ஸ்தலபுராணங்களின் சிறப்பு

என் அபிப்பிராயம், அநேக சரித்திர உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும், local culture, local custom [பிரதேச பண்பாடு, பிரதேச வழக்குகள்] முதலியவற்றைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஸ்தல புராணங்கள்தான் ரொம்பவும் உதவும் என்பது. இவற்றை நன்றாக ஒன்றோடொன்று சேர்த்து ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தால், பதினெட்டு மஹாபுராணங்களை விடவும் உபபுராணங்களை விடவும், இதிஹாஸங்களை விடவும் நம்முடைய சரித்திரம், பண்பாடு முதலியவற்றை அறிய இவை உதவும் என்று தோன்றுகிறது. இவை ஒன்றுக்கொன்று விஷயங்களை ஸப்ளிமென்ட் செய்து கொண்டு (கூட்டிக் கொண்டு) போவது மட்டுமின்றி மஹாபுராணக் கதைகளிலுங்கூட விட்டுப் போனதைப் பூர்த்தி பண்ணுகின்றன. ‘ஹிஸ்டரி’ (சரித்திரம்) சரியானபடி தெரிய ஸ்தல ஐதிஹ்யங்களும் புராணங்களும் நிரம்ப உதவும்.

உதாரணமாக, இப்போது படிப்பாளிகளில் பலருக்கு அத்வைதியான பகவத்பாதாள் அநேக க்ஷேத்ரங்களுக்குப் போய் ஆலய பூஜா க்ரமங்களை சரிப்படுத்திக் கொடுத்தார் என்று சொன்னால் நம்பிக்கைப் பட மாட்டேன் என்கிறது. ‘அவர் ஞான மார்க்கத்தைத்தான் சிலாகித்துச் சொன்னார். அதனால் இந்த பக்தி வழிபாடுகள், ஆலய ஆகம ஸமாசாரங்கள் ஆகியவற்றில் அவர் பிரவேசித்திருக்க மாட்டார்’ என்கிறார்கள். ஆனால் அவர் புதுக் களை ஊட்டினதாக க்ஷேத்ர ஐதிஹ்யங்களின்படி சொல்லப்படும் ஸ்தலங்களை (ஒன்றுக்கொன்று ஆயிரம், இரண்டாயிரம் மைல் தள்ளியிருப்பவைகளை) போய்ப் பார்த்தால் அவற்றுக்கு ஆசார்யாளின் ஸம்பந்தமிருப்பது அழுத்தமாகத் தெரிகிறது. வடக்கே ஹிமாசலத்துக்கு நடுவில் உள்ள பத்ரிநாத்துக்குப் போனால் அங்கே ‘ராவல்’ என்று பூஜை பண்ணுகிறவர் கேரளத்து நம்பூதிரியாக இருக்கிறார்! இங்கே இந்த சென்ன பட்டணத்திலேயே திருவொற்றியூரில் திரிபுரஸுந்தரி அம்மனுக்குப் பூஜை பண்ணுவது யார் என்று பார்த்தால் இதுவும் ஒரு நம்பூதிரி பிராம்மணர்தான்! ஆசார்யாள் நம்பூதிரிப் பிராமணர்தான் என்றும் அவர் புதிதாக ஜீவ களையூட்டிய பல ஸ்தலங்களில் நம்பூதிரிகளையே பூஜகர்களாக வைத்தார் என்றும் கர்ண பரம்பரையாகச் சொல்லி வருவதற்கு இப்படி பிரத்யக்ஷ ஸாக்ஷியம் இருக்கிறது.

