தோற்ற ராஜ்யத்திடம் உதாரம்

தண்டோபாயத்திலும் அநேக தர்மங்கள் உண்டு.1

ஜயித்த ராஜ்யம் ஜயிக்கப்பட்ட ராஜ்யத்தை நடத்தும் விதத்திலும் அர்த்த சாஸ்த்ரம் மிகவும் கௌரவமான பண்புகளை விதித்திருக்கிறது. ஒரு ராஜா வெளி ராஜ்யத்தை ஜயித்த பின் அதை முழுக்கவும் தன் ராஜ்யத்திலேயே ஜெரித்துக்கொண்டு விடக்கூடாது. அதன் ‘இன்டிவிஜுவாலிடி’ குன்றிவிடாதபடி அதைத் தனியாகவே விட்டிருக்க வேண்டும். ‘அந்த ராஜ்ய ஜனங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமாயிருப்பவர்களிடமே அதன் நிர்வாஹத்தை விடவேண்டும். அவர்களுடைய ஸமயாசாரம் என்னவோ, கலாசாரம் என்னவோ, வாழ்க்கை முறையும் ஸம்பிரதாயங்களும் என்னவோ அவற்றுக்கெல்லாம் மாறுதலாக எதையும் திணிக்கவே கூடாது’ என்ற இப்பேர்ப்பட்ட உத்தமமான கொள்கைகளைத் தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி, ரொம்பவும் பொல்லதவராக வர்ணிக்கப்படுகிற சாணக்யருங்கூடத் தம்முடைய அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

ராஜ்ய விஸ்தரிப்பின் மூலம் பலாத்காரமாகவோ, அதைவிட நீசமான வசியங்களாலோ ஜயிக்கப்பட்ட ஜனங்களுக்குள் சாதுர்யமாக பேதங்களை உண்டு பண்ணுவதாலேயே அவர்களைத் தங்கள் மதத்துக்கு இழுப்பது மற்ற நாட்டவரின் வழக்கம். இப்படி ஒரு ஜயித்த ராஜா ஜயிக்கப்பட்டவர்களை மத மாற்றம் செய்வதை நம் சாஸ்த்ரம் கொஞ்சங்கூட ஆதரிக்கவில்லை. யாஜ்ஞ்யவல்க்ய ஸ்ம்ருதி

யஸ்மிந்தேசே ய ஆசாரோ வ்யவஹார குல ஸ்திதி: |
ததைவ பரிபால்யோ (அ)ஸெள யதாவசம் உபாகத: ||

என்கிறது. அதாவது ஜயித்த ராஜா வசப்படுத்திக் கொண்ட தேசத்தில் என்னென்ன ஆசார-வ்யவஹாரங்களும் குல வழக்குகளும் இருக்கின்றனவோ அவற்றை அப்படியேதான் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறது.

அர்த்த சாஸ்த்ரத்திலும் அந்தந்த தேசாசாரமே தழைக்கும்படியாக அதை ஜயிக்கும் ராஜா செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஜயித்த ராஜா அந்த ராஜ்யத்தின் முடிவான நிர்வாஹத்தைத் தன் கையில் வைத்துக் கொண்ட போதிலும், ‘டொமினியன் ஸ்டேடஸ்’ போல அதற்கும் ஓரளவு ஸ்வதந்த்ரம் தந்து, அந்த நாட்டவரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற அத் தேசத்தவன் ஒருவனின் பொறுப்பிலேயே விட வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. மநு இன்னம் ஒரு படி மேலே போய் பழைய ராஜாவின் பந்துக்களிடமே இந்தப் பொறுப்பைத் தரவேண்டுமென்கிறார். அநேக ஸந்தர்ப்பங்களில், தோற்ற ராஜாவிடமேயோ அல்லது அவன் யுத்தத்தில் செத்துப் போயிருந்தால் அவனுடைய பிள்ளையிடமேயோ இந்தப் பரிபாலனப் பொறுப்பு கொடுக்கப்பட்டதுண்டு. ராமர் வாலியைக் கொன்றபின் ஸுக்ரீவனை ராஜாவாக்கினாலும், வாலியின் பிள்ளையான அங்கதனுக்கு யுவராஜ அந்தஸ்து தந்திருக்கிறார்; லங்கையை ஜயித்தவுடனோ அதைத் தான் ஆளாமல் விபீஷணனுக்குப் பட்டம் கட்டியிருக்கிறார்.

தோல்வியடைந்த ராஜ்யம் ஜயித்த ராஜாவுக்குக் கப்பம் என்று வருஷா வருஷம் ஒரு தொகை செலுத்த வேண்டும். தன் ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொள்வதற்காக அது யுத்தத்துக்குப் போகப்படாது. Defence, Foreign Affairs (பாதுகாப்பு, வெளி வியவஹாரம்) என்ற இரண்டிலும் அது ஜயித்த ராஜ்யத்துக்கு முற்றிலும் அடங்கியே நடக்க வேண்டும். மற்றபடி internal administration என்கிற உள்நாட்டு நிர்வாஹத்தில் அநேக விஷயங்களில் அது ஸ்வதந்திரமாக நடக்கலாம்; பெரிய, முக்யமான ஸமாசாரங்களில் மாத்திரம் ஜயித்த ராஜாவுக்குச் சொல்லி விட்டு அவனுடைய அங்கீகாரம் பெற்றே நடவடிக்கை எடுக்கணும். நம் தேசம் தவிர மற்ற தேசங்களில் ஜயித்தவர்கள் தோற்றவர்களிடம் இவ்வளவு ‘ஜெனர’ஸாக நடப்பதை எதிர்பார்க்க முடியாது.


1யுத்தம் செய்வதில் ஏற்பட்டுள்ள இந்த தார்மிக வரம்புகளைப் பற்றி “தநுர்வேதம்” என்ற உரையில் காண்க.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s