பல வரலாறுகளிடை தொடர்பு

ஒரு ஸ்தல புராணத்தில் இருக்கிற ஸம்பவத்தை ஸம்பந்தப் படுத்தி இன்னொன்றில் வருகிறது. இப்படிப் பல புராணங்களுக்கிடையே ஒரே கதையை தொடர்பு படுத்திச் சொல்லியிருக்கிறது; Inter-connected ஆகச் சொல்லியிருக்கிறது. எல்லாவற்றையும் சேர்த்துப் படித்தால்தான் முழுக்கதையும் தெரிகிறது. இம்மாதிரி ஒரு ஸ்தல புராணத்தில் விட்ட இடத்தில் இன்னொன்று தொடங்குவதாக அநேகம் இருப்பதே ஸ்தல புராணங்கள் பொய்யில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.

ஸ்தல புராணங்களுக்குள்ளே மட்டுமில்லாமல் 18 மஹாபுராணங்கள், உபபுராணங்கள் இவற்றில் பல அம்சங்களைக் கூட ஸ்தல புராணங்கள்தான் பூர்த்தி செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது இவற்றின் authenticity [நிஜத்தன்மை]யைப் பற்றி மேலும் உறுதியாகிறது.

உதாரணமாக: அம்பாளும் ஈச்வரனும் கைலாஸத்தில் சொக்கட்டான் ஆடினார்களாம். “நான்தான் ஜெயித்தேன்”, “நான்தான் ஜெயித்தேன்” என்று இரண்டு பேரும் அபிப்பிராய பேதமாகச் சொன்னார்களாம். பல தினுஸாக லோகத்துக்கு தர்மங்களை எடுத்துக் காட்டுவதற்காக ஸ்வாமியும் அம்பாளும் இப்படியெல்லாம் கூத்தடிப்பார்கள். அப்படித்தான் இப்போது அவர்களுக்குள்ளே கலகம் வந்து விட்டது. காசு வைத்து இந்த மாதிரிப் பந்தயம் ஆடினால் எவரும் ஒழுங்கு தப்பிப் போகும்படிதான் ஆகும் என்று காட்டுகிற மாதிரி, சொக்கட்டான் ஆட்டத்தின் முடிவில் கலகம் வந்ததாக ஆட்டம் போட்டார்கள்.

தன்னுடைய உடைமையையெல்லாம் பந்தயம் வைத்துத் தோற்றுப்போன ஸ்வாமிக்குக் கோபம் வந்து அம்பாளை, “நீ பூலோகத்தில் போய்ப் பசுவாகத் திரிந்து கொண்டிரு” என்று சாபம் கொடுத்து விட்டார். அவர் பசுபதி. வெறித்துத் திரிந்து கொண்டிருக்கிற இந்திரியங்களான பசுக்களை அடக்கி வைக்கிற பதி அவர். அஹங்காரம் பிடித்த ஜீவனுக்கு இந்த அநுக்ரஹத்தைப் பண்ணமாட்டார் என்று காட்டுவதற்காக ஸாக்ஷாத் பராசக்தியைப் போக்கிடமில்லாத பசுவாகத் திரிந்து கொண்டிருக்கும்படி ஆக்ஞை பண்ணி விட்டார்! மஹாசக்தியாக இருக்கப்பட்ட அம்பாளும், உடனே தன் தப்பை உணர்ந்து, அவருக்கு அடங்கிய பதிவிரதையாக – இந்தக் கற்பு நெறி உலகத்துக்குத் தெரிவதற்காக – ஒரு சாதாரணப் பசு மாடாக ஆகி பூலோகத்துக்கு வந்து திரிய ஆரம்பித்து விட்டாள்.

கோமாதா, குஹஜன்மபூ:” – என்று அம்பாளுக்கு ஸஹஸ்ரநாமாவில் பேர் சொல்லியிருக்கிறது. இப்படி கோமாதாவாக பூலோகத்துக்கு வந்து விட்டாள்.

மஹாவிஷ்ணு அவளுடைய அண்ணா அல்லவா? அந்தப் பாசம் அவருக்கு! மாப்பிள்ளை (ஈச்வரன்) அவளை விரட்டி விட்டார் என்றதும், ‘அவர் பசுபதியாக இருந்து ரக்ஷிக்காவிட்டால் போகட்டும்; தங்கையை நாம் ரக்ஷித்துப் பாதுகாப்பில் வைத்துக் கொள்வோம்’ என்று நினைத்து மஹாவிஷ்ணு மாட்டிடையனாக ஆகித் தானும் அம்பாளோடு வந்துவிட்டார். இடையனாகி பூலோகத்தில் அலைய வேண்டும் என்று இவருக்கு ஒரு சாபமும் இல்லை. ஆனாலும் ஸஹோதர வாத்ஸல்ய தர்மத்தைக் காட்டுவதற்காகத் தங்கையோடு கூடத் தாமும் வந்து விட்டார். இந்த அநுபவத்திலே ஏற்பட்ட ருசியினால்தான் கிருஷ்ணாவதார காலத்திலேயும் மாடு மேய்த்து ஸந்தோஷப் பட்டார். கோபாலன் என்றே பேர் வாங்கினார். ‘கோபாலன்’ என்றாலும் ‘பசுபதி’ என்றாலும் ஒரே அர்த்தம்தான். இந்தப் பெயர்களை ஆலோசித்துப் பார்த்தாலே சைவ-வைஷ்ணவ பேதம் போய்விடும். அது இருக்கட்டும்.

அண்ணாவும் தங்கையும் இப்படிக் கோனாராகவும், கோவாகவும் வந்த ஊர்தான் திரு அழுந்தூர். “தேரழுந்தூர்” என்று சொல்வது அதுதான். கம்பருடைய ஊர் அதுவே. ‘கம்பர்மேடு’ என்று இப்போதும் அங்கே இருக்கிறது. அங்கே [திருமங்கை] ஆழ்வார் மங்களாசாஸனம் பண்ணின கோயில் இருக்கிறது. பெருமாள் கோபால மூர்த்தியாகவே கர்ப்பக்ருஹத்தில் பசுவோடு கூட இருக்கிறார். பசுவுக்கு ஸகாவாக வந்ததால் அவருக்கு ‘கோஸகன்’ என்று பேர். கோஸக க்ஷேத்ரம் என்றே தேரழுந்தூருக்குப் பேர் இருக்கிறது. ‘கோ-ஸகர்’ என்பதை ‘ஆமருவியப்பன்’ என்று தமிழில் சொல்கிறோம். ‘ஆ’ என்றால் பசு.

