பௌத்தம் – சமணம்: தேசிய ரீதியில் என்றுமே ஊன்றவில்லை

ஆக பௌத்த – சமண மதங்களினால் பெரிய அளவுக்கு ஹிந்து ஸமூஹக் கட்டுக்கோப்பு பாதிக்கப்படவே இல்லை. ஸமூஹ விஷயமில்லாமல் ஸமய ஸம்பந்தமாகவே பார்த்தாலும் அதிலே விசேஷ ஈடுபாடுள்ள ப்ராமணர்களும், இதரர்களும் அப்படியே போய் அந்த மதங்களில் சேர்ந்து விடாமல் தங்கள் தாய் மதத்திலேயேதான் இருந்துவந்திருக்கிறார்கள். கூன்பாண்டியன் சமணத்தில் சேர்ந்த பின்னுங்கூட அவனுடைய ஸாக்ஷாத் பத்னியான மங்கையர்க்கரசியும், முக்ய மந்த்ரி குலச்சிறையாரும் அதிலே சேராமல்தானே இருந்திருக்கிறார்கள்?

இதையெல்லாம்விட, நாம் எடுத்துக்கொண்டுள்ள விஷயத்துக்கு முக்யமாக, பௌத்த-சமண வித்யாசாலைகளுக்குப் போய்க் கல்வி கற்றவர்கள்கூட அப்ராமணர்களில் அப்படியொன்றும் பெருவாரியில்லை. குலத்தொழிலையே அவர்கள் தொடர்ந்து செய்ததால், (முன்னேயே நான் எடுத்துக்காட்டினாற்போல்) இதற்கு வீட்டுப் பெரியவர்களுடன் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பிப்பதே ப்ராக்டிகல் கல்வியாக அமைந்துவிட்டதால் அவர்களுக்குப் பள்ளிக்கூடம் போய்த் தனியாக வித்யாப்யாஸம் செய்ய வேண்டுமென்று இல்லை. ஆனாலும், தங்களுக்கும் எல்லா விஷயமும் வித்யாஸமில்லாமல் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதில், அறிவு நாட்டம் கொண்ட கொஞ்சம் அப்ராமணர்கள் மட்டும் அவற்றிலே சேர்ந்து கற்றுக்கொண்டார்கள். மொத்த பாபுலேஷனில் இவர்கள் பெருவாரியாக இல்லை. (ஆனாலும் இதற்காகவே முன்னைவிட நிறையவும், பெரிசாகவும் வித்யாசாலைகள் ஏற்படத்தான் செய்தன.)

அதற்கப்புறம் அவர்களுடைய பிக்ஷு ஸங்கத்திலேயே சேர்ந்தவர்கள் ஸமூஹத்தில் மிகக் குறைவான சதவிகிதத்தினர்தான். முன்னைவிட அதிகமாக பிக்ஷுக்கள் பெருகி, அதனால் பிக்ஷு தர்மம் நீர்த்துக் கேலி செய்கிற அளவுக்குப் போய்விட்டது என்பது வாஸ்தவந்தானென்றாலும், இதனால் ஜனங்களில் பெரிய சதவிகிதத்தினர் இப்படித் துறவியானதாக அர்த்தமில்லை. இதற்கு முன்னெல்லாம் முக்யமாக ப்ராமண ஜாதியினர் மட்டுமே முதல் மூன்று ஆச்ரமங்களை வஹித்துவிட்டு அப்புறம் ஸந்நியாஸாச்ரமம் ஏற்றார்கள். அவர்களிலே கொஞ்சம்பேர் நேராக பிரஹ்மசர்யத்திலிருந்து ஸந்நியாஸ ஸ்வீகாரம் செய்துகொண்டார்கள். அப்போது பாபுலேஷனில் ஸந்நியாஸிகள் ஒரு பெர்ஸெண்ட், அரை பெர்ஸெண்ட் இருந்ததாக வைத்துக்கொண்டால், பௌத்த-ஜைன மதங்கள் ஏற்பட்டு ஸகல ஜாதிகளிலிருந்தும் அந்த மதங்களின் பிக்ஷு ஸங்கத்தில் ஜனங்கள் சேர இடமேற்பட்டபோது பாபுலேஷனில் நாலைந்து பெர்ஸெண்ட் ஸந்நியாஸகளானதாக வைத்துக்கொள்ளலாம். பாக்கி தொண்ணூறு (பெர்ஸெண்டு)க்கு மேலானவர்கள் பழையபடியேதான் இருந்துகொண்டிருந்தார்கள். ஆனாலும் ஒரு டாக்டர் இருக்கிற ஊரிலே மூன்று டாக்டர்கள் வந்தால்கூட ரொம்ப ஜாஸ்தியாகத் தெரிகிறது போல, ஒன்று – அரை பெர்ஸெண்ட் என்பது நாலைந்து என்பதாகப் பல மடங்கு பெருகினபோது மிக நிறைய பிக்ஷுக்கள் உண்டாகிவிட்டாற்போன்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவும் தவிர, ஹிந்து ஸந்நியாசிகளைப்போல, ஒவ்வொருவரும் தனித்து ஏகாந்தமாக ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருக்காமல், ‘ஸங்கம் ஸங்கம்’ என்று இந்தப் பிக்ஷுக்கள் கூட்டமாக ஒன்றுசேர்ந்ததாலும், ஒரு இடத்திலே கூடிக் கல்விச்சாலைகளை நடத்தியதாலும் பெரிய அளவில் இருக்கிறாற்போல் தோன்றலாயிற்று.

