முடிந்தவரை பூர்ண ஆசாரம்

இடியும் மழையுமாகக் குருதேசம் ஒரு ஸமயத்தில் பாழாய்ப் போயிருந்தது. அன்ன ஆஹாரம் கிடைக்காமல் எல்லாரும் கஷ்டப்பட்டார்கள். சாக்ராயண உஷஸ்தர் என்று ஒரு ரிஷி. அவரும் அவருடைய இளம் மனைவியும் அலைந்து திரிந்துகொண்டு போய் யானைப் பாகர்கள் வசிக்கிற ஒரு கிராமத்தை அடைந்தார்கள். யானைகளுக்கென்று பூர்வத்தில் தான்யம் சேமித்து வைத்திருப்பார்களல்லவா? யானையின் தீனியில் துளிப் பாகம் மநுஷ்யனுக்குப் போதுமே! அதனால் அங்கே கொஞ்சம் தான்ய நடமாட்டம் இருந்தது. எவனோ ஒரு யானைப்பாகன் ‘குல்மாஷம்’ என்கிற தான்யத்தை (கொள்ளு என்று நினைக்கிறேன்) தின்று கொண்டிருந்தான். பிராணனை ரக்ஷித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபத்-கால தர்மப்படி அவனிடம் உஷஸ்தர் அந்தக் கொள்ளில் கொஞ்சம் யாசித்துப் பெற்றார். யானைப்பாகன் அதை அவர் சாப்பிட்டவுடன் குடிப்பதற்காகத் தான் குடித்துக்கொண்டிருந்த ஜலத்திலிருந்தே கொஞ்சத்தைக் கொடுத்தான். “உச்சிஷ்டத்தை [ஒருவர் உண்டு மிகுந்ததை] வாங்கிக்கொள்ள மாட்டேன்” என்று ஆசார விதியைக் காட்டி உஷஸ்தர் ஜலம் வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார். “கொள்ளு மாத்திரம் உச்சிஷ்டமில்லையா? அதை வாங்கிக் கொண்டீரே!” என்று யானைப்பாகன் கேட்டான். அதற்கு அவர், “அதை வாங்கிச் சாப்பிட்டிராவிட்டால் என் பிராணனே தேஹத்தில் தங்கியிருக்காது. பிராண ரக்ஷணை அவச்யம் என்ற பெரிய தர்மத்துக்காக, அதைவிடச் சிறிய உச்சிஷ்ட தர்மத்தை விட்டேன். இப்போது தீர்த்தமில்லாமல் என் பிராணன் போய்விடாது. சாப்பிட்ட வாய்க்குத் தீர்த்த பானம் இன்பமாகத்தானிருக்குமென்றாலும் இப்போது நான் உன்னிடம் ஜலம் வாங்கிக் குடித்தேனானால் அது எனக்கு இன்பம் தருகிற காமத்துக்காகத்தான் ஆகுமேயன்றி சாஸ்திரோக்தமான ப்ராண ரக்ஷணை என்ற தர்மத்துக்கு ஆகாது. ஆகையால் வேண்டாம்” என்றார்.

தர்ம-அர்த்த-காம-மோக்ஷம் என்று நாலு சொல்கிறோம். ஆசாரத்தில் அர்த்த-காமங்கள், இம்மை நலன்கள் யாவும் அடக்கமானாலும், இவற்றை விடவும் அது தர்மத்தையே முக்யமாகக் கொண்டு மோக்ஷத்தை லக்ஷ்யமாகக் கொடுக்கிறது என்பதையும் இது புரிய வைக்கிறது.

பெண்கள் தினமும் ஸ்நானம் செய்து ஈரத் தலையோடு கஷ்டப்பட வேண்டாம் என்ற தாக்ஷிண்யத்தினால்தான் விசேஷ தினங்களைத் தவிர மற்ற நாட்களில் அவர்கள் தலையில் மஞ்சள் ஜலம் புரோக்ஷித்துக் கொண்டாலே போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது. கர்ப்பம் நன்றாக வளர்ந்தபின் ஒரு கர்ப்ப ஸ்த்ரீ எந்த விரதம் இருந்தாலும் பலிக்காது என்பதுகூட அவள் அந்த ஸ்திதியில் விரதோபவாஸங்களால் காயக்கிலேசம் பண்ணிக் கொள்ள வேண்டாமென்ற கருணையால்தான். குழந்தைப் பிராயத்திலும், வாலிபப் பிராயத்திலும் ஒருவனைப் புஷ்டியாக வளரவிட வேண்டுமென்றுதான் பிரம்மசாரிக்கு விரத உபவாஸங்கள் சொல்லாமல், ஸாத்விக உணவாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமென்று வைத்திருக்கிறது. வியாதியஸ்தருக்கும் அநேக விதிகளிலிருந்து விலக்குக் கொடுத்திருக்கிறது.

