அரசனுக்கிருந்த கட்டுப்பாடுகள்

விஷயம் தெரியாமலே குற்றம் சாட்டுகிறார்கள். அப்பனுக்குப் பின் பிள்ளைக்குப் பட்டம், அதிலும் தலைப் பிள்ளைக்குப் பட்டம் என்று law of primogeniture -படி ராஜ்யாதிகாரம் போனதால் தகுதிக்கோ, பிரஜைகளின் ஸம்மதத்துக்கோ இடமில்லாமலே அக்கால முடியரசு நடந்தது என்று இப்போதைய குடியரசுவாதிகள் சொல்வதும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுதான். இப்போது தான் வயஸு ஒன்றைத் தவிர ஜனநாயகப் பிரதிநிதிளுக்கு எந்தத் தகுதியும் வைக்காமல் விட்டிருக்கிறது. நம்முடைய கான்ஸ்டிட்யூஷனை (அரசியல் நிர்ணயச் சட்டத்தை) நிறைவேற்றிய ஸபைக்கு அக்ராஸனராயிருந்த ராஜேந்திரப்பிரஸாதே இதை ஆக்ஷேபித்துப் பார்த்தார். “சட்டத்தைப் பற்றி விவாதிக்க வேண்டிய வக்கீல்களுக்கும் தீர்ப்புக் கொடுக்க வேண்டிய ஜட்ஜ்களுக்கும் அநேக க்வாலிஃபிகேஷன்கள் வைத்திருக்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களைப் போட்டு நிறைவேற்றுகிற எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பிகளுக்கும் ஒன்றும் வேண்டாமென்றால் கொஞ்சங்கூட ஸரியாயில்லையே” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் அவர் சொன்னதற்கு கான்ஸ்டிட்யூவென்ட் அஸெம்ப்ளி ஒத்துக்கொள்ளவில்லை.

பழைய நாளில் ராஜாக்களுக்கு நிரம்ப யோக்யதைகளை ஸம்பாதித்துக் கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. குருகுலவாஸம் பண்ணி ஸகல சாஸ்திரங்களையும் தெரிந்து கொள்வார்கள்; தநுர்வேத அப்யாஸம் பண்ணுவார்கள்.

தர்மத்திலும், பண்பிலும் உயர்ந்தவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். ராஜாவாகி வெளி சத்ருக்களை ஜயிப்பதற்கு முந்தி அவன் காமம், க்ரோதம் முதலான ஆறு உள் சத்ருக்களையும் ஜயிருத்திருக்க வேண்டுமென்பது சாஸ்திரம்.

தகுதி எதுவும் போதாமல் துன்மார்க்கத்தில் போன அஸமஞ்ஜன் மாதிரியான ராஜகுமாரர்களையும், ராஜாவான பிறகும் யதேச்சாதிகாரமாகத் தன் மனஸுப்படி பண்ணின வேனன் போன்றவர்களையும் ஜனப் பிரதிநிதி ஸபையினர் ஒழித்தே கட்டியிருக்கிறார்கள்.

Primogeniture (தலைப் பிள்ளைக்குப் பட்டம்) என்பதால் அவனுக்கு யோக்யதாம்சமில்லாவிட்டாலும் அப்படிக் கட்டலாமென்று அர்த்தமில்லை. எவனைவிட யோக்யதையுள்ளவர் இருக்க முடியாதோ அப்படிப்பட்ட ராமசந்திர மூர்த்திக்கே பட்டம் கட்டுவதற்கு முன்னால் தசரதன் ஸபையைக் கூட்டி அப்படிப் பண்ணலாமா என்று அபிப்ராயம் கேட்டிருக்கிறான்!

சூரபத்மன், மஹிஷாஸுரன், ராவணன், துர்யோதனன் மாதிரியானவர்கள் கூடப் பேருக்காவது மந்த்ராலோசனை என்று ஒன்று நடத்தித் தானிருக்கிறார்களென்று புராணங்களிலிருந்து தெரிகிறது. ஸாக்ஷாத் ராமர் வானரங்களைக் கலந்தாலோசித்து விட்டுத்தான், சரணாகதி என்று வந்த விபீஷணனை அங்கீகாரம் பண்ணியிருக்கிறார்.

ரகுவம்சம் ஒன்றைப் பார்த்து விட்டால் போதும். வரிசையாக ஸூர்ய வம்ச ராஜாக்களைப் பற்றிச் சொல்கிற அந்தக் காவியம் தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி அர்த்த சாஸ்திரக் கொள்கைகளும் பெருமளவுக்கு அமலுக்கு வந்துவிட்ட காலத்தில் எழுதப்பட்டதுதான். அதனால் அதில் சொல்லியிருப்பவை பிற்கால ராஜ தர்மக் கருத்துக்களே எனலாம். சிலது இப்போது நினைவுக்கு வருவது சொல்கிறேன்.