(கண்டிப்பான கடும் விதிமுறைகளை உடைய ஸந்நியாஸாச்ரமத்திலே ஸமூஹத்தின் நாலைந்து பெர்ஸெண்ட் ஜனங்கள் இருந்தால்கூடத் தாங்காது, அதன் ஒழுக்கம் தளரத்தான் செய்யும். பிற்பாடு அப்படித்தான் ஆயிற்று.)

மொத்தத்தில், ஸமூஹ அமைப்பிலே தொழில் முறையில் வர்ணதர்மம் விசேஷமாகப் பாதிக்கப்படாமலும், ஸமயத் துறையில்கூட வைதிகாநுஷ்டானங்களும், வைதிக வித்யையும் நலிந்தாலும் ஒரேயடியாய் எடுபட்டுப்போய் அவைதிக ஸம்ப்ரதாயங்கள் கொழுந்துவிட்டு ஓங்காமலும்தான் எப்போதுமே இந்த தேசத்தில் பொதுவாக இருந்திருக்கிறது. அறிவாளிகள் மட்டத்திலும், அரசாங்க ஆதரவாலும் சிற்சில ஸமயங்களில் மட்டும் வைதிகம் சற்று அதிகமாக நலிந்து, அவைதிக மதங்கள் அதிக வலுவோடு இருந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஸமயங்களில் ஒரு சங்கரர், ஒரு ஸம்பந்தர் வந்து வைதிகத்தை முன்னைக்காட்டிலும் ப்ரகாசமாகத் தூண்டிவிட்டிருக்கிறார்கள்.