தாக்ஷிண்யத்துக்காக principle -ஐ (கொள்கையை) விட்டுவிட்டார்கள் என்று அர்த்தமில்லை. ஆசார அநுஷ்டானத்தில் நாம் எத்தனை நம்பிக்கை வைத்திருந்தாலும் இம்மாதிரி அவை ரொம்ப சிரம ஸாத்யமாகிற போது மாத்திரம் பகவானே கருணையினால் அவற்றை ‘ஓவர்லுக்’ பண்ணிவிடுவான்; சிரமதசை முடிந்த பிற்பாடு நாம் அவற்றை உரியபடி அநுஷ்டிக்கத்தான் வேண்டும் என்பதே தாத்பரியம். குறிப்பிட்ட சில ஸமயங்களில் சில ஆசாரங்களைத் தளர்த்திக் கொடுத்திருக்கிறது என்பதனால் அதையே எக்காலத்துக்கும் நடைமுறையாக்கிக் கொண்டு விடக்கூடாது. ஒன்று முடியாதபோது அதற்குப் பதிலாக (substitute-ஆக), இரண்டாம் பக்ஷமாக (secondary-யாக) இன்னொன்றைச் சொல்லியிருக்கும். இதற்கு ‘கௌணம்’ என்று பெயர். ‘கௌண’ ஆசாரத்தையே மூலமான ‘முக்ய’ அல்லது ‘ப்ரதான’ விதிக்குப் பதில் எப்போதும் அநுஷ்டிப்பதென்பது முறையாகாது. ‘முக்ய விதி’, ‘பிரதான விதி’ என்பது ஜெனரல் ரூல். ‘கௌண விதி’ என்பது Subsidiary Rule .

சில ஸமயங்களில் ‘முக்ய’த்தையும் பண்ணிவிட்டு ‘கௌண’த்தையும் அதோடு பண்ணுவது விசேஷிக்கப்படுகிறது. உதாரணமாக ஸ்நானம் என்றால் ஜலத்துக்குள் முழுகி அழுக்குப்போகக் குளிப்பதுதான். ஆனால் உடம்பு ஸரியில்லாத போது அப்படிப் பண்ண வேண்டாமென்று ‘கௌண’மாகத் தலைக்கு விட்டுக் கொள்ளாமல் கழுத்துவரை குளித்தால் போதும், ‘டெம்பரேச்சர்’ இருந்தால் இடுப்புவரை குளித்தாலே போதும், அதுவும் முடியாவிட்டால் ஈரத்துணியால் துடைத்துக் கொண்டாலும் ஸரி, ரொம்பவும் தாபஜ்வரமானால் இது கூட வேண்டாம், தலையோடு கால் விபூதியைப் பூசிக்கொண்டாலே ஸ்நானம்தான் என்றெல்லாம் சாஸ்திரங்களில் flexible-ஆக [நெகிழ்ந்து கொடுத்து] விதி செய்திருக்கிறது. நன்றாகத் தலைக்கு ஸ்நானம் பண்ணின பிற்பாடும், அதாவது ‘ப்ரதான’ அல்லது ‘முக்ய’ விதியை அநுஸரித்த பின்னும் இப்படி (‘முழு நீறு பூசிய’ என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிற மாதிரி) தலையோடு கால் விபூதி பூசிக் கொண்டு ‘கௌண’ ஸ்நானமும் பண்ணலாம். ஆனால் நல்ல ஆரோக்ய ஸ்திதியிலிருக்கும் போது குளிக்காமல் விபூதி ஸ்நானம் மட்டும் பண்ணினால் போதுமென்று இருக்கப்படாது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s