உபவாஸம் எதற்காக?

சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘உபவாஸம்’ என்றால் ‘கூட வஸிப்பது’. பகவனோடுகூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாவிட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும். சாப்பிட்டால் வயிற்றிலே ‘கடாபுடா’. வேலைசெய்ய முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த முடிவதில்லை. வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்துகொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும். பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ணவேண்டுமென்றில்லா விட்டாலும், தடைப்படாமல் தீர்க்கமாக ச்வாஸம் விடும்படியிருந்தால்தான் மனஸ் தியானத்தில் நிற்கும். வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்போல ஆக்கிக்கொண்டு அதனால் ச்வாஸத்தை ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக ஈச்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோபவாஸம் அநுஷ்டிக்க வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது.

இந்த உடம்புதான்  ‘நான்’ என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஸதா இதற்கு ஸவரக்ஷணை பண்ணுவதையே கார்யமாக வைத்துக்கொண்டு, ஆத்மாவைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த தேஹாத்ம புத்தி போகணும். இதற்காகத்தான் சரீரத்துக்கு சிரமத்தை தருகிற உபவாஸங்களை சாஸ்திரம் விதித்திருக்கிறது. உபவாஸங்களால் சரீரத்துக்கு ஏற்படுகிற சிரமங்களைச் சிரமமாகத் தெரியாமல் பழக்கிக் கொள்கிறோமென்றால், அப்போது தேஹத்தையே பிரதானமாக மதித்து அதன் ஸெளகர்யத்தையே கவனிக்கும் அபிமானத்தை விடுகிறோம் என்றுதானே அர்த்தம்?

‘பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பும் வீணும் பேசுவதில் ஸுகமிருந்தாலும் மௌனம் அநுஷ்டி; கண்ணை இழுத்துக் கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்துக்கொண்டு ஈச்வர ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும். சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும். இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண யாதனை என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய ஹிம்ஸை சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படிப் பரமாத்மாவிடம் செலுத்த முடியும்?’ என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத உபவாஸங்களை வைத்திருப்பது.

ஜீவிப்பதற்கு சாப்பாடு அவசியம்தான். இல்லாவிட்டால் உயிர் போய்விடும். ஆனால் சாப்பாடு கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டால்கூட உடம்புக்கு வியாதி வக்கைகள்தான். ஆரோக்கியத்துக்குக் காரணமான ஆஹாரமே லிமிட் தாண்டிவிட்டால் நோய்க்குக் காரணமாகிவிடும்.

மெஷின்கள்கூட விடாமல் வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ரெஸ்ட் கொடுக்கிறார்கள். இப்படி வயிற்றுக்கும் ரெஸ்ட் கொடுத்தால் ஆரோக்யத்துக்கு ரொம்ப நல்லது.

உடம்பு என்று முழுசாக ஒன்றை எடுத்துக் கொண்டால் அதற்கு ஆறு நாள் வேலை கொடுத்தால் ஒருநாள் லீவ் தருவது என்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உடம்புக்கு உள்ளே வயிறு முதலான உறுப்புக்கள் தனியாக வேலை பண்ணிக்கொண்டேயிருக்கின்றனவே! இவற்றில் ஹ்ருதயத்தையும் லங்க்ஸையும் கொஞ்சங்கூட ‘ரெஸ்ட்’ கொடுத்து வைக்க முடியாது. வயிற்றுக்குக் கொடுக்க முடியும்; கொடுக்கவும் வேண்டும். ஏனென்றால் ஸ்தூலமாக வெளியிலிருந்து வஸ்துக்களை வாங்கிக் கொண்டு அரைத்துக் கரைத்து ரொம்பவும் உழைப்பது அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி கெட்டு விடுவதுபோல் ஒரு வேளை மாற்றி இன்னொரு வேளை என்று ஓயாமல் வேலை பண்ணினால் ஜீர்ணக் கருவிகள் கெட்டுவிடும். ஆஹாரம்தான் ரத்தமாகி, பம்ப் ஆகும் போது மூளைக்குப் பாய்கிறது. அந்த மூளை ரொம்ப நுட்பமான அவயம். அதனால், அதற்கு இந்த ரத்த ஓட்ட ‘வெய்ட்’டை அவ்வப்போது குறைக்க வேண்டும். இதற்கெல்லாம் உபவாஸம் உறுதுணை செய்கிறது.

