வெளிநாட்டு விஷயத்தில் தண்ட நீதி

வெளிநாட்டு ராஜாவால் ஜனங்களுக்கு ஹிம்ஸை உண்டாகாமல் ரக்ஷி்ப்பதும் ராஜநீதியில் முக்யமான அம்சம். லோகத்தில் எந்த தேசமானாலும் ஆதிகாலத்திலிருந்தே ராஜாக்கள் மற்ற நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்காகப் படையெடுத்து யுத்தம் செய்வது என்று ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நான் ந்யாயாந்யாயங்கள் சொல்லப் போவதில்லை.

ஒரு வெள்ளைக்காரர்1 என்னிடம், அர்த்த சாஸ்த்ரத்தில் ஒரு காரணமும் இல்லாமல் ஒரு அரசன் பிற அரசர்கள் மேல் படையெடுத்து ராஜ்ய விஸ்தாரம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருப்பதை இப்போதுள்ளவர்கள் பின்பற்றலாமா என்று கேட்டார். அது ஏதோ அந்த நாள் நடைமுறை. அதுவும் இது தர்ம ஸம்பந்தமாயிருப்பதைவிட அர்த்த ஸம்பந்தமாகவே சொல்லப்பட்ட வழி. அதற்கு சாச்வத validity (செல்லுபடித்தன்மை) இருப்பதாகக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் சொன்னேன்.

எப்படியோ, ராஜா என்றால் ஏக சக்ராதிபத்யத்துக்கு முயற்சி செய்ய வேண்டுமென்பது ஸ்திரப்பட்டுவிட்ட fact -ஆக எல்லா நாட்டிலும் பின்பற்றப்பட்டதை மட்டுமே கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். வேதாந்தத்தில் இது மண்ணாசை, பொன்னாசைகளின் கீழேதான் வருமானாலும், அந்த வேதாந்தம் ராஜாவைப் பொருத்த மட்டில் அவனுடைய முதுமையில் வானப்ரஸ்த ஆச்ரமம் போக வேண்டியபோதுதான் இந்த ஆசைகளை விட வேண்டும் என்று அவனுக்குச் சொல்கிறது. தர்ம சாஸ்திரம் ராஜாவை யுத்தத்துக்குப் போகாமல் கட்டுப்படுத்தி வைக்கவில்லையானாலும் அவனை யுத்தத்தில் தூண்டிவிடவுமில்லை. அர்த்த சாஸ்திரங்களோ, வெளி ராஜாவால் தன் நாட்டுக்கு ஹிம்ஸை ஏற்படும்போது மாத்திரம் டிஃபென்ஸில் (தற்காப்புக்காக) யுத்தம் செய்வது, அல்லது அந்நிய தேசங்களில் அதர்மம் அதிகம் இருக்கிறது என்பதற்காக அங்கே தர்மத்தை நிலைநாட்ட மாத்திரம் படையெடுத்துப் போய் யுத்தம் செய்து தர்ம ஆட்சியை ஏற்படுத்துவது என்றெல்லாமில்லாமல், பொதுவாகவே ராஜாவானவன் தன் ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ணிக் கொண்டு ஸார்வ பௌமனாக, சக்ரவர்த்தியாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதல் தருவதாக இருக்கின்றன.

ஆனாலும் ராஜ்ய விஸ்தரிப்பு என்பதற்காக எடுத்தவுடனேயே யுத்தத்துக்குப் போகும்படி அர்த்த – தர்ம சாஸ்திரங்கள் சொல்லவில்லை. உபாய சதுஷ்டயம் என்பதாக நாலு வழிகளைச் சொல்லி, நாலாவதாகவே யுத்தத்தை வைத்திருக்கிறது. மற்ற தேசங்களின் போக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது நமக்குப் பெருமை தருகிற விஷயமாகும். கேள்விமுறை இல்லாமல் அரசர்கள் ரத்தக் களரி பண்ணுவது பிற தேசத்தவர்களின் வழக்கம்.

“உபாய சதுஷ்டயம்” என்பவை ஸாமம், தானம், பேதம், தண்டம், என்னும் நாலாகும்.

ஒரு ராஜா தானாக ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ணும்போதும், இன்னொரு ராஜா இவன்மேல் படையெடுக்க உத்தேசிக்கிறபோதும், இரண்டு ஸமயத்திலும் இந்த நாலு உபாயங்களை ஒன்றபின் ஒன்றாகத் கடைபிடிக்க வேண்டும்.

முதலில் அன்போடு பழகி அதனால் ஒரு ராஜாவை அடங்கி வரும்படிப் பண்ணமுடியுமாவென்று பார்க்க வேண்டும். வேண்டியவர்களைக் கொண்டு அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லச் செய்ய வேண்டும். மனஸில் சாந்தியோடு பிரயத்னம் செய்ய வேண்டும். இதுதான் ஸாமம்.