தர்மோபதேசத்திலும் இந்த ஸ்தல புராணங்கள் மஹா புராணங்களுக்குப் பின்தங்கி விடவில்லை. சின்ன சின்ன தர்ம நுணுக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ள ஆயிரக் கணக்கான ஸ்தல புராணங்களில்தான் பளிச்சென்று போதிக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது படிப்பாளிகளில் மத நம்பிக்கை உள்ளவர்களுங்கூட ஸ்தல புராணம் என்பதை ரொம்பவும் மட்டம் தட்டினாலும், தமிழ் தேசத்தில் ஸமீப காலம் வரையில் அதற்குப் பண்டிதர்களிடையே நிரம்ப கௌரவம் இருந்திருக்கிறது. அதனால்தான் அநேக ரிஷிகளின் பெயரிலுள்ள புராணங்களைப் பின்பற்றித் தமிழிலும் மஹா பண்டிதர்களாக, பெரியவர்களாக இருந்த அநேகர் ஸ்தல புராணங்களை இயற்றியிருக்கிறார்கள். ஸ்தலபுராணம், மான்மியம், கலம்பகம், உலா என்றெல்லாம் அநேக க்ஷேத்ரங்களின் மகிமையைச் சொல்கிற சிறந்த தமிழ் நூல்கள் இருக்கின்றன. (மஹிமை வாய்ந்தது ‘மாஹாத்மியம்’. அதைத் தமிழில் ‘மான்மியம்’ என்பார்கள்.) சங்ககாலம், தேவார-திவ்யப்பிரபந்த காலம், கம்பர்-ஒட்டக்கூத்தர் முதலானவர்களின் காவிய காலம் என்றெல்லாம் தமிழிலக்கியத்தைக் காலவாரியாகப் பாகுபடுத்தும்போது 16-ம் நூற்றாண்டைத் தலபுராண காலம் என்றே புலவர்கள் சொல்கிறார்கள். பதிநாலாம் நூற்றாண்டிலேயே உமாபதி சிவாசாரியார் எழுதிய சிதம்பர மாகாத்மியமான ‘கோயிற்புராணம்’தான் முன்னோடி என்கிறார்கள். கமலை ஞானப் பிரகாசரையும் சைவ எல்லப்ப நாவலரையும் முக்யமான புராணகர்த்தாக்களாகச் சொல்கிறார்கள். கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாசாரியார், திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர், சைவ சமயாச்சாரியார்களின் ஒரு முக்யஸ்தரான உமாபதி சிவாசாரியார், சிவப்பிரகாச ஸ்வாமிகள், இரட்டைப் புலவர்கள், அந்தகக் கவி வீரராகவ முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், திரிகூட ராசப்பக் கவிராயர் முதலான, நிரம்ப யோக்யதை வாய்ந்தவர்களெல்லாம் ஸ்தல புராணம் செய்திருப்பதிலிருந்து அதற்கு இருந்த பெருமை தெரிகிறது. உ.வே. ஸ்வாமிநாதய்யருடைய குருவான மஹாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை ஸமீபத்தில் அநேக க்ஷேத்ரங்களுக்கு ஸ்தல புராணம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதனால் தமிழின் சமயத்துறையிலும், இலக்கியத் துறையிலும் ‘தலபுராணம்’ என்பதற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று தெரிகிறது.

பெரிய சம்ஸ்கிருத சாஸ்திர பண்டிதரான கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் தமிழில் ‘வேதாரண்ய மாஹாத்மியம்’ எழுதியிருக்கிறார்.

ஸ்தல புராணம் பிரசாரம் ஆவதற்குத் தமிழ் தேசத்தில் ராஜாங்கமே ஆதரவு தந்து, உத்ஸாஹப்படுத்தியிருக்கிறது. 450 வருஷத்துக்கு முந்தி தஞ்சாவூரில் நாயக ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்த மந்திரி கோவிந்த தீக்ஷிதரின் விருப்பப்படியே, ஸம்ஸ்கிருதத்திலிருந்த பஞ்சநத (திருவையாறு) க்ஷேத்ர புராணத்தைத் தாம் தமிழில் பண்ணினதாக மொழி பெயர்ப்பாசிரியர் சொல்லியிருக்கிறார்.*


* மலிபுனல் சோழநாடு தஞ்சையிற்
காத்திடும் அரசர் மதியமைச்சன் ஒலி மறை தேர்
கோவிந்த தீட்சத ராயன் திரு வாக்குடமையாலே..
புராண வடமொழி தமிழால் புகலலுற்றேன்

If you see any errors in the text, please leave a comment