குணமும் காரியமும்

ஆனால் இப்படி குணங்களை மட்டும் சொல்லி, “குணவானாயிரு, குணவானாயிரு” என்று மற்ற மதங்கள் சொல்லும்போது, நம் மதம்தான் இப்படிச் சொன்னதோடு நிற்காமல், ப்ராக்டிகலாக (நடைமுறையில்) அவனை அப்படி ஆக்குவதற்காக ஏகப்பட்ட ஸம்ஸ்காரங்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறது. வெறுமனே உபதேசிப்பதில் பிரயோஜனம் இல்லை. மநுஷ்யனைக் காரியத்திலே கட்டிப் போட்டால்தான் பிரயோஜனம் உண்டு. இதை நம் மதம்தான் பண்ணுகிறது.

மற்ற மதங்களில் அன்பு, ஆசையின்மை முதலான குணங்களை முக்யமாகச் சொல்லியிருக்க, ஹிந்து மதத்தில் நல்ல குணங்களுக்கு முக்யத்வம் தராமல், ஓயாமல் கர்மாநுஷ்டானம்தான் சொல்லியிருக்கிறது, ஒரே ritual-ridden [சடங்கு மயமானது] என்று சிலபேர் தப்பாக நினைக்கிறார்கள். அஷ்ட குணங்கள், அப்புறம் குணம் கடந்த குணாதீத ஸ்திதி முதலானவைகளை நம் மதத்தில் விசேஷமாகச் சொல்லியிருக்கறது. குணங்களைப் பற்றி வெறுமே பிரஸங்கம் பண்ணி விட்டால் போதாது. நல்லவனாக இருக்க வேண்டும், ஸத்யமாய் இருக்கவேண்டும். பிரேமையோடு இருக்கவேண்டும், தியாகமாய் இருக்கவேண்டும் என்பதெல்லாம் நமக்கே தெரிந்ததுதானே? தெரிந்துதானே வாழ்க்கையில் கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுகிறோம்! இதையே திருப்பித் திருப்பி சாஸ்திரத்திலும் உபதேசம் பண்ணினால் மட்டும் என்ன பிரயோஜனம் வந்துவிடும்? அதனால்தான் மற்ற மதங்களில் நல்ல குணங்கள், நன்னெறிகள் (ethics, morality) இவை பற்றியே நிறைய உபதேசமிருக்கிற மாதிரி இல்லாமல், இந்த உபதேசத்தையும் பண்ண வேண்டிய அளவுக்குப் பண்ணிவிட்டு, அதோடு நின்று விடாமல், அதிலே நாம் வாஸ்தவமாகவே ஈடுபட்டு, அப்பியஸிப்பதற்கு உத்ஸாஹ மூட்டும் விதத்தில் நல்ல குணசாலிகள் அடைந்த கீர்த்தியையும், கெட்ட குணக்காரர்கள் அடைந்த அபகீர்த்தியையும் சொல்கிற ஏராளமான புராண புருஷர்களின் கதைகளை நம் மதத்தில் கொடுத்திருக்கிறது. இந்த உத்ஸாஹமும் நம்மைப் பிரத்யக்ஷத்தில் அப்படிப்பட்ட குணசாலிகளாக்குவதற்குப் போதாது. அதனால்தான் நிறைய கர்மாக்களை, ஸம்ஸ்காரங்களைக் கொடுத்து அவற்றால் சித்தத்தை சுத்தி பண்ணிக் கொள்ளச் செய்கிறது. குணசாலிகளாவதற்கே கர்மாநுஷ்டானம் என்ற practical training [நடைமுறைப் பயிற்சி]-யைத் தருகிற மதம் நம்முடையதே என்று புரிந்து கொண்டு பெருமைப்படுவதற்குப் பதில், இதை மற்ற மதங்கள் போல இல்லை என்று குறை சொல்வது சரியில்லை. அஷ்ட குணங்கள் இயேசு சொன்ன அன்பில் ஆரம்பித்து, புத்தர் சொன்ன ஆசையின்மையில் முடிந்திருக்கிறது.

