முக்குணங்களும் உணவும்

ஸாத்விகம் என்று ஒரு வார்த்தை சொன்னேன். போஜனம் என்பது உடம்பை வளர்ப்பதற்கு மட்டுமல்ல. உள்ளத்தை வளர்த்துகொள்வதற்கும் உதவும்படியாக அதைப் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதாலேயே சாஸ்திரங்களில் ஆஹாரத்தைப்பற்றி அநேக நியமங்கள் சொல்லியிருக்கிறது. ஆசாரங்களில் மிகவும் முக்யமானவையாக ஆஹாரத்தைப் பற்றிய விஷயங்களே வைக்கப்பட்டிருக்கின்றன. இதிலே ஸாரமான தாத்பர்யம் ஸத்வ குணத்தை விருத்தி செய்யும்படியாக ஆஹாரம் இருக்க வேண்டும் என்பதுதான். கோப தாபமில்லாமல், காம மோஹங்களில்லாமல், பதட்டப்படாமல், அதற்காக ஒரேயடியாக மந்தமாகிச் சோம்பியும் வழியாமல், சாந்தமாகவும் பிரியமாகவும் இருந்துகொண்டே நல்ல சிந்தனா சக்தியுடனும் க்ரியா சக்தியுடனும் இருப்பது தான் ஸத்வகுணம், ஸாத்விகம் என்பது. ஒரே பதட்டம், காம க்ரோதாதி உணர்ச்சி வசப்படுவது இவை எல்லாம் ரஜஸ் – ரஜோ குணம் அல்லது ராஜஸ குணம் என்பது. ஒரே ஸோம்பல், தாமஸ குணம். இப்படி மூன்று குணங்கள். உணர்ச்சிமயமாக, ஓவர்-இமோஷனலாக, தடாபுடா என்று தாறுமாறாகக் காரியம் பண்ணுவது ரஜஸ். அது ஒரு ‘எக்ஸ்ட்ரீம்’ [கோடி] . ஒரே ‘டல்’லாக, எதற்கும் பிரயோஜனமில்லாமல் புத்தியில்லாமல் கார்ய சக்தியுமில்லாமலிருப்பது தமஸ் – இன்னொரு ‘எக்ஸ்ட்ரீம்’. இரண்டுக்கும் நடுவே ஸமநிலையில் ‘பாலன்ஸ்டாக’ இருப்பது ஸத்வம். மனஸின் எழுச்சி ரஜஸ்; தாழ்ச்சி தமஸ்; ஸம நிலை ஸத்வம். எண்ணம், காரியம் இதுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஸத்வத்தையும்விட உசந்த ஒரு நிலை உண்டு. அங்கே மனஸ் (எண்ணம்) , சரீரம் (காரியம்)  இதுகளை ஒருத்தன் அடியோடு கடந்துவிடுவான். தமஸ் மனஸின் தாழ்ச்சி என்றால், இது மனஸின் வீழ்ச்சி! தமஸிலே தூங்குவான்; இதிலே ஸமாதி நிலைமை அநுபவிப்பான். என்ன வித்யாஸமென்றால், தூங்குகிறவனுக்குத் தன்னைத் தெரியாது; ஸமாதியிலிருக்கிறவனும் வெளியில் பார்த்தால் தூங்குகிறாற்போலத் தானிருந்தாலும் அவனுக்குத் தன்னை நன்றாகத் தெரியும்; தான் ஒன்றுதான் இருக்கிற எல்லாமும் என்று தெரியும். இப்படியிருக்கிறவன், நாமெல்லாம் சின்னதாக ‘நான்’, ‘நான்’ என்று எதையோ சொல்லிக்கொண்டு அதற்காக இத்தனை ஹிம்ஸையும் பட்டுக்கொண்டிருக்கிறோமே, அந்த ‘நானை’ப் பற்றின நினைப்போ, அரிப்போ கொஞ்சங்கூட இல்லாமல், ஈச்வரன் கைக்கருவியாக, லோக கல்யாணத்துக்காக ரஜோகுணக்காரனைவிட நிறையச் சிந்தித்து, நிறையக் காரியமும் பண்ணுவான். நாம் பட்டுக்கொண்டு, அடிப்பட்டுக்கொண்டு பண்ணுவதை விட ஜாஸ்தியாகவும் சவரணையாகவும் இவன் பட்டுக் கொள்ளாமலே பண்ணிவிடுவான். ஸத்வ-ரஜஸ்-தமஸ்களை முக்குணமென்றும், இப்போது சொன்ன மூன்றும் கடந்த நிலையை குணாதீத ஸ்திதி என்றும் சொல்லியிருக்கிறது. கீதையில் பகவானும் த்ரிகுணங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லி அர்ஜுனனிடம் “நிஸ்த்ரைகுண்யோ பவ” – “மூன்று குணங்களும் இல்லாதவனாக, அவற்றுக்கும் மேலே போ” என்கிறார் [2.45] . “குண த்ரய விபாக யோகம்” என்றே [கீதையில்] ஒரு அத்யாயம். அதிலே ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஒவ்வொன்றின் நேச்சரும் என்ன என்று சொல்கிறார். அப்புறம் “தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்” என்று வருகிற அத்யாயத்தில் தெய்வ குணம் என்பதற்கு விளக்கமாக அவர் சொல்வதெல்லாம் ஸத்வமாயும் குணாதீதமாயும், அஸுர குணம் என்பது ரஜோ-தமோ குண இயற்கைகளாகவுந்தான் இருக்கிறது. இதற்கப்புறம் சிரத்தையிலும் மூன்று தினுஸு உண்டு என்று விஸ்தரிக்கிற “ச்ரத்தா த்ரய விபாக யோக”த்திலும் ச்ரத்தையில் மநுஷ்யர்கள் மூன்று விதமாகப் பிரிந்திருப்பது முக்குணங்களில் அவர்களிடம் எது தூக்கலாக இருக்கிறது என்பதைப் பொருத்ததுதான் என்கிறார். அவர்கள் பண்ணும் பூஜை, யஜ்ஞம், தபஸ், தானம் எல்லாவற்றிலுமே இதிது ஸத்வம், இதிது ரஜஸ், இதிது தமஸ் என்று சொல்லிக் கொண்டு வரும்போது நடுவில் அவர்கள் போஜனம் பண்ணும் ஆஹாரத்துக்கும் வருகிறார்.