அந்த ஊரில் வேதபுரீச்வரர் என்ற பெயரில் சிவனுக்கு கோயில் இருக்கிறது. ஓர் ஊர் என்று இருந்தால் ஒரு கோடியில் சிவன் கோயிலும் இன்னொரு கோடியில் பெருமாள் கோயிலும் இருக்கவேண்டும் என்பது பழைய கால சாஸ்திரப்படியான town-planning.

தேரழுந்தூரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு ஆழ்வார் பாடல் இருக்கிறதென்றால், ஈச்வரன் கோயிலுக்கு [ஞான சம்பந்தரின்] தேவாரம் இருக்கிறது.

ஆழ்வார்கள் பாடிய ஸ்தலங்களை ‘மங்களாசாஸனம் பெற்றவை’ என்பார்கள். தேவாரம் உள்ள க்ஷேத்ரத்தைப் ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ என்பார்கள். அநேக க்ஷேத்திரங்களுக்கு இந்த இரண்டு பெருமைகளும் இருக்கிறது. தேரழுந்தூருக்கும் இருக்கிறது.

பசுவாக வந்த அம்பாளை மஹாவிஷ்ணு புல் மேல் மேயவிட்ட இடங்கள் தேரழுந்தூருக்கு பக்கத்திலேயே பில்லூர் (‘புல்’ என்பதைத் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் ‘பில்’ என்றுதான் சொல்லுவார்கள்), மேக்கிரி மங்கலம் என்ற பெயர்களில் இருக்கின்றன. ஆன் ஆங்கூர் என்பதும் இன்னொரு பக்கத்துக்குக் கிராமம். அதுவும் பசு திரிந்ததற்கு அடையாளமாகப் பேர் வைத்துக் கொண்டிருக்கிறது! (ஆன்-பசு).

பசு புல் மேயும். கோனார் மேய விட்டுக் கூடப் போய் பாதுகாப்பார். அம்பாளும், மஹாவிஷ்ணுவும் ஈச்வர ஆராதனை பண்ண வேண்டுமல்லவா? அதற்காகத்தான் கோஸக க்ஷேத்திரத்தில் பெருமாள் வேதபுரீச்வரரைப் பிரதிஷ்டை பண்ணினார். (வேதபுரீச்வரர் கோயில், ஆமருவியப்பன் கோயில் இரண்டும் ஒரே மானேஜ்மென்டில்தான் இருக்கிறது.)

வேதத்துக்கு கோ ரொம்பவும் அவசியம். யாகத்துக்கு வேண்டிய நெய், பால் முதலானவற்றைத் தரும் கோ, யாகத்தைப் பண்ணி வைக்கும் பிராம்மணர்கள் இருவரும் வேத மதம் விளங்குவதற்குக் குறிப்பாக இருக்க வேண்டும். ‘கோ-ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்’ என்றும் ‘வாழ்க அந்தணர் வானிவர் ஆனினம்’ என்றும் இதனால்தான் சொல்லியிருக்கிறது.

அம்பாள் ‘கோ’ வாக வந்த இடத்தில், அவளைப் அப்படிச் சபித்தவர் வேதபுரீச்வரராக வந்தார். அந்த ஊரில் ஸமீப காலம் வரை வேத சாஸ்திர வ்யுத்பன்னர்கள் [விற்பன்னர்கள்] நிறைய இருந்திருக்கிறார்கள். “அழுந்தை மறையோர்” என்று அவர்களை சம்பந்தர் தேவாரத்தில் திரும்பத் திரும்பப் போற்றியிருக்கிறார்.

இந்த ஊர்ப் பெருமாளையே ஆழ்வார் ரொம்பவும் வேத சம்பந்தமுள்ளவனாக, “சந்தோகா! பௌழியா! தைத்திரியா! சாமவேதியனே! நெடுமாலே!” என்று கூப்பிடுகிறார்.

ஒரு நாள் மேய்ச்சலின் போது பசுவின் குளம்பு இடித்து பூமிக்குள்ளிருந்து ஒரு கல் வந்தது. பார்த்தால் சிவலிங்கமாய் இருந்தது. இப்படிப் பெரிய சிவ அபராதம் பண்ணி விட்டதால் பசு மிரண்டு ஒடியது. மஹாவிஷ்ணு அதை சமாதானப் படுத்தி அழைத்து வந்தார். அந்த இடத்துக்கு “திருக்குளம்பியம்” என்று பெயர் இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த மஹாவிஷ்ணுவுக்கு ரொம்பவும் வேதனை உண்டாயிற்று. ஏதோ ஒரு விளையாட்டில் தன் ஸஹோதரி அஹங்காரப்பட்டதற்காக இத்தனை விபரீதங்கள் வந்து விட்டதே என்று ரொம்பவும் வருத்தப்பட்டார்.

ஸுந்தரேச்வரருக்கு மீனாக்ஷியை மஹாவிஷ்ணுதான் தாரை வார்த்துக் கொடுத்தார். அந்த மாதிரி இங்கேயும் தங்கையை எப்படியாவது ஈச்வரன் மறுபடியும் சேர்த்துக் கொள்ளும்படியாக பண்ணவேண்டும் என்று மஹாவிஷ்ணு பிரார்த்தனையும் பூஜையும் பண்ணிக் கொண்டிருந்தார்.

ஈச்வரன் மனஸுக்கு, திருப்தி உண்டாயிற்று. மஹாவிஷ்ணுவிடம், “நீ இப்படியே அவளை (பசுவாக இருக்கிற அம்பாளை) மேய்த்துக் கொண்டே போய்க் காவேரியில் ஸ்நானம் பண்ணுவித்து எழுப்பு. பழைய ரூபம் வரும். அப்புறம் நானே வந்து எப்போது கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்பதைச் சொல்கிறேன்” என்றார்.

அவர் சொன்னப் பிரகாரமே கோஸகர் பசுவைக் காவேரி ஸ்நானம் பண்ணுவித்து, திரும்ப அது அங்கிருந்து போய் அடைந்த ஊரைத்தான் இப்போது ‘திருவாவடுதுறை’ என்கிறோம். ‘ஆ-அடு-துறை’ தான் அது. எந்தக் காவேரித் துறையிலே ஆ (பசு) நீராடிக் கிட்டே போய்ச் சேர்ந்தோ (‘ஆ-அடு’ என்பதில் வரும் ‘அடுதலு’க்குக் கிட்டே போய்ச் சேருதல் என்று அர்த்தம்) அந்த ஊர் என்று அர்த்தம். (திருமூலர் ‘திருமந்திரம்’ செய்ததால் பெருமை படைத்த ஊர் இந்தத் திருவாவடுதுறைதான். ஊர்ப் பேருக்குப் பொருத்தமாகத் திருமூலரும் செத்துப் போன ஒரு இடையனின் உடம்புக்குள்ளே பரகாயப் பிரவேசம் பண்ணியிருக்கிறார்!)