வண்டானது எப்படிப் புஷ்பத்துக்கு வலி தெரியாமல் தேனை எடுத்துக் கொள்கிறதோ, அப்படித்தான் ராஜா பிரஜைகளுக்குக் கொஞ்சங்கூட சிரமம் தெரியாமல், அவர்களுடைய மலர்ச்சி குன்றாமலே வரி வசூலித்து எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரம். இதை இன்னொரு உவமையால் இன்னும் அழகுபடுத்திச் சொல்லியிருக்கிறான் உவமைக்கே பெயர் பெற்ற காளிதாஸன். ‘ஸூர்யன் எப்படி முதலில் பூமியிலிருந்து ஜலத்தை உறிஞ்சிக்கொண்டு அப்புறம் அதை பூமிக்கே மழையாகப் பொழிகிறானோ அப்படி திலீபன் பிரஜைகளிடமிருந்து வசூலித்ததைப் பிறகு அவர்களுடைய நலனுக்கேயான காரியங்களில் செலவிட்டான்’ என்கிறான் (1.18). லோகத்துக்கு ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் எங்கேயோ ஸமுத்திரத்தில் இருக்கிற உப்பு ஜலத்தை ஸூர்யன் இழுத்து, அப்புறம் உலகுக்கு பயனாகிற சுத்த ஜலமாக அதை வர்ஷிக்கிறானல்லவா? இப்படித்தான் ஸமுதாய க்ஷேமத்துக்கு வராத செல்வத்தை ராஜா வரியாய் வசூல் செய்து பிறகு அதன் க்ஷேமத்துக்கே செலவிட்டான் என்று அர்த்தம்.

தங்களுக்கெல்லாம் ரக்ஷகனாக இருக்கப்பட்ட ராஜாவிடம் எல்லா ஜனங்களுக்கும் ஒரு மரியாதை இருந்தால்தான் அவனுடைய சட்டத்துக்குக் கட்டுப்படுவார்களென்றே அவனுக்குப் பொதுக் கண்ணோட்டத்தில் அந்தஸ்தை ஏற்படுத்தித் தருவதற்காக அரண்மனையும், ‘ராஜபோகம்’ என்கிற ஸெளகர்யங்களும், ஆனை குதிரைகளும், ஆபரணங்களும் கொடுத்திருப்பது. ஆனால் இப்படிச் சொந்தச் சொத்தை விருத்தி செய்து கொள்வதற்காகவே அவன் வரி போட்டான் என்று நினைத்தால் அது தப்பு. ‘Welfare State-கருத்து’ அப்போதும் உண்டு என்று மேலே சொன்னதலிருந்து தெளிவாகிறது.

‘ரகு’ வம்சம் என்றே பெயர் ஏற்படச் செய்த ரகுவைப் பற்றிக் காளிதாஸன் (4, 5 ஸர்கங்களில்) சொல்கிறான்: உள்நாடு, வெளி நாடுகளையெல்லாம் ஜயித்து ஏராளமான செல்வக் குவியலோடு திரும்பிய ரகு ‘விச்வஜித்’ என்ற யாகம் செய்து அத்தனை செல்வத்தையும் தக்ஷிணையாகவும் தானமாகவும் கொடுத்து விடுகிறான். ஏராளமாக ஈட்டிய நிதிகளால் தன் சொந்தச் சொத்தை அவன் ஜாஸ்தி பண்ணிக் கொள்ளாதது மட்டுமில்லை; ஏற்கனவேயிருந்த சொத்துக்களைக்கூட தானம் பண்ணி விடுகிறான்! கௌத்ஸர் என்ற பிராம்மணர் வருகிறபோது அவனிடம் அதிதிக்கு அர்க்யம் கொடுக்கக்கூடத் தங்கத்திலோ வெள்ளியிலோ கிண்ணம், உத்தரிணி முதலானவைகள் இல்லாமல் மண்ணாலான பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போனானாம்! இப்போதானால் தினமும் ஏதாவது மந்திரி, எம்.எல்.ஏக்கு எப்படிப் புதிசு புதிசாக பங்களாக்கள் முளைக்கின்றன என்று யாராவது கேள்வி எழுப்புவதாகப் பார்க்கிறோம்!

