கட்டுப்படுவதன் பயன்

சாஸ்திரமென்றால் ஒரே கட்டுப்பாடாயிருக்குமே என்று பயப்படக்கூடாது. “ஸ்வதந்திர யுகம் என்று சொல்லிக்கொண்டு ஸ்வயேச்சைப்படி கட்டையறுத்துக் கொண்டுபோய் என்ன கண்டோம்? ஏதோ அவ்வப்போது, ஒரு பெரிய மரக்கிளை காற்றில் ஆடுகிறபோது, அதன் விஸ்தாரமான நிழலில் துளிப்போல, இரண்டு இலை இடுக்கால் ஸுர்ய வெளிச்சம் விழுகிற மாதிரி, எப்போது பார்த்தாலும் இனம் தெரியாமல் பாரமாக மனஸை அழுத்திக் கொண்டிருக்கிற துக்க இருட்டில் இந்த ஸ்வாதந்திரியப் போக்கினால் இரண்டு கீற்று ஸந்தோஷ ரச்மி துளி நேரம் ஆட்டம் போட்டுவிட்டுப் போவதைத் தவிர சாச்வத ஸெளக்யத்துக்கு, நிரந்தர நிம்மதிக்கு இந்த ஸ்வதந்திரத்தாலோ, ஸயன்ஸ் டிஸ்கவரிகளாலோ, பொருளாதார அபிவிருத்தியாலோ நம்மால் என்ன ஸாதித்துக்கொள்ள முடிந்திருக்கிறது? துக்கத்தின் மூலத்தைக் கண்டுபிடித்து நிவிருத்தி பண்ணிவைக்க ஸ்வதந்திரத்துக்கும் ஸயன்ஸுக்கும் ஸாமர்த்யம் உண்டா? பாபத்துக்குப் பரிஹாரம் செய்ய இவற்றால் முடியுமா? பாபத்தையும் துக்கத்தையும் போக்கிக்கொண்டு நிம்மதியாக நிறைவாக வாழ்ந்த நம் பெரியவர்களெல்லாம் சாஸ்திராசாரங்களை நன்றாக அநுஷ்டித்துத்தானே அந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்?” என்று யோசித்துப் பார்த்தால், வாஸ்தவத்தில் எதை இப்போது ஸ்வந்திரமென்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுதான் கட்டு என்று தெரியும். இதுதானே நம்மை நித்ய ஸுகத்தின் பக்கம் போகவிடாமல், புண்யத்தின் பக்கம் போகவிடாமல் துக்கத்திலும் பாபத்திலுமே கட்டி வைத்திருக்கிறது?

இதேமாதிரி, கட்டாகத் தெரிகிற சாஸ்திரங்கள் வாஸ்தவத்தில் கட்டுமில்லை. நிஜ ஸ்வதந்திரமான மோக்ஷத்துக்கு வழி பண்ணுவது அதுதான். ‘தொம்பங் கூத்தாடி’ என்பார்கள். ‘ஸ்தம்பக் கூத்தாடி’என்பதுதான் அப்படித் திரிந்து வந்திருக்கிறது. ஸ்தம்பம் என்பது தூண். மாஜிக் ஷோவில் தொம்பங் கூத்தாடி வருவான். அநேகத் தூண்களில் ஒன்றில் அவனை ஏகப்பட்ட கட்டுப் போட்டுக் கட்டி வைத்திருக்கும். ஒரு திரையால் சொடக்குப் போடுகிற நாழி அவனை மறைத்துவிட்டுத் திரையை எடுப்பார்கள் அந்த க்ஷண காலத்துக்குள் அவன் எப்படியோ அத்தனை கட்டுக்களையும் அவிழ்த்துவிட்டு அந்தத் தூணிலிருந்து விடுபட்டு, அதோடு மட்டுமில்லாமல் இன்னொரு தூணில் அதே மாதிரி அவ்வளவு கட்டுக்களையும் போட்டுக் கொண்டு காணப்படுவான். அவனுக்கு அப்படி ஒரு தந்திரம் தெரியும். முதலில் கட்டினபோது கை, கால்களை ஒரு மாதிரி அகட்டி [அகற்றி] வைத்துக்கொண்டிருப்பான்; திரை போட்டவுடன் அவற்றை குறுக்கிக் கொள்வான் உடனே கட்டுத் தளர்ந்து விடும். அது கீழே விழுவதற்குள் மறுபடியும் அதே மாதிரி அகட்டிக்கொண்டு இன்னொரு தூணுக்குப் போய்விடுவான். இப்படித் தன் அங்கங்களைக் குறுக்கிக் கொள்வதாலேயே, அவற்றுக்கு மேலே போட்ட கட்டு விரிகிற மாதிரிதான் சாஸ்திரக் கட்டுக்குள்ளும். அஹங்காரத்தை மேலேயிருந்து கட்டுவது சாஸ்திரம். நாமே உள்ளுக்குள்ளிருந்து நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக நம்மைப் பக்குவப்படுத்துவதற்கே இந்தக் கட்டு. மணி முடிச்சாக ஒரு கட்டு விழுந்து அதை அவிழ்க்க முடியாமல் ஆகிறபோது என்ன செய்வார்களென்றால் அந்தக் கட்டை விட இறுக்கமாக இன்னொரு கயிற்றால் சுற்றுவார்கள். சுற்றுவார்களே தவிர இதை (இரண்டாவது கயிற்றை) முடிச்சாகப் போட மாட்டார்கள். இப்படி இறுக்குகிற போது கட்டுப்படுகிற வஸ்து முன்னைவிடக் குறுகுமாதலால், முதலில் மணி முடிச்சு விழுந்த கயிறு இப்போது அதற்குத் ‘தொளதொள’ என்று ஆகிவிடும். அதனால் முடிச்சை அவிழ்க்காமலே அந்தக் கயிற்றை அப்படியே எடுத்துப் போட்டு விடலாம். அப்புறம், முடிச்சுப் போடாமல் இப்போது இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற கயிற்றையும் விட்டுவிடலாம். அப்போது வஸ்து ஒரு கட்டுமில்லாமல் ஸ்வதந்திரமாய்விடும்! அஹங்கார மனஸ் நம்மைக் கட்டிப் போட்டுப் படுத்துகிற பாட்டில் ஸம்ஸார பந்தம் மணி முடிச்சாய் விழுந்திருக்கிறது. இப்போது, இதைவிட இறுக்கம் மாதிரித் தெரிகிற ஆசாரக் கட்டுக்களைப் போட்டுக் கொண்டால் அப்புறம் இரண்டு கட்டும் போய் நிஜமான ஆத்ம ஸ்வதந்திரத்தை அடையலாம்.

