தான எண்ணத்தையும் தானம் செய்க!

வேதம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது யாகம்தான். யாகமும் த்யாகமும் ஒன்றுதான். இங்கிலீஷில்கூட யாகம், த்யாகம் இரண்டையும் ‘ஸாக்ரிஃபைஸ்’ என்றுதானே சொல்கிறார்கள்? ஆனதால், வைதிகம் என்பது தன்னலமே கருதுவது என்கிற அபிப்ராயம் அடியோடு பிசகு. தன்னலத்தை முழுக்க த்யாகம் பண்ணுவதுதான் ஸநாதன தர்மத்தின் லக்ஷ்யம். இங்கே ‘தர்மம்’ என்பதே மதம். வேத தர்மம். ஹிந்து தர்மம் என்றாலே வேதமதம், ஹிந்து மதம் என்றுதான் அர்த்தம். இதே ‘தர்மம்’ பரோபகாரங்களில் ஒன்றான ஈகையாக நினைக்கப்படுவதை முன்பே சொன்னேன். அதனால் நம் மதமே பரோபகாரமானதுதான்.

யாகத்திலே நெருப்பில் வஸ்துக்களை, உடைமைகளைப் போட்டு த்யாகம் பண்ணினால் தேவ சக்திகளுக்கு ப்ரீதி உண்டாகிறது. அவர்கள் லோகத்துக்கு மழை, ஸுபிக்ஷம் நல்ல எண்ணம் எல்லாவற்றையும் அநுக்ரஹம் பண்ணுகிறார்கள். ஒருவன் தன் உடைமையை வேள்வித் தீயில் த்யாகம் பண்ணி இப்படி லோக க்ஷேமத்தைச் செய்ய வேண்டும்.

சொத்து ஸ்வதந்திரங்களை நாமே வைத்துக்கொண்டு அநுபவிப்பதில் பெறுகிற ஸுகம் ரொம்பவும் தாற்காலிகமானது இந்தத் தாற்காலிக ஸுகம் நித்ய ஸெளக்கியமான ஆத்மாபிவிருத்திக்கு ஹானியாகவும் ஆகிறது. ஆனால் இதே உடைமைகளை நாம் வைத்துக்கொண்டு அநுபவிப்பதைவிட, கொடுத்து அநுபவித்தால், இதுவே பரம ஆனந்தத்தை தருகிறது; சாஸ்வத ஸெளக்யத்துக்கும் வழிகோலுகிறது. இதனால்தான் உபநிஷத்துக்களில் முதலாவதான ”ஈசாவாஸ்ய” த்தில் முதல் மந்த்ரத்திலேயே, ”த்யாகம் பண்ணி அநுபவி” என்று சொல்லியிருக்கிறது. காந்திகூட இதில்தான் தம்முடைய ஃபிலாஸஃபி முழுக்க இருக்கிறது என்று சொல்லி, இந்த உபநிஷத்தை தலைக்கு மேலே வைத்துக்கொண்டு ச்லாகித்து வந்தார்.

கொடுக்க வேண்டும். அதுதான் த்யாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவும் செய்து முடிக்கும்போது, ”நான் தான் கர்த்தா என்பதால் இதன் ப்ரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது” என்கிற பரம த்யாக புத்தியில் ”ந மம” — ”எனதில்லை; எனக்கில்லை” என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் த்யாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.

மற்ற வஸ்துக்களை கொடுத்துவிட்டு, ”நான் கொடுத்தேன்” என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால் இந்த அஹங்காரமானது த்யாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். த்யாகம் பண்ணவேண்டும்; அதைவிட முக்யமாக த்யாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் த்யாகம் பண்ணிவிட வேண்டும்.

மஹாபலி நிறையக் கொடுத்தான்; வாரி வாரிக் கொடுத்தான். ஆனால் தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தை அவன் பகவானுக்கு பலி கொடுக்கவில்லை. இதனால்தான் பகவானே அவனிடம் இந்த அஹங்காரத்தை யாசகமாகப் பெற்று, அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

”ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்” என்று சொல்லிக்கொண்டு வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அஹங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால் இவனுக்கும் ப்ரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் ப்ரயோஜனமிராது. தாற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால் அது நின்று நிலைத்து விளங்காது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s