புறாவின் த்யாகம்

என்பும் உரியர் பிறர்க்கு” என்று குறள் சொன்ன மாதிரி, தங்களுடைய ஸர்வத்தையும் பரோபகாரமாக த்யாகம் பண்ணவேண்டும். சிபியின் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு புறாவுக்காகத் தன் சரீரத்தையே, ப்ராணனையே த்யாகம் செய்ய முற்பட்ட மஹாபுருஷன் அவன். நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்குத் தந்திருக்கிற முக்யமான ஸ்தானத்துக்கு சிபி கதை ஒன்றே போதும். வேத பூமியான இந்த பாரத பூமியின் விசேஷம் மநுஷ்யனுக்காக மட்டுமில்லாமல் மற்ற ஜீவராசிகளுக்கும், பூச்சி பொட்டுகளுக்குங்கூட க்ஷேமத்தைக் கோரி த்யாகம் பண்ணச் சொல்வது. இதில் இன்னொரு பக்கம், இந்த மண்ணின் விசேஷத்தால் மற்ற ஜீவராசிகளுக்குங்கூட இப்படிப்பட்ட பரோபகார சிந்தனையும், த்யாக புத்தியும் இருப்பதாகச் சொல்கிற புராண விருத்தாந்தங்களைப் பார்க்கிறோம். புறாவுக்காக த்யாகம் செய்த சிபியைப் பற்றிச் சொன்னேன். புறாக்களே செய்த பரம த்யாகத்தைக் ‘கபோத உபாக்யானம்’ சொல்லுகிறது. ‘கபோதம்’ என்றால் புறா என்று அர்த்தம். ‘உபாக்யானம்’ என்றால் சின்னக்கதை என்று அர்த்தம். இந்தப் புறாக்களின் கதை மனஸை ரொம்பவும் உருக்குவது.

வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காட்டிலே வலை வீசி ஒரு பெண் புறாவைப் பிடித்தான். அப்போது ஒரே இடியும் மழையுமாக வந்தது. இந்தப் புறாவும் அதன் ஜோடியான ஆண் புறாவும் வஸித்த மரத்தடியிலேயே அவன் ஒண்டிக்கொண்டான். மழை நின்றபோது நல்ல இருட்டாகி விட்டது. ஒரே குளிர் வேறு. வேடனால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடம்பெல்லாம் நடுங்க அங்கேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.

இதைப் பார்த்த மரத்தின் மேலிருந்த ஆண் புறா தன்னுடைய ப்ரிய பத்னியைப் பிடித்த பாபி நன்றாக அவஸ்தைப் படட்டும் என்று நினைக்கவில்லை. நேர் மாறாக, நம் தேசத்தின் விருந்தோம்பல் பண்பு முழுதும் அந்தச் சின்ன பக்ஷியிடம் திரண்டு வந்துவிட்டது. நாம் வஸிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி ‘அதிதி தேவோ பவ’ — ‘விருந்தாளியை தெய்வமாக நினை’ என்பது வேத ஆக்ஞை. எனவே, இந்த அதிதிக்குத் தன்னாலான ஒத்தாசையைச் செய்ய வேண்டும்’ என்று நினைத்தது.

முதலில், குளிரில் நடுங்குகிறவனுக்குக் கணப்பு மூட்ட வேண்டும் என்று நினைத்தது. தன் கூட்டையே பிரித்து அதிலிருந்த காய்ந்த குச்சிகளை வேடனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டது. தன் வீடு போனாலும் ஸரி, அவனுக்கு ஸெளகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற உத்தமமான எண்ணம்.

‘சிகிமுகி’ கல் என்று ஒன்று உண்டு. ‘சிக்கிமுக்கி’ என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறார்கள். ‘சிகி’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். ‘சிகை’ உள்ளதெல்லாம் ‘சிகி’ தான். சிகையை விரித்துக் கொண்டு ஆடுகிற மாதிரிதானே நெருப்பு ஜ்வாலை நாக்குகளை நீட்டிக்கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது? ‘முகம்’ என்றால் வாய். வாயில் நெருப்பை உடைய கல்தான், அதாவது தேய்த்தால் நெருப்பை உமிழ்கிற கல்தான் ‘சிகிமுகி’.

இப்படிப்பட்ட சிகிமுகிக் கற்களைப் புறா தேடிக்கொண்டு வந்து போட்டது.

வேடன் அவற்றை ஒன்றோடொன்று தட்டி நெருப்பு உண்டாக்கி அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்ற வைத்துக் குளிர் காய்ந்தான்.

தனக்குப் புறா இத்தனை உபகாரம் செய்ததும் வேடனுடைய க்ரூர ஸ்வபாவம்கூட மாறி மனஸ் இளகிவிட்டது. தான் பிடித்திருந்த அதனுடைய பேடையை விட்டு விட்டான்.

‘விருந்தோம்பல் என்றால் முக்யமாக அதிதிக்குச் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் இங்கே நம் விருந்தாளியாக வந்து விட்டுப் பட்டினி கிடந்தால் அதனால் நமக்கு மஹாபாபம் ஏற்படும். இவனுடைய பசியை ஆற்றுவதே நம் முதல் தர்மம்’என்று பெண் புறா நினைத்தது.

அவனுடைய ஆஹாரத்துக்காக அது வேறு எங்கேயோ போய்த் தேடவில்லை. தானே இருக்கும்போது வேறு ஆஹாரம் தேடுவானேன் என்று நினைத்தது. உடனேயே கொஞ்சங்கூட யோசிக்காமல், பரம ஸந்தோஷத்தோடு, அந்த அக்னியில் தானே விழுந்து ப்ராணத்யாகம் பண்ணி விட்டது. நெருப்பில் வெந்து பக்வமான தன்னை அவன் புஜிக்கட்டும் என்ற உத்தம சிந்தை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பக்ஷியும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னை வதக்கிக் கொண்டது.

என்பும் உரியர் பிறர்க்கு” என்ற மாதிரி இப்படி உயிரையே தந்தாவது இன்னொருத்தருக்கு உபகரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நம் மத க்ரதங்களிலெல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s