கர்மா என்றாலும், பக்தி என்றாலும், ஞானம், யோகம் என்று எந்தப் பெயரைச் சொன்னாலும் ஸாதனா மார்க்கங்களெல்லாம் மனஸைக் கட்டுப்படுத்துகிற ஒரே லக்ஷ்யத்துக்காக ஏற்பட்டதுதான். வாழ்க்கையில் ஒவ்வொன்றும் சாஸ்திரத்தைப் பார்த்து ஆசாரமாய்ப் பண்ண வேண்டும்; பூஜை புரஸ்காரந்தானென்றில்லை – பல் தேய்ப்பதிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் சாஸ்திர ரூல்படி செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தால், நமக்குத் தெரியாமலே, நம் மனஸ் போகிறபடிப் பண்ணாமல் அதைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து விடுவோம்.

ஆசாரம் சிக்கனத்துக்கு ரொம்ப உதவுகிறது என்ற பாயின்ட் இங்கேயும் வருகிறது. இப்போது மனஸில் எழும்புகிற பலதரப்பட்ட ஆசைகளுக்காகத்தானே செலவெல்லாம் செய்கிறோம்?  கண்டதைச் தின்னத் தோன்றுகிறது, ஸினிமா ஆசை, டிரஸ் ஆசை என்று இவற்றுக்காகத்தானே செலவு செய்கிறோம்?  இந்தச் செலவுக்கெல்லாம் நிறைய ஸம்பாத்யம் இருந்தால்தான் முடிகிறது என்பதால்தானே எத்தனை துராசாரமான தொழிலானாலும் எந்த அநாசார தேசத்தில் வேண்டுமானாலும் போய்ப் பண்ணுவது என்று ஆகியிருக்கிறோம்? “ ஐயோ இதைத் தின்பது பாபம்: இதைப் பண்ணுவது பாபம்”  என்று சாஸ்திரங்களைப் பார்த்துப் பார்த்து மனஸின் ஆசைகளையெல்லாம் குறைத்துக்கொண்டு விட்டால் இத்தனை செலவுக்கு அவசியமில்லை. உள்ளூரோடு எத்தனை எளிய வாழ்க்கை வாழலாமோ அதற்குரிய ஸம்பாத்தியம் தருகிற ஒரு தொழிலைப் பார்த்துக்கொண்டு, நிம்மதியாக இருந்து கொண்டிருக்கலாம். வேண்டாத பொழுதுபோக்குகள், அலைச்சல்கள் இல்லாததால் தெய்வ சிந்தனையும் ஆத்ம விசாரமும் பண்ண நிறைய டயமும் கிடைக்கும். ஒரு சேஞ்ஜ் பண்ண வேண்டும். வெளி லோகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் ஷேக்த்ராடனம், தீர்த்தாடனம் செய்யலாம். கோஷ்டியாக பல பேர் சேர்ந்து யாத்ரை போனால் அதிலே வேறெந்தப் பொழுதுபோக்குக் கேளிக்கையிலும் கிடைக்காத ஆனந்தம் கிடைக்கும். பஜனை, ஹரிகதா ச்ரவணம், உத்ஸவம் இவற்றின் ஆனந்தம் ஸினிமாவிலும் நாவலிலும் கிடைக்கிற ஸந்தோஷத்துக்கு எத்தனையோ மேலானதாகத் தெரியும்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s