டனமிச்ரரின் வீட்டுக்கு அடையாளம் சொல்வதாக அந்தப் பெண்கள் சொன்ன ச்லோகங்களில் ஒன்று-

ஸ்வத: ப்ரமாணம் பரத: ப்ரமாணம் கீராங்கனா யத்ர ச ஸங்கிரந்தே|
த்வாரஸ்த நீடாந்தர ஸந்நிருத்தா ஜாநீஹி தன்-மண்டன பண்டிதௌக:||

‘ஆதிகாலத்தில் இந்தியாவில் புருஷர்கள்தான் படிப்பறிவு பெற்றிருந்தார்கள்; பெண்களை மட்டம் தட்டி நிரக்ஷரகுக்ஷிகளாகவே அடைத்து வைத்திருந்தார்கள்’ என்று சொல்வது எவ்வளவு தப்பு என்பது இம்மாதிரியான நிகழ்ச்சிகளிலிருந்து தெரிகிறது. மனுஷப் பெண்கள் மட்டுமல்ல. கிளியிலே கூட பெண்களாக இருக்கப்பட்ட ‘கீராங்கனா’க்களும் சாஸ்திர ஆராய்ச்சி பண்ணினவாம். அதைத்தான் ச்லோகம் சொல்கிறது.

‘எந்த வீட்டு வாசலில் உள்ள பெண் கிளிகள் ‘ஸ்வத: ப்ரமாணம் – பரத: ப்ரமாணம்’ என்பவை பற்றி வாதம் பண்ணிக் கொண்டிருக்கின்றனவோ, அந்த வீடுதான் மண்டன மிச்ர பண்டிதருடையது என்று தெரிந்து கொள்வீராக! என்பது ச்லோகத்தின் அர்த்தம்.

மேலே நான் சொன்ன ப்ராமாண்ய வாதத்தில்தான் இந்த ‘ஸ்வத: ப்ராமண’மும் ‘பரத: ப்ரமாண’மும் வருகின்றன.

இத்தனை சொன்னபின் அது என்ன வாதம் என்றுதான் கொஞ்சம் பார்த்துவிடலாம். அதைப்பற்றி வேடிக்கையாக ஒரு கதை கூட உண்டு.

நம் தென் தேசத்தவர்களில் ஒருவர் தர்க்கம் வாசிக்கலாமென்று வங்காளத்தில் உள்ள நவத்வீபத்துக்குப் போனாராம். வங்காளத்தில்தான் தர்க்கம் வாசித்தவர்கள் அதிகம். நம் ஊரிலிருந்து போனவர் மஹாகவி. தம்முடைய கவித்வத்தினால் நம் ஊரில் நிறையப் பணம் ஸம்பாதித்தார். பின்பு பிராமாண்யவாதத்தை நேரே நவத்வீபத்திற்குப் போய் வாசிக்கலாமென்று போனார்.

வாசித்தார்.

ஆனால் ஒன்றும் ஏறவில்லை.

மேலும், பிரயத்னம் பண்ணிப் பார்த்தார். இதனால் அவருக்கிருந்த கவித்வ தாரை போய்விட்டது! தர்க்கத்தில் போய் முட்டிக் கொண்டதில் ஏற்கெனவே இருந்த கவித்வமும் போய்விட்டது. பணமும் போய்விட்டது. கவித்வமாவது இருந்தால் மறுபடி பணம் ஸம்பாதித்துக் கொள்ளலாம். அதுவும் போய்விடவே மிகவும் வருத்தப்பட்டார். பிராமாண்யவாதமும் வரவில்லை. ச்லோகம் பண்ணும் சக்தி கடைசியாகத் துளி மிஞ்சியிருந்ததைக் கொண்டு இப்படிப் புலம்பினாராம்:

நம: ப்ராமாண்ய வாதாய மத்-கவித்வ- (அ)பஹாரிணே|

‘என்னுடைய கவிதா சக்தியை அபஹரித்த பிராமாண்ய வாதத்திற்கு நமஸ்காரம்’ என்பது அதனுடைய அர்த்தம்!

இந்தப் பிராமாண்ய வாதத்தைத்தான் மண்டனமிச்ரர் வீட்டுக் கிளிகள் பேசிக்கொண்டு இருந்தன. அந்த வாதத்தைப் பற்றி நாம் கொஞ்சம் விசாரிப்போம்.