‘ராஜா’ என்ற வார்த்தைக்குக் காளிதாஸன் (4.12-ல்) கொடுக்கிற டெஃபனிஷனே அவன் ஜனங்கள் மீது யதேச்சாதிகாரம் பண்ணாமல் ஸர்வ ஜனங்களுக்கும் பரமப் பிரியனாக இருந்தானென்பதுதான். ‘ராஜா ப்ரக்ருதி ரஞ்ஜநாத்‘ என்பதுதான் அந்த டெஃபனிஷன். ‘ப்ரக்ருதி’ என்றால் ‘பொது ஜனங்கள்’. ‘ரஜ்ஞநாத்’ என்றால் ‘மகிழப் பண்ணுவதால்’. பொது மக்களை மகிழப் பண்ணுவதாலேயே, ‘ரஞ்ஜ்’ என்ற ‘ரூட்’டியிலிருந்து ‘ராஜ்’ என்ற வார்த்தை உண்டானதாகக் காட்டியிருக்கிறான்.

பவபூதி என்று இன்னொரு மஹாகவி. அவர் எழுதின ‘உத்தர ராம சரித’ நாடகத்தில் ராமர், “நான் பொது ஜனங்களைப் ப்ரீதி பண்ணுவதற்காக எதையும் தியாகம் பண்ணத் தயார். என்னுடைய ஸ்நேஹம், தயை ஸெளக்யம் எதையும், ஏன் ஸாக்ஷாத் ஸீதையையுங்கூட ஜனங்களுக்காக நான் பரித்யாகம் பண்ணும்போது அதனால் எனக்கு வ்யஸனம் உண்டாகாது” என்று சொல்வதாக வருகிறது1. இதிலே கவிநயம் என்னவென்றால், இதைத் தொடர்ந்தே, ஜனங்கள் ஸீதையைப் பற்றி ஸந்தேஹப்பட்டார்கள் என்பதற்காக அவளுடைய பரிசுத்தத்தைப் பற்றி த்ருடமாகத் தெரிந்திருந்தும் ராமர் அவளைப் பரித்யாகம் செய்கிறார்.

இதற்கு முன்னாடியும் லங்கையில் ராவண வதமானவுடன் ஸீதை எத்தனையோ ஆர்வத்தோடு அவரைச் சேர வந்தபோது, அவருக்கும் அவளிடம் எத்தனையோ ப்ரியமும் நம்பிக்கையும் இருந்தபோதிலும், ராஜா என்றால் யார் அபிப்ராயத்தையும் பொருட்படுத்தாமல் மனஸு போனபடி இருக்கலாம் என்றில்லாமல் அவன்தான் லோகத்தின் அபிப்ராயத்துக்கு ரொம்பவும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று காட்டுவதற்காக, வானரங்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் எதிரே அவளைத் திரஸ்காரம் பண்ணினார். அப்புறம் அவள் அக்னிப் பிரவேசம் பண்ணி, அக்னியே அவளது பாதிவ்ரத்யத்தைப் பற்றி அத்தனை ஸேனைகளும் அறியச் சொன்ன பின்தான் ஏற்றுக் கொண்டார். அதற்கப்புறமும் அயோத்திக்கு வந்தபின் அங்கே ஏதோ கசமுச என்ற பேச்சு எழுந்தது என்பதற்காக ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியான ஸீதையை அவர் வனத்துக்கு அனுப்பினாரென்றால், ‘மானார்க்கி’ என்பது யதேச்சாதிகாரமோ ஸர்வாதிகாரமோ இல்லவே இல்லை என்றுதானே தெரிகிறது?

