ராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில்

ராமாநுஜாசார்யாரின் சிஷ்யர்களிலும் இப்படி ஆவேசம், வெறி என்று சொல்லக்கூடிய தீவ்ர குருபக்தி உள்ளவர்கள் உண்டு.

வைஷ்ணவர்களுக்குப் பொதுவாகவே நைச்ய பாவம் (தன்னை ரொம்பவும் தாழ்த்தியாக நினைப்பது) முக்கியம். அதனால் எல்லோரிடத்திலுமே அவர்கள் ரொம்பவும் மரியாதையாக நடப்பார்கள்;பேசுவார்கள். நாம் (வைஷ்ணவரல்லாதார்) ”நீங்கள்” என்று சொல்கிற இடத்தில் அவர்கள் ”தேவரீர்” என்பார்கள். தங்களை ”தாஸன்”, ”தாஸன்” என்றே எவரிடமும் சொல்லிக் கொள்வார்கள். ”ஸேவிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணுவார்கள். ஸ்ரீவைஷ்ணவர்களைத் தவிர மற்ற ஸம்ப்ரதாயப் பெரியவர்களை ”ஸ்வாமி” என்று சொல்வார்கள்; தங்கள் ஸம்ப்ரதாயத்தில் தங்களைவிடப் பெரியவராயிருக்கிற எல்லாரையும் ”பெருமாள்” என்றே சொல்வார்கள். வார்த்தை மரியாதை அவர்களுக்கு ரொம்ப ஜாஸ்தி. வேடிக்கையாகச் சொல்வதுண்டு, குருவைத் தீர்த்துக் கட்டிவிட்டு, தானே பட்டத்துக்கு வரவேண்டுமென்று சிஷ்யன் அவருக்காகக் குழிவெட்டி வைத்திருந்தானாம். அப்போதுகூட, ”தேவரீரே ஏள்றீரா? தாஸன் ஏளப்பண்ணட்டுமா?” (தேவரீர் தாமாகவே குழிக்குள் எழுந்தருளுகிறீர்களா? இல்லாவிட்டால் அடியேன் அப்படி எழுந்தருளபண்ணட்டுமா?”) என்று மரியாதையாகத்தான் விக்ஞாபித்துக் கொண்டானாம்!

குரு பரம்பரைக் கதைகள் என்று வைஷ்ணவர்கள் போற்றிப் பாராயணம் பண்ணும் விருத்தாந்தங்களில் நம் நெஞ்சைத் தொடுகிற ஏராளமான குருபக்தி சரித்திரங்களைப் பார்க்கிறோம். பெருமாள் கோயில்களிலும் பாருங்கள், ஆழ்வார்கள் ஸந்நிதி, முக்யமாக ஆண்டாள் ஸந்நிதி, தென்கலைக் கோயிலானால் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாசார்யார் முதலியவர்களின் ஸந்நிதி, வடகலைக் கோயிலானால் வேதாந்த தேசிகரின் ஸந்நிதி ஆகியவற்றில் எத்தனை பக்தியோடு, விமரிசையோடு ஆராதனை நடத்துகிறார்கள்? ராமாநுஜருடைய ஜன்ம ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதூரில் பெருமாளே இரண்டாம் பக்ஷம்தான்; ‘ உடையவர், உடையவர்’ என்று தங்களுடைய ஆசார்ய புருஷருக்கு ஏற்றம் தந்து, அவருக்குத்தான் நித்யப்படி பூஜை, பத்து நாள் உத்ஸவமெல்லாம் ரொம்பவும் பெரிய ஸ்கேலில் செய்கிறார்கள். உடையவர் ஸந்நிதிக்கு மேலே தங்கத்திலேயே விமானம் வேய்ந்திருக்கிறார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இப்படித்தான் ஆண்டாளுக்கே பிரதான்யம். ‘கோதை, கோதை நாயகி’ என்று கொண்டாடுவார்கள். மதுரையில் மீனாக்ஷிக்கே பிரதான்யம், ‘மீனாக்ஷி கோயில்’ என்று சொல்வது, ஸுந்தரேஸ்வரர் அவளுக்கு அப்புறம் தான் என்பதுபோல், இங்கே ரங்கமன்னாரை (கண்ணனை) இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு ஆண்டாளைத்தான் முதலில் வைத்து ‘ஆண்டாள் கோயில்’ என்றே சொல்கிறார்கள். நம்மாழ்வார் அவதாரம் பண்ணின ஊருக்கு ஆதியில் ‘குருகூர்’ என்று பெயர். அப்புறம் அவருடைய ஜன்ம ஸ்தலமானதால் அதற்கு ‘ஆழ்வார் திருநகரி’ என்றே பெயரை மாற்றி விட்டார்கள். அங்கே அவருக்கு நடக்கிற உத்ஸவமும் ரொம்ப விசேஷமானது. இப்படியே ஒவ்வொரு ஆழ்வாருக்கும் செய்கிறார்கள்.

