அன்று கண்ட அபிவிருத்தியும் இன்று காணும் சீரழிவும்

இப்போது சில சீர்திருத்தக்காரர்கள் சொல்வது பாமர ஜனங்கள் உள்பட எவருமே சாஸ்திரோக்த கர்மாக்களைப் பண்ணாமல் ஞானி மாதிரி தத்வ விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமென்பது; பகவானும் சாஸ்திரங்களும் சொல்வதோ, ஞானி கூடப் பாமரன் மாதிரி சாஸ்திர கர்மாவைப் பண்ணி ஆசார அநுஷ்டானாதிகளை நடத்திக் காட்ட வேண்டுமென்பது.

எது ஸரி என்பதற்கு ஹிஸ்டரியையும், யதார்த்தத்தையும் பார்த்தால் போதும். பகவான் சொன்னபடி செய்து கொண்டிருந்தவரையில் நம் தேசம் லோகத்துக்கே மாடலாக ஸத்ய தர்மங்களிலும், பக்தியிலும் ஞானத்திலும், கலாசார நாகரிகத்திலும், ஸமூஹம் பூராவின் சீரான ஒழுங்கிலும் தலைசிறந்து இருந்திருப்பதை ஹிஸ்டரி காட்டுகிறது. இப்போது ரிஃபார்மர்கள் அபிப்ராயப்படி செய்ய ஆரம்பித்தபின் எப்படியிருக்கிறோம் என்பது தெரிந்ததே. கீதை சொன்னபடி மேலே இருந்தவனும் கீழே இருக்கிறவனைப் போலச் செய்து காட்டிக் கொண்டிருந்த வரையில் எல்லாரும் மேலே போனார்கள்; இப்போது கீழே இருக்கிறவனும் மேலே போய் விட்ட மாதிரி பாவித்துக்கொண்டிருப்பதில் எல்லாரும் அதல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம்! கட்டெல்லாம் விட்ட பரம ஸ்வதந்த்ர நிலையிருந்த ஞானியும் சாஸ்திரக் கட்டுப்பாட்டுப்படிச் செய்து மற்றவர்களையும் அதேபோலச் செய்வித்துக் கொண்டிருந்தபோதே தேசம் ஆத்மிகமாக மட்டுமில்லாமல், இப்போது ஸயன்ஸ் என்பதில் வரும் அநேக வித்யைகள், வியாபாரம் (கடல் கடந்தெல்லாம் கூடப் போய் வாணிபம் பண்ணியிருக்கிறார்கள்) எல்லாவற்றிலும் உன்னதமாயிருக்கிறது. “லோகம் பொய்; ஆத்மா, ஆத்மா” என்று சொல்லிக் கொண்டு ஸயன்ஸிலும், பொருளாதாரத்திலும் நாம் பிற்பட்டு நின்றதாகச் சொல்வதற்கு கொஞ்சங்கூட ஆதாரமில்லை. துருக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள் ஆகியவர்களுடைய ஆதிக்கத்தில்தான் ஹிந்து ஸமுதாயம் ஒடுங்கி இவற்றில் backward state வந்ததே தவிர அதனுடைய மதாசாரத்தாலும் ஃபிலாஸஃபியாலும் அல்ல1. கட்டுப்பட்டிருந்தாலே சுத்தியாகக்கூடிய ஸாமானிய ஜனங்களையும் ஸ்வதந்திரம் என்று அவிழ்த்து விட்டிருக்கும் இப்போதோ எல்லாவற்றிலும் கீழேதான் போய்க்கொண்டிருக்கிறோம். “பாரமார்த்திகமாகக் கீழே போகிறோம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்; ஸயன்ஸில், காமர்ஸில் அபிவிருத்திதான் ஆகியிருக்கிறோம். Atom research, electronics எல்லாங்கூட கரைத்துக் குடித்து விட்டோமாக்கும்” என்று சொல்லலாம். ஆனால் நம்முடைய moral standard கீழே போய்விட்டதென்று மற்ற தேசத்தார் – இதுவரை நம் தேசத்தை தர்மபூமி என்று கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் -அபிப்ராயப்பட ஆரம்பித்தபின் இவற்றில் நாம் முன்னேறி என்ன பிரயோஜனம்? ‘காமர்ஸ்’ ஜாஸ்தியாச்சு என்று நாம் பெருமைப்பட்டாலும் இறக்குமதி செய்கிற அந்நியர்கள் சொல்வதைக் கேட்டால் அவமானமாயிருக்கிறது. “இந்த இந்தியர்கள் முதலில் காட்டுகிற ‘ஸாம்பிள்’ ஒன்றாயிருக்கிறது; அப்புறம் அனுப்பி வைக்கிற சரக்கு வேறாயிருக்கிறதே!நாணயமில்லாமல் நடக்கிறார்களே!” என்கிறார்கள். ஸயன்ஸ் அபிவிருத்தியில் பரஸ்பரம் தெரியாததைத் தெரிந்துகொண்டு, கூடச் சேர்ந்து ஆராய்ச்சி பண்ணுவதற்கும் நம்மை அவ்வளவாக நம்பமாட்டேனென்கிறார்கள் என்று கேள்வி. முன் நாளில் கட்டுப்பாட்டால் ஏற்பட்ட தர்மபலம் என்கிற அஸ்திவாரத்தின் மேலேயே விஞ்ஞான வித்யைகள், வியாபாரம் எல்லாம் நல்ல பெயரோடு விருத்தியாயின. அஸ்திவார பலம் இல்லாமல் இப்போது இவற்றில் ஏற்படுவதாகச் சொல்லப்படும் முன்னேற்றம [நிலைத்து] நிற்காது.