ஒரு வஸ்துவைப் பார்த்தால் அதைப்பற்றிய ஞானம் உண்டாகிறது. சில ஞானங்கள் சரியாய் இருக்கின்றன. சில தப்பாய் இருக்கின்றன. ஸ்படிகத்தைக் கற்கண்டு என்று நினைக்கிறோம். அது தப்பான ஞானம். கற்கண்டைக் கற்கண்டாக நினைப்பது சரியான ஞானம். சரியான ஞானத்தைப் ப்ரமா (prama) என்பார்கள். தப்பான ஞானத்தை ப்ரமா (bhrama) என்று சொல்லுவார்கள். ஸம்சயஞானம் என்றும் நிச்சய ஞானம் என்றும் இரண்டு விதம். இது சரியான அறிவா என்ற ஐயத்துடன் கூடியது ஸம்சயஞானம். ஐயமில்லாமல் உறுதியுடன் அறிவது நிச்சயஞானம். சில சமயங்களில் ஒன்று தப்பாக தோன்றினாலும் அப்போதைக்கு நிஜமாகத்தான் தோன்றுகிறது. அப்பொழுது இந்த ஞானம் பிரமாணம்தான் என்று தோன்றும்- ஸ்படிகக் கற்கண்டு மாதிரி. சில ஞானங்கள் தோன்றும் பொழுதே பொய்யாகத் தோன்றுகின்றன. குளத்திற்குள் தலைகீழாகத் தெரிகிற மரத்தின் பிரதி பிம்பத்தை அறியும் பொழுதே அது நிஜமல்ல, அப்ரமாணம் என்றும் தோன்றுகிறது. ஞானம் வரும் பொழுதே பிரமாணம் என்று தோன்றுவதும் அப்ரமாணம் என்று தோன்றுவதும் ஆக இரண்டு வகை. வரும் காலத்திலே இது நிஜந்தான் என்று வருகிற ஞானம் பிராமாண்ய க்ரஹ ஞானம்; தோன்றும் பொழுதே அப்ரமாணம் என்று தோன்றுவது அப்ரமாண்ய க்ரஹ ஆஸ்கந்தித ஞானம். ப்ரமை (pramai) யில் போலவே, ப்ரமை (bhramai) யிலும் பிரமாண ஞானம் உண்டு. அதனால்தான் ஸ்படிகத்தைக் கற்கண்டாக நினைக்கும்பொழுதும் நம்முடைய நினைப்பு பிரமாணமாகத் தோன்றுகிறது.

இப்படியாக ஒரு வஸ்து தோன்றும் போதே அது நிஜமானது (ப்ரமாணம்) அல்லது பொய்யானது (அப்ரமாணம்) என்றும் தோன்றுகிறதே, இந்த ப்ரமாண அப்ரமாண அறிவானது வஸ்துவைப் பார்க்கிற நம்முடைய ஞானத்திலிருந்து (subjective -ஆக) தோன்றுகிறதா, அல்லது (objective -ஆக) அந்த வெளி வஸ்துவிலிருந்து தோன்றுகிறதா? நம்மிலிருந்து தோன்றினால் ‘ஸ்வத: ப்ரமாணம்’. நாம் அறிகிற வஸ்துவிலிருந்து தோன்றினால் ‘பரத: ப்ரமாணம்’.

இந்த இரண்டில் எது சரி என்றுதான் மண்டனர் வீட்டுப் பெண் கிளிகள் வாதம் செய்தனவாம்.

நமக்கு உண்டாகும் ஞானம் பிரமாணமானது அல்லது அப்பிரமாணமானது என்று ஏற்படுகிற உறுதி நம் ஞானத்துள்ளேயே ஸப்ஜெக்டிவ்வாக இருப்பதில்லை. அது நாம் அறிகிற வஸ்துவிடமுள்ள குணத்தால் ஏற்படுவதுதான். அந்த வஸ்துவிடமிருந்து நடைமுறையில் பிரயோஜனம் அடைய முடிந்தால்தான் நம்முடைய ஞானம் சரியானது அல்லது தப்பானது என்று ஆகிறது. அதாவது நம் ஞானம் சரியா தப்பா என்பது ஆப்ஜெக்டிவ்தான் என்பதே நியாய சாஸ்திரத்தின் கருத்து. மண்டனமிச்ரர் போன்ற மீமாம்ஸர்களின் அபிப்ராயமோ இதற்கு மாறானது. நம் ஞானம் பிரமாணமானது என்கிற உறுதி நம்முடைய அறிவையே சேர்ந்த விஷயந்தான்; ஆனால் நம் ஞானம் பிரமாணமில்லை (அப்ரமாணம்) என்று தெரிவது வெளிவஸ்துவைப் பொறுத்த விஷயம்- “ப்ராமாண்யம் ஸ்வத: அப்ரமாண்யம் பரத:”- என்பது அவர்கள் கட்சி.