ராமாநுஜருக்கு முன்னும் பின்னும் வந்த ஸம்ப்ரதாய முக்யஸ்தர்களான நாதமுனிகள், ஆளவந்தார், மணக்கால் நம்பி, திருகச்சி நம்பி, கூரத்தாழ்வார், பட்டர், நஞ்சீயர் முதலான பலருக்கு விக்ரஹங்கள், பூஜையெல்லாம் அநேக ஆலயங்களில் பார்க்கிறோம்.

இந்த அளவுக்கு சிவாலயங்களில் நாயன்மார்கள், மாணிக்கவாசகர், சைவமதக் கோட்பாடுகளையும் புஸ்தகங்களையும் தந்த ஸ்ரீகண்டாசார்யார், மெய்கண்டசிவம், உமாபதி சிவாசார்யார் முதலியவர்களுக்குச் சிறப்புக் கொடுக்கவில்லைதான்!

(சங்கர) ஆசார்யாளையும் அவருக்கு முன்னும் பின்னும் வந்த அத்வைத ஸம்பிரதாயப் பெரியவர்களையும் எடுத்துக் கொண்டாலோ ஆலய விக்ரஹம், வழிபாடு இவற்றில் ஸைஃபர் என்றே சொல்ல வேண்டும். ஆசார்யாளுக்கு மட்டும் அபூர்வமாகச் சில கோயில்களில் பிம்பமிருக்கிறது. காஞ்சீபுரத்திலும் சுற்றுபுறங்களிலும் மாத்திரம் இது கொஞ்சம் நிறையவே இருக்கிறது. மாங்காடு, திருவொற்றியூர் இப்படிச் சில ஸ்தலங்களிலும் ஆசார்ய பிம்பங்கள் இருக்கின்றன. ஆனாலும் மொத்தத்தில், நான் அடிக்கடி சொல்வது போல, கோயில் விக்ரஹங்களின் ‘ஸென்ஸஸ்’ பார்த்து ஒரு ஸித்தாந்தத்தின் ‘இன்ஃப்ளுயென்’ஸை கணிப்பது என்றால், இந்தியா தேசத்திலே அத்வைதம் என்று ஒரு வைதிக மதம் இல்லவேயில்லை என்றுதான் முடிவாகும்!

இதற்குக் காரணம் அத்வைதிகள் சைவம், வைஷ்ணவம் இரண்டையும் சேராத, ஆனால் இரண்டையும் ஒரு அளவுவரை ஒப்புக் கொள்கிற ஸ்மார்த்தர்களாக இருப்பதுதான்.1

நான் சொல்லவந்த விஷயம் ராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில் மதாசார்யர்களிடத்தில் விசேஷ பக்தி காட்டுகிறார்கள் என்பது.

ராமாநுஜருடைய நேர் சிஷ்யர்கள் அவரிடம் வைத்திருந்த பக்தி அஸாத்யமானது. உயிரையே கொடுப்பது என்கிறதற்கேற்க, கூரத்தாழ்வார் என்பவர் ராமாநுஜருக்காகப் பிராணத் தியாகமும் பண்ணத் தயாராயிருந்திருக்கிறார். இவர் காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரியாதை வாசகத்துக்குப் பெயரெடுத்த வைஷ்ணவர்களே பக்தி முதிர்ச்சியில், தாங்கள் ரொம்பவும் பெரியவராக நினைக்கிற வேதாந்த தேசிகரை ”தேசிகன்” என்று ஒருமையில் அழைப்பதாகச் சொன்னேனல்லவா? அதுபோலவே கூரத்தாழ்வாரைக் ”கூரத்தாழ்வான்” என்றுதான் சொல்வார்கள். வெறுமனே ‘ஆழ்வான்’ என்று வைஷ்ணவர்கள் சொன்னாலே அது கூரத்தாழ்வார்தான். (‘ஆழ்வார்’ என்று ‘ர்’போட்டுச் சொன்னால் அது நம்மாழ்வார்தான்)

