உணவு முறையில் உண்மைச் சீர்திருத்தம்

பத்து, இருபது ஸாமான் வைத்துக் கொண்டால் தான் சமையல் என்று நம் சீமையில் ஆகியிருப்பதை மாற்ற வேண்டும். இதுதான் சீர்திருத்தம். ஏதோ நிர்பந்தம் மாதிரி, ரஸம், கறி, கூட்டு, குழம்பு என்று பிரதிவேளையும் சாப்பிட்டாக வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தனை வஸ்து இருப்பதால்தான் புளி ஜாஸ்தியாகிவிடுமோ, உப்பு ஜாஸ்தியாகிவிடுமோ ஸரியாகக் கொதி வந்துவிட்டதா என்றெல்லாம் ஸந்தேஹம்! வறுக்கிறதை எப்போது நிறுத்த வேண்டும், மாவு எப்போது கரைத்து விடணும், எவ்வளவு கரைத்து விடணும் என்றெல்லாம் யோஜனை! இந்த வேண்டாத சிரமங்கள் இல்லாமல் லேசான ரீதியில், ‘லைட்’டாக ஆஹாரத்தை ஆக்கிக்கொள்ள வேண்டும். பூரியைத் தட்டிப்போட்டு பாலை விட்டுக்கொண்டு சாப்பிடுவதானால் அதைப் பத்து நாட்களுக்குக்கூடக் கெடாமல் வைத்துக்கொண்டு வயிற்றுப் பாட்டைத் தீர்த்துக் கொள்ளலாம். வயிறு நன்றாக ரொம்பும். வியாதி வராது. சரீரத்துக்கே ஸெளகர்யம். நாள் கணக்கில் பிரயாணம் பண்ணும்போதுகூட, கண்ட இடத்தில் கண்டதைத் தின்னாமல், இந்த மாதிரிப் பற்றுப் படாத பூரி, ஸத்துமா இதுகளைக் கொண்டே காலம் தள்ளி விடலாம். அரிசியைக் களைந்து உலர்த்தி, சிவக்க வறுத்தெடுத்து அரைத்து வைத்துக் கொள்வதே ஸத்துமா. ‘ஸக்து’ என்பதே அதன் ஸரியான பெயர். ஆனால் உடம்புக்கு நல்ல ஸத்து தருவதாலும், ஸத்வகுணம் ஊட்டுவதாலும் அந்தப் பேரை ஸத்து [மா] என்று ஆக்கியிருப்பதிலும் அர்த்தம் இருக்கிறது! அதிலே மோரை விட்டோ, பாலை சாப்பிடலாம், கொஞ்சம் சாப்பிட்டால்கூட புஸ் என்று ஊறிக்கொண்டு பசியடங்கிப் புஷ்டியாயிருக்கும்.

‘குக்கர்’, ‘கிக்கர்’ கூட வேண்டாம். ஸுலபமாக, சீக்ரமாக அதில் நாலைந்து தினுஸைப் பண்ணிக் கொள்ள முடியலாம். ஆனால் நாக்கைக் கட்டுவதற்கு, ஸத்வ ஆஹாரத்தைத் தவிர மற்றவற்றுக்குப் போகாமலிருப்பதற்கு அது பிரயோஜனமில்லை. குக்கர் வந்தால் அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்பப் புளி, ரொம்பக் காரம் எல்லாம் கூடவே வரும். இது சித்தத்துக்குச் செய்கிற கெடுதலோடு உடம்புக்கும் கெடுதல் வந்து, பரிஹாரமாக மருந்து, அந்த மருந்திலே அநாசாரம், இந்த அநாசாரத்துக்குப் பரிஹாரம் என்று போய்க்கொண்டேயிருக்கும். செலவையும் சொல்ல வேண்டும். நிறைய வியஞ்ஜனம் என்றால் நிறையச் செலவாவதோடு, அப்புறம் டாக்டருக்காகவும் மருந்துக்காகவும் ஆகிற செலவு வேறே.

அதனால் ஒரு ஸாமான், இரண்டு ஸாமானை வைத்துக்கொண்டு, ஸாத்விகமாக, பெரியவர்கள் சொல்கிற மாதிரி ‘மதுர’மாக ‘ஸ்நிக்த’மாக லேசான ஆஹாரத்தைத் தானே தயார் பண்ணிச் சாப்பிட வேண்டுமென்பதை ஜன்ம விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘ஸ்நிக்தம்’ [பசையுள்ளது] என்பதற்காக நெய் சொட்ட வேண்டுமென்று அர்த்தமில்லை. வறட்டு வறட்டு என்றில்லாமல் பாலிலோ மோரிலோ ஊறினதாக, அல்லது நெய்ப்பசை உள்ளதாக இருக்க வேண்டும் என்றே அர்த்தம். ‘மதுரம்’ என்றாலும் ஒரே தித்திப்பு என்று அர்த்தமில்லை. அரிசி, கோதுமை முதலான எந்தப் பதார்த்தமானாலும் அதற்கென்றே ஒரு தித்திப்பு உண்டு. இப்போதைய புளி, கார சமையலில் பதார்த்தத்தை ஓவராக வேகவைத்து, அதன் இயற்கையான ஸத்து க்ஷீணிக்கும்படிப் பண்ணுவதில் தித்திப்பு போய்விடுகிறது. பண்டத்தை விட்டு இயற்கையான தித்திப்பு போகாதபடியான ஆஹாரமாகச் சாப்பிட வேண்டுமென்று அர்த்தம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s