ராமசந்திரமூர்த்தி ஸீதா தேவியிடம் வைத்திருந்த ப்ரியத்துக்கு அளவேயில்லை. அவர் ஏகப் பத்னி வ்ரதர். ஆனால் ராஜாக்கள் ஏக பத்னி வ்ரதர்களாகத்தானிருக்க வேண்டுமென்று கட்டுப்பாடில்லை. யுத்தம், வேட்டை, தீர்ப்பு சொல்வது, மந்திராலோசனை, கோவில் திருப்பணி என்று அவனுக்கு ரொம்ப வேலை இருந்ததால் அவனைக் கொஞ்சம் ஸுகபுருஷனாக விட்டு வேலை நெரிசல் மனஸில் இல்லாமல் பண்ண ஸம்பிரதாயம் அநுமதித்திருக்கிறது. அதனால்தான் நாட்டியம், அந்தஃபுரம், கேளிக்ருஹம் என்றெல்லாம் அவனுக்கு உல்லாஸ விஷயங்களை அநுமதித்திருப்பது. மற்ற ராஜ்யங்களிடம் நல்லுறவை உண்டாக்கிக் கொள்வதற்கு ஒரு வழியாயும் ஒரு ராஜா அந்த ராஜ்யங்களின் ராஜகுமாரிகளைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதுண்டு. இப்படியெல்லாமிருந்தாலும் இந்தச் சின்ன இன்பங்களிலேயே அவர்கள் முழுகிவிடவில்லை; இதற்காக தேசக் கடமையையோ, தங்களுடைய ஆத்மாபிவிருத்தியையோ விட்டுவிடவில்லை. அர்த்த சாஸ்த்ரத்தில் சாணக்யன் ஒரு ராஜாவின் daily routine -ஐ (அன்றாட அலுவலை) வகுத்துக் கொடுத்திருக்கிறான். அதிலே ஒரு நாளைப் பதினாறாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ட்யூட்டியைச் சொல்லியிருக்கிறான். இந்தப் பதினாறிலே ஏதோ மூணு நாலுதான் நித்ரை, கேளிக்கை முதலானவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாக்கியெல்லாம் ராஜ்யபாரக் கடமைகள்தான். ராத்ரியும் பகலும் இந்த டயம்-டேபிள்படியேதான் ராஜாக்கள் தங்கள் தர்மத்தைச் செய்ததாக ‘ரகுவம்சத்’திலும் அங்கங்கே வருகிறது. ராத்ரியிலும் கூடத் தூங்காமல் ராஜாக்கள் மாறுவேஷத்தில் ரோந்து போனதாக எவ்வளவு கதைகளில் கேட்கிறோம்? நடைமுறையில் இல்லாத ஒன்று இப்படி அநேகக் கதைகளில் அரசனின் ஒரு அவசியமான அலுவலாக வரமுடியுமா?

கேளிக்கைகள் அநுமதிக்கப்பட்டிருந்தாலும் ஜெனரலாக ராஜாக்களுக்குச் சிறு வயஸிலிருந்து ஏற்பட்டிருந்த சாஸ்திர அப்யாஸத்தால் அவர்கள் அதற்குக் கொடுத்திருந்த அளவுக்கு மேலே போகாமல் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டுடனேயே இருந்திருக்கிறார்கள். ராமர் அயோத்யாவாஸிகள் அவ்வளவு பேரையும் தம்மோடு வைகுண்டத்துக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டாரல்லவா? இதற்கு முந்தி அவர் தம் பிள்ளைகளில் குசனைக் குசாவதி என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்ட ராஜ்யப் பகுதிக்கும், லவனை சராவதி என்ற ஊரைத் தலைநகராகக் கொண்ட பகுதிக்கும் ராஜாக்களாக நியமித்திருந்தார். அவரோடு அயோத்யாபுரியே சூன்யமாய் விட்டதல்லவா? அதனால் அதன் அதிதேவதை குசனால் அயோத்திக்கு புதுக் களை ஊட்டச் செய்யவேண்டுமென்று நினைக்கிறாள். அவனிடம் வேண்டுகோள் விடுப்பதற்காக ஒரு நடு ராத்ரியில் குசாவதியிலிருந்த அவனுடய சயன க்ருஹத்துக்குள்ளேயே ஆவிர்பவிக்கிறாள். தீடீரென்று தன் அறைக்குள்ளே யாரோ முன்பின் தெரியாத ஸ்த்ரீ வந்திருப்பதைப் பார்த்தவுடன் குசன், “நீ யார்? எவருடைய பத்னி? இப்படிப் பாதி ராத்ரியில் இங்கே வந்திருப்பது என்ன உத்தேசத்தில்? ரகுவம்சம்சத்தவர்களான நாங்கள் இந்திரியக் கட்டுப்பாடு பண்ணிய ‘வசி’க்கள்; பரஸ்திரீகளிடம் எங்கள் நோக்கம் போகவே போகாது என்று தெரிந்துகொள்” என்கிறான் (16.8) குசன் வாய்மொழியாக ராஜா எப்படியிருக்க வேண்டுமென்ற ஐடியலையே இங்கே கவி சொல்லியிருக்கிறாரென்பது தெளிவு.

சாணக்யரும் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்தரீ மோஹம், தன மோஹம், அதிகக் கோபம் முதலிய குணங்களைக் கொண்டிருந்த அரசர்கள் அதோகதியே அடைந்திருக்கிறார்களென்பதற்கு உதாரணங்களைக் காட்டி, ராஜாக்களுக்கு நல்ல சாஸ்த்ராப்யாஸமும், தங்களுடைய கடுமையான ட்யூட்டிகளைத் தளராமல் ஆற்றுவதற்கான ஒழுக்கக் கட்டுப்பாடும் இருக்கவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.

