பிள்ளையார் சுழி

எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில்லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் ஸரி, கடை ஸாமான் லிஸ்டானாலும் ஸரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம். எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்துதான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது Written proof-ஆகவே (எழுத்து மூல நிரூபணமாகவே) பிள்ளையார் சுழியில் தெரிகிறது.

பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம்.

பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’ போடுகிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே?

சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வட்ட வடிவந்தானே?

இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீக்ஷையில் கோழி முட்டை’ என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன்யமும் பிள்ளையார்தான். உள்ளது, அல்லது எல்லாம் பரமாத்மாதான்’ என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸஃபைர் பண்ணிக்கொண்டு வருகிறவனை, ”என்னடா சுழி!” என்று ப்ரக்ருதத்திலும் [நடைமுறையிலும்] சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’ பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.

வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இரண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் [நேரானதும்] அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight- forward என்கிறார்கள். குணம் குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான்.

‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்’காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் O-m என்று எழுதாமல் A-u-m என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. ‘உ’ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ‘ம’ ஸம்ஹாரம்; ஈச்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ-உ-ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உ-ம-அ என்ற இருக்கின்றன அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’விலோ ஸ்திதி [பரிபாலன] பீஜமான ‘உ’ என்பது முதல் எழுத்தாயிருப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல்லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் இந்த ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. அதாவது அவர் ”தாயைப் போலப் பிள்ளை” மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ ஸ்ருஷ்டி ‘அ’ இவற்றையும் வைத்தக் கொண்டிருக்கிறாள். ஆனால் பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்துகொண்டு ‘உ’ ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

ப்ரணவத்தில் ‘உ’ விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’ என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப்பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ”சுக்லாம்பரதரம் விஷ்ணும்” என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்.) ‘உ’ என்பது சிவ-சக்தி புத்ரனை விஷ்ணுவோடும் ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ணவத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது!

வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத்தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக (axis-ஆக) நேரான (straight-ஆன) ஒன்று இருந்தாக வேண்டும். விஷ்ணு தன் விரலையே நேராக நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயுதத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப் பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் ஸரி (இது ஒளி) — விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட்டியானாலும் ஸரி (இது ஒலி) — இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியிருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line -ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy [சக்தி] ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும். வட்டமாகச் சுற்றுகிற ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும் போடுகிறோம்.

எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட்ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து [வட்டத்திலிருந்து] நேர்கோடாகத்தான் மின்ஸாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார் சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவ-சக்தி ஸ்வரூபமான நாத-பிந்துக்களாகக்கூடச் சொல்லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸுக்ஷ்மமான விஷயம்.

ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம்*. ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.

கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன் ‘என்பார்கள். ”பெரும்பாரக்கோடும்”, ”கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே” என்றெல்லாம் அவ்வைப் பாட்டி சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக்கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில் கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப் பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத்தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ”கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!”


*சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்த உபநிஷத்துக்களில்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s