வேதத்தின் சட்ட விளக்கம்

நம் மதத்துக்குப் பிரமாணமான பதினாலு வித்தைகளில் நாலு வேதங்களும் ஆறு வேதாங்கங்களும் போக மீதமுள்ள நாலும் வேத உபாங்கங்கள் எனப்படுபவை.

உப + அங்கம் = உபாங்கம்.

“உப” என்றால் துணையாக இருப்பது. உப ஸபாநாயகர் என்றால் ஸபாநாயகருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர்தானே?

இப்படி ஆறு அங்கங்களுக்கு அப்புறம் வேதத்தின் துணை உறுப்புகளாக, உப அங்கங்களாக நூலு வருகின்றன.

மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் என்ற நாலுமே இந்த உபாங்கங்கள்.

‘மீமாம்ஸை’ என்ற வார்த்தையில் ‘மாம்’ என்பது தாது; ‘ஸன்’ என்பது ‘பிரத்யயம்’ (விகுதி) . இந்த வார்த்தைக்கு அர்த்தம் ‘பூஜித விசாரம்’. தமிழில் சொல்வதானால், “நல்ல விஷயத்தைப் பற்றிய விசாரணை அல்லது ஆராய்ச்சி.”

எது “பூஜிதம்”? எது நல்ல விஷயம்? வேதம்தான்.

வேதத்தை விசாரித்து – ஆராய்ந்து – அர்த்தத்தை எடுத்துச் சொல்வது மீமாம்ஸை.

நிருக்தத்தில் வேதத்தின் வார்த்தைகளுக்கு மட்டும் டிக்ஷனரி மாதிரி அர்த்தம் கொடுத்திருக்கிறது. மீமாம்ஸையில் அப்படியில்லை. மந்திரங்களின் தாத்பரியம் என்ன, உத்தேசம் என்ன என்று ஆராய்ச்சிப் பண்ணித் தீர்மானிப்பது மீமாம்ஸை சாஸ்திரமே.

வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரண்டு பாகம் உண்டு என்று முன்பே சொன்னேன். சாகைகளின் முதல் பாகத்தில் வருவதால் கர்ம காண்டத்துக்குப் பூர்வ பாகம் என்றும், முடிவில் வருவதால் ஞானகாண்டத்துக்கு உத்தர பாகம் என்றும் பெயர். மீமாம்ஸையிலும் இப்படி இரண்டு உண்டு-பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை என்பதாக.

கர்ம காண்டத்தில் சொன்ன யக்ஞம் முதலான அநுஷ்டானங்களே முக்கியம் என்பது பூர்வ மீமாம்ஸையின் கொள்கை. ஞான காண்டத்தில் சொன்ன ஆத்ம ஸாக்ஷாத்காரமே முக்கியம் என்பது உத்தர மீமாம்ஸையின் கொள்கை.

உபநிஷத்துக்களையும், பிரம்ம ஸூத்ரத்தையும் பற்றிச் சொல்லும்போதே உத்தர மீமாம்ஸையைப் பற்றி சொல்லிவிட்டேன்.

உத்தர மீமாம்ஸையான இந்த பிரம்ம ஸூத்ரம், உபநிஷத் இவைகளே பிரம்ம வித்யா என்றும் வேதாந்த மதம் என்றும் சொல்லப்பட்டு, அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத சம்பிரதாயங்களுக்கு முக்கியமான ஆதாரங்களாக இருக்கின்றன.

பூர்வ மீமாம்ஸைதான் இப்போது நாம் எடுத்துக் கொண்டுள்ள விஷயம். “மீமாம்ஸை” என்றாலே பொதுவில் குறிக்கப்படுவதும் இதுதான். உத்தர மீமாம்ஸைக்கு “வேதாந்தம்” என்ற பெயர் பிரபலமாகி விட்டதால், ‘மீமாம்ஸை’ என்பது பூர்வ மீமாம்ஸைக்கே பெயர் மாதிரி ஆகிவிட்டது. ஆனால் இதைச் சொல்லும் போதே உத்தர மீமாம்ஸை சமாசாரங்கள் வந்து சேரத்தான் செய்யும்.

ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் ஸூத்ரம்-வார்த்திகம்-பாஷ்யம் என்ற மூன்று உண்டு என்று சொல்லியிருக்கிறேனல்லவா? இப்படி (பூர்வ) மீமாம்ஸைக்கான ஸூத்ரத்தைச் செய்தவர் ஜைமினி மஹரிஷி. அதற்கு பாஷ்யகாரர் சபரஸ்வாமி என்பவர். வார்த்திககாரர் குமாரிலபட்டர். குமாரிலபட்டரின் “பாட்டதீபிகை” இந்த சாஸ்திரத்தின் மிக முக்கியமான நூலாக இருக்கிறது. ஸாக்ஷாத் குமாரஸ்வாமியான ஸுப்ரமண்யரின் அவதாரமே குமாரிலபட்டர். மீமாம்ஸையில் குமாரிலபட்டருடைய அபிப்ராயத்துக்குச் சில விஷயங்களில் வித்யாஸமாகப் பிரபாகரர் என்பவர் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். அதனால் மீமாம்ஸகர்களில் “பாட்டமதம்”, “ப்ரபாகர மதம்” என்று இரண்டு உட்பிரிவு (sub-division) உண்டாயிற்று. இந்த உள் வித்யாஸங்கள் நமக்கு வேண்டாம். ஜெனரலாக இருக்கப்பட்டவைகளையே பார்க்கலாம்.

(குமாரில) பட்டர் கொள்கைகளைச் சொல்கிறதாலேயே ஒரு பிரிவுக்கு பாட்ட மதம் என்ற பெயர் வந்தது1.

ஸூத்ரங்களுக்குள் ஜைமினியின் பூர்வ மீமாம்ஸா ஸூத்ரமே மிகப் பெரியதாக இருக்கிறது. இதிலே பன்னிரண்டு அத்தியாயங்கள் உண்டு. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பல பாதங்களாகவும், ஒவ்வொரு பாதத்தையும் பல அதிகரணங்களாகவும் பிரித்திருக்கிறது. இப்படி ஆயிரம் அதிகரணங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் அதிகரணத்தில் ஒவ்வொரு விஷயமாக ஆயிரம் விஷயங்களை விசாரம் செய்வது பூர்வ மீமாம்ஸை. வேதவாக்கியங்களை எடுத்துக் கொண்டு அது விசாரம் செய்யும்.

வேதம் என்பது ஈச்வரன் உண்டாக்கிய சட்டம். ஆதி அந்தமில்லாத நித்யமான சட்டம், Eternal Law. நாம் பிரஜைகள், ஈச்வரன் நமக்கு அரசன். அவர் பல அதிகாரிகளை ஏற்படுத்தியிருக்கிறார். அவருடைய ராஜாங்கத்தில் இந்திரன், வாயு, வருணன், அக்கினி, யமன், ஈசானன், குபேரன், நிர்ருதி முதலிய அஷ்ட திக்பாலகர்களையும் இன்னும் பல தேவதைகளையும் லோகத்தை ஸம்ரக்ஷிக்கும் அதிகாரிகளாக நியமித்திருக்கிறார். அந்த அதிகாரிகள் பதினாலு லோகத்திலும் உள்ள ஜீவராசிகளாகிய பிரஜைகளை ரக்ஷிப்பதற்கு ஒரு சட்டம் வேண்டும் அல்லவா? அந்தச் சட்டந்தான் வேதம். அதன்படி பிரஜைகளான நாம் எப்படி நடப்பது, அதிகாரிகள் எப்படி பரிபாலனம் பண்ணுவது என்று ஆராய்ச்சி செய்து அறியலாம். லௌகிகத்தில் இம்மாதிரி ஸந்தேஹம் வந்தால் ஜட்ஜுகள் யோசித்துத் தீர்ப்புச் சொல்லுகிறார்கள். வக்கீல்கள் ஆலோசிக்கிறார்கள். அது போல தர்மத்தை அநுஷ்டானம் பண்ணும் வழிகளையெல்லாம் சொல்லும் வேதமாகிற சட்டத்திற்கு அர்த்த நிர்ணயம் பண்ணினவர் ஜைமினி. அதுதான் மீமாம்ஸை.

ஓர் ஊரில் ஒரு வழக்கு வந்தால் அலஹாபாத்தில் இந்த மாதிரி வந்த கேஸில் இந்த மாதிரித் தீர்ப்பு செய்திருக்கிறார்கள், பம்பாயில் இப்படித் தீர்ப்பு பண்ணினார்கள் என்று தெரிந்துகொண்டு அவைகளை அநுசரித்துத் தீர்மானம் செய்கிறார்கள். அதுபோல ஓர் இடத்தில் அர்த்த நிர்ணயம் செய்ததை வேறு சில இடங்களில் எடுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்படி ஆயிரம் விதமான விஷயங்களை எடுத்துக் கொண்டு எவ்வளவு யுக்தி உண்டோ அவ்வளவினாலும் ஆக்ஷேபணை செய்து அவ்வளவையும் பூர்வபக்ஷம் செய்து நிர்ணயம் செய்வது மீமாம்ஸை. முதலில் ஒரு வேதவாக்கியத்தை எடுத்துக் கொள்வது (விஷய யாக்யா); இரண்டாவதாக அதன் அர்த்தம் இதுவா என்ற கேள்வி (ஸம்சயம்); மூன்றாவதாக எதிர்த்தரப்பிலே அர்த்தம் பண்ணுவது (பூர்வ பக்ஷம்); நாலாவதாக, அந்தத் தரப்பை ஆக்ஷேபிப்பது (உத்தரபக்ஷம்); ஐந்தாவதாக, கடைசியில் இதுதான் தாத்பரியம் என்று முடிவு பண்ணுவது (நிர்ணயம்). ஒவ்வொரு விஷய நிர்ணயம் ஒவ்வோர் அதிகரணமாக இருக்கிறது.