ராஜா தன் ஸெளகர்யத்தை மட்டும் கவனித்துக் கொண்டானே தவிர ஜனங்களுக்கு ஸெளகர்யங்களைப் பண்ணித் தரும் Welfare State -கொள்கை அக்காலத்தில் இல்லை என்று நினைப்பது ஸரியே இல்லை. சாலை போடுவது, அணை கட்டுவது (கல்லணை ஆயிரம் வருஷத்துக்கு மேலாக இன்றும் ஒரு என்ஜினீயரிங் அதிசயமாக இருக்கிறது!) Public Works என்ற மற்றப் பொது மராமத்துக்கள், ஆதுரசாலை என்று ஆஸ்பத்திரி வைப்பது இப்படியாக ஸமூஹ நலக் காரியங்களுக்கு ஆதிகாலத்திலிருந்தே தனித்தனி டிபார்ட்மென்ட்களும் அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள். வாஸ்தவத்தில் அப்போதுதான் பிரஜைகளின் நிஜமான க்ஷேமத்துக்கானதை ராஜாங்கம் செய்தது. ஏனென்றால் தற்கால ராஜாங்கங்கள் மாதிரி மேலே சொன்னவற்றோடு முற்கால ராஜா நின்றுவிடாமல் பிரஜைகளை தர்மத்தில் கொண்டு போவதற்கும் பொறுப்பெடுத்துக்கொண்டு அதற்கானவற்றைச் செய்தான். ஜனங்களின் சாச்வத க்ஷேமத்துக்காக யாகாதிகள் பண்ணினான், கோயில்கள் கட்டினான், உத்ஸவாதிகள் நடத்தினான், மஹாபாரதம் முதலிய கதைகளை எல்லா ஜனங்களுக்கும் பிரகடனம் பண்ணினான். ஸத்துக்களான சிஷ்டர்களுக்கு கௌரவம் கொடுத்து அவர்களுடைய ஜீவ்ய உதாரணம் எல்லா மக்களிடமும் பிரகாசித்து அவர்களுக்கும் அந்த வழியில் தூண்டுதலாக இருக்கும்படிப் பண்ணினான்.

இங்கே நான் ஸத்துக்கள், சிஷ்டர்கள் என்று யாரைச் சொல்கிறேனோ அவர்கள்தான் ராஜாக்களைக் கையில் போட்டுக்கொண்டு, தாங்கள் ஸெளகர்ய வாழ்க்கை நடத்துவதற்காகவே அவனை ஆட்டி வைத்தார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு கொஞ்ச காலமாக அடிபடுகிறது. அதாவது பிரம்ம தேஜஸ் என்பதைச் சொல்லிக்கொண்டு க்ஷத்ரிய ராஜாவுக்கு மேலே பிராம்மணன்தான் உட்கார்ந்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான் என்று வாதம். உண்மையில் அந்தக் கால பிராம்மணன் எத்தனை எளிமையாக, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தான் என்று தெரியாததால் இப்படிச் சொல்கிறார்கள். ‘மஹா தந்த்ர சாலி எதையும் செய்யத் துணிந்தவன்’ என்று நினைக்கப் படுகிற சாணக்யனே, சந்திரகுப்த மௌரியனைச் சக்கரவர்த்தி ஸ்தானத்துக்குக் கொண்டுவந்து அவனுடைய பூர்ண விச்வாஸத்தையும் பெற்றிருந்த போதிலும், பாடலிபுரத்தில் அரண்மனைக்குப் பக்கத்திலே தனக்கு மாளிகை கட்டிக்கொண்டு போக்யத்தில் மிதக்கவில்லை. ஊருக்கு வெளியிலே ஒரு குடிசை போட்டுக்கொண்டு, கந்தையைக் கட்டிக்கொண்டு, கஞ்சி காய்ச்சிக் குடித்துக் கொண்டுதான் கிடந்தான். இப்படியே புரோஹிதர்களான வஸிஷ்டர் போன்றவர்களும் நகரத்துக்கு வெளியிலே பர்ணசாலையில் வெகு எளிமையான வாழ்க்கைதான் நடத்தி வந்தார்கள். அவர்களாக ராஜீய விஷயங்களில் தலையிட்டு அபிப்ராயம் சொல்லி ‘ஆட்டி வைத்ததாக’ ஸாக்ஷியே இல்லை. ராஜாக்கள்தான் ஏதாவது ‘ப்ராப்ளம்’ என்றால் அரண்மனையை விட்டு அவர்களிடம் போய் அவர்களுடைய புத்திமதியையும் அநுக்ரஹத்தையும் கோரியிருக்கிறார்கள். ராஜாவுக்கு எத்தனை பொறுப்போ அதைவிடக் கடுமையாகத்தான் பிராம்மணன் தனக்கும் அன்றாடக் காரியங்களை வைத்துக்கொண்டு லோக க்ஷேமார்த்தம் தன்னைச் சக்கையாகப் பிழிந்து கொண்டானே ஒழிய, தனி சலுகை, வசதி எதுவும் பெறவில்லை2.