இங்கே ஸத்வ குணத்தவரால் ஸத்வகுண அபிவிருத்திக்காகச் சாப்பிடப்படும் ஆஹாரம் எப்படியிருக்கும் இதே மாதிரி ரஜோ, தமோ ஆஹாராதிகளின் லக்ஷணமென்ன என்றெல்லாம் சொல்கிறார். பகவான் கீதையில் சொல்கிறதில் போஜனத்தின் இரண்டாவது அம்சமான, அதில் ஸம்பந்தப்பட்ட மநுஷ்யர்களைப் பற்றிய பேச்சு இல்லை. போஜன வஸ்துவின் லக்ஷணத்தை, அது எப்படிப்பட்ட பதார்த்தமாயிருக்க வேண்டுமென்பதைத் தான் சொல்கிறார்.

‘ஸாத்விகம்’ என்றதை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக த்ரி-குணங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். அவற்றிலே உசந்தது ஸத்வம். மனஸ் கொந்தளிக்காமல் கட்டுப்பட்டு, அமைதியாகவும் அன்பாயும் இருக்கிற உசந்த நிலை. இதைவிட உசந்தது குணாதீத, மனோதீத ஸ்திதி என்றாலும் அது நமக்கு எட்டாக் கை. நாம் முதலில் ஸத்வகுணிகளாக ஆகித்தான், அப்புறம் அது பழுத்து குணாதீத நிலைக்குப் போகணும்.

‘ஸத்வ’த்தைக் குறித்த எல்லாவற்றுக்கும் ‘ஸாத்விகம்’ என்று பெயர். சுத்த ஆஹாரம், சுத்த ஆஹாரம் என்று பல தடவை சொன்னேனே, அது ‘ஹைஜீன்’படி ஸுகாதாரமாகப் பண்ணி, க்ளீனான கப், ஸாஸரில் பரிமாறுவது மட்டுமில்லை; சுத்த ஆஹாரமென்றால் ஸத்வ ஆஹாரம் என்றே அர்த்தம். ஸத்வ குணத்தைத் தரும்படியான ஸாத்விக ஆஹாரமாக அது இருக்க வேண்டும்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s