ப்ரசாரணை என்பது இந்த நாளில் எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக ப்ரசாரம், propaganda என்று செய்கிற மாதிரியானதல்ல. இப்போது ஏதோ ‘ஸ்டாடிஸ்டிக்ஸ்’களை (புள்ளி விவரங்களை)க் காட்டி ஒரு விஷயத்தை ‘ஓஹோ’ என்று நினைக்கும்படியாகவே ‘ப்ராபகாண்டா’ இருக்கிறது. இத்தனை பம்ப்ஸெட் போட்டோம், இத்தனை ஊரில் எலெக்ட்ரிக் லைட் போட்டோம், திட்டத்தில் இததற்கு இத்தனை கோடி செலவழித்தோம் என்கிறாற்போல ‘ப்ராபகாண்டா’ என்பது நடக்கிறது. வாஸ்தவத்தில் (இவற்றால் ஜனங்களுக்கு) ஏற்பட்ட ப்ரயோஜனம் குறிப்பிடும்படியாக இருந்ததா என்று கேள்வி எழுந்தாலுங்கூட ஸ்டாடிஸ்டிக்ஸைப் பார்த்து ப்ரமித்துப் பாராட்டிவிடத் தோன்றிவிடுகிறது.
மதத்தில் கன்வர்ஷன் (மதமாற்றம்) செய்கிறவர்கள்தான் இப்படி ப்ராபகாண்டா செய்வதில் மஹா கெட்டிக்காரர்களாயிருக்கிறார்கள். பணத்தை, காசைக் கொடுத்து, இல்லாவிட்டால் வேறே ஏதோ ஸாமர்த்யம் செய்து வளைத்து, ஒன்றுமறியாத பாமர ஜனங்களை அப்படியே சேரி சேரியாகத் தங்கள் மதத்துக்குத் தள்ளிக்கொண்டு விடுவார்கள். அப்புறம் அவர்களைக் கணக்கெடுத்து (அதோடு கொஞ்சம் சேர்த்துக்கொண்டாலும் சேர்த்துக்கொண்டு!) “பார்த்தீர்களா, இத்தனை பேர் ஹிந்து மதம் உபயோகமில்லை என்று எங்கள் மதத்தில் விச்வாஸம் வைத்துச் சேர்ந்துவிட்டார்கள்” என்று ஸ்டாடிஸ்டிக்ஸ் காட்டி ப்ரசாரம் செய்வார்கள்.
அங்கே அப்புறம் நம்மவர்கள் போய் கன்வர்ட் ஆனவர்களை எப்படியாவது பிடித்து, “நம்ப மதத்திலே உங்களுக்கு என்ன பிடிக்கவில்லை? அந்த மதத்திலே என்ன பிடித்து அதிலே சேர்ந்தீர்கள்?” என்று கேட்டால் அவர்கள் முழிமுழி என்று முழிப்பார்கள். ரொம்பவும் கேட்டால், “எங்களுக்கு ஹிந்து மதத்தில் எதுவும் பிடிக்காமலில்லை. அப்படியே இதில் பிடிக்காததாக ஏதாவது இருந்தாலுங்கூட, அந்த மதத்தில் இதைவிடப் பிடித்ததாக எதுவுமில்லை. நிஜத்தைச் சொல்லப்போனால் எங்களுக்கு இந்த மதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதிலே எங்களுக்கு அபிமானமோ, பொதுவாக மதவிஷயம் என்பதிலேயே எங்களுக்கு அக்கறையோ இல்லை. அவர்கள் எங்களுக்கு இது இதுகளைக் கொடுத்தார்கள். இன்னம் என்னென்னவோ செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள், எங்களுக்கு ஏதேதோ ‘ரைட்’கள் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதற்காகவெல்லாந்தான் அவர்களுடைய மதத்துக்குப் போனோமே தவிர, அந்த மதக் கொள்கை புரிந்தோ, பிடித்தோ போகவில்லை” என்று உண்மையைப் போட்டு உடைத்துவிடுவார்கள்.
“ப்ரசாரணை” என்ற வார்த்தையைப் பார்த்துத் தற்கால ப்ரசாரம் மாதிரியாக்கும் அது என்று நீங்கள் நினைத்துவிடப் படாதே என்பதற்காகச் சொல்கிறேன். ப்ரசாரம் என்றாலே புரளி ப்ரசாரம்தான் என்று எடுத்துக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.
நம்பரைக் காட்டி ப்ரமிக்க வைத்து ப்ரசாரம் செய்வது நம்முடைய தேசாசாரத்தில் கிடையவே கிடையாது. இத்தனை பேர் படிக்கிறார்கள் என்று ஸ்டாடிஸ்டிக்ஸ் காட்டுவதற்காக வித்யா ப்ரசாரம் பண்ணும்படியாக நம் சாஸ்திரங்கள் சொல்லவேயில்லை. பாத்ரம் பார்த்து, நிஜமாகவே க்ரஹிக்க கூடியவர்களுக்குத்தான் வித்யையை ப்ரசாரம் செய்யவேண்டுமென்று விதித்திருப்பதை முதலிலேயே சொன்னேன்.
இப்படித்தான் ப்ராபகாண்டா பண்ணாமலே ஒவ்வொரு வித்யார்த்தியும் முதலில் தான் வித்வானாகி, அப்புறம் குருவாக ஆகித் தானும் சில வித்யார்த்திகளுக்கு நிஜமாகவே போதித்து அவர்களை நிஜமான வித்வானாக்க வேண்டும் என்று வைத்திருந்தார்கள். சிஷ்யன் குருவாகி வாழையடி வாழையாக மேலும் சிஷ்யர்களை பயிலுவிக்க வேண்டுமென்பது நம்முடைய மரபு.
ஒருத்தன் தான் ஸம்பாதித்த ஸொத்தை யாருக்கும் ப்ரயோஜனப்படாமல் புதைத்து வைத்துவிட்டுச் செத்துப் போனால் எத்தனை தோஷமோ, அதைவிட தோஷம், தான் கற்ற வித்யையை நாலு பேருக்குக் கொடுக்காமல் செத்துப் போவது என்பது நம் முன்னோர்களின் கருத்தாக இருந்திருக்கிறது.