என் ஜாக்ரதைக் குறைவு

ஆனால் இப்படி ‘அட்வைஸ்’ பண்ணுவதிலுங்கூட நான் இன்னம் கொஞ்சம் ஜாக்ரதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு புத்தி சொல்லித் திருத்துகிற மாதிரி இன்றைக்கு அந்த தம்பதி வந்து, (நான் வசவு என்று சொன்னாலும்) வ்யஸனத்தோடு விஞ்ஞாபனம் பண்ணிக் கொண்டு போனார்கள். எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ என் ஜாக்ரதைக் குறைவால், நான் பரோபகாரத்தைச் சொல்லும்போது அதற்கு ஒரு qualifying clause [நிபந்தனைப் பிரிவு] போடாமலே இருந்துவிட்டேன் என்பதற்காக என்னை வையத்தான் வேண்டும். அதனால் அவர்களுக்கு ரொம்பவும் கஷ்டம் யதார்த்தத்தில் ஏற்பட்டுவிட்டதால் திட்டித்தானிருக்க வேண்டும். ஆனால் வயஸு, லாயக்கிருக்கோ இல்லையோ அதுவாக வந்து சேர்ந்துவிட்ட ‘குரு ஸ்தானம்’, இதுகளை உத்தேசித்துத் திட்டாமல் மரியாதையாகவே சொல்லிவிட்டுப் போனார்கள்.

அவர்களுக்கு என்ன கஷ்டம் ஏற்பட்டுவிட்டது? அவர்கள் வீட்டுப் பிள்ளை, பிரம்மசாரிப் பையன், வேலையிலிருக்கிறவன், என் பரோபகார உபதேசங்களைப் படித்துவிட்டு அதிலேயே ஓவராக ஈடுபட்டு விட்டானாம். தன் கார்யம், வீட்டுக் கார்யம் எதையும் கவனிப்பதில்லையாயம். ஆபீஸ் கார்யம்கூட ச்ரத்தையாகப் பண்ணுகிறானோ இல்லையோ என்று பயமாயிருக்கிறதாம். எப்போது பார்த்தாலும் பிடி அரிசி கலெக்ஷன், [மாடுகளுக்காக] காய்கறித் தோல் கலெக்ஷன், இப்படி ஒரு பக்கம் கலெக்ஷன், இன்னொரு பக்கம் டிஸ்ட்ரிப்யூஷன் – ஆஸ்பத்திரியில் பிரஸாத டிஸ்ட்ரிப்யூஷன் மாதிரி, என்றிப்படி ஓயாமல் ஒழியாமல் அலைந்து கொண்டிருக்கிறானாம்.

“தான் கட்டிக்கொண்ட துணியைக்கூடத் தோய்க்கிறதில்லை; இவள்தான் தோய்த்துப்போட வேண்டியிருக்கு” என்று அந்த மநுஷ்யர் கம்ப்ளெயின் பண்ணினார்.

உடனே அவர் behalf-ல் அந்த அம்மாள் பரிந்துகொண்டு, ”வீட்டுக்கு ஒரு ஸாமான், காய்கறி பார்த்து வாங்கிப் போடுகிறதில்லை. சொன்னால்கூடக் காதில் போட்டுக்கொள்வதில்லை இத்தனை வயஸுக்கு இவரேதான் பண்ணும்படி இருக்கிறது” என்று சொன்னாள். ”ஊர் வெயில் மழை எல்லாம் அவன் மேலேதான். உடம்பு வீணாய்ப் போயிடுத்து. கையை விட்டுச் செலவும் நிறையப் பண்ணுகிறான். நாங்கள் கேட்கிறோமென்பதால் எரிச்சல், கோபம். ஏதோ கொஞ்சம் அகத்தில் தலைகாட்டுவதையும் நிறுத்திவிடப் போகிறானே என்று முடிந்த மட்டும் நாங்களும் வாயைத் திறப்பதில்லை. இருந்தாலும் மநுஷ்யர்கள்தானே? சொல்லாமலேயும் இருக்க முடியவில்லை. நீங்கள்தான் அவனுக்கு நல்ல புத்தி வரப்பண்ணணும்” என்று சொன்னார்கள். பெற்ற மனஸு!

அவர்கள் அப்படிப் பிரார்த்தனை பண்ணிக்கொண்ட போதிலும், ”இந்தக் கஷ்டம் உண்டாக நீதானே ஜவாப்தாரி? நீதான் இதை ஸரி பண்ணணும்”என்று அவர்கள் இடித்துக் காட்டினதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன்.