ஜைமினி செய்தவை சின்னசின்ன ஸூத்திரங்களாக இருக்கின்றன. அந்த ஸூத்திரங்களின் அபிப்பிராயத்தை விரிவாக விளக்குவது சாபரபாஷ்யம். சபரர் செய்த பாஷ்யம் ‘சாபரம்’. சபரர் என்று வேடர்களுக்குப் பேர் உண்டு. சபரி பூர்வத்தில் வேட ஸ்திரீ என்பார்கள். சபரர் ஈச்வராம்சம் உடையவர். ஈச்வரன் அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்க வேடராக வந்தபோது சபரராகி இந்த வார்த்திகம் செய்தார் என்றும் சொல்வதுண்டு2.

ஆயிரம் அதிகரணத்தை உடைமையால் பூர்வமீமாம்ஸைக்கு ‘ஸஹஸ்ராதிகரணி’ என்று ஒரு பெயர் உண்டு. வேதத்தில் உள்ளவற்றிற்கு அர்த்த நிர்ணயம் செய்கையில் பலவகையாக உள்ள குயுக்திகளைப் போக்கித் தீர்மானம் செய்வது இது.

பூர்வமீமாம்ஸை வேதத்தின் பூர்வகாண்டத்திற்கு அர்த்த நிர்ணயம் செய்வது போல உத்தரகாண்டமாகிய உபநிஷத்துக்களின் அர்த்தத்தை நிர்ணயம் செய்வது உத்தர மீமாம்ஸை. பரமாத்மாவைப் பற்றியும் அதனோடு வேறாகாமல் ஒன்றாவதைப் பற்றியும், இவைப் போன்ற வேறு விஷயங்களைப் பற்றியும் சொல்லுவது உபநிஷத். அந்தச் சட்டத்துக்கு பிரம்ம ஸூத்திரத்தின் மூலம் அர்த்த நிர்ணயம் செய்தவர் வியாஸர். இதிலே வேடிக்கை, இப்படி உத்தர மீமாம்ஸைக்கு ஸூத்ரகாரரான வியாஸரே பூர்வமீமாம்ஸை செய்த ஜைமினியின் குருவாக இருக்கிறார்!

ஞான காண்டமான உத்தர மீமாம்ஸைக்கு ஞான (அத்வைத) மார்க்கப்படியே பூர்ணமாக ஏற்பட்டுள்ள (தைத்திரீய, பிருஹதாரண்யக) வார்த்திகத்தை எழுதினவர் யாரென்று பார்த்தால், அவர் பூர்வாசிரமத்தில் ரொம்பவும் தீவிரமான பூர்வ மீமாம்ஸைக்காரராக இருந்த ஸுரேச்வராசாரியாளாக இருக்கிறார்! இவரே பிற்பாடு கர்மாவிலிருந்து ஞானத்துக்கு மாறி, (சங்கர) ஆசார்யாளின் சிஷ்யராகி, ஆசார்ய பாஷ்யத்துக்கு வார்த்திகம் எழுதினார். பூர்வாசிரமத்தில் அவருக்கு மண்டன மிச்ரர் என்று பேர். இந்த வியாஸர், ஜைமினி இரண்டு பேரையுமே மண்டனமிச்ரர் திவஸப் பிராமணர்களாக வைத்து ச்ராத்தம் செய்த போதுதான் ஆசார்யாள் அவரிடம் வாதத்துக்குப் போனார் என்று கதை.


1 ட்ட பாத வார்த்திகத்தின் கருத்துக்களைச் சுருக்கித் திருப்புட்குழி கிருஷ்ண தாத்தாசாரியார் எழுதிய ‘பாட்டஸாரம்’ இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரசுரிக்கப்பட்டது.

2 சபர பாஷ்யத்தை விவரித்து லக்ஷ்மீபுரம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸாசாரியார் சபர பாஷ்ய பூஷணம் எழுதியிருக்கிறார்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s