வெள்ளைக்கார சரித்ராசிரியர்களிலும் எல்லாரும் பக்ஷபாதிகள் என்று சொல்லக்கூடாது. எங்கேயும் ஸத்யத்தை மதிப்பவர்கள் உண்டு; இப்படித் தனிமனிதர்களிலும் உண்டு; ஸ்தாபனங்களிலும் உண்டு. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்ஸிடிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் ஆதார பூர்வமாக, நிஷ்பக்ஷபாதமாக ஆராய்ந்து எடுத்துச் சொல்கிறவர்களென்று பெயர் வாங்கியவர்கள். அவர்கள் ஏதாவது ஒரு விஷயம் பற்றி ஒரு ஸமயம் ஒரு புஸ்தகம் போட்டால் அதை அதோடு தீர்ந்துவிட்டது என்று விட்டுவிட மாட்டார்கள். அப்புறமும் அந்த விஷயத்தை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பார்கள். புது ஆராய்ச்சிகளில் பழைய அபிப்ராயத்துக்கு மாறுதலான அபிப்ராயங்கள், கூடுதலான ஸமாசாரங்கள் கிடைத்து இதுதான் ஆதாரபூர்வமானது என்று உறுதிப்பட்டால் தயங்காமல் அதை ஏற்றுக்கொண்டு, புஸ்தகத்துக்குப் புது எடிஷன் போட்டோ, அல்லது புதுப்புஸ்தகம் போட்டோ அதிலே இதைத் தெரிவித்துவிடுவர்கள். இம்மாதிரி அவர்கள் இண்டியன் ஹிஸ்டரி போட்டிருக்கிறார்கள்1. அதிலே ரொம்பவும் அழுத்தந்திருத்தமாக, “ஒவ்வொரு ஸமயத்தில் இந்திய தேசத்தின் அநேக ராஜ்யங்களில் ஒன்றிரண்டில் பௌத்த-ஜைன மதங்கள் அதீதமான செல்வாக்குப் பெற்றிருந்ததுண்டு; அந்த ராஜ்யங்களின் ஜனத்தொகையில் மிகவும் ஏராளமானவர்கள் அம்மதங்களைத் தழுவியதுண்டு. ஆனாலும், எந்த ஒரு ஸமயத்திலேனும் தேசம் முழுதும் பரவிய பெரிய மதமாக அவை இருந்திருக்கிறதாக யாராவது வர்ணித்தால் அது ரொம்பவும் கேள்விக்கு உரியதேயாகும். தொன்றுதொட்டு ஒவ்வொரு காலத்திலும் ப்ராமணர்களின் ஹிந்து மதம் ஜீவித்தே வந்திருக்கிறது. அதைப் பின்பற்றுபவர்களாக ஏராளமான ஜனங்கள் எல்லாக் காலங்களிலுமே இருந்திருக்கிறார்கள் என்பது நிஸ்ஸந்தேஹமாக (ஐயத்துக்கு இடமில்லாமல்) புரிந்துகொள்ளவேண்டிய விஷயம். அநேக புஸ்தகங்களில் இந்தியாவில் “பௌத்த காலம்”, “ஜைன காலம்” என்று சில (கால கட்டங்கள்) இருந்ததாகச் சொல்லியிருப்பது தப்பு; அது வேண்டுமென்றே தவறான அபிப்ராயத்தைக் கொடுப்பதாகும். ‘பௌத்த காலம்’ என்ற ஒன்றோ, ‘ஜைன காலம்’ என்ற ஒன்றோ இந்தியாவில் இருந்ததே கிடையாது. அவை ஓரொரு ராஜ்யங்களில் ரொம்பவும் கையோங்கினாலும்கூட ஹிந்து மதத்தை அடியோடு பின்னே தள்ளி அதனிடத்தை தாங்கள் பிடித்துக்கொண்டதாக ஒருபோதும் நடந்ததில்லை” என்று கண்டிருக்கிறது.

கல்வி விஷயமாகப் பேச ஆரம்பித்துவிட்டு, இதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறேனென்றால் இதற்கும் அதற்கும் ஸம்பந்தமில்லாமலில்லை. கல்வி என்றால் அது உண்மையைத் தெரிவிப்பதாக அல்லவா இருக்க வேண்டும்? தற்போது நம்முடைய குழந்தைகளுக்குத் தரப்படுகிற கல்வியிலோ உண்மைக்கு மாறாக, நம் தேசத்தில் நாகரிக வாழ்வு உண்டாகிச் சிறிது காலத்திலேயே புத்தரும் ஜினரும் தோன்றி வேத வழிமுறையான வாழ்க்கைப் போக்கை ஒரு கலக்குக் கலக்கி, நெடுங்காலம் தேசத்தில் அவர்களுடைய ஸித்தாந்தங்கள் பலமாகப் பரவியிருக்கும்படிச் செய்தார்கள் என்று ஹிஸ்டரி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. கல்வி ஸம்பந்தமாகப் பேசும் போது இந்தப் பெரிய கோளாற்றைச் சொல்லத்தானே வேண்டும்? பெரிசாக யூனிவர்ஸிடி, டெக்ஸ்ட்-புக் கமிட்டி, அது இது என்று வைத்து விட்டதால் உண்மையான கல்வி போதிக்கப்படுவதாக அர்த்தமில்லை என்று எடுத்துக்காட்டுவதும் குரு-சிஷ்யர்கள் என்ற தனி மனிதர்களின் ஹ்ருதய சுத்தி, வாழ்க்கைத் தூய்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டே நடந்த குருகுலக் கல்வியின் சிறப்பை ஒருவிதத்தில் அண்டர்-லைன் பண்ணிக் காட்டுகிறது.