குணங்களைப் பற்றி உபதேசம் பண்ணிவிட்டால் போதுமா? காரியம் பண்ணுவதுதானே மநுஷ்ய ஸ்வபாவம்? அதை வைத்துக் கொண்டு, அதன் மூலந்தானே எதையும் ஸாதித்துத் தரவேண்டியதாக இருக்கிறது? காந்தி அஹிம்ஸை, ஸத்யம் என்று நிறையச் சொல்லிக் கொண்டிருந்தார் என்றாலும் அவருடைய ஆச்ரமத்தில் போய்ப் பார்த்தால் அவர் எப்போது பார்த்தாலும் சுருசுருவென்று ஏதாவது காரியம் பண்ணிக் கொண்டிருந்தார். மற்றவர்களையும் உட்கார விடாமல் வேலை வாங்கிக் கொண்டேதான் இருந்தார். ரொம்பவும் கடுமையான task-master என்று அவரைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ராட்டையை சுற்றிக்கொண்டு நூற்கவேண்டும், கக்கூஸை அலம்ப வேண்டும்- இப்படி ஏதாவது காரியம் பண்ணிக் கொண்டேயிருக்கும்படிதான் செய்தார்.

இப்படிப்பட்ட கர்மாநுஷ்டானங்களை முக்யமாகச் சொல்லி அவற்றோடு கூடவும், அவற்றைச் செய்வதால் ஏற்படுகிற சித்தத் தெளிவின் மூலமும் கடைபிடிக்க வேண்டிய அஷ்ட குணங்களையும் தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது.

இவற்றில் கௌதமரும் ஆபஸ்தம்பரும் செய்துள்ள ஸூத்திரங்கள் அதி பிராபல்யத்தோடு இருக்கின்றன. ஸ்மிருதிகளில் ம‌நு செய்தது பிரபலமானது.

ஆபஸ்தம்பரும், கௌதமரும் எல்லாருக்கும் பொதுவானவைகளை எழுதியிருக்கிறார்கள். ஆபஸ்தம்பர் தனியாகவும் ஒவ்வொரு பிரிவினருக்குள்ள‌ தனித்தனி தர்மங்களையும், ஸம்ஸ்காரங்களையும் எழுதியிருக்கிறார். கௌதமர் நாற்பது ஸம்ஸ்காரங்களையும் எட்டு ஆத்ம குணங்களையும் சொல்லியிருக்கிறார். ஜீவன் உடம்பை விட்டுப் பிரிந்தவுடன் நேரே பிரம்மலோகத்திற்குப் போய்ச் சேர இந்த நாற்பத்தெட்டும் காரணங்களாக இருக்கின்றன. இவைகளால் ஈச்வர ஸந்நிதானத்தில் போய் இருக்கலாம். அது பரமஞானியின் ஸந்நிதானத்தில் இருப்பதுபோல் இருக்கும். அசையாமல் ஆனந்தமாக இருக்கலாம். லோகத்தை நடத்தும் ஈச்வரன், லோகாதீதமாக அரூபமாகிற பொழுது நாமும் அதோடு அதாகக் கலந்துவிடலாம். அத்வைதமாகி விடலாம். அதுவரை அவனுடைய லோகத்தில் (ஸாலோக்யமாக) இருந்து, அப்போது அவனோடு கரைந்து (ஸாயுஜ்யமாக) வாழலாம். “யஸ்யைதே சத்வாரிம்சத் ஸம்ஸ்காரா: அஷ்டாவாத்மகுணா: ஸ ப்ரம்மண: ஸாயுஜ்யம் ஸாலோகதாம் ஜயதி” என்று சொல்லியிருக்கிறது*.

இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் கை கால் முதலியவைகளை ஆட்டிச் செய்யவேண்டும். ஓர் உத்தியோகம் செய்ய வேண்டுமானால், கையைக் காலை ஆட்டியும் வாயை அசைத்துப் பேசியும் செய்கிறோமல்லவா? அப்படித்தான் இதுவும். யார் இந்த நாற்பத்தெட்டையும் அநுஷ்டிக்கிறானோ அவன் நேராக பிரம்மலோகத்துக்குப் போகிறான்; கஷ்டம் ஸுகம் என்பவை இல்லாத ஊருக்குப் போகிறான். கஷ்டமும் ஸுகமும் இல்லாமல் எப்பொழுது இருக்கும்? இந்த இரண்டையும் ஏற்படுத்தினவனிடம் போனால்தான் அப்படியிருக்கலாம்.

ஆத்மகுணங்களை ஆத்மசக்தி என்று சொல்லுகிறார்கள். இது ஸமீபகாலப் பத்திரிகை வார்த்தை. பழைய தமிழ், ஸம்ஸ்கிருத புஸ்தகங்களில் ஆத்மசக்தி என்ற வார்த்தை இல்லை. ஆத்மகுணங்கள்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை எட்டு. இவற்றை முன்பே சொன்னேன்.


* கெளதம தர்ம ஸூத்ரம், முதல் ப்ரசனம், எட்டாவது அத்யாயம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s