‘நவீன வேதாந்தி’கள்

ரிஃபார்ம் ரிலிஜன் என்று தனியாகப் போகாமல் நம்முடைய மதத்துடைய ‘நிஜ ஸ்வரூப’த்தின் custodians [காவலர்] தாங்கள்தான் என்கிறவர்களில் இன்னொரு வகையினர் ”வேதாந்தா, வேதாந்தா” என்று சொல்லிக் கொண்டு, ஃபிலாஸஃபியைத் தவிர கர்மாக்களாக இருக்கிற எல்லாமே நம் மதத்தின் சக்கைதான் என்று தூக்கிப்போடச் சொல்கிறார்கள். வாஸ்தவத்தில் ஸாமானிய மநுஷ்யனின் தரத்தை உயர்த்தக் கர்மா இல்லாமல் முடியவே முடியாது. அதனால்தான் வைதிகாநுஷ்டானங்களை விலக்கி விட்டவர்களும் ராட்டையைச் சுற்ற வேண்டும், handicrafts செய்ய வேண்டும் என்று ஓயாமல் ஏதாவது வேலை வாங்கினார்கள். திருப்பித் திருப்பிச் சொன்னதையே, எத்தனை தரம் சொன்னாலும் போதாது என்று, மறுபடியும் சொல்கிறேன் : காரியம், ஓயாத உழைப்பு இல்லாமல் சித்த சுத்தி ஸாத்யமேயில்லை.

சாஸ்திரத்தில் முதலில் இவன் மனஸை அநுஸரித்து இஹ லோக, ஸ்வர்க்க லோக லாபங்களுக்காகவே, அதாவது இந்திரிய ஸெளக்யங்களுக்காகவே கர்மாவைக் கொடுத்திருக்கிறது. ஆனால் இந்தக் கர்மாக்காளைச் செய்வதாலேயே இந்திரியங்களின் இழுப்பு கொஞ்சங் கொஞ்சமாகக் குறைகிறது. சித்தம் சுத்தமாகி மனஸானது [கார்யமில்லாமலே] தியானம் செய்யப் பழக்கப் படுத்தப்படுகிறது. கார்யமே வேண்டாம், “வேதாந்தா”,”த்யானா” என்றால் என்ன ஆகிறது? இதை நான் சொல்வதைவிடக் கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கில் சொல்கிறேன்:

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் |
இந்த்ரியார்தான் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே ||
[கீதை: 3.6]

அதாவது “காரியத்திலா ஞானம் இருக்கிறது? அதெல்லாம் வேண்டாம்” என்று கை, கால் முதலான கர்மேந்திரியங்களுக்கு வேலை கொடுக்காமல் நிறுத்திவிட்டு நேராக மனஸை சுத்தமான தியானத்தில் நிறுத்துவதற்கு ஆரம்பித்தால் என்ன ஆகிறது அந்த மனஸ் பரமாத்மாவையா நினைக்கிறது? இல்லை.

இந்த்ரியார்தான் மநஸா ஸ்மரந் –

இந்திரியங்களுக்கு வேண்டிய அல்ப ஸுகங்களைத்தான் மனஸு நினைக்கிறது. கர்மாவால் கர்மேந்த்ரியங்களை அழுக்கெடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளாதபோது மனஸும் அழுக்கைவிட்டு மேலே போகாதுதான். வெளியிலே இவன் பெரிய ஃபிலாஸபர், தத்வஞானி, ரிஷி என்றேகூட (இப்போது பத்திரிகைகள் நிறைய ஏற்பட்டபின் எல்லாவற்றுக்கும் அதிசயோக்தி தான்!) பெத்தப் பெயர் இருந்தாலும், லெக்சரிலும் புஸ்தகத்திலும் இவன் எவ்வளவு சோபித்தாலும், இப்படி மனஸிலே அழுக்கை வைத்துக் கொண்டிருப்பவனை பகவான் விமூடாத்மா – ‘மஹா மூடன்’ என்றுதான் சொல்கிறார். ‘மூளையில்லாமல் காரியங்களைக் கட்டிக் கொண்டு அழச் சொல்கிறவர்களிடமிருந்து நம்மையும் நம் மதத்தையுமே ரக்ஷிக்கிற இவர்தான் மஹா புத்திமான்’ என்று லோகத்தார் எவரைக் கொண்டாடுகிறார்களோ, அவரையே பகவான் “விமூடாத்மா” என்கிறார். அதற்கும் மேலே இன்னொரு வார்த்தை சொல்கிறார்.

மித்யாசார: –

மித்யா என்றால் நிஜம் போல இருந்து கொண்டே பொய்யாகப் போகிற வேஷம் என்று அர்த்தம். ஆசாரமே வேண்டாமென்று இருக்கிற வாய் வேதாந்தியை ‘மித்யாசாரன்’ என்கிறார். இவன் கர்மாவை விட்டு விட்டான். ‘மனஸ் சுத்தம்தானே எல்லாம்?’ என்கிறான். ஆனாலும் இவன் மனஸ் அழுக்கிலேயே கிடக்கிறது. வெளியே வேதாந்தி போல வேஷம் போடுகிறான். இப்படி வெளியே ஒன்றாகவும் உள்ளே வேறாகவும், உயர்ந்த லக்ஷ்யத்தைப் பேசிக்கொண்டும் கீழான ஒழுக்கத்தில் போய்க்கொண்டும் இருப்பதால் ‘மித்யாசாரன்’ என்கிறார். ‘மித்யாசாரன்’ என்பதற்கு ஸரியான வார்த்தை hypocrite. காரியம் பண்ணப் பிடிக்காத சோம்பேறித்தனம், ஒரு ஒழுக்கத்தில் கட்டுப்பட்டிருக்கப் பிரியமில்லாமை – இதற்காகவேதான் “Vedanta, Vedanta” என்று சாஸ்திர கர்மாவிலிருந்து பிரித்துப் பேசுகிறார்கள். உள்ளே பார்த்தால் – இதைச் சொல்ல ரொம்ப வருத்தமாயிருக்கிறது – எந்தக் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இவர்கள் போயிருப்பதால் அநேக lapses1 இருப்பது தெரிகிறது. ஆசாரக்காரர்கள் மூடர்களாயிருக்கட்டும், ஸ்வயநலக் கும்பலாயிருக்கட்டும், இரக்கமேயில்லாத துஷ்டர்களாகத்தான் இருக்கட்டும். ஆனால் அவர்களிடம் இப்படிப்பட்ட lapses இருப்பதில்லையல்லவா? அதுதான் discipline (நெறி) என்பதன் சக்தி.


1தமிழில் சொன்னால் கடுமையாய் தொனிக்குமென்றே ஸ்ரீ பெரியவாள் “lapses” என்று சொன்னதாகத் தோன்றுவதால் நாமும் தமிழ்ப்படுத்தவில்லை.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s