ஹிந்து தர்மத்தை ஆசார்யாளோ, ஞானஸம்பந்தரோ புனருத்தாரணம் பண்ணினார்கள் என்பதற்குக்கூட என்ன அர்த்தமென்றால், அவர்கள் காலத்தில் தேசத்தின் ஒவ்வொரு பகுதிகளில் ஜனஸமூஹத்திலேயே ஹிந்து தர்மம் அடியோடு மங்கி, புறச்சமயம் ஒரேயடியாக மேலோங்கியிருந்ததை அவர்கள் மாற்றினார்கள்; அதைவிடக் குறிப்பாக, வித்வத் ஸமூஹத்தில் ஹிந்து மத ஸித்தாந்தத்தை நிலைநாட்டினார்கள் என்பதுதான். தேசம் முழுதிலும் ஹிந்து தர்மத்துக்கு முக்யமாயுள்ள ஸமூஹ அம்சமாகிய (Sociological aspect ஆன) ஜாதித்தொழில் முறை எடுபட்டுப்போனதாகவோ அப்புறம் அதை நம்முடைய மத புருஷர்களில் ஒருவர் பழையபடி அமல்படுத்தினாரென்றோ நினைக்க இடமில்லை. (சக்ரவர்த்தியின் ஸஹாயமில்லாமல் ஒரு ஸமயத் தலைவர் தாமே இம்மாதிரி ஒரு பெரிய ஸமூஹ மாற்றத்தை உண்டு பண்ணுவதற்குக் கொஞ்சமும் இடமில்லை.)

ஆசார்யாளின் ஒரு பெருமை, யாராலும் ஸாதிக்க முடியாததை அவர் செய்தவரென்றாலும் தம்மைப் பற்றிய தற்பெருமை கொஞ்சங்கூட இல்லாமலிருந்ததுதான். அதனால்தான் அவர் இத்தனை பாஷ்ய க்ரந்தங்களும் ப்ரகரண க்ரந்தங்களும் ஸ்தோத்ரங்களும்2 செய்திருந்தும் அவற்றில் எதிலும் தம்மைப் பற்றிய குறிப்பு எதுவுமே கொடுக்கவில்லை. இதனாலேயே அவருடைய கால நிர்ணயம் முதலான பல விஷயங்களைப் பற்றி இன்னமும் பல தினுஸான அபிப்ராயங்கள் இருந்து வருகின்றன. இப்படிப் பட்ட ஆசார்யாளே ஒரே ஒரு இடத்தில் சொல்வதிலிருந்து அவருடைய காலத்தில் இந்த தேசம் முழுதற்கும் ஆக்ஞை செய்து கட்டுபடுத்தக்கூடிய ஸார்வபௌமன் (சக்ரவர்த்தி) எவனும் இல்லை என்பது நிச்சயமாகத் தெரிகிறது. பிரம்மஸூத்ரத்தில் ஓரிடத்தில்3 தேவர்களைப் பற்றி வருகிறது. இதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது நிஜமாகவே தேவர்களிருப்பதையும் அவர்களோடு மநுஷ்யர்கள் நேருக்கு நேர்த் தொடர்பு கொண்டிருந்ததையும் சொல்லிவிட்டு, “இப்போது நம்மில் எவருக்கும் தேவதைகளோடு உறவாடுகிற சக்தி இல்லாதபோது பூர்வ காலத்தில் மட்டும் எப்படி மநுஷ்யர்கள் இவ்வாறு செய்திருக்க முடியும் என்று கேள்வி கேட்டால் அது ஸரியில்லை. இப்படிக் கேட்பவன் தற்காலத்தில் (அதாவது ஆசார்யாள் ஜீவ்யவந்தராக இருந்த காலத்தில்) நம் தேசத்தில் ஸார்வபௌமன் இல்லாததால் எப்போதுமே இப்படிப்பட்ட சக்ரவர்த்திகள் இருந்ததில்லை; இப்போது இங்கே வர்ணாச்ரமங்கள் வ்யவஸ்தை கெட்டிருப்பதால் எப்போதுமே இங்கே வர்ணாச்ரம ஒழுங்கு இருந்ததில்லை என்றெல்லாங்கூட விதண்டாவாதம் பண்ணலாம்” என்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், சக்ரவர்த்தி ஒருத்தன் சட்டம் போட்டு தேசம் பூராவும் ஜாதித் தொழில் முறையை மறுபடி உண்டாக்க முடியும் என்றே வைத்துக்கொண்டாலுங்கூட (வாஸ்தவத்தில் இது நடக்கக்கூடியதே அல்ல; நடப்பதாக ‘ஹைபோதெடிக’லாக வைத்துக்கொண்டாலுங்கூட) ஆசார்யாள் காலத்தில் அப்படிப்பட்ட சக்ரவர்த்தி எவனும் இருக்கவில்லை. அதனால், வர்ணதர்மம் அவருக்குப் பின் பழைய ஜீவனோடு ப்ரகாசிக்க ஆரம்பித்தது என்றால் அவர் காலத்திலுங்கூட அது அடியோடு எடுபட்டுப் போயிருக்கவில்லை என்றே ஆகிறது.

