அதிகாரபேதமின்மையின் தோஷங்கள்

அதிகாரபேதம் பண்ணி வைக்காதவர்கள்தான் தங்கள் மதஸ்தர்களுக்கு அநேக தோஷம் ஏற்படுவதற்கு இடம் கொடுத்து விட்டிருக்கிறார்கள். எப்படியென்று சொல்கிறேன். முதலாவது தோஷம், ஸகல ஸாமானிய ஜனங்களாலும் இந்தக் கடுமையான நெறிகளைப் பின்பற்ற முடியாததில் அவர்கள் இவற்றிலிருந்து விலகிப் போவதால் தங்களுடைய மதக் கொள்கையை விட்ட தோஷத்துக்கு ஆளாகிறார்கள்.

இப்போது அஹிம்ஸையை உதாரணம் சொன்னேனே, அதுமாதிரி இன்னொன்றும் சொல்கிறேன். ஸத்யத்துக்குக்கூட (அதிகாரி பேதமில்லாவிட்டாலும்) ஸந்தர்ப பேதம் இருப்பதை நம் சாஸ்திரங்கள் அங்கீகரிக்கின்றன. ஸத்யத்தைச் சொல்வதே ஒரு நிரபராதிக்குக் கெடுதலை உண்டாக்குமானால் அப்போது வாக்கு ஸத்யத்தைவிட, பூதஹிதத்தைச் செய்யும் பிரமைதான் பெரிய ஸத்யம் என்பது நம் சாஸ்திரம். திருஷ்டாந்தமாக, பத்துப் போக்கிரிகள் ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு வந்து, அவர்கள் நம்மிடம், “அந்தப்பெண் எங்கே போனாள் தெரியுமா?” என்று கேட்டால், அந்த ஸந்தர்ப்பத்தில் “தெரியாது” என்று சொல்வதுதான் ஸரி என்பது நம் மதக் கோட்பாடு. எல்லாரும் எப்போதும் நிஜமே பேசவேண்டும் என்று சொல்லும் மதங்களிலிருப்பவர்கள் இம்மாதிரி ஸமயத்தில் அந்தப் பெண்ணைக் காட்டிக் கொடுத்துவிடும்படியாகவே ஆகும். இல்லாவிட்டால் மதக் கொள்கையை மீறின பாவம் வந்துவிடும்!

‘டிப்ளமஸி’ என்பதற்காக ராஜாங்கத்தார் அநேக உண்மைகளை மறைக்கும்படியாகவும், மாற்றிச்சொல்லும்படியாகவும் ஏற்படுவதுண்டு. இப்படிச் செய்யாவிட்டால் தேசத்துக்கு ஹானி உண்டாகும்; அல்லது சட்டத்தை நடத்துவதற்கு அவசியமான ஸர்க்கார் என்ற அமைப்பிலேயே விரிசல் ஏற்பட்டுவிடும். காந்தி மாதிரியானவர்கள் இதெல்லாம்கூடத் தப்பு என்று சொன்னாலும், அப்புறம் நமக்கு ஸ்வதந்திரம் வந்த பிற்பாடு, சில விஷயங்களிலாவது ‘காந்தீயன் ஸத்யம்’ ஒப்புக் கொள்ளாத ‘டிப்ளமஸி’யை அநுஸரிக்கும்படிதான் ஆகியிருக்கிறது. மத புருஷர்களுக்கெல்லாம் மேலேதான் இப்போதும் காந்தியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செய்கிறது அவர் கொள்கைக்கு வேறாய் இருக்கிறது என்னும்போது ‘ஹிபாக்ரிஸி’ என்ற தோஷம் ஏற்படுகிறது. டிப்ளமஸியில் ரொம்பவும் கீழ் லெவல்களுக்கு War-time-ன் [உலக யுத்தத்தின்] போது போன அநேக அந்நிய தேச ராஜாங்கங்கள் அவர்களுடைய மதங்கள் சொன்ன ஸத்யக் கொள்கையை மீறியே போயிருக்கின்றன. நம் தேசத்திலோ ‘அர்த்த சாஸ்திரம்’ என்றுள்ள ராஜநீதியில் முதலிலேயே ராஜதந்திரம் என்பதாக அவசியமான ஸந்தர்ப்பத்தில் இப்போது சொல்கிற ‘டிப்ளமஸி’யை அநுமதித்திருப்பதால், நம்முடைய ராஜாக்களுக்கு ஸந்தர்ப நெரிசலில் ஸத்யத்தை ஒளிக்க வேண்டியிருந்தபோது சாஸ்திர விரோதமாகப் போகிற தோஷமோ, ஹிபாக்ரிஸி தோஷமோ ஏற்படவில்லை. இன்னின்ன ஸந்தர்ப்பத்தில் ஸத்யத்துக்கு விலக்கு தரலாம் என்று வகைப்படுத்தி வரம்புகட்டி சாஸ்திரத்தில் வைத்துவிட்டதாலேயே அவற்றில் மட்டுமே அப்படிச் செய்வது, மற்றவற்றில் பரம ஸத்யமாக நடந்து கொள்வது என்று நம் ராஜாக்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இப்படி விதிவிலக்காகச் சிலதைச் சொல்லாமல், விதிவிலக்கே கிடையாது என்று வைத்த தேசங்களிலோ, ஏதோ சிலதில் என்றில்லாமல், அநேக விஷயங்களில் ஸத்ய விரோதமாகப்போன ராஜாக்களும் ராஜாங்கங்களும் தோன்றுவதும், கிளர்ச்சி, புரட்சி என்று ஏற்படுவதுமாய் இருந்திருக்கிறது. ஹிஸ்டரியைப் பார்த்தால் தெரியும். ஆனால் இந்த அம்சத்தைக் கவனிக்காமலே அர்த்த சாஸ்திரம் பண்ணின சாணக்கியனைக் கபடி, தந்திரசாலி, unscrupulous என்றுகூட விமர்சிப்பதைப் பார்க்கிறோம்!

