ஆசாரங்களில் பாகுபாடு : குறள் தீர்ப்பு

எல்லோருக்கும் இத்தனை ஆசாரங்களை வைக்காமல் பிராம்மண ஜாதிக்கு மாத்திரம் வைத்ததே இந்த ரீதியில்தான். இதைத்தான் புரிந்து கொள்ளாமல் பக்ஷபாதமென்று சிலர் சொல்கிறார்கள். சாஸ்திரங்களைச் செய்தவர்கள் பக்ஷபாதிகளாக இருந்திருந்தால் தங்கள் ஜாதிக்கு மட்டும் விதிகளைக் குறைத்து ‘லைஸென்ஸ்’தான் கொடுத்துக் கொண்டிருப்பார்களே தவிர, ஜாஸ்தியாக்கிக் கட்டிப் போட்டிருப்பார்களா?

தமிழ்நாட்டுக்கு தர்மத்தைச் சொன்னவர்களில் மூலபுருஷராகச் சீர்திருத்தக்காரர்கள், பகுத்தறிவுக்காரர்கள் உள்பட ஸகலராலும் ஒப்புக்கொள்ளப்படும் திருவள்ளுவர் என்ன அபிப்பராயப்படுகிறார்? எல்லாருக்கும் ஒரே ஆசாரம் என்றில்லாமல், தனித்தனிக் குலாசாரம் என்பது உண்டு; அது பிராம்மணனுக்கே அதிகம்; பிராம்மணனின் பிரம்மயண்யமே அவனுடைய பிரத்யேகமான குலாசாரத்தால் ஏற்படுவதுதான் என்று அவர் தீர்மானமாக அபிப்ராயப்படுகிறார்.

ஒழுக்கம் என்பதே ஆசாரம்; அது உள்குணம், வெளிநடத்தை, வெளிச் சின்னம் எல்லாம் அடங்கியது என்று சொன்னேனல்லவா? இந்த ஆசாரத்தைப் பற்றியொழுகுவது பற்றி “ஒழுக்கம் உடைமை” என்று திருக்குறளில் ஒரு அதிகாரம் (பத்துக் குறள்கள்) பண்ணியிருக்கிறார், அதை ஜெனரலாக, எல்லாருக்கும் ‘அப்ளை’ ஆவதாகத்தான் ஆரம்பித்துக்கொண்டு போகிறார். ஒழுக்கந்தான் மநுஷ்யனுக்கு உயர்வைத் தருவது; அதனால் பிராணனைவிட முக்யமானதாக ஒழுக்கத்தை, ஆசாரத்தை, ரக்ஷிக்க வேண்டும் என்று முதல் குறளில் சொல்கிறார்.1 அப்புறம் [மூன்றாவது குறளில்] உயர்ந்த ஒழுக்கமுள்ளவனே உயர்குடி, அதாவது உயர் ஜாதிக்காரன்; ஒழுக்கம் கெட்டவன் தாழ்பிறப்புக்காரன்2 என்று அவர் சொல்வதைப் பார்த்தால் ஒருவனுடைய குணத்தையும் நடத்தையையும் வைத்துத்தான் ஜாதியே தவிர, பிறப்பினாலே அல்ல என்ற இக்கால அபேத வாதம் மாதிரித் தோன்றுகிறது. ஆனால் இப்படியில்லை என்று ஸ்பஷ்டமாகக் காட்டுகிற மாதிரியே அடுத்த குறளைப் பண்ணியிருக்கிறார்கள்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

‘பார்ப்பான்’ என்றால் பிராம்மணன். ஞானதிருஷ்டியால் ஸத்யத்தை தரிசனம் பண்ணுவதால் அவன் “பார்க்கிறவன்”- “பார்ப்பான்”. ரிஷிகளை seer (see-r) என்று இங்கிலீஷில் சொல்வதும் இதே அர்த்தம்தான். “ஓத்து” என்று இங்கே சொல்லப்படுவது வேதம். ஓதப்படுவது – அத்யயனம் பண்ணப்படுவது – எதுவோ அது ஓத்து.