ராமாநுஜர் காலத்தில் ராஜாவாக இருந்த சோழன் தீவிர சிவபக்தன். ராமாநுஜரோ, ”விஷ்ணு ஒருத்தருக்குத் தான் ”ஏகாந்தி”களாகப் பூஜை பண்ண வேண்டும். சிவனுக்கு பண்ணக் கூடாது” என்கிற ஸித்தாந்தத்தைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அதனால் சோழராஜா, ”எந்த ஆதாரத்தைக் கொண்டு விஷ்ணு தவிர சிவன் முதலான தேவதாந்தரங்களை வழிபடக்கூடாது என்று நிர்த்தாரணம் பண்ணுகிறீர்?” என்று ராமாநுஜரைக் கேட்டு வாதம் நடத்துவதற்காக ஒரு வித்வத் ஸதஸைக் கூட்டினான். அப்போது கங்கைகொண்ட சோழபுரம் ராஜ்யத் தலைநகராயிருந்தது. அங்கே அந்த ஸதஸைக் கூட்ட நிச்சயித்து, ராமாநுஜாசார்யாரை அழைத்துக்கொண்டு வருவதற்காக ஆள் அனுப்பினான். அப்போது அவர் ஸ்ரீரங்கத்தில் இருந்தார்.

ராஜஸேவகரைப் பார்த்ததும் கூரத்தாழ்வாருக்கு விசாரம் உண்டாய்விட்டது. ‘ராஜாவோ சைவன்; அவனே நிறைய சிவாலயங்கள் கட்டியிருக்கிறான். நம்முடைய குருவானால் சிவாராதனை கூடாது என்கிறார். அதனால் அவருக்கு இவரிடம் த்வேஷம் இருக்கும். இப்போது வித்வத ஸதஸ் என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய் இவரை என்ன பண்ணுவானோ? ராஜாவானதால் என்னவும் பண்ணிவிடமுடியும். நம்முடைய அருமை ஆசார்யருக்கு அவன் ப்ராணஹானி விளைவித்துவிட்டால் என்ன செய்வது?’ என்று ரொம்பவும் பயமும் கவலையும்பட்டார்.

அப்போதுதான் அவர் குருவுக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்தது. அதாவது குருவின் காஷாயத்தைத் தாம் உடுத்திக் கொண்டு, தம்மையே ராமாநுஜாசார்யார் என்று சொல்லிக்கொண்டு ராஜஸபைக்குப் போய்விடுவது என்று தீர்மானித்து விட்டார். ”வருகிற ஆபத்து எனக்கே வரட்டும். தங்களுக்காக இந்த ஸேவை செய்கிற பாக்யத்தை எனக்கு மறுக்காமல் அருள வேண்டும்” என்று ராமாநுஜரிடம் பிரார்த்தித்து, அவரை ஸம்மதிக்கப் பண்ணினார். ராமாநுஜர் வெள்ளை வேஷ்டி கட்டிக் கொண்டு, சோழ ராஜ்யத்தையே விட்டு, கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்துக்குப் போய்விட்டார். அங்கே இப்போதும் ”வெள்ளை சாத்துப்படி” என்று அவருக்கு உத்ஸவம் நடத்துகிறார்கள்.

கூரத்தாழ்வார் காஷாயம் தரித்துக்கொண்டு ராமாநுஜராக கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் போனார். அங்கே வித்வஸ் ஸதஸ் நடந்தது. இவர் சிவபரத்வத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார்2. அதனால் இவர் நினைத்தப்படியே ராஜதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ராஜா கொலைத்தண்டனை தரவில்லை. இவருடைய கண்ணைப் பிடுங்கும்படியாக உத்தரவு போட்டுவிட்டான்.

