கல்வித் திட்டத்தில் சமையற் படிப்பு

ஜீவிக்கிறதற்கு basic-ஆக இருப்பது சாப்பாடு தானே? அதனால் இந்த ஸ்வயம்பாகத்துக்குத்தான் basic education-லேயே (அடிப்படைக் கல்வியிலேயே) முதலிடம் கொடுத்து ஆண், பெண் அனைவருக்கும் சமையல் அறிவைக் கொடுத்துவிட வேண்டும். ஆமாம் “சமய அறிவைக் கொடுக்கும்படியாக இப்போதிருக்கிற ஸெக்யூலர் எஜுகேஷனை மாற்ற வேண்டும்” என்கிற நான்தான் இப்போது எல்லாவற்றுக்கும் “முந்தி சமையல் அறிவைக் கொடுக்கணும். எல்லாரையும் சாப்பாட்டு ராமன் ஆக்கணும்” என்கிறேன். ஆஹாரத்தைப் பொறுத்துத்தான் குணங்களும் மனப்பான்மையும் உண்டாகிறதால், சமய ஞானத்தில் பிடிப்பு உண்டாவதற்கே சமையல் ஞானத்தை உண்டாக்க வேண்டியாதாகிறது!

படிப்பிலே அடிப்படை Three R’s என்பார்கள். ‘ரீடிங்’ முதல் ‘ஆர்’, ‘ரைட்டிங்’ இரண்டாவது ‘ஆர்’, ‘ரித்மெடிக்’ (‘அரித்மெடிக்’என்பது பேச்சில் ‘ரித்மெடிக்’ என்றாகும்) மூன்றாவது ‘ஆர்’. நான் இதற்கெல்லாமும் அடிப்படையாக அடிப்படைக் கல்வியில் ஸ்வயம் பாகத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்கிறேன்.

நேரு “Kitchen religion” — “அடுப்பங்கரை மதம்”- என்று ஹிந்து மதத்தைப் பற்றி அடிக்கடி சொல்கிறார். அப்படிச் சொல்கிறபோது தாம் ஹிந்து மதத்தை ரொம்ப நன்றாகப் பரிஹாஸம் செய்கிறோம் என்று நினைக்கிறார். வாஸ்தவத்தில் அவர்தான் ஹிந்து மதத்தின் ஸாரத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஸர்ட்டிஃபிகேட் தருகிறார்! நம் மதம் Kitchen religion -தான்; அடுப்பங்கரை மதம்தான்!

வேதம்தான் நம் மதத்துக்கு ப்ராமண நூல். வேதத்துக்கும் சிரஸில் இருப்பது உபநிஷத். அதிலே ஒரு உபநிஷத்திலே, ஆத்மா, பிரம்மம் என்று நமக்குப் புரியாத தத்வங்களைச் சொல்கின்றனவே, அந்த உபநிஷத்துக்களில் ஒன்றிலேயே* நம் மதத்தை அடுப்பங்கரையாகத்தான் ஆக்கி வைத்திருக்கிறது.

நாரதர் ஸநத்குமாரரிடம் போய் ஆத்ம வித்தையை உபதேசிக்கச் சொல்கிறார். அப்போது ஸநத் குமாரர், “ஆஹார சுத்தௌ ஸத்வ சுத்தி:” என்றுதான் முடிக்கிறார். உபநிஷத்திலேயே இந்த விஷயம் இருக்கிறது. “தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மையாவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈச்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் ஸித்திக்கும்” என்று ஸநத் குமாரரே Kitchen religion-ல்தான் உபதேசத்தைக் கொண்டுபோய் முடிக்கிறார். அந்த முடிவுதான் — ஆஹார சுத்திதான் — ஸாதனைக்கு ஆரம்பம் அடிப்படை.

அதனால், அடிப்படைக் கல்வி, ஆதாரக் கல்வி என்று பெரிசாகச் சொல்லிக்கொண்டு இப்போது செய்வதில் ஜீவாதாரமாக, எல்லாப் பண்புகளுக்கும் ஆதாரமாக இருக்கிற ஸ்வயம்பாக போதனையைச் சேர்த்து விட வேண்டும் என்கிறேன். அரசியல் தலைவர்களாகவும் ஸமூஹத் தலைவர்களாகவும் இருக்கப்பட்டவர்களும் ஆதாரக் கல்வியில் சமையல் திட்டத்தைச் சேர்க்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் எல்லாப் பசங்களுமாகச் சேர்ந்து எல்லாப் பசங்களுக்குமாகச் சமையல் பண்ணி, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள். இதிலே குணத்தின் அபிவிருத்திக்கு ஒன்றுமில்லை. ஒருவேளை கெடுதலே உண்டாகவும் இடமுண்டு என்பதால் நான் ஒவ்வொரு பையனும் தன் சாப்பாட்டைத் தானே பண்ணிச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்கிறேன். இது பெர்ஸனல் ப்யூரிடியால் ஸொஸைட்டியைக் காப்பாற்றுவதற்காகச் செய்ய வேண்டிய தர்மம்.