இந்த (இப்போது சொன்ன) குறளுக்கு என்ன அர்த்தமென்றால் ஒரு பிராம்மணன் வேதத்தை மறந்துபோய் விட்டால்கூடப் பரவாயில்லை; மறுபடியும் அத்யயனம் பண்ணிக் கற்றுக்கொண்டு விடலாம் – “பார்ப்பான் ஓத்து மறப்பினும் மறுபடியும் (‘மறுபடியும்’ என்பது ‘அண்டர்ஸ்டுட்’) கொளல் ஆகும்” என்று prose-order பண்ணிக்கொள்ள வேண்டும். அதாவது, வேதம் மறந்துபோனாலும் மறுபடி கற்றுக் கொண்டு விடலாம்; கற்றுக் கொளலாகும். ஆனால் அவன் ஒழுக்கத்திலிருந்து, அதாவது ஆசாரத்திலிருந்து வழுவிவிட்டால் அவனது பிராம்மண ஜன்மாவே கெட்டுப்போய்விடும், அதாவது வீணாகிவிடும். “ஒழுக்கம் குன்றப் பிறப்பு (அதாவது ‘த்விஜன்ம விசேஷம்’ என்கிற பிராம்மண குடிப்பெருமை) கெடும்” என்பது prose-order நவீனர்கள், ‘ஆசாரமே இருக்க வேண்டியதில்லை; Vedas, Upanishads என்று லெக்சர் பண்ணிவிட்டால் போதும்; அப்படிப் பண்ணும் எல்லாரும் பிராம்மணர்தான்’ என்கிறார்களென்றால், திருவள்ளுவரோ, “பிராம்மணனுக்கு வேதமே மறந்து போய்விட்டால் கூட பாதகமில்லை; மறுபடி கற்றுகொண்டு விடலாம். ஆனால் அவன் மாத்திரம் ஆசாரஹீனனாக ஆனானோ, அதோடு அவனுடைய பிரம்மண்யமே போச்சு” என்கிறார். “ஆசார ஹீநம் ந புநந்தி வேதா:” என்ற சாஸ்திர அபிப்ராயத்தை அப்படியே echo பண்ணுகிறார். தமிழ்மறை என்ற குறளைக் கொடுத்த பெரியவர். எத்தனை வேதம் படித்திருந்தாலும் ஆசாரத்தை விட்டவன் வேதத்தினால் பலனடையமாட்டான். ஒரு பக்ஷிக் குஞ்சுக்கு இறக்கை முளைத்தவுடன் அது அந்த நிமிஷம் வரை இருந்த கூட்டைத் திரும்பிகூடப் பார்க்காமல் பறந்து விடுவதைப்போல, ஆசார ஹீனன் படித்த வேத வேதாந்தமெல்லாம் அவன் சாகிறபோது அவனைப் புண்ய லோகத்தில் சேர்க்காமல் அவனைத் திரும்பிகூடப் பார்க்காமல் போய்விடும் – என்றெல்லாம் தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதைத்தான் திருவள்ளுவரும் ரத்னச் சுருக்கமாய்ச் சொல்லியிருக்கிறார்.

ஒழுக்கத்தால்தான் ஒருத்தனுக்கு உயர்வு என்று ஜெனரலாகச் சொல்லிவிட்டு, உடனேயே இப்படி பிராம்மணனின் ஒழுக்கத்தை ஸ்பெஷலாகச் சொன்னதால் அவர் நம் கால அபேதவாதிகளில் ஒருத்தரில்லை என்று காட்டிக் கொண்டு விடுகிறார். மற்ற எல்லாரையும் விடப் பிராம்மணனுக்கு ஆசாரம் விசேஷமானது என்பதை ஒப்புக் கொண்டுதான் இங்கே தனியாக அவனைப் பற்றி மட்டும் சொல்கிறார்.

“பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்” என்பதை இன்னொரு தினுஸிலும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அதாவது, பிராம்மணன் தன்னுடைய பிறப்பொழுக்கமான, அதாவது பிராம்மணர்களுக்கு மாத்திரம் உரியனவான ஆசாரங்களில் குன்றிப்போனால் உலகமே கெட்டுப் போகும். கெடும் என்று அர்த்தம் பண்ணலாம். இன்னோரிடத்தில்3 இவரே ஒரு தனி மநுஷ்யனுக்கு உண்டாகிற கெடுதலாயில்லாமல், ஒரு தேசத்துக்கே ஏற்படும் க்ஷாமங்களைச் சொல்லும்போது “அறுதொழிலோர் நூல் மறப்பர்” என்கிறார். அதாவது ‘ஷட்கர்ம நிரதர் எனும் பிராம்மணர் வேதத்தை மறந்து போவார்கள்’ என்கிறார். ஆனதால் பிராம்மணன் வேதாத்யயனத்தை விடுவதாலோ, வேறு தப்புப் பண்ணுவதாலோ அவனும், அவனுடைய ஜாதியும் மட்டுமின்றி லோகமே கெட்டுப்போகும் என்ற கருத்து உடையவர் திருவள்ளுவர் என்று தெரிகிறது. எனவே இங்கேயும் “கெடும்” என்பதை “அவன் தன் அந்தணப் பிறப்புக்குரிய ஆசாரவொழுக்கத்தில் குன்றினால் உலகமே கெடும்”என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். அங்கே அறுதொழிலோர் மறைநூல் மறப்பதே உலகுக்குத் தீமை என்றவர் இங்கே, மறையை மறந்தால் கூடப் பரவாயில்லை, அந்தத் தீமையை விடப் பெரிய ஹானி என்னவென்றால் அவன் குலாசாரத்தை, பிறப்பொழுக்கத்தை, விடுவதுதான் என்கிறார். வேதமே வேண்டாம், ஒழுக்கம் போதும் என்று சொல்கிற கோஷ்டியில் அவர் இல்லை. வேதம் போனால் லோகத்துக்குக் கஷ்டம் ஏற்படும் என்றே அபிப்ராயப்படுகிறவர். வேதத்தை memorise பண்ணி (மனப்பாடம் செய்து) , புஸ்தகம் எழுதி, பிரஸங்கம் பண்ணிவிட்டால் போதும், ஆசாரம் வேண்டாம் என்ற கோஷ்டியிலும் இல்லை. இரண்டும் வேண்டாம் என்ற கோஷ்டியிலும் இல்லை. இரண்டும் வேண்டும் என்கிறார். இரண்டில் அத்யயனத்தை விடுவதைவிட ஆசாரத்தை விடுவதே பெரிய கஷ்டத்தைக் கொடுக்கும் என்கிறார். ஸரியாகப் பார்த்தால், அத்யயனத்தை அடியோடு விட்டு விடுவதை அவர் கொஞ்சங்கூட ஒப்புக்கொள்ளாதவர் என்று தெரியும். தாற்காலிகமாக மறந்துபோவதைத்தான் சொல்கிறார். ‘மறப்பினும்’ என்கிறாரே தவிர ‘இழப்பினும்’, ‘விடினும்’ என்று சொல்லவில்லை. வேதத்தை விட்டே விட்டால் லோகத்துக்கு அனர்த்தம்தான். மறந்துபோன நிலையில்கூட, ‘அது மறந்ததால் பரவாயில்லை, அந்த மறந்த நிலை அப்படியே நீடித்துவிட்டுப் போகட்டும்; பிராம்மணன் ஆசாரத்தோடே இருந்து விட்டால் அதுவே போதும்’ என்கிறாரா? இல்லை. வேதத்தை மறந்தவன் அதை மறுபடியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே சொல்கிறார். ‘மறப்பினும், ஓத்துக் கொளல் ஆகும்’, அதாவது, மறுபடி கற்றுக்கொள்ள முடியும் என்கிறார். முடிகிற விஷயமென்றால் அப்படிப் பண்ணவேண்டுமென்பதே உள்ளர்த்தம். மறையை மறந்தவன் மறையை மறந்தாலும் குலாசாரத்தை மறவாமல் பின்பற்றிக்கொண்டு, பிறகு மறந்துபோன மறையையும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பரம சாஸ்திரீயமாக, ஸநாதன நெறிப்படி திருவள்ளுவர் நினைத்து உபதேசம் பண்ணியிருக்கிறார்.