பூர்வாசாரங்கள் வேண்டியதில்லை என்று ஸுலபமாகச் சொல்லி, ஜனங்கள் இதை வேத வாக்காக (வேத வழி வேண்டாம் என்பதையே வேத வாக்காக) நம்பச் செய்து விட்டார்களே என்று மிகவும் துக்கமாக இருக்கிறது. வேணுமா, வேண்டாமா என்பதற்கு அதிகமாக வாதப் பிரதிவாதம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நான் இத்தனை நேரம் சொன்னதெல்லாங்கூட அவசியமில்லை தான். ஒரு சின்ன விஷயத்தைக் கொண்டே முடிவு செய்து விடலாம். வியாதியஸ்தன் மருந்து சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு விவாதம் பெரிசாகப் பண்ண வேண்டுமா? மருந்தைக் கொடுத்துப் பார்த்தால் என்ன நடக்கிறது, கொடுக்காவிட்டால் என்ன நடக்கிறது என்று பார்த்தால் போதாதா? மருந்து கொடுக்கிற மட்டில் வியாதி குறைகிறது, விட்டு விட்டால் ஜாஸ்தியாகிறது என்று பிரத்யக்ஷத்தில் தெரிகிறது. அப்போது மருந்து வேண்டத் தான் வேண்டும் என்றுதானே அர்த்தம்? பூர்வாசாரங்கள் இருந்தவரையில் தேசத்தில் எல்லாத் துறையிலும் அபிவிருத்தி இருந்தது. இதற்கு மேலாக ஒழுக்கமும் ஒற்றுமையும் இருந்தன. அவற்றை ஒழிக்க ஆரம்பத்ததிலிருந்து இவற்றையெல்லாமும் விரட்டியாகிறது என்பதிலிருந்தே அந்த மருந்து இல்லாவிட்டால் ஆத்மாவுக்கு வியாதிதான் என்று தெரியத்தானே வேண்டும்? ஒருவேளை சாப்பாட்டை நிறுத்தினால், உடனே ஓய்ச்சலாக வந்தால் சாப்பிட வேண்டும் என்று தெரிகிறதோ இல்லையோ? சாஸ்திரத்தை விட்டபின் தனி வாழ்க்கை, ஸமுதாய வாழ்க்கை இரண்டிலும் நிம்மதி போன பிற்பாடும் பூர்வாசாரம் வேண்டும் என்று தெரிந்து கொள்ள மாட்டோமென்றால் என்ன பண்ணுவது? தலைவர்களாயிருக்கப்பட்டவர்கள் மாட்டேனென்கிறார்கள்.

தப்புப் பண்ணிவிட்டோமென்று ஒப்புக்கொள்வது கஷ்டந்தான் என்றாலும் ஒரேயடியாகப் முழுகிப் போகிற நிலை வந்தபோதாவது, ஒப்புக்கொண்டு வெளியே வரவும் மற்றவர்கள் வெளியில் இழுத்துப் போடவும் முயலத்தானே வேண்டும்? இன்னம் முழுகியே போய்விடவில்லை. அதனால்தான் இதை நான் சொல்லி, நீங்கள் கேட்டுக் கொண்டாவது உட்கார்ந்திருப்பது! கேட்டது போதாது. புயல் வருகிறது என்று weather forecast கேட்டால் மட்டும் பிரயோஜனமில்லை. அது நம்மை பாதிக்காமலிருக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். Weather proof ஆக, தர்ம ரக்ஷையாக, கவசமாக இருப்பது பூர்விகர்களின் ஸமயாசாரம் தான். ஆகையால் இதைக் கேட்டதற்கு லக்ஷணம் இனிமேலாவது கேட்டபடிப் போவதற்குப் பிரயத்தனப்படுவதுதான்.

சிகாம் ஸூத்ரம் ச புண்ட்ரம் ச ஸமயாசாரமேவ ச |
பூர்வைராசரித: குர்யாத் அந்யதா பதிதோ பவேத் ||

பதிதபாவனன் என்று பகவானைச் சொல்கிறோம். “பதிதபாவன ஸீதாராம்” என்பதாவது காந்தியால் நின்றிருக்கிறது. அந்த ராமன் ஸகல கார்யமும் சாஸ்திரத்தைப் பார்த்துப் பார்த்தேதான் செய்தான். அந்த வழியிலிருந்து நாம் அடியோடு வழுக்கி விழுந்து பதிதர்களான பின் அவன் நம்மை பாவனப்படுத்துவது என்றில்லாமல், அவனை நாம் அவ்வளவு வேலை வாங்காமல், இப்போதிலிருந்தே நம்மை முன்னோர்களின் நெறியில் அவன் தூக்கி விட்டு ரக்ஷிக்கும்படியாகப் பிரார்த்தனை செய்வோம்.


1இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியிலுள்ள ‘வித்யாஸ்தானம்; முடிவுரை’ என்ற உரை பார்க்க.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s