ராஜாவுக்கும் சட்டத்துக்கு முன்னாடி எந்தச் சலுகையும் இல்லை. கன்றின் மேலே தெரியாமல் தேரை ஏற்றி அதை ராஜகுமாரன் கொன்று விட்டானென்பதற்காக அவனுடைய தகப்பனாரான மநுநீதிச் சோழன் அவனையே பதிலுக்குத் தேர்க்காலில் பலி கொடுக்கப் போயிருக்கிறான்!

ராஜாவுக்கு அப்போது இருந்த பொறுப்பும் அதைப்பற்றி அவன் கொண்டிருந்த விசாரமும் இப்போது ராஜாங்கம் நடத்துகிறவர்களுக்கு இன்னதென்றே தெரியாது. ஏனென்றால் பழைய நாள் ராஜா பிரஜைகளின் தர்ம வாழ்க்கைக்கும் பதில் சொல்லவேண்டியவனாயிருந்தான். ‘அவர்களுடைய பாபம் அவர்களை நல்வழிப் படுத்தத் தவறிய தன்னையே வந்து சேரும்’என்று அவனுக்கு போதிக்கப்பட்டிருந்தது — “ராஜா ராஷ்ட்ரக்ருதம் பாபம்” என்பது சாஸ்திரம். அதாவது ஒரு தேசத்திலிருக்கப்பட்ட பிரஜைகள் பண்ணும் பாவமெல்லாம் அவர்களை ஆளும் ராஜாவைத்தான் சேரும் என்று அர்த்தம். இதற்கு Converse-ஆக ஒரு ராஜா தப்புப் பண்ணினால் அது தேசம் முழுவதையும் தாக்கும், இயற்கையையே சீற வைத்துப் பெரிய உத்பாதங்களை உண்டாக்கிவிடும் என்றும் சொல்லி அவனை தர்மத்துக்கு பயந்து நடக்கும்படியாகப் பண்ணினார்கள்.

திருக்குறளில் இதையெல்லாம் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. கொடுங்கோல் ஆட்சியில் ஜனங்கள் விடுகிற கண்ணீரே ராஜாவின் செல்வத்தையெல்லாம் அழித்துவிடும் ஸைன்யம் மாதிரி; ஆட்சிமுறை தப்பினால் பருவ மழை தப்பிப் பஞ்சம் வந்துவிடும்; பால் வளம் போய்விடும்;பிராம்மணர்களுக்கு வேதம் மறந்துபோய், வேத வேள்விகளால் நடக்கும் அத்தனை லோக க்ஷேமமும் போய்விடும் என்றெல்லாம் திருவள்ளுவர் எச்சரித்திருக்கிறார்3.

ராஜா ஒரு தேசத்தில் எப்படி சீலத்தைக் கட்டி ஆளவேண்டும் என்பதற்கு ஐடியலைக் காளிதாஸன் திலீபனுடைய ராஜ்யத்தில் காட்டுகிறான். திலீபனுடைய ராஜதானியில் உத்யானவனத்துக்குப் போகிற வழியிலேயே பெண்கள் ராத்திரி வேளையில் அவர்கள் பாட்டுக்கு மயங்கித் தூங்கிக் கொண்டிருப்பார்களாம். “அந்தப் பெண்களுடைய வஸ்திரங்களை த்லீபனுடைய ஆட்சியிலே வீசிய காற்றுகூட அசைத்ததில்லை. அப்படியிருக்க மநுஷ்யனாகப் பிறந்த எவனாவது அவர்கள் பக்கம் கை நீட்டி இருக்க முடியுமா?” என்று கவி கேட்கிறான் (6.75) .

மக்கள் மட்டுமின்றி மாக்கள் என்கிற விலங்குகள், செடி கொடிகள், பயிர் பச்சை எல்லாவற்றிடமும் ராஜாக்களுக்கு மிகுந்த பரிவு இருக்க வேண்டுமென்பது சாஸ்திரம். வேட்டையாடுவதில்கூட வரம்பு உண்டு. க்ரூரமான பிராணிகளைத்தான் வேட்டையாடலாம் என்று அநேக ராஜாக்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். யாகம் என்று சொல்லிக்கொண்டுகூட அதில் ஏராளமாகப் பிராணி வதை பண்ணினால் பாபம்தான் என்று பாகவத்தில் பிராசீனபர்ஹிஸின் கதையில் சொல்லியிருக்கிறது. புறாவுக்காக சிபி தன்னுடைய உடம்பையே அறுத்துக் கொடுத்தான், பாரி வள்ளல் முல்லைக்கொடி படருவதற்காகத் தன்னுடைய தேரைத் தொடுத்தான் என்று படிக்கிறோம்.