அங்கே ஈச்வரன் வாக்குப்படியே அம்பாளுக்குப் பசுரூபம் மறைந்து ஸ்வய ரூபம் வந்தது. ஈச்வரனும் பிரத்யக்ஷமானார். ஆனால் இன்னும் கொஞ்சம் ஆட்டம் போட நினைத்தார். பக்கத்திலே குற்றாலம் என்ற ஊரில் (இது திருநெல்வேலி குற்றாலமில்லை. அருவி விழுகிறதே அந்த ஊர் இல்லை. இது தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்துக்குப் பக்கத்தில் இருப்பது. ‘திருத்துருத்தி’ என்பது இதற்குப் பழைய பெயர். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடியுள்ள 44 க்ஷேத்ரங்களில் அது ஒன்று.) அந்த ஊரிலே அம்பாளைப் பெண்ணாக வளர்க்க வேண்டும் என்று ஒரு ரிஷி தபஸ் பண்ணிக் கொண்டிருந்தார். ‘அம்பாள் பூலோகத்துக்கு வந்ததுதான் வந்தாள். ரிஷியுடைய இஷ்டத்தை பூர்த்தி செய்வதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தையே ‘யூடிலைஸ்’ பண்ணிக் கொண்டு விடலாமே!’ என்று ஈச்வரன் நினைத்தார். இல்லாவிட்டால் அவளை மறுபடி ஒரு தடவை அல்லவா பூலோகத்துக்கு அனுப்ப வேண்டிவரும்?’

அதனால் ஈச்வரன் அம்பாளிடம், “நீ போய் திருத்துருத்தியில் அந்த ரிஷியின் பெண்ணாகக் கொஞ்ச காலம் இருந்து வா. அப்புறம் நான் வந்து கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்” என்றார்.

அம்பாளும் அப்படியே செய்தாள்.

அப்புறம் ஸ்வாமி அங்கே பிரஸன்னமானார். கோஸக க்ஷேத்ரத்தில் வாக்குக் கொடுத்தவரே இங்கே வந்தார் என்பதற்கு ஒரு உட்சான்றாக இங்கேயும் ஸ்வாமிக்குப் பேர் வேதேச்வரர் என்று இருக்கிறது.

அந்த ரிஷியும், இந்தக் கல்யாணத்துக்காகவே காத்துக் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவும் ஈச்வரனை எதிர்கொண்டு அழைத்த ஊருக்கு ‘எதிர்கொள்பாடி’ எனறு பேர் ஏற்பட்டுவிட்டது.

கல்யாணத்துக்கு முன்னால் ‘வ்ரதம்’ என்று பண்ணுகிற ஹோமத்தை ஈச்வரன் பக்கத்தில் ஒரு ஊரில் செய்தார். அதனால் அதற்கு ‘வேள்விக் குடி’ என்றே பேர் உண்டாயிற்று.

அப்புறம் எங்கே அவர் அம்பாளைக் கல்யாணப் பெண்ணாகப் பார்த்து பாலிகை தெளித்தாரோ அந்த ஊர் ‘குறுமுளைப்பாலி’ என்று வழங்கி வருகிறது.

அப்போது இரண்டு மூன்று கிராமங்களையே அடைத்துப் பெரிதாக கல்யாணப் பந்தல் போட்டார்களாம். அதற்கு நடுமத்யமாக இருக்கிற ஊருக்கு ‘திருமணஞ்சேரி’ என்றே பெயர் இருக்கிறது. அங்கேதான் ஸாக்ஷாத் பார்வதி-பரமேச்வரர்களுக்குத் திருக்கல்யாணம் பண்ணி வைத்து மஹாவிஷ்ணு மனங்குளிர்ந்தார்.

இப்போது நான் சொன்ன இந்தக் கதையில் அஹம்பாவம் கூடாது, சூதாட்டம் கூடாது, பதியின் வாக்குக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், ஸஹோதர வாத்ஸல்ய பரிபாலனம் முதலான அநேக தர்மங்கள் வெளியாவதால் ஸ்தல புராணங்களை உபயோகமில்லாதவை என்று ஒதுக்குவது எவ்வளவு தப்பு என்று தெரிகிறது. அது மட்டுமில்லை. நான் கதை சொன்னதும் இதை நினைத்து இல்லை. இந்த ஒரு கதைக்குள்ளே துண்டு துண்டாக ஒரு ஏழெட்டு ஸ்தல புராணங்கள் சேர்ந்திருக்கின்றன. ஒன்றுவிட்ட இடத்தில் இன்னொன்று ஆரம்பிக்கிறது. எல்லாம் சேர்ந்தால்தான் கதை பூர்ண ரூபம் பெறுகிறது.

தேரழுந்தூர், பில்லூர், ஆனாங்கூர், திருக்குளம்பியம், திருவாவடுதுறை, குற்றாலம், எதிர்கொள்பாடி, வேள்விக்குடி, குறுமுளைப்பாலி, திருமணஞ்சேரி என்று இத்தனை ஊர்களைப் பற்றிய ஸ்தல புராணங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கதையை உருவாக்கியிருப்பதால் அந்தக் கதை நிஜந்தான் என்று ஆகிறது. அநேகமாக அந்த ஸ்தலங்களின் பேரிலேயே ‘எவிடென்ஸ்’ இருக்கிறது.