இதிலிருந்து முதலில் சொன்னாரே, ஒருவனின் உயர்ந்த ஒழுக்கத்தை வைத்தே ஒருத்தனுக்குக் குடிமை – உயர்குடித் தன்மை-என்றாரே, அதற்கும் ஸோஷலிஸமாக இல்லாமல் சாஸ்திரபூர்வமான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். எந்தக் குலமும், ஜாதியும் தனியாக உயர்ந்தது, தாழ்ந்தது என்று சாஸ்திரத்திலில்லை. பல லோக கார்யங்கள் ஸமூஹத்தில் விதரணையாகப் பங்கீடாக வேண்டும் என்ற உசந்த அபிப்ராயத்தில் உண்டான வர்ணாச்ரம ஏற்பாட்டில் எந்த ஜாதியும் எந்தக் குலமும் அதற்கான தொழிலை அநுஸரித்து அதற்கென்று ஏற்பட்ட ஒழுக்கத்தைப் பின்பற்றினால் உசத்திதான். அப்படிப் பண்ணுகிறவன் உசந்தவன்தான். இதே அபிப்ராயத்தில் தான் திருவள்ளுவரும் இந்த (ஸோஷலிஸ ஸமத்வம் மாதிரித் தெரிகிற) குறளைப் பண்ணியிருக்கிறார், உண்மையில் அவர் என்ன mean பண்ணுகிறாரென்றால் ‘ஒருவன் தன்குலத்துக்கான ஒழுக்கத்தோடு இருப்பதுதான் அந்தக் குலத்தில் உயர்வை அவனுக்குத் தருகிறது. அந்த ஒழுக்கம் கெட்டவனானால் இழி பிறவியனாகி விடுகிறான்’ என்பதே. இப்படி அர்த்தம் புரிந்துகொண்டால்தான் இதற்கு logical sequence -ஆக [தர்க்கரீதியில் தொடரிழையாக] எல்லாருக்குமே அவரவர் ஆசாரம் முக்யமானாலும், பார்ப்பனனுக்கு அது மிகமிக முக்கியமானது, அவனுக்கே சிறப்பாக ஆசாரங்கள் அதிகம் அமைந்துள்ளன என்ற அடிப்படையை ஒப்புக் கொண்டு,

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

என்று குறள் பண்ணிக்கொண்டு போயிருப்பதன் பொருத்தத்தைப் புரிந்து கொண்டு ரஸிக்க முடியும்.

இப்படியே சொல்லிக்கொண்டுபோய், ஒழுக்கம் என்பது பிரத்யக்ஷமான த்ருஷ்ட பலனைத் தருவது மட்டுமில்லை; அத்ருஷ்டமாக நல்லொழுக்கமே புண்யம் என்பதாகி, என்றோ ஒரு காலத்தில் நல்லதைத் தரும்; தீய ஒழுக்கம் பாபம் என்பதாகி எந்நாளும் கஷ்டத்தைத் தரும் என்ற வைதிகக் கருத்தை வெளியிடுகிறார்4.


1 ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

2 ஒழுக்கம் உடைமை குடிமை  இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

3“கொடுங்கோன்மை” என்ற அதிகாரத்தின் கடைசி குறள்.

4நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s