தலைவர்களும், பின்பற்றுகிறவர்களும்

ரிஃபார்ம் லீடர்களுக்கும் ஃபாலோயர்களுக்கும் [அவர்களைப் பின்பற்றுவோருக்கும்] இடையே ஒரு வித்யாஸம். இதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த நாளில் மதம் விதிக்கிற சீலங்கள் (religious virutes) மத ஸம்பந்தமில்லாத வெறும் ethical excellences (நன்னெறிப் பண்புகள்) என்று ஒரு விசித்ரமான பாகுபாடு பண்ணுவது வழக்கமாயிருக்கிறது. மத ஸம்பந்தம் அதாவது ஈச்வரப் பிரேரணையான [மத] சாஸ்திர ஸம்பந்தம் என்பது இல்லாமல் நன்னெறி, ethics,morality என்று எதுவுமே இல்லை. ஆனாலும் இப்படி ‘சாஸ்திரம்’ என்று பூர்விகக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கிறோம் என்றால் அது இந்தக் காலத்தவருக்கு அவமானமாக, தங்கள் கௌரவத்தைக் குறைத்துக் கொள்வதாக இருக்கிறது. சாஸ்திரங்களில் கண்ணுக்குத் தெரியாத ‘அத்ருஷ்ட’ தத்வங்களை base பண்ணியே அநேக தர்மங்களையும், அந்த தர்மங்களை நடைமுறையில் காட்டுவதற்கான கர்மங்களையும் சொல்லியிருப்பதெல்லாம் ‘ஸுபர்ஸ்டிஷன்’ என்று மேல்நாட்டுக்காரர்கள் சொல்வதால் இதையெல்லாம் நாம் ஏன் அநுஸரிக்க வேண்டும் என்று அவமானமாயிருக்கிறது. நம் சாஸ்திரத்தை நாம் ஸரியாகப் புரிந்துகொண்டு அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர்கள் தங்களுடைய பார்வையில் பட்டபடி இதைப்பற்றிச் தப்பாகச் சொல்வதையெல்லாம் நம்மவர்களே எடுத்துக்கொண்டு ஃபாஷனாக ரிஃபார்ம் பண்ணிவிட வேண்டுமென்று ஆரம்பிக்கிறார்கள்.

கொஞ்ச காலமாக, நாம் எடுத்துச் சொல்லாமலே, வெள்ளைக்காரர்கள் தாங்களாக ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் பண்ணி ஏற்கனவே தாங்கள் பரிஹாஸம் பண்ணின அநேக ஸமாசாரங்களைப் பெரிசாகக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். ஹோமம் பண்ணுவதில் பலன் இருக்கிறது. மந்திரத்தில் பலன் இருக்கிறது, லோகாந்தரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் அவர்களே ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் ஸர்ட்டிஃபிகேட்டின் மீது நம்மவர்களும் இவற்றைக் கொஞ்சம் ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரிஃபார்ம் லீடர்கள் மதசீலம், நெறிக் கோட்பாடு என்று இரண்டாகப் பிரித்ததில் முதலாவதில் பலவற்றை ஆக்ஷேபித்தாலும், பின்னதில் (நெறிகளில்) பலவற்றைப் பின்பற்றுவதால் தங்களைப் பொறுத்தமட்டில் ஏதோ ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்களாயிருக்கிறார்கள். இந்த ஒழுங்குகளையும், பழைய ஆசாரங்களை மாற்றிச் சீர்திருத்தம் என்ற பெயரில் இவர்கள் செய்கிற புது விதிகளையும் சேர்த்து இவர்களே புது மதங்களை (அப்படிச் சொல்லிக் கொள்ளாவிட்டாலும்) ஸ்ருஷ்டிக்கிறார்கள். Leader -கள் விஷயம் இப்படியிருக்கட்டும். இவர்களுடைய follower-கள் விஷயம் என்ன?பழைய கட்டுப்பாட்டிலிருந்து அவிழ்த்து விடுகிறார்களே, இப்போதே லௌகிகமாக நமக்குப் பலன் தருகிற ஏற்பாடுகளைச் சொல்கிறார்களே என்றுதான் இவர்களை follow பண்ண ஆள் சேர்கிறது. ஸ்வாதந்திரியமாக இஷ்டப்படிப் பண்ணலாம் என்பதற்காகத்தான் பிராசீனமான ஸமயாசாரத்தை விட்டு இதற்கு வருகிறார்கள். லீடர்களுக்கு ஏதோ ஒரு பக்வம், படிப்பு, அநுபவம், கொள்கைப் பிடிமானம் எல்லாம் இருப்பதால் இவர்கள் மதாசாரங்களை விட்டாலும் தாங்களாகச் சில ஒழுக்க நெறிகளுக்காவது கட்டுப்பட்டிருக்கிறார்களென்றால் ஃபாலோ பண்ணும் பொது ஜனங்களுக்கு இந்த யோக்யதாம்சங்கள் எப்படி விசேஷமாக இருக்க முடியும்? அதனால், இவர்கள் (லீடர்கள்) religious virtues-ஐ [மதசீலங்களை] மட்டும் விட்டார்களென்றால் தாங்களோ எந்தக் கட்டுப்பாடுமே வேண்டாம் என்று ethical virtues-ஐயும் [நன்னெறிகளையும்] விட்டுவிட ஆரம்பிக்கிறார்கள்.