ஸார்வபௌமன் இல்லை என்று ஆசார்யாள் சொல்லியிருப்பது சற்று முன்னாடி நான் சொன்ன ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. பௌத்த-சமண அஹிம்ஸா மதங்களில் ராஜாக்கள் அதிகப் பற்று வைத்திருந்த காலங்களில் சீரும் சிறப்பும் பொருந்திய மஹாஸாம்ராஜ்யமாக நம் தேசத்தில் எதுவும் நிற்கமுடியவில்லை என்றும், நாகரிகம் குறைந்த அந்நிய தேசத்தினரின் ஆளுகைக்கு அச்சமயங்களில்தான் தேசம் அதிகமாக ஆளாயிற்று என்றும் சொன்னேனே, அந்த விஷயந்தான். ஆசார்யாள் இப்படிப்பட்ட ஒரு காலத்தில் அவதாரம் பண்ணியவர்தான். அதனால் அவர் காலத்தில் ஸாம்ராஜ்யாதிபதியான ஸார்வபௌமன் எவனும் இல்லை. இந்த விஷயம் இருக்கட்டும். ஸாம்ராஜ்யம் இல்லாவிட்டாலும் அப்போதுங்கூட வர்ணதர்மம் ஒரேயடியாய் இல்லாமல் போய்விடவில்லை என்ற விஷயத்தில் இருந்தோம்.

“பின்னே நீங்கள்தானே சொன்னீர்கள்! நீங்கள்கூட இல்லை; ஆசார்யாளே சொன்னதாக நீங்கள் இப்போது எடுத்துக்காட்டினீர்களே! அவர் வார்த்தைப்படியே அவர் காலத்தில் ஸார்வபௌமன் இல்லை என்று சொன்னவுடனேயே, அவர் காலத்தில் வர்ணாச்ரமம் வ்யவஸ்தை கெட்டிருந்தாலும் சொல்லியிருக்கிறாரென்று காட்டினீர்களே! இப்போதோ அது அடியோடு எடுபட்டுப் போய்விடவில்லை என்று மாறுபாடாகச் சொல்கிறீர்களே” என்று கேட்கலாம்.

