ஏகாதசியின் ஏற்றம்

வ்ரதோபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.

ந காயத்ர்ய: பரம் மந்த்ரம் மாது: பர தைவதம் |
ந காச்ய: பரமம் தீர்த்தம் நைகாதச்யா: ஸமம் வ்ரதம் ||

‘காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை; அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை); காசிக்கு மேலே தீர்த்தமில்லை’ என்று சொல்லிக் கடைசியில் ‘ஏகாதசிக்கு ஸமானமாக வ்ரதமெதுவுமில்லை’ என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் ‘மேலே’ ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு ‘ஸமமாக’ ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு ‘மேலே’ மட்டுமில்லாமல், அதற்கு ‘ஸமமாக’க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.

அஷ்ட வர்ஷாதி: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர: |
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷய: உபயோ: அபி ||

என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், ‘மர்த்ய’, அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்; அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை ‘எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி’னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை; ரூலாகப் போடவுமில்லை.

பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.

இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாதத்தை கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை. அன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: ப்ரதிக்ராஸம் அஸௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s