இதைவிடத் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு அதிகம் தெரிந்த ஒரு கதை கும்பகோணத்தையும் அதன் சுற்றுப்பட்ட க்ஷேத்ரங்களையும் இணைக்கிறது:

பிரளயத்தின் போது பிரம்மா அடுத்த சிருஷ்டிக்கான பீஜங்களை அமிருதத்தில் வேத சப்தங்களோடு சேர்த்து ஒரு மண் கும்பத்தில் (குடத்தில்) போட்டு அதற்கு யதோக்தமாக மாவிலை, தேங்காய் வைத்துப் பூணூல் போட்டு மேரு உச்சியில் வைத்துவிட்டார். பிரளய வெள்ளத்தில் அது மிதந்து வந்தபோது பரமேச்வரன் மறுபடி சிருஷ்டியை ஆரம்பித்து வைக்கவேண்டுமென்று நினைத்தார். அப்போது கும்பத்தின் மேலே வைத்திருந்த தேங்காய் புயலின் ஆட்டத்திலே சரிந்து விழுந்து விட்டது. உடனே பிரளய வெள்ளத்திலிருந்து அந்தப் பிரதேசம் வெளியிலே வந்துவிட்டது. தேங்காய் விழுந்த இடத்திற்குக் கிட்டேதான் பிற்பாடு அமிருதம் மஹாமகக் குளமாகப் பெருகிற்று. இப்போதும் அங்கே ஸ்வாமிக்கு நாரிகேளேச்வரர் என்று பெயர் இருக்கிறது. (நாரிகேளம் என்றால் தேங்காய்.) அவர் மேற்குப் பார்க்க இருப்பதால் ‘அபிமுகேச்வரர்’ என்கிறார்கள். அப்புறம் மாவிலை விழுந்தது. அந்த இடமும் பிரளயத்தை மீறிக் கொண்டு பூப்பிரதேசமாக வெளியில் வந்தது. கும்பகோணத்திற்கு வடமேற்கே நாலு மைலில் உள்ள ‘திருப்புறம்பயம்தான்’ அது. ‘பயம்’ என்றால் ‘பயஸ்’ – ஜலம், அதாவது பிரளயம்; ‘புறம்’ – புறம்பாக இருப்பது. பிரளயத்துக்குப் புறம்பாக அதை மீறி இருப்பது திருப்புறம்பயம். அப்புறம் பூணூலும் இப்படியே விழுந்தது. அது மஹாமகக்குளத்தின் கிட்டே ஒரு இடம். அங்கேயுள்ள கோவிலில் ஸ்வாமி பெயர் ‘ஸூத்ரநாதர்’ என்றே இருக்கிறது. ஸூத்ரம் என்றால் பூணூல். ‘உபவீதம்’ என்றாலும் பூணூல். அதனால் ‘உபவீதேச்வரர்’ என்றும் சொல்வதுண்டு. அங்கே கௌதம மஹரிஷி பூஜை செய்ததால் ‘கௌதமேச்வரர்’ என்றே அதிகம் வழங்குகிறது.

இந்த கும்பத்துக்கு வாயைத் தவிர மூக்கும் இருந்தது, கிண்டி, கமண்டலு முதலியவற்றுக்கு இருப்பது போல! நான் வைத்துக் கொண்டிருக்கிற கடத்துக்குக் கூட மேல் பக்கம் வாய் இருப்பதோடு, பக்கவாட்டில் மூக்கும் இருக்கிறதல்லவா? கடம் அல்லது குடத்தை உள்ளே நிரப்புவதற்கு வாய் வழியாக ஜலம் விடவேண்டும். அதிலிருந்து ஜலத்தை வெளியில் விடவேண்டுமானால் மூக்கு வழியாகத்தான் விடவேண்டும். இம்மாதிரி சாஸ்திரோக்தமான குடமாகவே அந்த அமிருத கடமும் இருந்திருக்கிறது. பரமேச்வரன் பார்த்தார் – கும்பம் தானாகக் கவிழ்ந்து சிருஷ்டி பீஜமும் அமிருதமும் வெளியில் வராததால் தாம் பாணத்தினால் அடித்துக் கும்பத்தை உடைத்து அவற்றை வெளிப்படுத்தி விடுவது என்று தீர்மானம் பண்ணினார். உடனே பாணத்தையும் போட்டார். பாணபுரி என்ற ‘பாணத்துறை’யான அந்த இடத்தைத்தான் இப்போது ‘வாணாதுறை’ என்கிறார்கள். அங்கே ஸ்வாமிக்குப் பேர் பாணபுரீச்வரர். குடத்தின் வாய் சிதறி விழுந்த இடம் (குடவாசல்) என்று பெயர் பெற்றது. ஆனால் சாஸ்திரோக்தமாக மூக்கு வழியாக அமிருதம் வெளி வரவேண்டும் என்று ஸ்வாமி நினைத்ததால் மூக்கு உடைந்து அமிருதம் வெளிவந்த க்ஷேத்திரமே மற்ற க்ஷேத்திரங்களைவிடப் பெருமை உடையதான ‘கும்பகோணம்’ ஆயிற்று. ‘கோணம்’ என்றால் மூக்கு. கும்பத்தின் கோணம் விழுந்து இடம் ‘கும்பகோணம்’. ‘குடமூக்கு’ என்பதே அதற்குத் தேவாரத்தில் உள்ள பெயர். அங்கே லிங்கமாக அந்த மண் கலயமே வைக்கப்பட்டு விட்டது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. கவசம் போட்டுத்தான் அதற்கு அபிஷேகம் நடக்கிறது. ‘கும்பேச்வரர்’ என்று பெயர். அமிருதம் விழுந்த இடம்தான் மஹாமகக் குளம்.

இது அமிருதம் வெளிவந்த க்ஷேத்ரம் என்பதற்குப் பொருத்தமாக இங்கேயுள்ள சார்ங்கபாணிப் பெருமாளை “ஆரா அமுதன்” என்றே ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள்! வைஷ்ணவர்கள் கும்பகோணத்தைக் குடந்தை என்பார்கள்.

இப்படிப் பல க்ஷேத்ரங்கள் inter-connected ஆக இருந்து கொண்டு ஸ்தல புராணங்கள் நிஜந்தான் என்று உறுதிப்படுத்துகின்றன. திருவழுந்தூர், கும்பகோணம் குறித்த பல க்ஷேத்திரங்கள் ஒன்றுக்கொன்று கிட்டக் கிட்ட இருப்பவை. இவை ஒரு நாலைந்து மைல் ரேடியஸுக்குள் அகப்பட்டு விடும்.

இதைவிட விஸ்தாரமான ஸ்கேலில் தூர தூர இருக்கிற க்ஷேத்திரங்களின் பரஸ்பர ஸம்பந்தத்தைச் சொன்னால், ஸ்தல புராணங்கள் கட்டுக்கதை இல்லை என்று இன்னும் திடமாகத் தெரியும். சொல்கிறேன்.