பதில் என்னவென்றால், (வர்ணதர்மம்) அடியோடு எடுபட்டுப் போகவுமில்லை; பூரண ரூபத்தில் ப்ரகாசிக்கவும் இல்லை. ஆசார்யாளே என்ன சொல்லியிருக்கிறாரென்றால் அவர் காலத்தில் ஜாதிப் பாகுபாடுகள் “அவ்யவஸ்திதப்ராயமாக” இருந்தன என்ற வார்த்தையைத்தான் போட்டிருக்கிறார். இப்படியென்றால் அடியோடு அழிந்துபோய்விட்டது என்று அர்த்தமில்லை. ‘வ்யவஸ்தை’ என்பதாக அதற்கென்று ஏற்பட்டிருந்த வரையறை நலிந்ததாக இருந்தது என்றுதான் அர்த்தம். Irregular-ஆக (ஒழுங்கில்லாமல்) இருந்தது என்கிறாரே தவிர, இல்லாமலே போய்விட்டது என்று சொல்லவில்லை. சற்றுமுன் நான் intact-ஆக இருந்தது என்றது வேண்டுமானால் அவ்வளவு ஸரியில்லை. ‘intact’ என்று சொல்லும்படியாக அவ்வளவு கட்டுக்கோப்பாகவுமில்லை; அடியோடு போச்சு என்னும்படியான liquidate – ஆன நிலைக்கும் போய்விடவில்லை. எப்படியிருந்தது என்றால் : ப்ராமணன் பக்ஷபாதமாகப் பண்ணியிருக்கிறான் என்று ஜனங்களுக்குக் கலைத்துக் கொடுத்ததால், ஒருவேளை அந்தக் காலத்துப் ப்ராமணனும் இப்படிக் குற்றம் காட்டுவதற்கு இடம் கொடுக்கிற மாதிரி இருந்திருக்கக் கூடுமாதலால், அவனுடைய செல்வாக்குக் குன்றிப்போயிருந்தது. அவனால் நடந்த யாக யஜ்ஞாதிகளும் தர்மோபதேசமும் ஹீனமடைந்தன. ஸமூஹத்துக்கே ஆத்ம பலம் தரும் இந்த அம்சம் ஹீனமான போதிலும், லௌகிக வாழ்க்கை ஒழுங்காக நடப்பதற்கே பாரம்பர்யமாக ஜாதித் தொழில்களைச் செய்வதுதான் வசதியாயிருக்கிறது என்பதால் ஜனங்கள் பழைய முறைப்படியே பிறப்புப் பிரகாரம் அவரவருக்கேற்பட்ட தொழில்களைச் செய்துவந்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஹிந்துமத வேதாந்த தத்வமும் தெரியாது, பௌத்த ஜைன ஸித்தாந்த வாதங்களும் தெரியாது. அதுவரை ஸத் ப்ராமணர்களின் உத்தமமான வாழ்க்கை லக்ஷ்யத்தைத் தங்களால் முடிந்த அளவில் பின்பற்றிக்கொண்டு அதனாலேயே ஓரளவு ஆத்ம பரிபக்வம் அடைந்து ராமனை, க்ருஷ்ணனைக் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் இப்போது அந்த ‘லீடர்ஷிப்’ இல்லாமல், அதனால் ஆத்மார்த்தமான உயர்வுமில்லாமல், ஏதோ தங்களுக்குப் பிடித்த ஸ்வாமியைக் கும்பிடுவதோடு நின்றுவிட்டார்கள். வைதிகமான ‘லீடர்ஷிப்’ போனவுடன், உக்ரமான ஆபாஸமான கோரமான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் காபாலிகர்கள் முதலியவர்கள் இவர்களை வளைத்துக் கொண்டார்கள். இவர்களில் சேராமல் பரமதங்களுக்கே போய்விட்ட மீதி ஜனங்களும் ராமனையோ, கிருஷ்ணனையோ அல்லது கபாலியையோ காளியையோ கும்பிடுவதற்குப் பதில் புத்தரையோ தீர்த்தங்கரர்களையோ கும்பிட்டார்களே தவிர, அவர்களுக்கு அந்த மதக் கோட்பாடுகள் தெரிந்திருந்தன என்று சொல்லமுடியாது.


1. ஸ்ரீசரணர்கள் குறிப்பிடுவது வின்ஸென்ட் ஸ்மித் எழுதிய ‘The Oxford History of India’ என்ற நூலாக இருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியரொருவர் தெரிவிக்கிறார். அடுத்து ஸ்ரீசரணர் கூறுவது அந்நூலில் பின்வரும் பகுதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறார்.
“It must be clearly understood that Brahmanical Hinduism continued to exist and to claim innumerable adherents throughout the ages. It may be well be doubted if Buddhism can be correctly described as having been the prevailing religion of India as a whole at any time. The phrase ‘Buddhist period’ to be found in many books is false and misleading. Neither a Buddhist nor a Jain period ever existed. From time to time Buddhism and Jainism obtained exceptional success and unusually large percentage of adherents in the population of one kingdom or another, but neither heresy ever superseded Brahmanical Hinduism.”

2. முன்பே இருந்த நூல்களுக்கு இயற்றிய விரிவுரை பாஷ்யம்; சொந்தமாகச் செய்த தத்வ நூல் ப்ரகரணம்; தெய்வபரமாகச் செய்த துதி ஸ்தோத்ரம்.

3. முதல் அத்யாயம், மூன்றாம் பாதம், முப்பத்து மூன்றாவது ஸூத்ரம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s