ஏற்படக் காரணம்

ஆயுர்வேதம் சரீர பலத்தைத் தருவதற்காக ஏற்பட்டது. சரீர பலத்தைக் கொண்டு சண்டை போடுவதை ஒரு சாஸ்த்ரமாக விதிமுறைகளில் அடக்கித் தருவது தநுர்வேதம்.

அஹிம்ஸையும் ஸர்வ ஜன ப்ரேமையுந்தான் ‘ஐடியல்’ என்றாலும் ஸர்வ காலத்திலும், ஸர்வ தேசங்களிலும் ராஜ்யாதிபத்யத்தை விஸ்தரித்துக் கொள்கிற ஆசை, அதற்காகப் படையெடுப்பது, இரண்டு கட்சிகள் யுத்தம் பண்ணிக்கொள்வது என்றெல்லாம் நடந்து வந்திருப்பதால் போர்க் கலையையும் நியதிகளுக்குக் கட்டுப்பத்தி, ஒருத்தனுக்குக் ஆயுதப் பிரயோக முறைகளைச் சொல்லிக் கொடுப்பதற்கும், ஆயுதங்களைச் செய்வதற்குச் சொல்லிக் கொடுப்பதற்கும் ஒரு சாஸ்த்ரம் தேவைப்படுகிறது. இதுவே தநுர்வேதம்.

வேதத்திலேயே தேவாஸுர யுத்தங்களைப் பற்றி வருகிறது. இந்த்ரன் வ்ருத்ராஸுனை வதம் பண்ணினது தான் தர்மம் அதர்மத்தை ஜயிப்பதற்குப் பெரிய ரூபமாக வேதத்தில் வர்ணித்திருப்பது. எந்த ஸ்வாமியைப் பார்த்தாலும் அஸுரர்களை ஸம்ஹாரம் பண்ணியே அந்த ஸ்வாமிக்குக் கீர்த்தியும், அதை வைத்தே பெயர்களும் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். திரிபுர ஸம்ஹாரம், ஜலந்தராஸுர வதம், ஹிரண்யாக்ஷ வதம், மது-கைடப வதம், கஜமுகாஸுர ஸம்ஹாரம், தாரகாஸுர பத்மாஸுர வதம், மஹிஷாஸுர வதம், சண்டமுண்ட ஸம்ஹாரம், பண்டாஸுர ஸம்ஹாரம், ராவண வதம், கம்ஸ வதம், நரகாஸுர வதம், கௌரவ ஸம்ஹாரம் என்றிப்படி ஈச்வரன், மஹாவிஷ்ணு, பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர், அம்பாள், ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் என்று எந்த ஸ்வாமியைப் பார்த்தாலும் அஸுர ராக்ஷஸர்களோடு யுத்தம் பண்ணி ஜயித்ததுதான் அவர்களுடைய விசேஷப் பெருமையாயிருக்கிறது. புராரி, த்ரிபுராரி, முராரி, மஹிஷாஸுரமர்த்தினி என்று பெயர்கள் ஏற்பட்டிருப்பதும் இன்னாரை சத்ருவாகக் கொண்டு ஜயித்தார்கள் என்பதால் ஏற்பட்டதுதான். ‘அரி’ என்றால் சத்ரு. (த்ரி) புரங்களின் சத்ருவானதால் பரமேச்வரனுக்கு (த்ரி) புராரி என்று பேர். காமாரி, காலாரி, கஜாரி என்றெல்லாமும் ஈச்வரனுக்குப் பெயர்கள் – காமன், காலன், கஜாஸுரன் ஆகியவர்களைக் கொன்றதனால். (பிள்ளையார் வதைத்தது கஜாமுகாஸுரனை; தாருகாவன ரிஷிகள் ஆபிசார யஜ்ஞத்தில் உண்டாக்கி அனுப்பிய கஜாஸுரனைப் பரமேச்வரனே வதம் செய்தார்.) முரன் என்ற சத்ருவைக் கொன்றதால் கிருஷ்ணருக்கு முராரி என்று பெயர். ‘மர்த்தனம்’ என்றால் அப்படியே தொகையலாக (துவையலாக) ப் பிசைந்த மாதிரி சத்ருவை ஹிம்ஸித்து ஸம்ஹாரம் பண்ணுவது. காளிங்கன் மேல் நர்த்தனம் பண்ணியே இப்படி மர்த்தனம் பண்ணி, அப்புறம் ‘பிழைத்துப் போ’!என்று அவனை விட்டிருக்கிறார் க்ருஷ்ண பரமாத்மா. ‘மாதவன்’ என்பதற்குப் பல அர்த்தங்களில் ஒன்று மது என்ற ராக்ஷஸனைக் கொன்றவர் என்பது. ‘மதுஸூதனன்’ என்றும் அதனால்தான் பெயர். ‘கேசவன்’ என்பதற்கும் ஒரு அர்த்தம், கேசி என்ற அஸுரனைக் கொன்றவர் என்பது.

பிற தேச மைதாலஜிகள், ‘இலியட்’ மாதிரியான பெரிய காவியங்களிலும் யுத்தம்தான் முக்யமாயிருக்கிறது.

“தர்மத்துக்காக யுத்தம் பண்ணு” என்று அர்ஜுனனை ஆண்டியாகப் போகாமல் தடுத்து பகவான் அநுக்ரஹித்த கீதைதான் இன்று ஞான நூல்களிலெல்லாம் சிகரமாயிருக்கிறது.

சரித்திரத்தைப் பார்த்தாலும் சந்த்ரகுப்தன், ராஜராஜன், ஸீஸர், நெப்போலியன் என்று ரொம்பவும் கொண்டாடப்படுபவர்களெல்லாம் பெரிய பெரிய யுத்தங்கள் செய்து ஸாம்ராஜ்யத்தை விஸ்தாரம் செய்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

காவியங்களும் இலக்கியங்களும் போற்றுகிற கதாநாயகர்களும் வீரதீர பராக்ரமசாலிகளாகவே இருக்கிறார்கள். மஹாவீரனாக, ஜயசீலனாக இருக்கிறவனைக் கொண்டாடுவதற்காகவே ‘பரணி’ என்று ஒரு இலக்கிய வகை ஏற்பட்டிருக்கிறது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s