‘சாகுந்தல’த்தில் ஒரு அரசன் ஸகல உயிரிகளிடமும் எவ்வளவு பிரியத்துடனும், ‘ஸிம்பதி’யுடனும் இருக்க வேண்டுமென்பது தெரிகிறது.

கண்வருடைய ஆச்ரமத்தைச் சேர்ந்தவர்கள் துஷ்யந்தனைப் பார்க்க வந்திருப்பதாக அவனுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அவன், ஏதாவது பெரிய தப்பு நடந்திருந்தாலோ, அல்லது கஷ்டம் ஏற்பட்டிருந்தாலோ அன்றி ஆச்ரமவாஸிகள் ராஜ ஸமூஹத்துக்கு வரமாட்டார்களே என்று நினைக்கிறான். அப்போது அவன் தனக்கு தானே, ‘ரிஷிகளின் தபஸுக்குக் குந்தகமாக ஏதாவது அஸம்பாவிதம் நடந்திருக்குமா? அவர்களுடைய வனத்திலே ஸ்வயேச்சையாய் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கிற ஸாது மிருகங்களை யாராவது ஹிம்ஸை பண்ணியிருப்பார்களா? அல்லது என்னுடைய தவறு எதனாலாவது செடி, கொடிகள் புஷ்பிக்காமலும், பழுக்காமலும் போயிருக்குமா?’ என்று சொல்லிக் கொள்வதாக வருகிறது (5-வது அங்கம்) .

ராமர் தன்னுடைய ராஜ்யத்தில் ஒருவனுக்குப் புத்ர சோகம் ஏற்பட்டுபோது, அது வர்ணாச்ரம தர்மங்களைத் தான் ஸரியாகப் பரிபாலனம் பண்ணாததன் விளைவே என்று காரணத்தைக் கண்டுபிடித்து அப்படி தர்மம் மீறினவனை சிக்ஷித்திருக்கிறார்.

சாகுந்தலத்தின் ஆரம்பத்திலும் ராஜாக்களுக்கு வர்ணாச்ரம அநுஷ்டானத்திலிருந்த நம்பிக்கையைக் காட்டுவதாக ஒரு கட்டம் வருகிறது. சகுந்தலையைப் பார்த்தவுடன் துஷ்யந்தன் மனஸில் பிரேமை உண்டாகி விடுகிறது. அவளுடைய ஸகிகள் அவளைப் பரிஹாஸம் செய்ததிலிருந்து அவள் கல்யாணமாகாதவள்தான் என்று அவனுக்குத் தெரிகிறது. அதனால் தனக்குப் பிரேமை உண்டானதில் தப்பு இல்லை என்று நினைக்கிறான். ஆனால் உடனேயே, ‘இவள் கண்வ மஹரிஷியின் புத்ரி என்றல்லவா தெரிகிறது? அப்படியானால் பிராம்மணப் பெண்ணாக அல்லவா இருக்க வேண்டும்? அவளிடம் க்ஷத்ரியனான என் மனஸ் போகப்படாதே? ஆனாலும் என் மனஸ் அவளிடம் போகிறதே! ஸத்துக்களின் (அந்தஃகரணம்) தப்பு செய்யவே செய்யாது. அதனால் இவள் பிராம்மணப் பெண்ணாக இருக்க முடியாது’ என்று முடிவு பண்ணுகிறான். அவன் சகுந்தலையின் பிறப்பைப் பற்றி ஒரு விதமாக அநுமானம் பண்ணி, தான் அவளைப் பிரியப்படுவது வர்ண தர்மத்துக்கு விரோதமாக இராது என்று தீர்மானிக்கிறான். அவன் பண்ணின அந்த அநுமானம் தப்பாகப் போனாலும், வாஸ்தவத்தில் சகுந்தலை கண்வரின் வளர்ப்புப் பெண்தானே? க்ஷத்ரியராய்ப் பிறந்த விச்வாமித்ரருக்கும் அப்ஸர ஸ்த்ரீயான மேனகைக்கும் பிறந்தவள்தானே சகுந்தலை? இங்கே ஸத்துக்கள் எனத் தக்கவர்களாகவே ராஜாக்கள் இருக்க வேண்டுமென்றும், அவர்களின் அந்தஃகரணம் தன்னையறியாமல்கூட வைதிகமான வர்ண விபாகங்களுக்கு வித்யாஸமாகப் போகாது என்றும் கவி உணர்த்துகிறார்.