”ஸமயாசார வேலியை நீ உடைக்கலாம்” என்று சீர்திருத்தத் தலைவர் முதலில் சொல்லிக் கொடுத்தால் அப்படி உடைத்து ஸ்வதந்த்ரத்தில் ருசி கண்ட ஜனங்கள் ” நீ  போட்டிருக்கும் ‘மாரல்’ வேலியையும் உடைப்பேன்” என்று பிற்பாடு அவரிடமே திருப்பிக் கொள்கிறார்கள்! பார்க்கவில்லையா — சடங்கும் ஆலய பூஜையும் ஸம்ஸ்கிருதத்தில் மட்டும் ஏன் பண்ண வேண்டும் என்று கேட்பதற்கு தேசத் தலைவர்கள் முதலில் ஜனங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்; அப்புறம் ஜனங்கள் அவர்களிடமே திருப்பிக்கொண்டு ஹிந்தி மாத்திரம் ஏன் நேஷனல் லாங்க்வேஜாக இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெரிய கலஹமாகவே ரயிலைக் கவிழ்த்தும் பஸ்ஸைக் கொளுத்தியும் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஸத்யாக்ரஹம், ‘ஸிவில்டிஸ்-ஓபீடியன்ஸ்’, மறியல் என்று எதையெல்லாம் அந்நிய ராஜாங்கத்தை எதிர்த்து ரொம்ப முக்யமான விஷயங்களுக்காக ஆதியில் சொல்லிக் கொடுத்தார்களோ, அவற்றையே இப்போது உப்புப் போதாத விஷயங்களுக்காக இவர்களை எதிர்த்தே ஜனங்கள் செய்கிறார்கள். ஸாதாரண ஜனங்களைக் கிளப்பி விடும்போது எத்தனை முன்யோசனை வேண்டும் என்று நினைக்காததன் பலனை அநுபவிக்கிறோம்.

கதை சொல்வார்கள். பிரதிவாதி கடனைத் திருப்பித் தரவில்லை என்று வாதி பிராது போட்டானாம். பிரதிவாதியின் வக்கீல் தன் கட்சிக்காரர்களிடம், ” நீ கோர்ட்டில் பைத்தியக்காரன் மாதிரி நடி; என்ன கேள்வி கேட்டாலும் ‘பெப்பே”பெப்பே’ என்று பேத்திக் கொண்டிரு. ‘சித்தப்பிரமம் பிடித்தவன்; இவன் மேல் கேஸ் போட்டது தப்பு’ என்று ஜட்ஜ் தள்ளுபடி பண்ணி விடுவார்” என்று சொல்லிக் கொடுத்தாராம். பிரதிவாதியும் அதே மாதரிப் பண்ணி வியாஜம் தோற்றுப் போகும்படிச் செய்துவிட்டானாம். கோர்ட்டுக்கு வெளியிலே வந்தவுடன் வக்கீல் அவனிடம் ஃபீஸ் கேட்டாராம். உடனே அவன் அவரிடமும் அவர் சொல்லிக் கொடுத்த தந்த்ரத்தையே திருப்பினானாம். ”பெப்பே பெப்பே” என்றானாம்!” என்ன? என்கிட்டேயுமா இப்படிப் பண்ணுகிறாய்?” என்று வக்கீல் கேட்க, ”உன்கிட்டே மட்டுமென்ன? உன் அப்பன், பாட்டன் வந்தாலும் இதேதான் நடக்கும்” என்று அர்த்தம் தொனிக்க ”உனக்கும் பெப்பே! உங்க அப்பனுக்கும் பெப்பே!” என்றானாம்.

இப்படித்தான் ரிஃபார்மர்கள் ”சாஸ்திரம் சொல்கிற ஒழுங்குகள் வேண்டாம். நாங்கள் சொல்கிற ஒழுங்குகளைக் கடைபிடியுங்கள்” என்றால், ஃபாலோயர்கள் முதலில் பிரதிவாதி வக்கீல் துணையில் கேஸை ஸாதகமாக்கிக் கொண்டதுபோல, இந்த லீடர்களின் ஸஹாயத்தில் தங்களுக்கு ஸமூஹத்தில் அநேக ஆதாயங்களை அடைந்துவிட்டு, கொஞ்ச நாள் ஆன அப்புறம், ”சாஸ்த்ர ரூலுக்கும் பெப்பே; உன் ரூலுக்கும் பெப்பே” என்று, எந்த ஒழுங்குமில்லாமல் போக ஆரம்பிக்கின்றார்கள். இம்மாதிரி ஸந்தர்ப்பதில் தன்னளவில் ஓரளவு நன்றாகவே சுத்தராகவுள்ள லீடர்கள் தங்களைச் சேர்ந்தவர்களையே கண்டித்துவிட்டுத் தாங்களும் பட்டினி கிடப்பது போல ஏதாவது பிராயச்சித்தம் பண்ணிக் கொள்கிறார்கள். மற்ற தலைவர்களுக்குத் தங்களைச் சேர்ந்தவர்கள் விட்டு விட்டுப் போகிறார்கள் என்றால் அவமானமாயிருக்கிறது. அதனால் கண்டும் காணாமலும் ஏதோ தட்டிக் கொடுத்துக் கொண்டு போகிறார்கள். ரொம்பவும் மிஞ்சிப் போனால்தான் ‘எக்ஸ்பெல்’ பண்ணுகிறார்கள் [ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றி விடுகிறார்கள்] அநேகமாக அந்தத் துணிச்சல் இவர்களுக்கு வருவதற்குள், இவர்களிடம் அபிப்பிராய பேதப்பட்டவர்களே பலமடைந்து தாங்கள் மட்டும் சேர்ந்து இன்னொரு சீர்திருத்த இயக்கம் ஆரம்பிக்கிற ஸ்திதிக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், ”நீங்கள் என்ன ‘எக்ஸ்பெல்’ பண்ணுவது? நாங்களே முழுக்குப் போட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டோம்” என்கிறார்கள்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s