லக்ஷ்ய நிலையை எல்லோருக்கும் நடைமுறையாக வைப்பதில் இரண்டாவது தோஷம் என்னவென்றால், தாங்கள் மதத்தின் கொள்கைக்கு விரோதமாகப் பண்ணுகிறோமென்று இருக்கக்கூடாது என்பதற்காக, இப்படி விரோதமாகப் போகிறவர்கள் மூலக்கொள்கையையே தங்களுக்கு ஸாதகமாகத் திரித்து அர்த்தம் பண்ணுவது! “நீங்கள் எப்படி மாம்ஸம் சாப்பிடலாம்?” என்று பௌத்தர்களிடம் ஹிந்துக்கள் கேட்டபோது அவர்கள் தங்களுடைய மதக்கொள்கையையே திரித்து, “பிராணிக்கு நாங்கள் நேராக ஹானி செய்யக்கூடாது என்பதுதான் எங்களுடைய புத்தர் சொல்லும் அஹிம்ஸா தர்மம். நாங்கள் ஹானி உண்டாக்காமலே வேறெவனோ கசாப்புக்கடைக்காரன் விற்பதை நாங்கள் சாப்பிடுவதில் அஹிம்ஸைக்கு தோஷமில்லை” என்று சொல்வதுண்டாம். இப்படிப் பலபேர் சொல்லிச் சொல்லி ஒரு மதத்தின் மூலக் கொள்கைக்கு விரோதமாகப் பண்ணுவதே அதன் கொள்கையாகப் பிற்பாடு ஆகிவிடுகிறது; அதாவது மதத்தின் ரூபமே திரிந்து போகிறது. இது எல்லாவற்றையும்விடப் பெரிய தோஷம்.

இத்தனை தோஷங்களும் நமக்கு வராமல், அதிகாரி பேதம் செய்து தர்மங்களை வித்யாஸப்படுத்திக் கொடுத்திருக்கும் நம் மத சாஸ்திரங்கள் நம்மையும் ரக்ஷித்து, உத்தம தர்மங்களையும் திரியாமல் ரக்ஷித்து வந்திருக்கின்றன. நாமோ அதிகாரி பேதமே வேண்டாம் எல்லாம் ஸமம் என்கிறோம். அதோடு நமக்குப் பிடித்த இந்த அபேத வாதம் தான் நம் மதத்தின் மூலக் கொள்கையே; அதில் ஜாதி வித்யாஸமே கிடையாது என்று சொல்லி, அதற்கு ‘நல்ல பெயர்’ உண்டாக்குகிறோம்! இதுவும் மூல மதத்துக்கு விரோதமாகப் போவதோடு நிற்காமல், இந்தப் போக்குத் தான் மதத்தின் ஒரிஜினல் ரூபமே என்று திரித்துக் காட்டும் தோஷத்தில் சேர்ந்ததுதான்.

எடுத்துச் சொல்வதற்கு எவருமில்லை! சொன்னால் புரிந்து கொள்வார்கள்; ஆயிரத்தில் ஒருவராவது ஒப்புக் கொள்வார்கள்; சற்று முன் நான் சொன்ன ‘நல்லார் ஒருவர் உளரேல்’ கொள்கைப்படி இந்த அளவுக்காவது நான் திருப்திப்படலாம் என்றுதான் இவ்வளவும் சொல்வது.

“அவனவன் தனக்கான கர்மாவைக் கண்ணும் கருத்துமாய்ப் பண்ணினாலே உயர்ந்த ஸித்தியை அடைகிறான். என்னும் ஸ்வதர்மப்படி பண்ணும் கர்மா ஈச்வரனுக்கு அர்ச்சனையாகி அவனுக்கு சித்தியை தருகிறது” என்று பகவான் தீர்மானமாக சொல்லியிருப்பதை [கீதை 18.45-46] மறந்து இப்போது மதாபிமானமுள்ளவர்களே சீர்திருத்தம் பேசுகிறார்கள். அவரவர் கர்மாவைப் பொருத்தே ஆசாரம் மாறுவதால் இங்கே கர்மா என்கிறபோது அதிலேயே அதைச் செய்பவனுக்கான ஆசாரமும் அடங்கி விடுகிறது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s