குருவுக்கு ஏற்பட இருந்த இந்த கொடுமை நமக்கு வாய்த்ததே என்று கூரத்தாழ்வார் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். குருடராக ஆனார்.

அப்புறம் அந்த ராஜா காலமானபின் ராமாநுஜாசாரியார் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார். தமக்காக சிஷ்யர் கண்ணை இழந்துவிட்டாரே என்று துக்கப்பட்டார்.

ராமாநுஜர் பிற்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்தபோதிலும், ஆரம்பத்தில் காஞ்சீபுரத்தில் வஸித்துக் கொண்டு வரதராஜ ஸ்வாமிக்குத்தான் தீர்த்த கைங்கர்யம் செய்துகொண்டு, அவரையே இஷ்ட தெய்வமாக உபாஸித்து வந்தார். ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் ஆராதனை க்ரமங்களை அமைத்துக்கொடுத்து அங்கே இவர் இருந்த காலத்திலும் கூட வரதராஜாவிடம் ஒரு தனியான பற்று வைத்திருந்தார். அதனால் இப்போது கூரத்தாழ்வாரிடம், ”எனக்காக உன் கண் போயிற்று. அதனால் உனக்காகப் பார்வை மீள வேண்டும் என்று இல்லாவிட்டாலும் என் மனஸ் ஆறுவதற்காக நீ வரதராஜாவை வேண்டிக்கணும்” என்றார். கூரத்தாழ்வாரும் அப்படியே காஞ்சீபுரம் பெருமாளிடம் ஸ்தோத்ரம் பண்ணி வேண்டிக் கொண்டார். அவருக்கு த்ருஷ்டி திரும்பணும் என்று நிஜமாகவே ஆசை இல்லை. ‘எல்லா இந்த்ரியங்களையும் அடக்கினால்தான் ஈஸ்வர தர்சனம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. நமக்கோ ராஜசிக்ஷை ரூபத்தில் கண் போனதில் இந்த ஒரு இந்திரியமாவது கண்டதைப் பார்த்துக் கெட்டுப் போகாமலிருக்கும் அநுக்ரஹம் கிடைத்திருக்கிறது. இதைப் மாற்றப்பண்ணி மறுபடியும் லோகக் காட்சி பார்த்து என்ன ஆக வேண்டும்?’ என்றே நினைத்தார். ஆனாலும், ‘ஆசார்யன் ஆக்ஞைக்குக் கீழ்படிந்தாகவும் வேண்டுமே! அவர் பச்சாத்தாபம் படும்படியாக விடக்கூடாதே!’ என்று யோசித்தார். யோசித்து ஸ்வாமியிடம், ”எனக்குப் பார்வையை மறுபடி தா. ஆனால் எல்லா விஷயங்களையும் நான் பார்க்க வேண்டியதில்லை. என் ஆசார்யனுடைய திவ்யரூபத்தை தர்சனம் பண்ணுவதற்கும், உன் மங்கள விக்ரஹத்தை தர்சிப்பதற்கும் மட்டுமே கண்ணுக்குச் சக்தி தா” என்று கேட்டார். வரதராஜாவும் அப்படியே வரம் கொடுத்தாராம்.

ராமாநுஜருக்கு முந்தி இருந்த பெரியவரான ஆளவந்தார் திருநாட்டை அலங்கரிக்க முடியாமல் (சரீரயாத்ரை முடிந்து பரமபதம் சேர்வதைத் ”திருநாட்டை அலங்கரிப்பது” என்றே வைஷ்ணவர்கள் சொல்வார்கள்) அவருடைய ப்ராரப்தம் ‘டிலே’ பண்ணினபோது, பெரிய த்யாகமாக சிஷ்யர் ஒருத்தரே3 அந்தக் கர்மசேஷத்தை ராஜபிளவை என்ற பயங்கரக் கட்டி ரூபத்தில் ஏற்று அநுபவித்துத் தீர்த்தார் என்றும் ஒரு கதை இருக்கிறது.