ராமேச்வரம், வேதாரண்யம், பட்டீச்வரம் என்ற மூன்று க்ஷேத்ரங்கள் மேலே சொன்னவை மாதிரிக் கிட்டே கிட்டே இருப்பவை அல்ல. ராமேச்வரம் ராமநாதபுரம் ஜில்லாவில் தெற்கு ஸமுத்ரகோடியில் இருக்கிறது. வேதாரண்யம் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கோடியில் ஸமுத்ரகரையில், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இருக்கிறது. அதே ஜில்லாவில், ஆனால் அதற்கு ரொம்பவும் தள்ளி கும்பகோணத்துக்குப் பக்கத்தில் பட்டீச்வரம் இருக்கிறது. இப்படி ஒன்றுக் கொன்று தூரத்தில் உள்ள ஸ்தலங்களில் ஒரே வரலாறு சரடு மாதிரி இழையோடுகிறது என்றால் அதைப் பொய்யென்று சொல்ல முடியாதுதானே?

இந்த மூன்று ஊர்களிலும் ஈச்வரன் கோயிலில் ‘ராமலிங்கம்’ என்ற பெயரில் லிங்கம் இருக்கிறது. மூன்றும் மஹா க்ஷேத்ரங்கள். ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் ஸம்பந்தமுள்ள க்ஷேத்திரங்கள் என்ற மகிமை அவற்றுக்கு இருக்கின்றன. அதோடுகூட இந்த மூன்று இடங்களிலும் நாராயணாவதாரமான ஸ்ரீராமன் லிங்கப் பிரதிஷ்டை பண்ணியிருக்கிரார் என்பதால் சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கும் இவை பலம் கொடுப்பதாக இருக்கின்றன. இதல்லாமல் மற்ற விசேஷங்களும் கொண்ட க்ஷேத்ரங்களாக இவை இருக்கின்றன.

பாரத தேசத்தின் நாலு கோடிகளில் உள்ள நாலு முக்ய க்ஷேத்திரங்களான “சார்-தாம்” எனப்படும் சதுர் தாமங்களில் (வாஸ ஸ்தானங்களில்) ராமேச்வரம்தான் தக்ஷிணத்துக்குரிய பெரிய க்ஷேத்ரமாக இருக்கிறது. வடக்கே பத்ரிநாதம், மேற்கே ஸோமநாதம், கிழக்கே [புரி] ஜகந்நாதம், தெற்கே ராமநாதம் என்பவையே சார்தாம். வேதாரண்யம் சுதந்திரப் போராட்டத்தின் போது உப்பு ஸத்தியாக்ரஹம் நடந்த ஊர். ‘திருமறைக்காடு’ என்பதாக மூவர் தேவாரமும் பெற்ற ஸ்தலமாக அது இருக்கிறது. இங்கே வேதங்கள் ஈச்வரனைப் பூஜித்து திருக்காப்பு செய்த கதவைத் திறக்கும்படியாக அப்பர் ஸ்வாமிகள் பதிகம் பாடினார். திருஞான ஸம்பந்தர் பாடல்பாடி மறுபடி மூடும்படிச் செய்தார். பட்டீச்வரம் என்பது காமதேனுவின் நாலு பெண்களில் ஒன்றான பட்டி பூஜித்த க்ஷேத்ரம். மேலே திருஆவடுதுறையில் சொன்னது போல, பசு பூஜித்த க்ஷேத்ரங்கள் அநேகம் உள்ளன. திருஆமாத்தூர் என்று பண்ருட்டியருகே அப்பரோடு ஸம்பந்தமுள்ள ஸ்தலம் இருக்கிறது. அங்கேயும் பசு பூஜித்திருக்கறது. அப்படிப்பட்ட ஒரு ஊர் பட்டீச்வரம். ஞான ஸம்பந்தமூர்த்தி – குழந்தை – நல்ல வெயிலில் ஈச்வர நாமாவைச் சொல்லிக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டு வருவதைப் பார்த்து ஈச்வரனே மனமுருகி பூதங்களைக் கொண்டு ஸுப்ரமண்ய அவதாரமான அந்தப் பிள்ளைக்கு ஊர் பூராவும் முத்துப் பந்தல் போட்டு வெயில் தெரியாமல் வரவழைத்துக் கொண்டு க்ஷேத்திரம் பட்டீச்வரம். நானூறு, நானூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் தஞ்சாவூரிலிருந்து ஆண்டு வந்த நாயக ராஜாக்களுக்கு மந்திரியாக இருந்த மஹான் கோவிந்த தீக்ஷிதருக்கு இந்த ஊரில் ஒரு தனியான வசீகரம் இருந்தது. இந்தக் கோயிலுக்கு அவர் விசேஷமாகத் திருப்பணிகள் செய்திருக்கிறார். அம்பாள் ஸந்நதியில் அவருக்கும் அவருடைய பத்தினிக்கும் பிம்பங்கள் இருக்கின்றன.

ராமலிங்க ஸம்பந்தத்துக்காக இந்த மூன்று க்ஷேத்ரங்களைப் பற்றிச் சொல்ல வந்தேன்.

அகஸ்தியர் திருக்கல்யாணக் காட்சி கண்ட இடம் என்று ஒரே ஸம்பவத்தையே பல க்ஷேத்ரங்களில் சொல்வது மாதிரி இல்லை, இந்த மூன்று ஸ்தலங்களில் உள்ள ராமலிங்கப் பிரதிஷ்டை. ஒவ்வொரு பிரதிஷ்டைக்கும் வெவ்வேறு காரணம் இருக்கிறது.

ராவணனைக் கொன்றதால் ராமருக்கு மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. முதலாவது, ராவணன் விச்ரவஸ் என்ற மஹரிஷியின் பிள்ளையானதால் பிராம்மணன் என்பது. அவனை ஸம்ஹாரம் செய்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிற்று. சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி இந்த தோஷத்தை அவர் போக்கிக் கொண்ட இடந்தான் ராமேச்வரம்.

இப்போது ராம ராவண யுத்தத்தை ஆரிய திராவிடச் சண்டை என்று சில பேர் சொல்வது அடியோடு தப்பு என்பதற்கு இதைவிட வேறு proof (சான்று) வேண்டாம். ராமாயணத்தைப் பொய் என்று தள்ளினால் ராம ராவண யுத்தத்தையும் அடியோடு தள்ளத்தான் வேண்டும். இந்த யுத்தத்திற்கு மட்டும் historical basis [சரித்திர அடிப்படை] இருக்கிறது என்று சொல்லக் கூடாது. ராமாயணம் நிஜம் என்று ஒப்புக் கொண்டால் அதிலே ராவணனைப் பற்றி திரும்பத்திரும்ப ரிஷிபுத்ரன், வேதாத்யயனம் பண்ணினவன், ஸாமகானம் செய்தே பரமேச்வரனை திருப்திப்படுத்திக் கைலாஸத்துக்கு அடியிலிருந்து மீண்டவன் என்றெல்லாம் சொல்லியிருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ‘எங்களுக்குப் பிடித்ததை மட்டும் ஒப்புக் கொள்வோம். பாக்கியெல்லாம் கட்டுக்கதை’ என்றால் அது முறையான வாதத்தில் சேராது.