ஆதாரக் கல்வி மட்டுமில்லை, முதியோர் கல்வி என்று இன்னொரு பக்கம் நிறையச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அதிலும் சரி, ரொம்ப ஸிம்பளிஃபை பண்ணி பாக சாஸ்திரம் [சமையற்கலை] சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.

பிறர் உதவியின்றி அவரவர் கார்யத்தை அவரவர் செய்து கொள்ளும்படியாக் கல்வித் திட்டத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதானே ஸமூஹத் தலைவர்கள் சொல்கிறார்கள்? ஆதலால் வாழ்க்கைக்கு முதலில் வேண்டிய அன்னத்தை அவனவனும் தயாரித்துக்கொள்ளும்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் சேர்த்து ஒரே சமையல், ஜாதி வித்யாஸமில்லாமல் சமைத்து, எல்லாரையும் சேர்த்து உட்காரவைத்துப் போடுவதுதான் சீர்திருத்தம் என்று இவர்கள் சொன்னால், அதைவிட அவசியமான, முக்யமான சீர்திருத்தம் ஒவ்வொருவனும் தன் உணவைத் தானே தயாரித்துக் கொள்வதுதான். இவர்கள் ஸமூஹச் சீர்திருத்தம் என்று எதையோ நினைத்துப் போகிறார்கள். அந்த ஸமூஹம் என்பது பல தனி மநுஷ்யர்கள் கொண்டதுதானே? எனவே இந்தத் தனி மநுஷ்யர்களின் குணம் சீர்திருந்துவதுதானே எல்லாவற்றுக்கும் basic – ஆதாரம்? அதனால் ஆதாரக் கல்வியிலேயே ஸ்வயம்பாகம் சொல்லிக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

ஆண்களில் முதியவர்களுக்கும் சமையல் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்கு சாஸ்திரமே ஆதரவாயிருக்கிறது. சாஸ்திர வாக்கியம் ஒன்று இருக்கிறது: “பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம் “. ‘பாணி பீடநம்’ என்றால் பாணிக்ரஹணம்; அதாவது கல்யாணம். ‘பஞ்சாசத்’ என்றால் ஐம்பது. ஐம்பது வயஸுக்கு மேலே கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். முதல் பெண்டாட்டி தவறி விட்டால் ஐம்பது வயஸுக்கு அப்புறம்கூட இரண்டாம் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள், சமையலுக்கு ஆளில்லை என்ற காரணத்துக்காகவே அப்படிச் செய்வதுண்டு. ஸ்வயம்பாகம் தெரிந்து விட்டால் வானப்ரஸ்தத்துக்குத் போக வேண்டிய தசையில், சமையலை ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு, மறுபடி தாம்பத்தியத்துக்குத் திரும்புகிற ஆபாஸம் நடக்காமலிருக்கும். சாஸ்திரத்தை மீறின தோஷம் ஸம்பவிக்காமலிருக்கும். இப்படியேதான் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டுமென்று நினைக்கிறவர்களிலும் சிலபேர் ஓடி ஆடி அலைகிற மத்யம வயஸுவரை வீட்டில் அம்மா சமைத்துப் போட்டோ, ஹோட்டலிலோ சாப்பிட்டுக் கொண்டிருந்து விட்டு ஓய்ந்து உட்காருகிறபோது, ‘அம்மா போயிட்டாளே, இப்போ முன்மாதிரி ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கமாட்டேனென்கிறதே’ என்று சமையலுக்காகவே (‘ஸஹ தர்ம’ இல்லை; தர்மத்துக்காக இல்லை; வயிற்றுக்காக, நாக்குக்காக) பிரம்மசர்யத்தை விட்டு விட்டுப் பெண் தேடிப் போகிற அஸங்கியமும் ஸ்வயம்பாக அநுஷ்டானம் இருந்துவிட்டால் ஏற்படாது.

முன்னெப்போதையும்விட, இப்போது அவனவன் ஊரோடு கிராமத்தோடு வேலை என்றில்லாமல், பக்ஷிகள் மாதிரி பூலோகத்திலே எங்கெங்கே வேலை உண்டோ அங்கேயெல்லாம் போகிறதென்று ஆகியிருக்கும் நிலையில் ஸ்வயம்பாகம் அத்யாவசியமாகிறது. சுத்தத்துக்குச் சுத்தம், ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோடு வெந்ததும் வேகாததுமாக ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டுச் சின்ன வயஸிலேயே அல்ஸர், அது, இது என்று அவஸ்தைப் படாமலும் இருக்கலாம். பொங்கல், சின்னதாக ரொட்டி, இதைவிட லேசாக அடுப்புத் தணலிலே கோதுமை மாவுருண்டையைக் காய்ச்சி அதை அப்படியே வேகப் பண்ணுவது – என்று அவனவனும் பண்ணிக் கொண்டால் வியாதியே வராது. இப்போது கணக்கு வழக்கில்லாமல் வியாதிகள்தான் ஸர்வ வியாபகமாக இருக்கின்றன.


* சாந்தோக்ய உபநிஷத் – 7.26.2.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s