இனிமேலே எனக்குப் பிரஸங்கம் பண்ணுகிற உத்தேசமில்லை*. ஆனாலும் இப்போதுதான் என்னைப் பார்க்க வருகிறவர்களும், அட்வைஸ் கேட்கிறவர்களும் ஜாஸ்தியாகிக்கொண்டு வருகிறார்கள். அதனால் இனிமேல் பிரஸங்கம் பண்ணாவிட்டாலும், என்னிடம் வருகிறவர்களிடம் பேசுகிறபோது, நல்லதைச் சொல்கிறபோது, ஒவ்வொருவனும் பொதுத்தொண்டு ஏதேனும் அத்யாவச்யமாகப் பண்ணித்தானாக வேண்டும் என்று சொல்லும்போதே, “without prejudice to” (இன்னதற்கு ஹானி இன்னியில்) என்று அநேக ஒப்பந்தங்களில் qualifying clause போடுகிறார்களே, அந்த மாதிரி இதற்கும் ஒரு நிபந்தனை, ‘தன் கார்யம், குடும்பக் கடமைகளைக் கொஞ்சங்கூட விடாமல்’ என்றும் போடவேண்டுமென்று தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பிற்பாடு இது ஸமயத்தில் நினைவு வந்து சொல்வேனோ மாட்டேனோ, அந்த [பரோபகார] ஸப்ஜெக்டே என்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்னவோ, எப்படியானாலும், இன்றைக்கேனும் அந்தத் தாயார் தகப்பனார் படுகிற கஷ்டத்தைப் பார்த்ததில் இப்படிச் சொல்கிற ஞானம் எனக்கு உண்டாயிருக்கிறது.

”தான் அவிழ்த்துப்போட்ட துணியைத் தாயார்க்காரி தோய்க்கணும்; வயஸுக் காலத்தில் அப்பன்காரன் கடை கண்ணி ஏறி இறங்கணும்” என்று விட்டு விட்டு ஒருத்தன் ஸோஷல் ஸர்வீஸுக்கு கிளம்பணும் என்று நான் நினைத்ததேயில்லை. நினைக்காவிட்டாலும் இதை வாய்விட்டு நான் சொல்லாதது தப்புத்தான். இதனால், இன்றைக்கு இங்கே வந்து போனவர்கள் மாதிரி இன்னும் எத்தனை பேர் வீட்டில் அனர்த்தத்தை உண்டாக்கியிருக்கிறேனோ? எல்லாருக்கும் என்னிடத்தில் வந்து சொல்லிக்கொள்ள முடியுமா? ”சொல்லிக்கொள்வதே ‘பெரியவா’ மேலே குறை சொல்கிற மாதிரித்தானே ஆகும்? அப்படிப் பண்ணலாமா?” என்றே பலபேர், பாவம், வாயை மூடிக்கொண்டு என்னால் ஏற்பட்ட கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம்.

இன்றைக்கு வந்தவர்கள் எனக்கு என்ன உபதேசம் பண்ணியிருக்கிறார்கள்? ‘வசவு’, ‘வசவு’ என்று இத்தனை நாழி நான் சொன்னதை ‘உபதேசம்’ என்று சொல்லியிருக்கலாம். வசவானால்தான் feeling -ஐக் கிளப்பிவிடும் என்று அப்படிச் சொன்னேன். அதனால் உண்மையை அலசிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வழி ஏற்படுமென்றேன். அதைவிட ‘உபதேசம்’ என்று அடக்கமாக எடுத்துக்கொண்டு விட்டால் இன்னம் ச்லாக்யம் என்று தோன்றுகிறது. ஸ்வய ஸமாசாரங்களிலேயே ஒருத்தன் அதியாக ஈடுபட்டுப் பொதுக் கார்யங்களை கவனிக்காமலிருப்பதுதான் ‘ஜெனரல் ரூல்’ என்றாலும், எதிர்த்திசையில் சில பேர் அத்யாவசியமான சொந்தக் கார்யம், கடமைகளையும் விட்டு விட்டுப் பொதுக் கார்யம் என்று பறந்துகொண்டு, வீட்டு மநுஷ்யர்களுக்கு ச்ரமம் உண்டாக்கவும் கூடும் என்பதை நான் மறக்கக்கூடாது. அதனால், ”சொந்தக் கார்யம் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தால், அலை ஓய்ந்துதான் ஸமுத்ர ஸ்நானம் என்கிற மாதிரி பொதுக் கார்யங்களை எவருமே எப்போதுமே செய்ய முடியாது” என்று நான் அட்வைஸ் பண்ணும்போதே, அதை qualify பண்ணி, ”அதற்காக, அத்யாவச்யமான சொந்த வேலைகளை, அகத்து ட்யூட்டிகளை ஒருநாளும் விடக்கூடாது” என்றும் எடுத்துச் சொல்லிவிட வேண்டும். இதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம்.

 


* இந்த உரையும் பொதுப் பிரஸங்கமல்ல; ஒரு சில அடியாருடன் நிகழ்த்திய உரையாடல்தான்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s