ராமாயண புஸ்தகத்தில் எழுதி வைத்தது இருக்கட்டும். பிரத்யக்ஷமாகத் தெரிகற மாதிரி இந்த லோகத்திலேயே மிகப்பெரிய பிரகாரங்களோடு ராமேச்வரத்தில் கோவில் இருக்கிறது. சரித்திரக்காரர்களே ஒப்புக் கொள்கிறபடி ஆயிரக்கணக்கான வருஷங்களாக அங்கே ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காகப் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்று ராமநாத ஸ்வாமியைச் சொல்லி தேசம் பூராவும் வழிபட்டு வந்திருக்கிறது. இதனால் ராவணன் பிராம்மணன் என்ற நம்பிக்கைக்கு மாறாகத் தமிழ் நாட்டில் பூர்விகர்கள் நினைத்ததேயில்லை என்று தெரிகிறது.

ராவணன் பிராம்மணன் என்பது மட்டுமில்லை. அவன் மஹாவீரன். லோகங்களெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கும் படியாகப் பண்ணினவன். கார்த்தவீர்யார்ஜுனனையும் வாலியையும் தவிரத் தான் சண்டை போட்ட அத்தனை பேரையும் ஜயித்தவன். இப்படிப்பட்டவனைக் கொன்றதால் வீரஹத்தி தோஷமும் ஸ்ரீராமனுக்கு உண்டாயிற்று. இந்த தோஷத்துக்குப் பிராயசித்தமாகத்தான் ராமர் வேதாரண்யத்தில் ராமலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.

பிராம்மணன், வீரன் என்பது தவிர ராவணனுக்கென்று வேறு பெருமைகளும் உண்டு. அவன் நல்ல சிவபக்தன். வீணை வாசித்துப் பாடுவதில் நிபுணன். இம்மாதிரி நல்ல அம்சங்களை ‘சாயை’ என்பார்கள். ‘சாயை’ என்றால் ஒளி, நிழல் என்று இரண்டு அர்த்தமும் உண்டு. ‘மரகத சாயே’ என்று மீனாக்ஷியைச் சொல்கிற போது ‘மரகதம் போன்ற ஒளி உடையவளே’ என்று அர்த்தம். ஒளி என்பது பெருமை வாய்ந்த குணங்களையெல்லாம் குறிப்பிடும். சாயை (பெருமை) உடைய ராவணனை வதம் செய்ததால் ராமருக்கு சாயாஹத்தி என்ற மூன்றாவது தோஷம் உண்டாயிற்று. இது தீருவதற்காகத்தான் அவர் பட்டீச்வரத்தில் ராமலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜை பண்ணினார்.

சாஸ்திரப்படி பார்த்தால் ராவணனை ஸம்ஹரித்த மநுஷ்யருக்கு பிரம்மஹத்தி, வீரஹத்தி, சாயாஹத்தி என்ற மூன்று தோஷங்கள் ஏற்பட்டுத்தான் இருக்கவேண்டும். பதித பாவனான ராமசந்திரமூர்த்திக்கு வாஸ்தவத்தில் தோஷமே ஏற்பட முடியாதுதான். எவன் பெயரை ஸ்மரித்தாலே ஸமஸ்த மஹா பாபங்களும் ஒடிப் போகுமோ அப்படிப்பட்ட தாரக நாமனான ராமன் தனக்கே பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டியதே இல்லைதான். ஆனாலும் அவர் இந்த பூலோகத்தில் ‘ஐடியல்’ மநுஷ்யராக வாழ்ந்து காட்டவேண்டும் என்றுதான் நரவேஷம் போட்டுக் கொண்டு வந்திருந்தார். ஒவ்வொரு சின்ன காரியத்துக்குங்கூட சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்துப் பார்த்தே அந்தப் பிரகாரம் பண்ணினார். சாஸ்திர தர்மங்களைத் துளிக்கூட வழு இல்லாமல் பண்ணிக் காட்டுவதில் ராமரை மிஞ்சி இன்னொருத்தர் கிடையாது. ராமாயணத்தில் எங்கே பார்த்தாலும் இந்த குணாதிசயத்தைப் பார்க்கிறோம். தம்மை ஸாதாரண மநுஷ்யராகவே வைத்துக் கொண்டு, மநுஷ்யர்களுக்கு சாஸ்திரத்தில் என்னென்ன தர்மங்கள், விதிகள், பிராயச்சித்தங்கள் சொல்லியிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் விடாமல் செய்தார். ஆகவே ஒவ்வொரு அல்ப காரியத்துக்குங்கூட சாஸ்திரத்தைப் பார்த்து அதன்படி பண்ணின ராமன் இந்த மூன்று பெரிய தோஷங்களுக்கு மட்டும் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளாமல் இருந்திருப்பாரா? அப்படிச் சொல்வது கொஞ்சங்கூடப் பொருத்தமில்லை. அதனால் வால்மீகி ராமாயணத்தில் இது என்னவோ விட்டுப் போய்விட்டது என்றுதான் ஆகிறது. அதிலே விட்டுப் போன குறையைத்தான் ராமேச்வரம், வேதாரண்யம், பட்டீச்வரம் ஆகிய ஊர்களுக்கான ஸ்தல புராணங்கள் பூர்த்தி செய்கின்றன.