ஆகவே உபவாஸமிருந்தால் ஆரோக்யம் போய்விடும் என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற ரோகங்களையும் போக்கும் பெரிய மருந்து; லங்கனம் பரம ஒளஷதம் என்றே வைத்ய சாஸ்த்ர வசனம்.

லங்கனம் என்றால் பட்டினி என்று ஏன் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம் தெரியுமா? அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் “தாண்டுவது” என்பதாகும். ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் அதைத் தாண்டிப் போய்விட்டால், skipping a meal என்று சொல்கிறது இதுதான், அதுவே லங்கனம்.

வைத்ய சாஸ்த்ரம் சொல்கிற லங்கனத்தையே மத நூல்களும் சொல்கின்றன திருவள்ளுவரும் இதைச் சொல்லியிருக்கிறார். அவ்வப்போது ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிடாமலிருந்தால்தான் வயிற்றிலே ஏற்கனவே போட்டதில் துளிக்கூட ஜீரணமாகாமலில்லை என்று நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஏற்கனவே சாப்பிட்டது முழுதும் ஜெரித்துப்போனதை (‘அற்றதை’) த் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே ஒருவன் மறுபடி உண்பானானால் அப்படிப்பட்டவனுடைய உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

சாப்பாட்டினால்தான் ஆரோக்யம் என்று நாம் நினைத்தாலும் வியாதிக்கும் அதுதான் முதல் தோழன் என்பதற்கு ஒன்று சொல்கிறேன். ஜ்வரம் வந்தால் டாக்டர் முதல் கார்யமாக என்ன பண்ணச் சொல்கிறார்? ‘சாப்பாட்டை நிறுத்து; கஞ்சி குடி; இல்லாவிட்டால் இன்னபானம் சாப்பிடு’ என்றுதானே சொல்கிறார்? எந்த நோயானாலும் அதற்குப் பத்தியமாக என்னென்ன சாப்பிடக் கூடாது என்றுதான் முக்யமாகக் கண்டிப்புப் பண்ணுவதிலிருந்தே வியாதிக்கு ஆதாரம் ஆஹாரம்தானென்று தெரிகிறது.

இப்படி சரீர ரீதியில் ஆரோக்யத்துக்கு நன்மை செய்கிற பட்டினியே அதைவிட ஆத்ம ஸம்பந்தமாக நல்லது செய்கிறது.

ஆஹாரங்களில் பல வகைகள் உடம்புக்குப் புஷ்டி தந்தாலும் மனஸைக் கெடுப்பவையாயிருக்கின்றன. ஸத்வ பதார்த்தமே சாப்பிட்டு வந்தாலுங்கூட உடம்புக்குள்ளே கெட்டியான சாப்பாடு ஒன்று போய் விழுந்தால் அது மனசை லேசாக்கி மேலே கிளம்ப விடாமல் கனமாகக் கீழே இழுத்துக்கொண்டுதானிருக்கும். இதனால்தான் நடு நடுவே சுத்தப் பட்டினி விதித்திருக்கிறது.

பட்டினி கிடக்கிறபோது மனசுக்குப் பரமார்த்திகமாகவும், பகவத் விஷயமாகவும் போய்த் தோய்ந்து நிற்கிற தன்மை உண்டாகிறது. இதனால்தான் பகவத் ஸ்மரணம் விசேஷமாக இருக்கவேண்டிய தினங்களில் பூர்ண உபவாஸமோ, ஒருபொழுதோ வைத்திருக்கிறது.