ரஸத்தோடு, ஹாஸ்ய ரஸனையோடு கூடியதாக இன்னொரு குரு பரம்பரைக் கதை உண்டு. ராமாநுஜரின் சிஷ்யர்களில் ஒருத்தர். அவர் ஒருநாள் உள்ளே ஆசார்யருக்காகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். வாசலில் ஸ்ரீரங்கநாதர் ஊர்வலம் வந்தது. ”தர்சனம் பண்ண வா, வா!” என்று ராமாநுஜாசார்யார் வாசலிலிருந்து சிஷ்யரைக் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால் சிஷ்யர் போகாமல் பாலையே கவனித்துக் கொண்டிருந்தார். ஸ்வாமி அந்த இடத்தைத் தாண்டிப் போய்விட்டது. ராமாநுஜர் உள்ளே வந்து, ”வாசலிலியே பெருமாள் ஸேவை ஸாதிக்கிறபோது ஸேவிக்காமல் நீ இப்படிப் பண்ணலாமா?” என்று கோபித்துக் கொண்டார். அதற்கு அந்த சிஷ்யர், ”உங்கள் பெருமாளை நீங்கள் ஸேவித்தது ஸரிதான்! அது நீங்கள் பண்ண வேண்டியதுதான். ஆனால் அதற்காக நான் என் பெருமாளுக்குப் பண்ணும் பால் ஸேவையை ஏன் பாதியில் விட்டுவிட்டு வரணும்?” என்று கேட்டாராம்!

குருவுக்காக எந்தக் கஷ்டத்தையும் ஸந்தோஷத்தோடு பொறுத்துக் கொள்கிற அளவுக்கு பக்தியானது சக்தி தந்திருக்கிறது. க்ஷத்ரியர்களை த்வேஷித்த பரசுராமரிடம் பிராம்மண வேஷம் போட்டுக் கொண்டு வந்து வில்வித்தை கற்றுக்கொண்ட கர்ணனை, ஒருநாள் இவன் மடியில் அவர் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு வண்டு கொட்டித் தீர்த்து விட்டது! அசைந்து கொடுத்த அதை விரட்டினால் குருவின் நித்ரைக்கு பங்கம் வந்துவிடுமே என்று கர்ணன் ஆடாமல் அசையாமல் அத்தனை கொட்டையும் ஸஹித்துக் கொண்டான் என்ற கதை கேட்டிருப்பீர்கள். அப்புறம் அந்தக் கதை வேறு விதமாய்ப் போய்விடுகிறது.

குருவை எந்த வித்யைக்காக ஆச்ரயித்தானோ, அந்த வித்யையையே சிஷ்யன் அப்யஸிக்க முடியாதபடி ரொம்பக் கடுமையாக, கொடுமையாக குருவானவர் தக்ஷிணை கேட்டபோது தயங்காமல் கொடுத்த ஏகலைவன் கதையையும் இன்றுவரைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆழ்வார்களில் மதுரகவி என்று ஒருத்தர். அவர் பாடினது (பதினோறு அடிகள் கொண்ட) ஒரே ஒரு பாசுரந்தான். அதுவும் மஹாவிஷ்ணுவைப் பற்றியதில்லை. ஆனாலும் அதை நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலே சேர்த்து, மதுரகவியையும் ஒரு ஆழ்வாராக உயர்த்தி வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவருடைய குருபக்தி விசேஷத்துக்காகத்தான். அவர் பாடினது நம்மாழ்வாரைப் பற்றி. ராமாநுஜ ஸித்தாந்தத்தில் ஆழ்வார்களுக்கெல்லாம் ஆசார்ய ஸ்தானம் மாதிரியான சிறப்பு உண்டு. அந்த ஆழ்வார்களுக்குள்ளேயும் நம்மாழ்வாருக்கு ”ப்ரபன்ன ஜன கூடஸ்தர்” என்பதாக விசேஷ ஸ்தானம் தந்திருக்கிறது.