‘இது ராமாயணத்தில் இல்லை; அதனால் ஏதோ அத்தைப்பாட்டிக் கதை’ என்று நினைப்பது தப்பு. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் குணத்தை நன்றாக ஆழ்ந்து அநுபவித்துப் பார்த்தால் அவர் இந்த மூன்று பிராயச்சித்தங்களைப் பண்ணிக்கொண்டுத்தான் இருப்பார்; அப்படிப் பண்ணினால்தான் அவர் ராமர். ஆகையால் ஏதோ காரணத்தால் ராமாயணத்தில் விட்டுப்போன இந்த விஷயத்தைச் சொல்கிற ஸ்தல புராணங்கள்தான் அவருடைய மனோபாவத்துக்கும், சரித்திரத்துக்கும் (conduct-கும்) பூர்த்தியைத் தருகின்றன என்ற தெளிவு உண்டாகிறது. லோகத்தையெல்லாம் ஹிம்ஸித்து வந்தவனும், ஜகன்மாதாவான ஸீதையையே கெட்ட எண்ணத்தோடு மாறு வேஷத்தில் வந்து நீசமாகத் திருடிக்கொண்டு போனவனுமான ஒருத்தனை ஸம்ஹாரம் பண்ணி, அதனால் ஸமஸ்த ஜீவராசிகளும் ஸந்தோஷம் அடைந்து அவரைக் கொண்டாடும் சமயத்தில், அப்படிப்பட்ட சத்ருவிடத்தில் இருந்த மூன்று பெருமைகளை நினைத்து அவனைக் கொன்றதற்காக தம் மீதே மூன்று தோஷங்களை சுமத்திக் கொண்டு பிராயசித்தம் பண்ணிக் கொண்டதாக ஸ்ரீ ராமனைச் சொல்வதுதான் அவருடைய உத்தம ஸ்வபாவத்தையே ஒரு தூக்குத் தூக்கிப் பிரகாசிக்கப் பண்ணுவதாக இருக்கிறது. லிங்கப்பிரதிஷ்டை பண்ணினது ஹரி-ஹர அபேதத்துக்கு ஒத்தாசை செய்கிறது.

இந்த மூன்று ஸ்தல புராணங்களுக்குள் ஒன்றுக்கொன்று முரண்பாடு (contradiction), ஒன்றில் சொன்னதையே இன்னொன்றில் திருப்பிச் சொல்வது (duplicate பண்ணுவது) என்பதெல்லாம் இல்லை. ராமேச்வர புராணத்தில் பிரம்மஹத்தி நீங்கினதை மட்டுமே சொல்லியிருக்கிறது. மற்ற இரண்டு தோஷங்கள் அங்கே போனதாகச் சொல்லவில்லை. அங்கேயிருந்து அப்படியே ஸமுத்திரக் கரை ஒரமாகவே வடக்காகப் போயிருப்பார் போலேயிருக்கிறது. அங்கே வேதாரண்யத்தில் வீரஹத்தி போக லிங்கப் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார். வேதாரண்ய ஸ்தல புராணத்திலும் வீரஹத்தி மட்டும் நிவிருத்தியானதைத்தான் சொல்லியிருக்கிறது. இங்கேயும் பிரம்மஹத்தி போனதாகச் சொல்லியிருந்தால் தப்பு என்கலாம். அப்படியில்லை. அப்புறம் உள்நாட்டுப்பக்கமாக (interior-க்கு)ப் போய் பட்டீச்வரத்தில் மூன்றாவது ராமலிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்து சாயாஹத்தியை நிவ்ருத்தி செய்து கொண்டிருக்க வேண்டும். பட்டீச்வரம் ஸ்தல புராணத்திலும் இந்த ஒரு தோஷத்தைத்தான் சொல்லியிருக்கிறது.

அதாவது இந்த மூன்று க்ஷேத்ரங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தோஷத்தையே – அதுவும் மற்றதில் விட்டுப்போன ஒன்றையே- சொல்லி அதற்கு concrete evidence-ஆக [கண்ணுக்குத் தெரியும் சாட்சியாக] ஒவ்வொரு கோவிலிலும் ‘ராமலிங்கம்’ என்று பேருள்ள ஒரு லிங்கத்தைக் காட்டியிருக்கிறது. ஒரே நிஜமான கதையின் இழைதான் மூன்று ஸ்தல புராணங்கள் வழியாகவும் போய்ப் பூர்த்தியாகிறது. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சுமார் நூறு, நூற்றைம்பது மைல் தள்ளியுள்ள ஊர்கள். ரயிலும் ப்ளேனும் இல்லாத காலத்தில் அது ஆயிரம், ஆயிரத்தைந்நூறு மைலுக்கு ஸமானம். ஆகவே இவ்வளவு தள்ளியுள்ள ஊர்களுக்கிடையே ஒரே கதையின் விவரங்கள் பொருத்தமாக அமைந்திருக்கின்றன என்றால் ஸ்தல புராணங்கள் நிஜம்தான் என்றுதானே ஏற்படுகிறது?

நவீன ஆராய்ச்சிக்காரர்கள், சாஸ்திரக்ஞர்கள் இருவருக்குமே விசித்ரமாகத் தோன்றினாலும் சரி, என் அபிப்ராயம் ஒன்றைச் சொல்கிறேன். வால்மீகி ராமாயணத்தை ‘அதாரிடி’யாக எடுத்துக் கொள்கிற அளவுக்கு ஸ்தல புராணங்களை எடுத்துக் கொள்ள முடியாது என்று பொதுவாக ஒரு அபிப்ராயம் வந்துவிட்டாலும், வால்மீகி ராமாயணம், மற்றும் பாரதம், தற்போது authentic (அதிகார பூர்வமானது) என்று நினைக்கப்படுகிற விஷ்ணு புராணம், பாகவதம் முதலியவற்றை விடக்கூட ஸ்தல புராணங்கள்தான் நிஜத்தைச் சொல்வதில் பெரிய ‘அதாரிடி’ என்று நான் இம்மாதிரி அநேக திருஷ்டாந்தங்களிலிருந்து முடிவுக்கு வந்திருக்கிறேன்.

முதலில் தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணத்திலும், மாயவரம் தாலுக்காவுக்குள்ளே திருவழுந்தூரைச் சுற்றியுள்ள ஏழெட்டு ஸ்தலங்களிலும் புராணத்து details [விவரங்கள்] tally ஆவதை [ஒன்றுக்கொன்று பொருந்துவதை] சொன்னேன். அப்புறம் ராமநாதபுரம், தஞ்சாவூர் இரண்டு ஜில்லாக்களில் உள்ள மூன்று க்ஷேத்திர ஸமாசாரங்கள் ஒத்து வருவதாகச் சொன்னேன். இப்போது இன்னும் பெரியதாக ஆல்-இண்டியா-ஸ்கேலில் ஒன்று சொல்கிறேன்.