இரண்டாவது தானம். அதாவது நமக்குப் பிரியமான பொருளை அவனுக்குக் கொடுத்து, என் ராஜ்யத்தோடு சேர்ந்துவிடுகிறாயா என்று கேட்பது. அல்லது அவன் படை எடுத்து வந்தால் இப்படிக் கொடுத்து, திருப்தி பண்ணி அவனைத் திரும்பிப் போகப் பண்ணுவது. ராஜ்யத்தில் ஒரு சின்னப் பகுதியைச் சண்டையில்லாமலே கொடுப்பது, அல்லது தன தான்யங்களைக் கொடுப்பது, இல்லாவிட்டால் ராஜகுமாரியை எதிராளி ராஜாவுக்கோ, ராஜகுமாரனுக்கோ கன்யாதானம் செய்து கொடுத்து அவனோடு சண்டையில்லாமல் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வது — இதெல்லாமல் தானோபாயத்தில் வரும். உள்ளன்பின் சக்தியால் மனஸை மாற்றுவதைவிட, பொருளைத் தந்து விரோதத்தைப் போக்கிக் கொள்வது கீழ்தான் என்பதால் ஸாமத்துக்கு அப்புறம் தானத்தைச் சொல்லியிருக்கிறது. நிஜமான பிரியம் இருக்குமானால், நம்முடையதெல்லாம் அவனுடையது அவனுடையதெல்லாம் நம்முடையது என்ற எண்ணம் வந்துவிடுமாதலால், என்னுடையதில் கொஞ்சம் உனக்குத் தருகிறேன் என்ற பேச்சு வராது. தானம் என்கிறபோது ஒற்றுமை போய் வேறுபாடு வந்துவிட்டதாகவே அர்த்தம்.

பேதம் என்பது இன்னம் கீழே. ஸாதாரணமாக நம் வாழ்க்கை விஷயங்களில் பேதோபாயத்தைப் பின்பற்றவே கூடாது. பேதமும் தண்டமும் ராஜாங்கத்துக்கு மட்டும் அநுமதிக்கப்பட்டிருக்கும் வழி; தனி மநுஷ்யர்களுக்கல்ல. எதிராளியைச் சேர்ந்திருப்பவர்களிடம் பிளவு உண்டாகும்படிப் பண்ணி, இதனால் அவனுக்கு ஆதரவு குறையுமாறு செய்து, சக்தி குன்றிப்போன ஸ்திதிக்கு அவனைக் கொண்டு வந்து, இப்போது எனக்கு அடங்குகிறாயா என்று கேட்டுக் கப்பம் கட்ட வைப்பது பேதோபாயம். Divide and rule (பிரித்து ஆளுவது) என்பதில் divide பண்ணுவது (பிரிப்பது) பேதம். இது கெடுதலான உபாயந்தானென்றாலுங்கூட, அர்த்த சாஸ்திரத்தில் இதிலும் ஒரு தார்மிகக் கட்டுப்பாடு வைத்திருப்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது எதிராளியின் சக்தியைப் பேதோபாயத்தால் குறைத்தவுடனேயே அவன் மேல் படையெடுத்து ஹதாஹதம் பண்ணி ஜயித்துவிட முடியும்தான் என்றாலும், அப்படிச் சண்டைக்குப் போகாமல், பலம் குறைந்த அந்த ஸ்திதியில் அவனாகப் பணிந்து வருகிறானா என்று பார்த்துவிட்டே, வராவிட்டால் யுத்தம் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறது.

யுத்தந்தான் நாலாவதான தண்டம். உள்நாட்டுக் குற்றவாளிகளுக்குப் பலவிதமான தண்டனைகள் மூலம் தண்டம். வெளி ராஜாவுக்கு யுத்தத்தின் மூலம் தண்டம். இரண்டுக்கும் இடையில் அநேக வித்யாஸங்களிருந்தாலும் ஹிம்ஸிப்பது, சிக்ஷிப்பது பொது அம்சம். ஃபிஸிகலாக பலத்தைக் காட்டுவது இரண்டுக்கும் பொது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உள்நாட்டு விஷயத்தில் கூட இந்த நாலு உபாயமும் இருப்பதாகத் தெரிகிறது. ஸத்துக்களைக் கொண்டு வாழ்க்கை உதாரணத்தாலும், உபதேசத்தாலும் தர்மங்களை ஸாத்விகமாகப் பரப்புவது ஸாமம். மான்யம், டைட்டில், சலுகைகள் தருவது தானம். ப்ராஸிக்யூஷன் (அதாவது ராஜாங்கம்) குற்றவாளியைச் சேர்ந்த ஒருவனையே அப்ரூவராக ஆக்கிக்கொண்டு குற்றத்தை நிரூபணம் செய்வது பேதம். தண்டனைதான் தண்டம்.


* ஜே. டபிள்யூ. எல்டர்

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s