ராஜாக்களுக்கு இவ்வளவு பொறுப்பும், பொறுப்புத் தவறுவதால் பாபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற பயமும் கவலையும், இதனாலேயே தர்மராஜ்ய பரிபாலனத்தில் ஆழ்ந்த கவனமும் ஈடுபாடும் இருக்கும் படியாகத்தான் தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி அர்த்த சாஸ்திரமும் ராஜநீதிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

கஜானவை எப்படியாவது ரொப்பிக் கொண்டு விடுவதில் அக்கால ராஜக்கள் குறியாக இருக்கவேயில்லை. இதற்கு நிரூபணமாகக் காளிதாஸன் சாகுந்தலத்தில் ஒரு ஸீன் எழுதியிருக்கிறான் (6-வது அங்கம்).

கடல் வாணிபம் செய்கிற ஒருவன் கப்பல் உடைந்து முழுகிப் போய்விட்டதாயும், அவனுக்கு ஸந்ததியில்லாததால் அவனுடைய சொத்து பூராவும் கஜானவைச் சேர்ந்து விடுவதாயும் துஷ்யந்தனுக்கு நிதி மந்திரி ஒரு ‘நோட்’ அனுப்புகிறார். உடனே துஷ்யந்தன் அத்தனை செல்வத்தையும் ஆர்ஜிதம் செய்துகொண்டு விடலாமென்று பறக்காமல், ‘பெரிய வியாபாரி என்றால் பல கல்யாணங்கள் பண்ணிக் கொண்டிருப்பானே! அப்படியிருந்தால் அவனுடைய பெண்டாட்டிகளில் எவளாவது கர்ப்பமாயிருக்கிறாளா என்று விசாரிக்க வேண்டும்’ என்கிறான். அவன் நினைத்ததுபோலவே செத்துப்போன வியாபாரியின் ஒரு ஸம்ஸாரம் கர்ப்பவதியாயிருக்கிறாளென்று தெரிகிறது. “அப்படியானால் சொத்து கஜானாவைச் சேராது; கர்ப்பத்திலிருக்கிற குழந்தையைத்தான் சேரும்” என்று துஷ்யந்தன் தீர்ப்புப் பண்ணுகிறான்.

பொருளாசையில்லாத தர்ம நியாயத்தோடு ராஜாக்களின் ஆழ்ந்த மநுஷ்யாபிமானத்தைக் காட்டுவதாகவும், அதோடுகூட தர்மத்தை மீறாமலிருக்கிற பண்பைப் பிரதிபலிப்பதாகவும் அப்போது துஷ்யந்தன் ஒரு கார்யம் பண்ணுகிறான். பதியை இழந்தவர்கள், புத்ரனில்லாதவர்கள் யாவருக்கும் ராஜாவே ஆதரவாயிருக்கவேண்டுமென்று நினைத்து ஒரு பிரகடனம் பண்ணுகிறான். அதிலே ‘எந்த பந்து காலமானவருக்கும் அந்த பந்துவாக நானேயிருப்பேன்’ என்கிறான். பதியை இழந்தவர்களிடம் இப்படிச் சொல்வது அஸம்பாவிதம் என்பதால் உடனேயே, ‘தர்மத்துக்கு மாறாக இல்லாத உறவு முறைகளில் மாத்திரமே”என்று ஒரு கண்டிஷன் சேர்க்கிறான். சாணக்யனும் இக்கால Welfare State -ன் லக்ஷணங்களாகச் சொல்லப்படும் அநாதைகளின் ரக்ஷணையை ராஜாவின் கடமையாகச் சொல்லியிருக்கிறார். ஏழைகள், கர்ப்பிணிகள், அநாதைகள், வயஸானவர்கள், வியாதியஸ்தர்கள் ஆகியவர்களை ராஜாங்கம் ரக்ஷித்தாக வேண்டுமென்கிறார்.


1உத்தர ராம சரிதம்: 2.12

2இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “கிருஹஸ்தாச்ரமம்” என்ற உரையில் “அந்தணனின் அன்றாடம்” என்ற பிரிவும், “ஜாதிமுறை” என்ற உரையில் “ஒரு பெரிய தப்பபிப்ராயம்” என்ற பிரிவும் பார்க்க.

3திருக்குறள் பொருட்பாலில் ‘கொடுங்கோன்மை’ என்ற அதிகாரம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s