இந்த வாதங்களெல்லாம் தர்க்கத்தில் வரும்.

“வாதம்” என்றாலே இந்தக் காலத்தில், தான் சொன்னதே சரியென்று பிடிவாதம் பண்ணுவது என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் வாதமென்பது நாமும் பேசி எதிராளியையும் பேசவிட்டு இரண்டையும் ஆலோசித்துச் சீர்தூக்கி உண்மையை அறிவதுதான். அநேக இடங்களுக்குப் போய் மண்டனமிச்ரர் போன்றவர்களிடம் ஆசாரியாள் வாதம் செய்தார் என்பது இப்படித்தான்.

மற்றவன் சொல்கிறதையும் கேட்டே அவர் அத்வைதம் தான் சத்தியம் என்று முடிவு பண்ணினார். ஆகையால் வாதம் என்பது exchange of thoughts (பரஸ்பரக் கருத்துப் பரிவர்த்தனை) தான்; பிடிவாதம் இல்லை. நாம் சொல்வதே சரி என்று முதலிலேயே தீர்மானம் பண்ணிக்கொண்டு அதற்காகவே கட்சி கட்டிக் கொண்டு பேசுவதற்கு “ஜல்பம்” என்று பெயர்; “வாதம்” என்று இல்லை. மூன்றாவதாக இன்னொன்று இருக்கிறது: ஜல்பத்தில் உள்ள மாதிரி தனக்கென்று ஒரு கட்சி இல்லாமல், ஆனாலும் மற்றவர் எந்தக் கட்சியைச் சொன்னாலும் அதை ஆக்ஷேபித்து சண்டை போடுவதுதான் அது. அதற்கு ‘விதண்டை’ என்று பெயர். ‘விதண்டாவாதம்’ என்று இதிலிருந்துதான் வந்தது.

*      *     *

அசட்டு கங்கேசர் மஹாபுத்திமானாகி வங்காளத்துக்கு வந்ததிலிருந்து (கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து) நியாய சாஸ்திரம் புத்துயிர் பெற்றது. வங்காளத்தில் புதிதாக ஏற்பட்டு, பிற்பாடு விருத்தி அடைந்த இந்த சாஸ்திரத்திற்கு ‘நவ்ய-ந்யாயம்’ என்று பெயர் உண்டு. ‘நவ்யம்’ என்றால் ‘புதிதான’ என்று அர்த்தம். அந்தப் பெயர் ஏற்பட இன்னொரு காரணம் வங்காளத்தில் ‘நவத்வீபம்’ என்ற பாகத்திலேதான் கங்கேசரும், பிறகு அவரை அநுஸரித்து வந்தவர்களும் வாழ்ந்தனர். ‘நவத்வீபம்’ என்பதை ‘நதியாத்’ (nadiad) என்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் அந்தச் சீமையில் பிறந்தவர்தான். சைதன்யரும் மஹாவித்வான். சாஸ்திரங்களையெல்லாம் படித்தவர். அப்புறம் “கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று ஸங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டு, இந்த பஜைனைதான் மோக்ஷமார்க்கம் என்று ஸித்தாந்தம் செய்தார்.

லோகம் நிஜமானது, மாயை அல்ல, ஜீவாத்மாக்கள் பல உண்டு, பரமாத்மா வேறே என்கிற த்வைதமான அபிப்ராயங்களை நியாய சாஸ்திரம் சொன்னாலும், நிரீச்வர வாதத்தை ஆக்ஷேபித்து ஈச்வரனை நிலைநாட்டியதனாலும், அத்வைதமான யுக்திக்குப் போவதற்கு இதனுடைய வாதங்கள் அஸ்திவாரம் போட்டுக் கொடுப்பதாலும் உத்தமமான சாஸ்திரமாக இருக்கிறது.

நியாயம் நிரம்ப அறிவு வாதமுள்ள வேத உபாங்கமாக இருக்கிறதென்றால், இதற்கு அடுத்ததாகச் சதுர்தச வித்தைகளில் வருகிற ‘புராண’த்தைத்தான் இக்காலப் படிப்பாளிகள் ஒரே ‘superstitious’ [மூட நம்பிக்கைகளின் மயமானது] என்கிறார்கள். அதைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s