காந்திகூட ஆத்ம சுத்திக்காகவேதான் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி பட்டினி கிடந்தார். அந்தச் சமயங்களில் தமக்குப் புத்தியிலே ஒரு தெளிவு ஏற்பட்டதாகவும் மனஸில் சுத்தி உண்டானதாகவும் சொல்லியிருக்கிறார்.

இப்படியாக உடல் நலத்தோடு உயிர் நலத்தையும் இம்மையோடு மறுமையையும் சேர்த்து ஆன்றோர்கள் உபவாஸ விதிகளைத் தந்திருக்கிறார்கள்.

அதோடு இப்படிப்பட்ட உபவாஸங்கள் எல்லா ஜனங்களாலும் அநுஷ்டிக்கப்பட்டால் உணவுத் தட்டுப்பாடு என்ற பிரச்னையே வராது.

முதலில் கஷ்டமாயிருந்தாலும் அப்யாஸத்தினால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.

ஆரம்பத்தில் உடம்பை வாட்டுவது சிரமமாயிருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

வ்ரதோபவாஸ நியமை: க்லேசித: ஸுகம் அச்நுதே |
இக்ஷு க்லேசாத் யதா (ஆ)நந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம் ||

அதாவது, கரும்பைக் கசக்கிக் கிலேசப்படுத்துவதால்தான் கருப்பஞ்சாற்றை எடுத்துப் பானம் பண்ணுகிற இன்பம் கிடைப்பது போல, உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.

வியாபாரி முதலில் கையிலிருப்பதைச் செலவழித்துத்தான் பண்டங்கள் வாங்குகிறான். அப்புறம் அதை விற்று அதிகப் பொருள் சம்பாதிக்கிறான். அப்படியே உடம்பை முதலில் செலவழித்து, அப்புறம் அந்தச் செலவுக்கு மேல் பெரிய வரவு ஆத்மாவுக்கு சம்பாதித்துக் கொள்வதற்கே உபவாஸமிருப்பது.

சாப்பிடுகிற நாட்களிலும் பகவத் த்யானம் பண்ணுங்கள்; உபவாஸ நாளில் சாப்பிடாமலிருந்தும் த்யானம் பண்ணிப் பாருங்கள். தனக்கே வித்யாஸம் தெரியும். அந்த லாபத்துக்காக இந்த நஷ்டப் படலாம் என்று தெரிந்துகொள்வீர்கள். நான் நிறையச் சொல்வதைவிடப் பிரத்யக்ஷமாகப் பண்ணிப் பார்த்து விட்டாலே உபவாஸத்தின் அவச்யமும் பெருமையும் விளங்கிவிடும்.

வயிற்றை வற்றப் போடுகிற நாட்களில் மனசுக்கு த்யானாம்ருத போஜனத்தைக் கொடுத்துக் கொண்டால் எது பெரிய இன்பம் என்று தெரியும்.

சாப்பாடு இல்லாத வாய்க்கு அதைவிட ரஸம் சொட்டுகிற அவனுடைய நாமாமிருதத்தை, லீலாமிருதத்தை ஜபமாக, பஜனையாக, ஸ்தோத்ரமாக, பாராயணமாகக் கொடுத்துக் கொள்ள வேண்டும். காதுக்கு அம்ருத போஜனமாகக் கீர்த்தனையும், ஹரிகதையும் கிடைக்கப் பண்ணணும். ஏகாதசி புராண படநம்-ச்ரவணம் [படிப்பதும் கேட்பதும்] ரொம்ப விசேஷம்.

இதற்கெல்லாம் basic-ஆக, preliminary-யாகப் பண்ணவேண்டியது பட்டினி. அதைப் பண்ணினால்தான் இவற்றின் effect பூர்ணமாய்க் கிடைக்கும். அதனால்தான், ஆரம்பத்தில் சொன்ன ச்லோகத்தில் முதலில் ‘சுத்தோபவாஸ’த்தை ‘ப்ரதமம்’ என்று சொல்லிவிட்டு அதற்கப்புறமே ‘தத:’ என்று இரண்டாவதாக ‘ஸத்கதா ச்ரவண’த்தைச் சொல்லியிருக்கிறது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s