வீணாகும் நேரம் வித்யைக்கு ஆகட்டும்

“எத்தனையோ வாழ்க்கை ப்ரச்னை எங்களுக்கு. ஆபிஸ் கார்யம், வீட்டுக் கார்யம் என்று அலைகிறோம், அவதிப்படுகிறோம். அது தெரியாமல், எங்கேயோ மடத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘அதைக் கத்துக்கோ, இதைக் கத்துக்கோ’ என்று நீங்கள் உபதேசம் பண்ணினால் எப்படி?” என்று கேட்கலாம். மனஸிருந்தால் எதையும் செய்துவிடலாம். இத்தனை வாழ்க்கை ப்ரச்னை இருந்தாலும் எத்தனை பொழுது அரட்டை, ந்யூஸ் பேப்பர், ஸினிமா, சீட்டுக்கட்டு இத்யாதியிலே போகிறது? இப்படி வீணாகப்போகிற காலத்தில் பாதி பொதுநலப் பணிகளுக்கு என்றும், பாதி ஏதாவது வித்யாப்ஸாஸத்துக்கு என்றும் வைத்துவிட்டால் போதும் — ஸமூஹப்பணிகளும் நடந்துவிடும், நம்முடைய வித்யைகளும் ப்ரகாசம் பெற்றுவிடும், நாமும் ப்ரகாசம் பெற்றுவிடுவோம்.

வேலை – வெட்டி, குடும்பத்தொல்லை என்று மன்றாடுபவர்களுக்கு ‘டைவர்ஷன்’ வேண்டாமா என்று கேட்கலாம். ஆசையோடு மனஸ் ஈடுபட்டு ஏதாவது ஒரு வித்யை அப்யஸிக்க ஆரம்பித்தீர்களானால் உங்களுக்கே தெரியும், இந்த அப்யாஸத்தைவிடப் பெரிய ‘டைவர்ஷன்’ எதுவும் இல்லையென்று. களைத்துப்போன மனஸுக்கு வேண்டிய உத்ஸாஹத்தை இவையே (வித்யைகளே) ஊட்டிவிடும். அப்படியும் ஒரேயடியாக நீங்கள் ‘டைவர்ஷன்’ என்பதை விட்டுவிடும்படிச் சொல்லவில்லை. அதுவும் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்களே ஆலோசித்துப் பார்த்து, “இப்படிப் பொழுதை வேஸ்ட் பண்ணுகிறோமே” என்று நினைக்கக் கூடியவைகளை விட்டுவிட்டு – இப்படி நிறைய அகப்படும் — அந்தப் பொழுதை இப்படியொரு pursuit-ல் (தேட்டத்தில்) செலவிட்டால் போதும், ஏதாவதொரு ஸ்வதேச வித்யையில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெற்றுவிடலாம். நம் முன்னோர்கள் போன வழி அதுதான்.

மநுஷ்யப் பிறவி கிடைத்தும் அதன் அறிவாலே பெறக் கூடியவற்றைப் பெற்று அதன் மூலம் மநுஷ்யத்வத்துக்கு மேலே போக முயற்சி பண்ணாமல் நாம் செத்துப்போனால் அது ஆடு மாடு ஜன்மாவுக்கு ஸமானந்தான். ஒரு ஆடு ஆடாகவோ, மாடு மாடாகவோ இருந்து மடிவதில் அவற்றுக்குக் குறைவு இல்லை. ப்ரக்ருதியில் ஈச்வரன் அவற்றுக்கு ஏற்படுத்திய தர்மப்படி இருந்ததாகவே ஆகும். ஆனால் மனிதப் பிறவி எடுத்தவர்கள் இதற்கு அவன் அநுக்ரஹித்துள்ள உபரி அறிவின் தர்மப்படி அதை ஒரு வித்யையால் சோபித்துக் கொள்ளச் செய்யாமல் விட்டுவிட்டால் அது ரொம்பவும் துர்பாக்யம். அறிவுக்கு மேலே உள்ள ஆண்டவனுக்காக, ஆத்மாவுக்காகத்தான் அறிவை விட்டுவிட்டு, ‘இதெல்லாம் எதற்கு?’ என்று ஸகல சாஸ்த்ரங்களையும் வித்யைகளையும் தள்ளலாமே தவிர, நம் நிலையில் அப்படிக் கேட்டு விட்டுவிடுவது தகாது. இது ஒன்றுக்கும் உதவாத சோம்பேறியின் வாய் வேதாந்தந்தான்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s