நம்மாழ்வார் அப்பிராம்மணர். மதுரகவியோ நல்ல பிராம்மணர். அவர் வடதேசங்களில் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தபோது தெற்கேயிருந்து ஒரு ஜ்யோதி ரச்மி (ஒளிக்கதிர்) அவருக்குத் தெரிந்தது. அந்த ரச்மியையே பின்தொடர்ந்து ஆயிரம் மைலுக்கு மேலே வந்து திருநெல்வேலி ஜில்லாவிலிருக்கிற திருக்குருகூரை (இப்போது ‘ஆழ்வார் திருநகரி’ என்கிறோம்) அடைந்தார். அங்கே ஒரு புளியமரப் பொந்துக்குள் ரச்மி ஐக்கியமாகிவிட்டது. அதற்குள்ளேதான் நம்மாழ்வார் எத்தனையோ காலமாக அப்படியே நிஷ்டையிலிருந்து கொண்டிருந்தார். அவரை மதுரகவி நிஷ்டையிலிருந்து எழுப்பி ஆத்ம ஸம்பந்தமாக ஸங்கேத பாஷையில் கேள்வி கேட்டாரென்றும், நம்மாழ்வாரும் அதே போல ஸங்கேத பாஷையில் பதில் சொன்னாரென்றும் கதை. (அந்தக் கேள்வியையும் பதிலையும் நான் சொன்னால் அப்புறம் ‘எக்ஸ்ப்ளெயின்’ பண்ணாமலிருக்க முடியாது. ரொம்ப நாழி ஆகும். அப்படியும் புரியுமோ புரியாதோ, ஸந்தேஹம். அதனாலே இத்தனை தத்வார்த்தத்துக்கும் மேலே எதுவோ அந்த குருபக்திதானே நம் ஸப்ஜெக்ட்? அதற்கே போகிறேன்.) அந்தப் பதில் மதுரகவிக்கு மந்த்ரோபதேசம் மாதிரி ஞானத்தைக் கொடுத்துவிட்டது. அவர் ‘ப்ரபன்ன ஜன கூடஸ்த’ரான நம்மாழ்வாரிடமே ப்ரபத்தி (பூர்ண சரணாகதி) பண்ணி அவரை ஸ்தோத்திரம் செய்து பாசுரம் பாட ஆரம்பித்துவிட்டார். அதிலே நம்மாழ்வாரைத் தவிர தனக்கு வேறே ஸ்வாமியே கிடையாது –”தேவு மற்றறியேன்’ – என்று பிரமாணம் மாதிரிப் பண்ணுகிறார். ”நம்மாழ்வார் மஹாவிஷ்ணுவை ஸ்வாமி என்று வழிபட்டால் வழிபட்டுவிட்டுப் போகட்டும்; எனக்கு நம்மாழ்வாரேதான் ஸ்வாமி. அவரைப்பற்றித் தான் பாடுவேன். பெருமாளைக்கூட பாடமாட்டேன்” என்று குருவிடம் பரம பக்தியில் பாடிவிட்டார்.

‘நம்முடைய ஸித்தாந்தத்தில் ஆசார்ய புருஷர்களுக்கு மேலேயும், பெருமாளுக்கு அடுத்ததாகவும் இருக்கிற ஆழ்வார்களில் பிரதானமாயுள்ள நம்மாழ்வாரிடம் ஏகாந்த பக்தி வைத்து மதுரகவி பாடியிருப்பதும் பெருமாள் மேலேயே ‘அருளிச் செயல்’ என்னும் பிரபந்தம் பாடினமாதிரிதான்’என்றே அந்த ஸம்பிரதாயத்துப் பெரியவர்கள் இதை நாலாயிரத்திலே சேர்த்து, அவருக்கும் ஆழ்வார் என்று ஏற்றம் கொடுத்திருக்கிறார்கள்.

”தேவு மற்றறியேன்” என்று இவர் சொன்ன மாதிரியே தான் வேதாந்த தேசிகரும் ”ஆசார்யாத் இஹ தேவதாம் ஸமதிகாம் அந்யாம் ந மந்யாமஹே” என்று சொல்லியிருக்கிறார்.


1இவ்விஷயம் குறித்த விஸ்தாரமான விளக்கம் “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியிலுள்ள “சங்கர சம்பிரதாயம்” என்ற உரையில் பார்க்க

2இது விஷயமான மேல் விபரங்கள் “சிவநாம மஹிமை” என்ற உரையில் காணலாம்.

3மாறனேர் நம்பி என்ற தீண்டாதார். அடுத்ததாகக் கூறப்படும் ‘ரஸ’ மான வரலாற்றில் குறிப்பிடப்படும் சீடர் வடுகநம்பி.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s