‘காவேரி புராண’த்தில் இரண்டு விதமான பாடங்கள் உண்டு. அதிலே ஒன்று ஸ்ரீரங்கத்திலுள்ள காவேரித் துறையான அம்மா மண்டபத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. துலா மாஸம் எனப்படும் ஐப்பசியில் காவேரி ஸ்நானம் மஹா விசேஷமாகும் என்று இதில் சொல்லியிருக்கிறது. இதிலே முக்கியமான கதாபாத்திரம் தர்மவர்மா என்ற சோழ ராஜா. இவன் நிசுளபுரியிலிருந்து கொண்டு ஆட்சி செய்தான் என்று சொல்லியிருக்கிறது. நிசுளம், நிசோளம், சோளம், சோளி என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு ‘உடம்போடு போட்டுக் கொள்கிற உறை மாதிரியான உடுப்பு’ என்று அர்த்தம். “உறையூர்” எனப்படுவதே ஸம்ஸ்கிருதத்தில் “நிசுளபுரி”யாக இருக்கிறது! இதைத் தலைநகரமாகக் கொண்ட ராஜ்யத்துக்கும் சோள தேசம் (சோழ தேசம்) என்றே பெயராக இருக்கிறது! சோளப் பயிருக்கு என்ன விசேஷம்? “சோளக் கொண்டை” என்று, நன்றாக உறை தைத்துப் போட்டுக் கொண்ட மாதிரி இந்த தானியம் ஒன்றுதான் தானிய மணிகளைச் சுற்றிச் சோளி போட்டுக்கொண்டு வளர்கிறது! சோளி போட்டுக் கொண்டிருக்கிற தானியம் சோளம்! இந்த மொழி ஆராய்ச்சி இருக்கட்டும்.

‘காவேரி புராண’த்தில் இன்னொரு பாடத்தில் மாயவரத்தில் இருக்கப்பட்ட காவேரித் துறையான துலா கட்டத்துக்கு முக்யத்வம் கொடுத்திருக்கிறது. இப்போது அதை லாகடம், லாகடம் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். இது துலா கட்டம் என்பதன் திரிபுதான். துலா ஸ்நானத்துக்கு வரும் யாத்திரிகளுக்கு வசதியாகக் கட்டப்பட்ட படித்துறைதான் துலா கட்டம் (லாகடம்) . மாயவரத்திலும் இன்னம் ஆறேழு காவேரிக் கரை க்ஷேத்ரங்களிலும் துலா கட்டங்கள் இருக்கின்றன. இவை அத்தனையும் அச்சடித்ததைப் போல் ஒரே ப்ளானில் கட்டப்பட்டிருக்கின்றன. துலாஸ்நான மகிமையைச் சொல்கிற இடத்தில், காவேரி புராணத்தில் ஒரு பாடத்தின்படி ஸ்ரீ ரங்கத்துக்கும் தர்மவர்மாவுக்கும் முக்யத்வம் தந்திருக்கிறதென்றால், இன்னொரு பாடத்தில் மாயவரத்துக்கும் அங்கே துலா ஸ்நானம் செய்து மோக்ஷம் அடைந்த ஒரு பிராம்மண தம்பதிக்கும் முக்யத்வம் தந்திருக்கிறது.

நாத சர்மா என்று அந்த பிராம்மணனுக்குப் பேர். அவருடைய பத்தினி அநவத்யை. விதிவத்தாக துலா மாஸம் தினந்தோறும் இவர்கள் மாயவரத்தில் காவேரி ஸ்நானம் செய்தே மோக்ஷம் அடைந்தார்கள் என்று சொல்லியிருக்கிறது.

இவர்கள் பல இடங்களுக்கு க்ஷேத்ராடனம் பண்ணினதாகச் சொல்லுமிடத்தில் கேதாரத்துக்கு (கேதாரிநாத்) போனார்கள், காசிக்குப் போனார்கள் என்று சொல்லியிருக்கிறது.

இது இங்கே மாயவரத்தில் மட்டுமே தெரிந்த கதை. காசி இங்கேயிருந்து ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிறது. காசியில் கங்கையில் இருக்கிற பல கட்டங்களில் (‘காட்’ என்று சொல்வார்கள்) ‘கேதார் காட்’ என்று ஒன்று இருக்கிறது. அந்தக் கேதார்காட்டில் அதைக் குறித்த ஸ்தல புராணம் சொல்லப்படுகிறது. அதிலே நாததசர்மா-அநவத்யை என்ற பிராம்மண தம்பதி ஸ்நானம் செய்த இடம் அது என்று வருகிறது!

நாதசர்மா கதை நம்மூர்க்காரர்களுக்கே அதிகமாகத் தெரியாது. ராமர், கிருஷ்ணர், ஹரிச்சந்திரன், நளன் முதலியவர்களைப் போல தேசம் முழுவதும் தெரிந்தவரில்லை, அவர். அப்படிப்பட்ட ஒருவரைப்பற்றி இங்கே மாயவரத்தில் சொல்கிற புராணக் கதையும், ஆயிரம் மைல் தாண்டி காசியில் சொல்வதும் ‘டாலி’ ஆகிறது என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாயிருக்கிறது!

ஸ்தல புராணங்களை நம்புவதற்கில்லை என்று சொல்வது எவ்வளவு தப்பு என்பதற்கு திருஷ்டாந்தமாகத்தான் இதைச் சொன்னேன்.

காசிக்கும் காஞ்சிக்கும் நடுவே ஆயிரம் மைலுக்கு மேல் இருக்கிறது. காசியில் அன்னபூர்ணி விசேஷம். காஞ்சீபுரத்திலும் ஜகன்மாதா 32 தர்மங்களைப் பண்ணும் போது அன்னதானம் பண்ணியிருக்கிறாள். காமாக்ஷி ஆலயத்தில் கர்ப்பகிருஹத்தின் நுழைவாசலுக்கு நேரே அன்னபூர்ணேச்வரிக்கு ஸந்நிதி இருக்கிறது! அதன் விமானத்தில் தக்ஷிணதேசத்தில் வேறே எங்கேயும் இல்லாத விதத்தில் ஆறு சிகரங்கள் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்பதற்குப் பதில் காசியில் கிடைக்கிறது! காசியில் அன்னபூரணி விமானத்தில் இதே மாதிரி ஆறு சிகரங்கள் இருக்கின்றன. அதன் அச்சாகத்தான் இங்கே ஆயிரம் மைல் தாண்டி காஞ்சியிலும் இப்படி இருக்கிறது! சின்ன விஷயங்களில்கூட இவ்விதம் தேசத்தின் வெவ்வேறு கோடிகளில் உள்ள ஸ்தலங்களில் ஒற்றுமையிருப்பதால் க்ஷேத்ர ஐதிஹ்யங்களை லேசாகத் தள்ளி விடுவதற்கில்லை என்று தெரிகிறதல்லவா?

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s